தனிப்பட்ட கடிதங்கள்

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம். உங்களின் எழுத்தின் வழியே பல கேள்விகளுக்கு பதிலும், புரிதலும் அடையும் ஒரு வாசகன் நான். வெள்ளை யானை நாவல் வெளியீட்டில் உங்களிடம் கையெழுத்து பெற்றதிலும் , பனுவல் அரங்கத்தில் கலந்துகொண்டதிலும் மகிழ்ச்சியை உணர்கிறேன். நேரில் உங்களிடம் சொல்லத்தவறியவற்றை சொல்லவே இந்த கடிதம்.

கணவன்-மனைவி பிரச்சனைகள் , குடும்பப்பிணக்குகள் மற்றும் பாலியல் அத்துமீறல் தொடர்பாக வரும் கடிதங்களுக்கு பதிலளிக்கலாமா என்ற உங்கள் கேள்விக்கு உங்களின் வாசகன் என்கிறமுறையில் எனது பதில்/கருத்து.

பாலியல் அத்துமீறல் தொடர்பாக நீங்கள் எந்த விதமான ஆலோசனை அளிக்கிறீர்கள் என்பதை என்னால் கணிக்க முடியவில்லை. உங்கள் இணையத்திலும் அப்படியான பதிவுகள் படித்த நியாபகம் இல்லை. கணவன் -மனைவி , குடும்ப பிணக்குகள் குறித்து நீங்கள் ஆலோசனை சொல்லவேண்டிய அவசியம் இல்லை என்று எண்ணுகிறேன்.

இப்படியான பிரச்சனைகளின் ஊற்று “அவன்/அவள்/அவர்கள் செய்வது தவறு” என்ற எண்ணத்தில் இருந்தே தொடங்குகிறது. குற்றம் அடுத்தவரிடம் மட்டுமே உள்ளது என்ற எண்ணம் கொண்டவர்கள் எதைத்தான் முன்னெடுக்க முடியும் ? உள்ளத்தில் நல்ல உள்ளம் ….. என்ற பாடலைக் கேட்டவுடனே கண்ணீர் விடுவர். அவ்வளவு உன்னதமான உள்ளம் தன்னுடையது என்ற நினைப்பில். மேலும் இவர்கள் தங்கள் பிரச்சனைகளை சொல்லும்போது ஒருதலைபச்சமாகவே இருக்கும். இவர்களுக்கு வேண்டியது சமாதானமே ஒழியே தீர்வுகள் இல்லை. நீங்கள் குறிப்பிட்டது போல உங்கள் பதிலை சம்பந்தபட்டவரிடம் காட்டி சமாதானம் அடையலாம். உங்கள் கட்டுரைகளையும் , கதைகளில் வரும் கதாபாத்திரங்களை ஓரளவேனும் உள்வாங்கினாலே பல கேள்விகள் அர்த்தமற்றுப் போகும். அதில் விடை காணமுடியாதவரிடம் வேறு விதமான விளக்கங்கள் எந்த தீர்வையும் தராது என்றே எண்ணுகிறேன்.

எனது புரிதலில் தவறு இருந்தால் தயவுகூர்ந்து சுட்டிக்காட்டவும் .
மீண்டும் ஒருமுறை உங்களது எழுத்துகளுக்கு நன்றி சொல்லிக்கொண்டு கடிதத்தை நிறைவு செய்கிறேன்.

இப்படிக்கு ,

இரா, தினேஷ்.

அன்புள்ள தினேஷ்

பனுவல் சந்திப்பில் நான் சொன்னது ஒன்றே. இந்தக் கடிதங்கள் வழியாக நான் எவரையும் ஆலோசனை சொல்லி திருத்த முடியுமென நினைக்கவில்லை. எவரையும் வழிநடத்தவும் முனையவில்லை. தீர்வுகள் சொல்லும் இடத்திலும் நான் இல்லை

இவற்றின் நன்மை இரண்டே. ஒன்று எனக்கு இன்றைய வாழ்க்கையின் ஒரு குறுக்குவெட்டுத்தோற்றம் வந்துசேர்ந்துகொண்டே இருக்கிறது. அது எழுத்தாளனாக எனக்கு நல்லது

இரண்டு இதுசார்ந்து ஒரு பொதுவிவாதம் நிகழ்ந்துகொண்டிருக்க இவை வழிவகுக்கின்றன. பல அந்தரங்க விஷயங்கள் பொதுவிவாதம் மூலம் மேலும் தெளிவைநோக்கிச் செல்லக்கூடும்

ஜெ

முந்தைய கட்டுரைவாசிப்பின் நிழலில் – ராஜகோபாலன்
அடுத்த கட்டுரைவிஷக்கன்னியின் குழந்தைகள்