கதையின் காணப்படாத பக்கங்கள்,லோகிததாஸ்

ஒரு சினிமா எப்படி உருவாகிறது என்பதைப் பற்றி சாதாரண ரசிகர்களுக்கு இப்போதுகூட பெரிய புரிதல் ஏதுமில்லை. பலசமயம் ஒரு நடிகர் அல்லது இயக்குநருடன் தொடர்புபடுத்தி அவர்கள் அந்தப் படத்தைப் பற்றிப் பேசிக் கொள்கிறார்கள். சினிமா ஒரு கூட்டுமுயற்சி. சினிமாவில் எழுத்தாளனின் பங்கு குறித்து பெரும்பாலானவர்கள் உணர்வதில்லை.

 

சினிமாவின் அடிப்படைக்கூறு ‘கதைத்திரைக்கதை வசனம்’ என்று கூறப்படும் எழுத்தாளனின் பங்களிப்பே. மோசமான கதையில் இருந்து நல்ல சினிமா ஒருபோதும் உருவாக இயலாது. ஒரு சிற்பி கட்டடத்தின் வரைபடம் ஒன்றை வரைவதுபோல எழுத்தாளன் எழுதுகிறான். இயக்குநர், ஒளிப்பதிவாளர், நடிகர் அத்தனை பேருக்கும் அதுதான் வழிகாட்டி. கற்பனை வளமும் காட்சி நுண்ணுணர்வும் உள்ள ஒர் எழுத்தாளனால் மட்டுமே நல்ல திரைக்கதையை உண்டு பண்ண முடியும். திரைக்கதை ஓர் இலக்கிய வடிவம். சினிமா என்பது கண்ணுக்குப் புலனாகும் இலக்கியம்.

லோகித தாஸ்

ஒரு சினிமாவுக்கான சிந்தனை ஒரு கருவில் இருந்தோ அல்லது ஒரு கதைத்துளியில் இருந்தோ ஆரம்பிக்கிறது. கதை உருவாகிவிட்டதென்றால் பிறகு அந்தக் கதையை எப்படி சினிமாவின் வடிவத்துக்கு மாற்றுவது என்று யோசிக்க வேண்டும். காட்சிரீதியான சாத்தியங்களை கணக்கில்கொண்டு கதையை காட்சிகளாக ஆக்க வேண்டும்.

 

உதாரணமாக, ஓர் இளைஞனும் இளம் பெண்ணும் சந்திக்கிறார்கள். அவர்கள் காதல் வயப்படுகிறார்கள். பிரிந்து வாழமுடியாத நிலையை அடைகிறார்கள். ஒரு கதையின் தொடக்கம் இது. இது ஒரு கரு மட்டுமே. மூன்று வரிகள் கொண்ட இதை சினிமாவில் பதினைந்து காட்சிகள் வழியாகவே சொல்ல முடியும். அவன் யார், அவள் யார், எங்கே எப்போது அவர்கள் சந்தித்துக் கொள்கிறார்கள், என்ன பேசுகிறார்கள், உணர்ச்சிகள் என்ன, எல்லாவற்றையும் சொல்லியாக வேண்டும். காட்சி விவரணையே திரைக்கதை என்பது.

 

ஒரு உதாரணம் காட்டுகிறேன். படம் செங்கோல். கதாநாயகனும் கதாநாயகியும் காதலை சொல்லிக் கொள்வது கதைத்தருணம்.

 

 

செங்கோல்

காட்சி 1

 

கிராமத்துப் பாதை, பகல்.

 

ரப்பர் தோட்டத்தின் ஊடாகச் செல்லும் பாதை அது. சட்டென்று வேலி உடைந்து கிடப்பதன் இடுக்கு வழியாக இந்து குதித்து வருகிறாள்.

 

சேது திடுக்கிடுகிறான்.

 

சேது: பயமுறுத்திட்டியே..

 

இந்து:  நான் குறுக்கு வழியா ஓடி வந்தேன்.

 

அவள் மூச்சிறைக்கிறாள். கையில் உள்ள புத்தகத்தையும் பேனாவையும் நீட்டி புன்னகையுடன் கேட்கிறாள்.

 

இந்து: அட்ரஸ் வேணும்

 

சேது: எதுக்கு?

 

அவள் புன்னகையுடன் சொல்கிறாள்.

 

இந்து: அட்ரஸ் எதுக்கு கேப்பாங்க?

