அறமெனும் சாவி

பலவருடங்களுக்கு முன்பு சுந்தர ராமசாமியுடன் பேசிக்கொண்டிருந்தபோது அவரது நண்பர் ஒருவர் பார்க்கவந்திருந்தார். சுந்தர ராமசாமியிடம் அவர் பேசிக்கொண்டிருந்தபோது நான் கவனித்துக்கொண்டிருந்தேன். அந்நண்பர் மிதத்தாழ்ந்த ரசனைத்தரம் கொண்ட இசையை, இலக்கியங்களை சிலாகித்துச் சொல்லிக்கொண்டிருந்தார். மிகச்சாதாரணமான அரசியல் பார்வையும் மிகமிகப்பிற்போக்கான சமூகப்பார்வையும் கொண்டிருந்தார். அவர் சென்றபின் சுந்தர ராமசாமி சிரித்துக்கொண்டே சொன்ன்ன ஒரு வரி என்னை நிலைகுலையச் செய்தது. அந்நண்பர் அறிவியலில் உயர் ஆய்வு செய்பவர். மிகமுக்கியமான ஒரு பதவியில் இருந்தார்

அதுவரை அறிவு என்பதை என்னவகையான அறிவு என பிரித்துப்பார்க்கும் பார்வையற்றவனாகவே நானிருந்தேன். இருபதாம் நூற்றாண்டின் பிரம்மாண்டமான அறிவு வளர்ச்சி அறிவை பற்பல சிறு துறைகளாகப்பிரித்துவிட்டது. அவற்றில் ஏதேனும் ஒரு துறையில் தொடர்ச்சியான தீவிரமான ஈடுபாடும் பயிற்சியும் இருந்தால்மட்டுமே நிபுணராக முடியும் என்ற நிலை உருவாகியது. இவ்வாறு உருவாகும் துறை நிபுணர்கள் அவ்வாறு ஒரேதுறையில் மூழ்கிவிட்டிருப்பதனாலேயே பிற எதைப்பற்றியும் அறிதலற்றவர்களாக, சூம்பிப்போன ரசனையும் பொதுச்சிந்தனையும் கொண்டவர்களாக இருக்கக்கூடிய நிலை உருவாகியது. அறிவே அறிவுக்கு எதிரான பெரும்தடையாக ஆகும் நிலை இது

இந்தச்சிக்கலை உணர்ந்த நவீனச்சிந்தனையாளர்கள் ஒருங்கிணைந்தஞானம் என்பதை தொடர்ந்து முன்வைத்தபடியே உள்ளனர். மனிதஞானம் அனைத்தையும் ஒரே மையத்தில் தொகுத்துப்பார்க்கமுடியுமா என்ற தேடல் அது. அவ்வாறு தொகுப்பதற்கான பொதுவான அம்சமாக கணிதத்தை வைக்கமுடியுமா , அழகியலை வைக்கமுடியுமா என்றெல்லாம் சிந்தனைசெய்திருக்கிறார்கள். அரவிந்தர் மானுடசிந்தனைக்கான பொதுக்கூறாக அறம் மட்டுமே இருக்கமுடியும் என்று சொல்கிறார். நடராஜகுரு அதை வெவ்வேறு வகையில் மேலெடுத்துச் சிந்தனைசெய்திருக்கிறார்.
அவர்களை முன்னோடிகளாகக் கொண்டவன் என்றமுறையில் என் பார்வையும் அதுவே. இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகள் அனைத்துமே சிறியவை. ஆகவே விரிவான தர்க்கக் கட்டுமானம் இல்லை. பல கோணங்களினான பார்வையும் இல்லை. பெரும்பாலும் ஒரு விஷயத்தைச்சார்ந்த உடனடி மனத்திறப்புகள் இவை. ஆனால் ஒட்டுமொத்தமாக அனைத்துச் சிந்தனைத்தளங்களும் மேலான அறவுணர்ச்சி ஒன்றை நோக்கி எழமுயல்கின்றன. அறச் சிந்தனைகளை அடித்தளமாகக் கொண்ட ஒரு சமூகத்துக்கான தேடலை இவை முன்வைக்கின்றன. அந்தத்தேடல்கொண்ட வாசகர்களிடம் நாம் நிகழ்த்தும் உரையாடல் இது.

ஜெயமோகன்

[சொல்புதிது வெளியீடாக வரவிருக்கும் புதியவெளிச்சம் தொகுப்புக்கான முன்னுரை]

முந்தைய கட்டுரைஇரு கடிதங்கள்
அடுத்த கட்டுரைதிருவனந்தபுரம் உலகத்திரைப்பட விழா 2013