ஜெயமோகனின்- ஏழாம் உலகம் -பொ கருணாகர மூர்த்தி

ஏழாம் உலகம் ஜெயமோகனின் படைப்புக்களில் உயர்வாதொன்றாகும். இதுவரை எந்த எழுத்தாளருக்குமே தோணாத சமூகத்தின் விளிம்புநிலைக்குக் கீட்பட்ட அங்கவீனர் ,பிச்சைக்காரர், தீராதபிணியாளர், அவர்களின் முதலாளிமார்கள்பற்றி அதில் அவர் விலாவாரியாகப்பேசியுள்ளார். பெற்றவர்கள் யாரென அறியப்படாயப்படாத உலகின் உண்மை அனாதைகளான அவர்கள் ஏதோ பண்டங்களைப்போல விலைபேசப்படுவதும், விற்கப்படுவதுவும், வாங்கப்படுவதும், புணரவைக்கப்படுவதும், ஈனவைக்கப்படுவதும், வதைக்கப்படுவதுமான கொடுமைகள் படிப்போர் மனதை உறைய வைக்கும். வேலப்பன்கோவில் பூசகர் (நம்பூதிரி) போத்தியாக இருப்பதுவும் நடுவில் வேலுப்பண்டாரம் போத்தியாக இருப்பதுவும் ஆரம்பத்தில் வாசகனுக்கு எந்தப்போத்தியைச் சொல்கிறாரென்று சற்றே குழப்பத்தைத்தருகின்றன. வேலுப்பண்டாரம் பச்சைச்சிசு ரஜனிகாந்தின் முதுகில் எண்ணையைத்தடவி வெய்யிலில் காயப்போட்டு அழவைத்துப்பிச்சையெடுக்கவிடும் ஒருபாவி, தான் செய்யும் கொடுமையின் ஆழம் புரியாமல் அதைப்பற்றிய எண்ணமேயின்றித் தனது சொந்தப் பிள்ளைகளின் மீதான பாசத்தில் மாய்கிறான் அவனது மூத்தமகள் திருமணத்துக்குப் பண்ணிவைத்த நகைகளையும் பணத்தையும் அள்ளிக்கொண்டு இரண்டாமவள் லோறன்ஸ் என்கிற ஒரு ரௌடியுடன் கம்பி நீட்டுகிறாள். பின்னர் அவன் கொஞ்சிக்கொஞ்சி வளர்க்கும் பிள்ளைகளில் மூத்தவளின் திருமணத்தைத் தன் ‘உருப்படி’களில் சிலவற்றைவிற்றே நிறைவேற்றி வைக்கிறான். அவளோ மாப்பிள்ளைவீடு புறப்படுமுன் தனக்கு தங்கை களவாடிக்கொண்டு போனது மாதிரியான மாங்காய் நெக்லெஸ்தான் வேணுமென்று தகப்பனுடன் மல்லுக்கு நிற்கவும் துவண்டுபோகிறான் மனிதன்.
ஆரம்பத்தில் போத்திவேலுவுடன் கதவுக்குப்பின்னால் நின்று பேசும் அவனது சம்பந்திஅம்மாள், “என் மகளை உங்களுக்குத்தரமாட்டேன் பய்யனுக்கு வேலை ஸ்திரம்னு சொன்னிய……ஸ்திரம் வேலை இல்லை……… சம்பளம்கூட எட்டாயிரம் என்னீக, வெறும் ஆயிரத்துஐநூறுதானாம் வெசாரிச்சுட்டுத்தான் வர்றேன்” என்று அவன் உடைத்துப்போடவும்