 

சேது: வேணாம். நான் மறுபடி வரேன். அம்மாவுக்குத் தெரிஞ்சா தப்பா நெனைப்பாங்க.

 

இந்து: அம்மா சொல்லித்தானே வந்தேன்.

 

சேதுவுக்கு அது ஆச்சரியமூட்டுகிறது. அம்மா அனுப்பியிருக்கிறாள்! அவள் புத்தகத்தை வாங்கி விலாசத்தை எழுதுகிறான்.

 

இந்து: ஒண்ணு கேக்கட்டுமா?

 

சேது: ம்

 

இந்து: அன்னிக்கு ராத்திரியிலே வந்தப்ப அம்மாகிட்ட கேட்டீங்களே. . . அது நெஜம்மாவே கேட்டதா?

 

எழுதியபடியே சேது கேட்கிறான்.

 

சேது: என்ன?

 

இந்து: என்னை கல்யாணம் பண்ணிக்கிறதா. . .

 

சேது நிமிர்ந்து பார்க்கிறான்.

 

சேது: அதுவா. . . அது வந்து. . .

 

சேது பம்மிப்போய் அவளைப் பார்த்து சிரிக்கிறான்.

 

அவன் பார்வையை சந்திக்க முடியாமல் அவள் தலைகுனிகிறாள்.

 

சேது: தண்ணியப்போட்டுட்டு போதையில சொன்னதுன்னு தோணிச்சா என்ன?

 

சேது மெல்லச் சிரிக்கிறான்.

 

இந்து: இல்ல. . . சின்சியரா கேக்கிறதாத்தான் எனக்கும் தோணிச்சு. ஆம்பிளைங்க பலவிதமான பேச்சு பேசுவாங்க. அசிங்கமா கேப்பாங்க. வரட்டுமான்னு கேட்பாங்க. ஒரு ராத்திரி மட்டும் போதும்னு சொல்லுவாங்க. சிலர் நான் உன்னை வைச்சு காப்பாத்துறேன்னு சொல்லுவாங்க- ஒருத்தர் கல்யாணம் பண்ணிக்கட்டுமான்னு கேட்டது இதான் முதல் தடவை. . .

 

அவள் குரல் தழுதழுக்கிறது.

 

சேது அவளை பரிதாபத்துடன் பார்க்கிறான். புத்தகத்தை திருப்பித் தருகிறான். அவள் கண்களில் கண்ணீர். அவள் எதிர்பார்ப்புடன் அவனையே பார்க்கிறாள்.

 

இந்து: இப்பவும் அந்த கேள்வி இருக்குன்னு நான் நெனைச்சுக்கட்டுமா. அவசரத்திலே  வாய்தவறிச் சொன்னதா இருந்தா அதைக் கடைப்பிடிக்கணும்னு கட்டாயம் இல்லை. இருந்தாலும் சும்மா ஒரு எதிர்பார்ப்ப நான் வச்சுகிடறேன். நீந்தி நீந்தி போறப்ப அந்தப்பக்கம் எங்கியோ ஒரு கரை இருக்குன்னு நெனைச்சுக்கிறது ஆறுதலா இருக்கு. . .

 

சேது அவளை பிரியமாகப் பார்க்கிறான். ஆழமான குரலில் சொல்கிறான்.

 

சேது: தூரத்தில் ஒண்ணும் இல்ல, பக்கத்திலதான், இந்தா இங்க, தொட்டுப்பார்க்கிற தூரத்தில. . .

 

அவள் கண்களில் கண்ணீர் கொட்டுகிறது. அவனுடைய மார்பில் சாய்ந்து கதறியிருப்பாள். ஆனால் சட்டென்று திரும்பி ஓடிப்போகிறாள்.

அவனுடைய பார்வையில் ஊடுவழியில் அவள் துள்ளி ஓடும் காட்சி. அவனும் நடக்க ஆரம்பிக்கிறான்.

 

இப்போது சேதுவின் முகத்தில் ஒரு மென்மையான புன்னகை உள்ளது.

 

கட்.

 

 

செங்கோல்

திரைக்கதையைப் பற்றி ஒரு அதிகாரபூர்வ ஆய்வுக்கட்டுரை எழுதுமளவு எனக்கு விஷயம் தெரியாது. இருந்தாலும் என்னுடைய சொந்த அனுபவத்தில் இருந்து இவற்றைச் சொல்கிறேன்.

