விக்கி- கடிதம்

எழுத்தாளர் அவர்களே,

வணக்கம்.

தமிழ் விக்கி பற்றி வன்பாக்கத்துக்காரர் தாலிபானியம் என்று எழுதியதை ஆதரித்து நீங்களும் அடிப்படை வாதம் என்று கூறுவது வியக்கத்தக்கது. உண்மைகளைச் சற்று
புரிந்து கொண்டு எழுத வேண்டுகிறேன். முதலில் விக்கி என்றால் என்ன என்று ளங்கிக்கொள்வது நல்லது. நீங்கள் “ஆனால் பிறர் கட்டுரைகளில் கையை வைப்பதும்” என்று எழுதுவதில் இருந்து விக்கியைப்பற்றி நீங்கள் சரிவரப் புரிந்துகொள்லவில்லை என நினைக்கிறேன்.
விக்கி என்பது ஒரு கூட்டு ஆக்கம்.அதில் ஒரு கட்டுரை, அல்லது ஆக்கம் என்பது எப்படி எழுதினால் நன்றாக இருக்கும் என்று பலரும் கூட்டாக எண்ணிப், பலவாறு திருத்தியும் மாற்றியும், கழித்தும், புதியன சேர்த்தும் எழுதி உருவாக்குவதாகும். கலைக்களஞ்சியத்துக்கு ஏற்றவாறு கட்டுரையைமேம்படுத்துவதே நோக்கம்.
எனவே “பிறர் கட்டுரைகளில் கையை வைப்பது” என்பது போன்ற உணர்வுடன்அணுகினால் விக்கிமுறைகளை ஒருசிறிதும் புரிந்துகொள்ளவில்லை என்று பொருள்.
கருத்து வேறுபாடுகள் இருப்பது புதிதல்ல, ஆனால் அவற்றைப் பண்பான உரையாடல் மூலம் அறிவடிப்படையில் அணுகி, கருத்துகளை முன்வைத்து,செல்லும்படியாக கருத்தாட வேண்டும். இணக்கம் காண முயல வேண்டும்.
விக்கியின் முறையும் இதுவே.
அதனை விடுத்து பண்பற்ற முறையில் தாலிபானியம் என்றெல்லாம்தகாத முறையில் கடுமையாக சாடுவது  எவ்வகையில் நாகரீகமாகும்?அதனை நீங்களும் ஆதரிக்கின்றீர்களே!
வன்பாக்கத்துக்காரரின் கருத்துகள் செல்லாமையை
விக்கியில் நடந்த பல உரையாடல்கள் மூலம் காணலாம்.

முக்கியமாக இரண்டு கருத்து வேறுபாடுகள் இருப்பதை உணரலாம். இரண்டுமே
தமிழல்லா வேற்றுமொழிச்சொற்களின் பயன்பாடு பற்றியவை.