” நான் உம்மகிட்ட சொன்னேனாவோய்……உம்மகிட்ட சொன்னேனா?” என்றபடி இதுநாளும் கதவுக்குப்பின்னால் ஒளித்து வைத்திருந்த தன் தாட்டியான கரிய சரீரத்தை வெளியிளுத்து வந்து “தரகன்மாரு பலதும் சொல்லுவானுக. உம்ம கட்டினவள வேலிக்குப்பொறத்தால போறவன் மல்லாத்திக் கெடத்தினான்னு சொன்னாவ உள்ளதாவோய்?” என்று கத்தவும் வேலுப்பண்டாரம் “இது சரிவராது ஓய், பிள்ளையளுக்க ஜீவிதமாக்கும்” என்று எழுந்து நடக்கத்தொடங்குகிறான்.
சம்பந்தியம்மாளோ அவனைத் துரத்திக்கொண்டுபோய் “உம்ம பெட்டையளுக்குப் பலஜீவிதம் உண்டுவே, பழனிக்கும் திருச்செந்தூருக்கும் பிள்ளையள கூட்டிட்டுப்போயி சம்பாதிச்சுட்டுவாற பைசாதான்லே உனக்கு? எரப்பாளிப்பயலே? என்ன கோயில்லெ பூக்கட்டியா லெச்சம் லெச்சமா சம்பாதிச்சாய்? நானும் அறிஞ்சுதான் உள்ளேன் வோய்.” என்று அவமரியாதை செய்து அனுப்பிய பின்னாலும் அதே வீட்டில் திரும்பப்போய் சம்பந்தம் செய்யவேண்டிய ஒரு தந்தையாக வேலுப்பண்டாரத்தின் பாத்திரம்.
உருப்படிகளைக்கொண்டான சம்பாத்தியத்தில் தன் மகளுக்குக் கல்யாணத்தை நடத்திவைக்கும் போத்திவேலு அரும்பொட்டான சமையல் செய்வதால் கடைசியில் மாப்பிள்ளையின் ஆபீஸ் நண்பர்களுக்கே சாப்பாடு பாயாசம் போதாமல் போய்விடுகிறது. பாயாசத்துள் பிழிந்த தேங்காய்ப்பூ மிளகைப்பொடிசெய்துகொட்டி , லட்டை உடைத்துப்போட்டு தண்ணீர்விட்டுப்பெருக்கி ஒருவாறு சமாளிக்கிறார்கள். சாப்பாடு எஞ்சினால் தன் உருப்படிகளுக்கும் ஏதாவது தரலாமென்றிருந்த போத்திவேலு உருப்படிகள் ஒருவனான குய்யன் எங்களுக்குச் சாப்பாடெங்கே முதலாளியென்று அலறும்போது அதைக்காதிலேயே போட்டுக்கொள்ளாமல் அப்பால் போகிறான். இன்னொரு உருப்படியான அகமது “முதலாளி உங்க மகள் திருமணம் பற்றி எங்களுக்கும் ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம்” என்னும்போது ” ஆமா பெரிய ராஜவம்சம்ல்லா அழைத்து சல்க்காரம் பண்றதுக்கு” என்றும் இளக்காரம் பறைகிறான்.
ஒரு உருப்படிகளில் ஒன்றை ஏதோ தன்னுடைய நாய்க்குட்டியை விற்பதைப்போல வேலுப்பண்டாரம் சிறுநீரகத்துக்காக விலைபேசிவிற்கிறான். இன்னொரு அங்கவீனமான பெண்ணை ஒரு பொலீஸ்காரன் தள்ளிகொண்டுபோய் புணர்ந்து அவள் நாரியை முறிக்கிறான். முத்தம்மை என்கிற இன்னொரு பெண் உருப்படியை அர்ச்சகர் போத்தி தான் நிர்வாணமாகப் பார்க்கவேணுங்கிறார்.
இச்சமுதாயத்தின் வாக்குரிமையற்று வாழுங்கூறுகளான உருப்படிகளின் அவல வாழ்வை பொதுமக்களில் எவருமோ, மனித உரிமை அமைப்புகளோ, மாதரமைப்புகளோ கண்டு கொள்ளாமலிருப்பதுதான் சமூகக் கொடுமைகளின் உச்சம். வறுமையையும் சுரண்டலையும் தேசத்தின் சிதைவுகளாக அரசும் அரசியல்வாதிகளும் கண்டுகொள்ளாதவரை ரஜனிகாந்துகள், போத்திவேலுக்கள், சகாவுக்கள் இன்னும் இன்னும் இன்னும் ஜனித்துக்கொண்டேயிருப்பர்.