 

மலையாள சினிமாவில் கதைபஞ்சம் என்கிறார்கள். எனக்கு அப்படித் தோன்றவில்லை. கதைகளை கண்டுபிடிக்கும் கண்களுக்குத்தான் பஞ்சம். இது எல்லா துறைகளிலும் உள்ள பஞ்சம். வாழ்க்கை வணிகமயமாகும்போது நாம் மேலும் மேலும் கருணையில்லாதவர்களாக ஆகிறோமா?

 

நான் ஒரு சாமானியன். பசியும் தாகமும் அன்பும் வெறுப்பும் துரோகமும் புறக்கணிப்பும் என் வாழ்க்கையில் அனுபவங்களாக ஆகியுள்ளன. என்னைச்சுற்றி இரையும் வாழ்க்கைக் கடல். நான் அதில் ஒரு துளி. இந்த கரையிலா கடலில் எத்தனை முத்துக்கள், எத்தனை மீன்கள். எனக்கு பிடித்தமானவற்றை தொட்டு எடுத்தால் போதும். தேடக்கூட வேண்டியதில்லை. எல்லாரும் தேடுவது அபூர்வமான ஒரு முத்தை. அது அவனுடைய அதிருஷ்டத்தைச் சார்ந்தது.

 

பிறருக்கு சர்வசாதாரணம் என்று தோன்றக்கூடியவற்றில்கூட கலையைக் கண்டு பிடிப்பவனே மேலான கலைஞன். எனக்கு அற்பமான விஷயங்கள்கூட ஆழமான மனத்தூண்டலை அளித்துள்ளன. ஒரு நாய் இரவில் பரிதாபமாக ஊளையிட்டதைக் கேட்டு நான் ஆழமான உணர்வெழுச்சியை அடைந்து எழுதியிருக்கிறேன். ஒரு சொல், ஒரு முகம், ஒரு காட்சிகூட ஒரு கதைக்கான தொடக்கமாக மாறக்கூடும்.

 

ஆறாம் வகுப்பில் படிக்கும்போது நான் ஒரு எலிக்குஞ்சை கொன்றேன். அந்தத் துயரமே என்னை என் முதல் படைப்பை எழுதவைத்தது. பிற்பாடு எத்தனை கதைகள், எத்தனை நாடகங்கள், சினிமாக்கள். ஆனால் அடிப்படையில் நான் ஒரு சிறுகதைக்காரன் என்று படுகிறது. நான் சினிமாவுக்காக சிறுகதைகளை எழுதுகிறேன். சிறுகதையின் உத்தியும் வடிவமும்தான் என் திரைக்கதைகளிலும் கடைப்பிக்கப்பட்டுள்ளது.

 

சினிமாவுக்காக நான் எழுதிய பல கதைகளின் தொடக்கப்புள்ளிகளை இப்போது எண்ணிப்பார்க்கிறேன். மிக எளிய அனுபவத்துளிகள். மெல்லிய பொறிகள். அந்தப் பொறி சிலசமயம் அந்தக் கதையுடன் தொடர்பே இல்லாததாகக் கூட இருக்கும். ஒரு துளி விந்துவில் இருந்துதானே பிரம்மாண்டமான யானை பிறந்து வருகிறது. ஆகவே முதல் தூண்டலின் அளவும் அதற்கு கதையுடன் உள்ள தொடர்பும் மிகமிகச் சாதாரணமானவை. கதைக்கு ஒரு காரணமாக மட்டுமே அவை அமைகின்றன.

 

என் கதையும் கதாபாத்திரங்களும் என் நேரனுபவம் மூலம் நான் தெரிந்து கொண்டவை. கண்டு கேட்டு அறிந்த அனுபவங்கள் அவை. ஒருவருடைய வாழ்க்கையை நான் கதையாக ஆக்கிவிட்டேன் என்று தெரிந்தால் அவர் குன்றிப்போகலாம். அது அவரது அந்தரங்கத்தில் நுழைவது போன்றது அல்லவா? ஆகவே நான் அதைச் சொல்ல முடியாது. ஆனால் எல்லாம் மனிதர்களே என்று மட்டும் உறுதியாகவே சொல்வேன்.

 

(கதயுடெ காணாப்புறங்ஙள்  ஏ.கெ.லோகிததாஸ். கரண்ட் புக்ஸ் திரிச்சூர் வெளியீடு.)

முந்தைய கட்டுரைகாந்தி என்ற பனியா – 4
அடுத்த கட்டுரைகடிதங்கள்