1) கிரந்த எழுத்தைப் பயன்படுத்தலாமா, கூடாதா, பயன்படுத்துவதாயின்
எப்பொழுது, எந்த அளவுக்குப் பயன்படுத்தலாம்.
2) ஆங்கிலம், சமசுக்கிருதம், இந்தி, உருது முதலான பிறமொழிச்சொற்களைத்
தமிழில் எந்த அளவுக்கு எங்கெல்லாம் ஆள்வது நல்லது.
புரியும்படி தகுந்த ஈடான தமிழ்ச் சொற்களால் குறிக்கலாமா கூடாதா?
இவை பற்றியெல்லாம் தமிழ் விக்கிப்பீடியாவில் மிகப்பல இடங்களில்
அறிவடிப்படையில் கருத்துகளைச் செல்லும் முகமாக வைத்து
விரிவாக உரையாடிப் பெற்ற கூட்டு ஒப்புணர்வான முடிவின்
அடிப்படையிலேயே
எழுதுகிறோம், திருத்தங்கள் செய்கிறோம்.
இப்பொழுது வன்பாக்கத்துக்காரர் குறிப்பிட்ட
சில கருத்துகளுக்கு என் மறுமொழிகளை இடுகின்றேன்.
எழுத்து நடையைப் பற்றி அவர் கூறியது ஆங்கில விக்கிப்பீடியாவுக்கு.
அது தமிழுக்கும் பொருந்தும் என்பது அவரின் தனிப்பட்ட கருத்து.
ஆங்கில மரபு வேறு தமிழ் மரபு வேறு.
குறிப்பாகத் தமிழில் சீரிய எழுத்து வழக்கும், பேச்சு வழக்கும் மாறுபடுவது.
இரட்டை நடை வழக்கு (டைகுளோசியா, Diglossia என்பர். உண்மையில்
பல்நடை எனலாம்).
புனைகதைகளில் பேச்சு நடையில் எழுதலாம்,
கலைக்களஞ்சியம் போன்ற சீரிய படைப்பில் மொழி நடையானது
எளிதாக இருந்தாலும், திருத்தமாக இருக்க வேண்டும்.
வேறு பற்பல பண்புகளும் இருத்தல் வேண்டும்.
மொழிநடையைப் பற்றியும், சொற்களைப் பற்றியும்
எல்லாப் பயன்பாடும் சரிதான்” என்பது அவருடைய தனிக்கருத்து.
விக்கியில் அது ஏற்பு பெறாத ஒன்று. இவை முறைப்படி கருத்தாடியவை.
தமிழ்ச்சொற்களால் கூற முற்படுவதற்கு முக்கிய காரணம்
கருத்து ஆழப் பதிகின்றது.
இதனை ஆயிரக்கணக்கான எடுத்துக்காட்டுகள் மூலம் விளக்க இயலும்.
விக்கி உரையாடல்களில் இவை பதிவாகி உள்ளன.
தமிழில் எழுதும் பொழுது தமிழ்ச்சொற்களில்
எழுதினால் திணிப்பா? வியப்புதான்!
ஊர்ப்பெயர்கள், மொழிப்பெயர்கள் என்று வரும்பொழுது ஆங்கிலத்தில் exonym
(புறப்பெயர், புறமொழிப்பெயர்) என்பார்களே, அதனை உணராமல் பலரும்
கருத்துத் தெரிவிக்கிறார்கள். எடுத்துக்காட்டாக Deutsch (டாய்ட்சு அல்லது இடாய்ட்சு)
என்று தங்கள் மொழியை அவர்கள் அழைப்பதை, ஆங்கிலேயர் german என்கின்றனர்.
இதற்கு புறப்பெயர் (exonym) என்று பெயர். வேடிக்கை என்னவென்றால்
இடாய்ட்சு மொழியில் இல்லாத ஒலியைக் கொண்டு தொடங்கி german என்கின்றனர்!!
(Jeyamohan என்பதை அவர்கள் யெயமோஃகன் என்று ஒலிப்பர்; Vijayaraghavan என்பதை
வியயராகவன் என்பர்).
டாய்ட்சுலாந்து (Deutschland) என்னும் அவர்கள் நாட்டை ஆங்கிலேயர்
ஆங்கிலத்தில் Germany என்றும், பிரான்சு நாட்டு மொழியில் (பிரான்சியத்தில்)
Allemagne என்றும் வெவ்வேறுவிதமாகக் கூறுகின்றனர்.
எனவே தமிழில் தமிழ் மொழிக்கு இணக்கமானவாறும் அதே நேரத்தில்மூல மொழிக்கு ஒருவாறு நெருங்கிய ஒலிப்புடனும் இருக்கும்இடாய்ட்சுலாந்து என்பதால் தவறில்லை.
செருமனி என்றோ, இடாய்ட்சுலாந்து என்றோ கூறலாம்.