நம் சமூகத்தின் முக்கால்வாசி மூடநம்பிக்கைகளுக்கும். அர்த்தமற்ற சடங்குகளுக்கும், ஐதீகங்களுக்கும் ஊற்றுக்கண்ணே பிராமணீயந்தான். மாறாக போத்தி புத்திசாலித்தனமும் எந்தப்பிரச்சனைக்கான தீர்வும் பிராமணனிடமிருந்துதான் வந்தால்தான் உண்டு, சூத்திரனாலெல்லாம் முடியாதென்பதுபோலப் பினாத்துவது நல்ல விதூஷகம். கம்யூனிசம் பேசுபவனும், ஆன்மீகம்பேசுபவனும் பணத்தின்முன்னே மண்டியிடும் நிதர்சனங்கள் நாவலில் நன்கு காட்சிமைப்படுகின்றன. மலையாளமும் தமிழும் கலந்து வேலப்பன்கோவிலும் அதன் சூழலின் மக்களும் பேசும் மொழியை செவ்வனே அவதானித்து அவர்களின் உரையாடலை உயிர்ப்புடன் பதிவு செய்திருக்கிறார் ஜெயமோகன்.
முத்தம்மை என்கிற விகாரதோற்றமுடைய பெண்ணைப் பிள்ளைபேறு செய்யவைத்து ஒவ்வொன்றாக விற்றுப்பணம் பண்ணிவரும் பண்டாரம் கடைசியாக அவள் பெற்றபிள்ளைக்கே சாராயத்தைப்பருக்கிவிட்டு அவளுடன் அணையவிடுகிறாள். அணையும் அக்கூனனுக்கு ஒற்றைவிரல் இருப்பதைப்பார்த்து அது தன் மகன் என்பதைப் புரிந்து அய்யோ “ஒத்தைவிரல் வேண்டாம்” என்று முத்தம்மை அலறுகிறாள். உதவுவார் யாருமில்லை.
ஒரு பிறப்பு அங்கவீனமாக/விகாரமாகப் பிறப்பதற்கு விகாரத்தால் (Mutation) ஒழுங்கை/வடிவம் இழந்துவிட்ட நிறமூர்த்தங்களின் சேர்க்கை, முளையம் உருவாகியபின் ஏற்படும் விகாரங்கள்/அதிர்ச்சிகள், ஒவ்வாமையுண்டுபண்ணும் இரசாயனங்கள், கதிர்வீச்சுக்கள் எனப்பல புறச்சூழல்காரணிகளும் உண்டு. ஆதலால் ஒரு விகாரியை இன்னொரு விகாரியுடன் அணையவிடுவதால் மேலும் ஒரு விகாரம் பிறப்பதற்கான சந்தர்ப்பம் 25%தான். அதற்கு அடுத்த தலைமுறையில் அது மேலும் பாதியாகும். இந்த மரபியல் உண்மை நாவலில் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. ஒரு விகாரமும் இன்னொரு விகாரமும் இயைந்தால் இன்னொருவிகாரந்தான் ஜனிக்குமென ஒரு பாமரப் போத்திவேலுவோ குமரேசனோ கருதலாம், ஜெயமோகன் அப்படி எடுத்துக்கொள்ளமுடியுமா? ஜெயமோகனின் படைப்பாளுமைக்கு முன்னால் இது சிறியதொரு கவனயீனப்பிசகு. ஆனாலும் சுட்டாமலிருக்க முடியவில்லை.

நாம் படிக்கும் நாவல்களில் சிலவைதான் என்றைக்கும் மனதில் அழிந்துபோகாதபடி நிற்கும், பல மறந்துபோகும். ஏழாவது உலகமும் முதல்வாசிப்பிலேயே என்றைக்கும் மறந்துபோகாதபடிக்கு எங்கள் மனதில் ஆழமாக ஒரு கொத்துப்போட்டுவிடுகிறது. முகாரிதான். வாசிப்பின் அற்புதத்தால் அது மனதை இனிப்பிசைந்துகொண்டுதான் இருக்கும்.
——————————————————————————–

பொ.கருணாகரமூர்த்தி. பெர்லின்,

22.08.2007

காடும் ஏழாம் உலகமும் பாவண்ணனும்:சூரியா

முந்தைய கட்டுரைஜெயமோகனின் ஏழாம் உலகம்-அ.முத்துலிங்கம்
அடுத்த கட்டுரைஜெயமோகனின் ஏழாம் உலகத்தில் உடைந்து சிதறும் மதபீடங்கள் – புதியமாதவி, மும்பை