வன்பாக்கத்துக்காரர் ஸ்பெயின் என்பதைக் குறிப்பிட்டார். அந்நாட்டவர்அவர்கள் நாட்டின் பெயரை España என்கின்றனர். எசுபான்யா அல்லது எசுப்பானியாஎன்று அவர்கள் நாட்டுப் பெயருக்கு ஏற்றார்போலத் தமிழில் கூறுவது தவறாகுமா?தமிழில் மெய்யெழுத்தில் தொடங்கி எழுதுதல் தவறு.
இதனையும் கருத்தில் கொள்ளல் வேண்டும். எல்லா இடத்திலும் ஆங்கிலத்தையே பின்பற்றி பெயரிடவேண்டும் என்பது ஏற்கத்தக்க வழக்கம் இல்லை..தமிழ் இலக்கணத்தை அறவே விட்டுவிட்டு எழுத வேண்டும் என்பதும் ஏற்க இயலாதது.
சோவியத் யூனியன் என்பதை சோவியத்து ஒன்றியம் என்று எழுதுவதால் என்ன தவறு?!சோவியத் யூனியன் என்பதும் ஒரு புறப்பெயரே (exonym). இதனை எல்லாம் இன்னும் பல எடுத்துக்காட்டுகளுடன் கூறி விக்கி உரையாடல்களில் பலரும் மறுத்துள்ளனர்.வன்பாக்கத்துக்காரர் கருத்துகள் விக்கியில் செல்லாமையால் அவர் இங்குவந்து பண்பற்ற முறையில் தாலிபான் என்றெல்லாம் தாக்குகின்றார்.
ஷரத்துகள் என்பது போன்ற புரியாத சொற்களுக்கு ஈடான உட்கூறுகள்என்று எழுதுவது எளிதாகப் புரிந்துகொள்ளும்பொருட்டு.
கிரந்த எழுத்தின் பயன்பாடு பற்றி பல கருத்துகள் உள்ளன.
கூடவே கூடாது என்றும். ஆங்காங்கே சிறிதளவு இருந்தால்
தவறில்லை (பெயர்கள், ஒருசிலவேற்றுமொழிச் சொற்கள்), ஏன் எல்லா இடத்திலும் இருக்கலாம்,அவற்றைத் தமிழ் எழுத்தாகவே கருத வேண்டும், மேலும் சில கிரந்த எழுத்துகளையும் சேர்த்து ஏற்றுக்கொள்ள வேண்டும்என்பது போல பற்பல கருத்துகள் உள்ளன.
இவற்றைப் பற்றி விரிவாக அறிவடிப்படையில், முறைப்படி கருத்தாடலாம்(பண்புடன் உரையாடுவது எனில்).
ஆனால் விக்கியின் கொள்கை இது பற்றி திட்டவட்டமாக ஏதும் இல்லை.
கூடியமட்டிலும் கிரந்தம் தவிர்த்து எழுதுவதைப்
பொதுவாகப் பரிந்துரைக்கின்றது (கொள்கை அல்ல) –
பல காரணங்களுக்காக (வடவெழுத்து ஒரீஇ என்னும் விதியின்
அறிவுடைமையும், நேர்மையும் அவற்றுள் சில). ஆனால் விக்கியில்ஆயிரக்கணக்கான இடங்களில் கிரந்தப் பயன்பாடு உள்ளது.
தமிழில் எழுதும்பொழுது தமிழ் எழுத்துகளில் எழுதினால் தாலிபானா?!அப்படிப் பார்த்தால் இந்திக்காரர்கள் தேவநாகரித் தாலிபான்கள்,ஆங்கிலேயர் இலத்தீன் எழுத்து அல்லது ஆங்கில எழுத்துத் தாலிபான்கள்!
எசுப்பானிய மொழியில் (Español) Jesus என்னும் பெயரை Hesoos என்பது போலஒலிக்கிறார்கள் (தமிழில் இயேசு, ஏசு என்கிறோம்).
ஐரோப்பிய மொழியாகிய அவர்கள்க்கூட ஜ என்னும் ஒலியை
எடுத்துக்கொள்ளவில்லை. அதே போல இத்தாலிய, இடாய்ட்சு
மொழி என பல ஐரோப்பிய மொழிகளில் உள்ள எடுத்துக்காட்டுகளைக்கூரலாம். ஆங்கிலேயர்கள் என்ன ஞாnasamban என்றோ,Aழgappan என்றோ, Vaள்ளி என்றோவா எழுதுகிறார்கள்?  ஒருங்குறியில்எழுத முடிகின்றதே என்றா வாதிட முடியும்?
நேர்மையுடன் எண்ணிப்பாருங்கள்!
ஒரு மொழியில் எழுதும்பொழுது அம்மொழியின் இயல்புகளையும்,
இலக்கணங்களையும் ஒட்டி எழுத வேண்டும்-
அதுவும் சீரிய கலைக்களஞ்சியம் போன்ற
படைப்பில்- என்பது கூடப் புரிந்துகொள்ளாமல் கடுமையாக
தாக்கிப் பண்பற்ற முறையில் பேசுவது சரியா?

அன்புடன்
செல்வா

அன்புள்ள செல்வா,

நீங்கள் சொல்வதன் அடிப்படைகளை நான் ஏற்கிறேன். தமிழ் இரு அமைப்புகொண்டது — உரைமொழி, சீர்மொழி. கட்டுரைகள் சீர்மொழியில் மட்டுமே இருக்க வேண்டும் என்றே நான் எண்ணுகிறேன். என் கட்டுரைகள் அனைத்துமே அவ்வாறுதான் இருக்கின்றன. தொடக்கத்தில் அதைப்புரிந்துகொள்ள பலர் சிரமப்பட்டாலும் இப்போது எழுதி எழுதி அவர்களை அதற்குப் பயிற்றுவித்துவிட்டேன்.

ஆனால் ஒரு மொழியின் பொதுவான கலைக்களஞ்சியமென்பது எப்போதும் அந்த அறிவுலகுக்கு பொதுவாக ஒப்புதல் உள்ளதாகவே இருக்க வேண்டும். அப்போதுதான் அது நடைமுறையில் பயனுள்ளதாக இருக்கும். அது ஒரு தனிநபரின் அல்லது தனிக்குழுவின் மொழியில் அமைந்திருந்தால் அதனால் எந்தப்பயனும் இல்லை. அப்பெருமுயற்சியை சீர்குலைப்பதாகவே அது அமையும்

 

தமிழின் சீர்மொழியை சம்ஸ்கிருதக் கலப்பில்லாமல் ஆக்குவதற்கான முயற்சிக்கு நூறு வயது. அது இன்றுவரை சந்தித்துள்ள சிக்கல்கள் பல. முதலில் தமிழில் புழங்கும் பல்லாயிரம் சொற்கள் சம்ஸ்கிருத மூலம் உள்ளவை. சம்ஸ்கிருதச் சொற்களிலும் ஏராளமானவை தமிழ் வேர் கொண் டவை.

 

 

உதாரணமாக நான் எழுதும் இக்கடிதத்திலேயே சிரமம் தமிழில் வந்த வடமொழிச்சொல். மூலம் தமிழிலிருந்து சம்ஸ்கிருததுக்கும் சென்ற சொல். நம்முடைய மொழி மற்றும் சிந்தனைக் கட்டமைப்பின் பகுதியாகவே சம்ஸ்கிருதச் சொற்கள் உள்ளன. நம் தத்துவக் கலைச்சொற்களில் பெரும்பகுதி சம்ஸ்கிருதமூலம் உள்ளவையே. நான் சிலம்பை மறு ஆக்கம் செய்து தூயதமிழில் கொற்றவைஎழுதியபோது இளங்கோ கையாண்டிருந்த ஏராளமான சம்ஸ்கிருதச் சொற்களை தமிழாக்கம் செய்ய நேர்ந்தது!

ஆகவே சீர்மொழியை தூய்மையாக்கலென்பது எளிய செயல் அல்ல. மிகுந்த நுட்பத்துடனும் பொறுப்புடனும்செய்யவேண்டிய செயல். இயந்திரத்தனமாக அதைச் செய்தால் தொடர்புறுத்தலையும் நெகிழ்தன்மையையும் இழந்த ஒரு செயற்கை மொழியே உருவாகும். தனித்தமிழ் இயக்கம் உருவாக்கிய மொழி அம்மாதிரி ஒரு கல்மொழி‘. அதில் நல்ல படைப்பிலக்கியத்தையோ நல்ல சிந்தனைகளையோ கூற முடியாத நிலையே இருந்தது.

 

 

என் நோக்கில் தமிழில் பிறமொழிச் சொற்களை எடுத்தாள ஒரு விதியை தொல்காப்பியம் வகுத்தளிக்கிறது. திசைச்சொல் என்றால் தமிழின் உச்சரிப்பு முறைமைக்குள் வரும் பிறசொல். ஆகவே சிரமம் என்று தமிழில் சொல்லலாம். சம்ஸ்கிருதத்தில் அச்சொல் புழங்குவது சிரமம் என்று நாம் தமிழில் சொல்லும் பொருளில் அல்ல — உழைப்பு என்று அங்கே பொருள். சினிமா என்ற சொல்லை தமிழ்ச் சொல்லாக ஆக்கலாம். கம்ப்யூட்டர் திசைச்சொல் ஆக முடியாது.

தமிழில் கிரந்த எழுத்துக்கள் அதன் அறிவார்ந்த தேவைக்கென தோன்றின. அதை கொண்டுவந்தவர்கள் சம ர்கள். அதன் மூலம் பிராம்மியாக இருக்கலாம். அது தமிழில் தத்துவார்த்தமான தேவைக்காக சம்ஸ்கிருதச் சொற்கள் அதிகமாக பயன்படுத்தப்பட்ட காலகட்டத்தில் அச்சொற்களை பயன்படுத்துவதற்காக உருவாக்கபப்ட்ட எழுத்துக்கள். அவ்வெழுத்துக்களுக்கு ஒரு பயன்பாடு இன்றும் உள்ளது.

 

கிரந்த எழுத்துக்களையும் சம்ஸ்கிருதச் சொற்களையும் கூடுமானவரை தவிர்ப்பதே முறை. ஆனால் இயந்திரத்தனமாக அல்ல. பயன்பாடு சார்ந்து, மொழியின் ஒலித்தேவை சார்ந்து அறிவுநேர்மையுடனும் நுட்பத்துடனும் செய்யவேண்டும். வெறுப்புடனும் காழ்ப்புடனும் அல்ல, நேர்நிலை படைப்பூக்கத்துடன் செய்யவேண்டும். அப்படித்தான் செய்கிறீர்களா என உங்கள் நெஞ்சிடம் கேட்டுக்கொள்ளுங்கள்.

 

என்னை ஒருவர் செயமோகன் என்றழைப்பதை நான் விரும்ப மாட்டேன். ஆனால் ஜெயமோஹ ன் என்றும் எழுத மாட்டேன். முன்னதில் கிரந்த எழுத்து இல்லையேல் ஒலி மாறி சொல்லே மாறி விடுகிறது. பின்னதில் அந்த தமிழ் எழுத்து தேவையான ஒலியை குறிப்புணர்த்துவதாக உள்ளது.

 

 

இவ்வாறு திசைச்சொற்கள், கிரந்த எழுத்துக்கள் சார்ந்து பல கருத்துக்கள் நம் சூழலில் உள்ளன. நீடித்த விவாதம் நடந்து வருகிறது. இவ்விவாதத்தில் ஒரு தரப்பினரே திசைச்சொற்களையும் கிரந்த எழுத்துக்களையும் முற்றாக விலக்கும் மொழி அடிப்படைவாதிகள். தமிழின் கடந்த நூறாண்டுவரலாற்றில் தமிழ்மொழி அடிப்படைவாதிகளின் அறிவார்ந்த பங்களிப்பு என்பது கலைச்சொல்லாக்கத்தில் மட்டுமே உள்ளது.

 

 

ஒரு பொது முயற்சி அதில் ஈடுபடும் அனைவருக்கும் பொதுவான ஒரு சமரசத் தளத்திலேயே நிகழவேண்டும். அந்த சமரசத் தளம் நோக்கி எத்தனை தீவிரமான விவாதத்தையும் முன்வைக்கலாம். அந்தப்புள்ளியை நம்மை நோக்கி இழுக்கலாம். அதுவே மக்கள்நெறி. அதைவிட்டுவிட்டு ஒரு குழுவாக அமைப்பை கைப்பற்றிக்கொன்டு அந்த அமைப்பில் உங்கள் சொந்த விதிகளை நீஙளே போட்டுக்கொன்டிருந்தீர்கள் என்றால் அது உங்களுக்கான ஒரு திண்ணையாக மட்டுமே அமையும். அதன் நோக்கம் தோற்றுவிடும்

யார் வேண்டுமானாலும் திருத்தலாமென்கிறீர்கள். நல்லது, உங்கள் எதிர் தரப்பு இதேபோல ஒரு குழு அமைத்து இரவுபகலாக எல்லா கட்டுரைகளையும் மணிப்பிரவாளத்துக்கு மாற்றினால் என்ன செய்வீர்கள்? உங்கள் இருவர் நடுவே நடக்கும் போராக விக்கி மாறிப்போய்விடுமல்லவா?

ஆனால் தமிழின் வெற்றி என்பது இன்றும் தமிழில் படைப்பூக்கத்துடன் எழுதும் தமிழில் வாசிக்கும் ஒருசாராரால் மட்டுமே நிகழ்கிறது. நான் அந்த தரப்பைச் சேர்ந்தவன், அவர்களில் ஒருவன்

ஜெ

தேவநேயப் பாவாணர் விக்கி

முந்தைய கட்டுரைகாந்தியும் தலித் அரசியலும் 1
அடுத்த கட்டுரைகாந்தி கடிதங்கள்