நிழல்களின் அசைவு

சிறுவயதில் எங்கள் வீட்டுச் சன்னலில் ஆற்றங்கரையில் எழும் நிலவில் சலிக்கும் தென்னையோலைகளின் நிழல்கள் ஆடும். விதவிதமான கற்பனைகள் வழியாக நான் அந்நிழல்களை ஒரு நிகர் உலகமாக ஆக்கிக்கொள்வேன். அழைக்கும் கைகள். நெளியும் கூந்தல். ஆடும் விசிறி. பறக்கும் ஆடை. புன்னகைக்கும் முகங்கள். சிலிர்க்கும் பிடரிகள்….

என்னுடைய நிழல்களின் உலகை வடிவமைத்ததில் குமரிமாவட்டத்தின் பண்பாட்டுச்சூழலுக்கு பெரும் பங்குண்டு. யக்‌ஷிகளும், மாடன்களும், நூற்றுக்கணக்கான குட்டித்தெய்வங்களும் ஆவிகளும் நிறைந்த கதைவெளியில்தான் நான் பிறந்து வளர்ந்தேன். இளவயதில் நான் கேட்ட கதைகளில் பெரும்பாலானவை அமானுடக் கதைகளே. கொஞ்சம் அமானுடம் கலக்காவிட்டால் அது கதையே அல்ல என்றுகூட நான் நம்பியிருந்தேன்.

இலக்கிய அறிமுகம் ஏற்பட்டபின்னரே அந்த அமானுடத்தை உருவாக்கும் உளவியல் மீதான ஆர்வம் ஏற்பட்டது. எனக்குப்பிடித்த பேய்க்கதை எழுத்தாளர்கள் சிலர் உண்டு. மேரி கெரெல்லி, எடித் வார்ட்டன், டபிள்யூ டபிள்யூ ஜேக்கப்ஸ் போல. அவர்கள் உருவாக்கிய அமானுட உலகம் வெறும் அச்சத்தால் மட்டும் ஆனதல்ல. அது ஐயமும் தனிமையும் கொள்ளும் சாத்தியங்களினால் ஆனது. மனித மனம் எப்படியெப்படியெல்லாம் யதார்த்தத்தின் இரும்புவெளியைத் தாண்டிச்செல்லக்கூடும் என்ற பிரமிப்பை உருவாக்குவது.

தமிழில் எல்லாவகை இலக்கியக்கதைகளுக்கும் முதல்முன்வடிவை எழுதிய புதுமைப்பித்தன் இவ்வகை கதைகளுக்கான மூன்று முன்வடிவங்களையும் எடுதியிருக்கிறார். காஞ்சனை, பிரம்மராட்சஸ், செவ்வாய்தோஷம். ஆனால் பின்னர் வந்த இலக்கிய அலையில் இவ்வகை எழுத்துக்கள் அதிகமாக முன்னெடுக்கப்படவில்லை. இங்கே நிகழ்ந்த பகுத்தறிவு இயக்கம் ஒரு காரணம். இலக்கியம் சமூக யதார்த்தங்களின் கண்ணாடி என்ற நம்பிக்கை இன்னொரு காரணம்

ஆனால் என்னுடைய முன்னோடி என நான் நம்பும் அசோகமித்திரன் அற்புதமான அமானுடக்கதைகளை எழுதியிருக்கிறார். இன்னும் சிலநாட்கள் அவற்றில் ஒரு பெரும்படைப்பு என நான் நினைக்கிறேன்.

விதவிதமான கதைகளை என்னுடைய சொந்த உற்சாகத்துக்காக, கண்டடைதலுக்காக எழுதவேண்டுமென்ற எண்ணம் உருவான நாட்களில் ஒன்றில் இக்கதைகளை எழுத ஆரம்பித்தேன். வழக்கம்போல தொடர்ச்சியாக இக்கதைகள் உருவாயின. நான் தொடர்ந்து இக்கதைகளின் அமானுட உலகிலேயே வாழ்ந்த நாட்கள் அவை. அவை வழியாக நான் சென்ற தொலைவு என்னை புதியதாக நானே கண்டுபிடித்த பிரமிப்பை அளித்தது.

இக்கதைகள் வழியாக வாசகர்கள் அவர்களின் நிழலாட்டத்தைக் காணமுடிந்தால் மகிழ்வேன். இதன் புதிய பதிப்பை வெளியிடும் நற்றிணை பதிப்பகத்துக்கு நன்றி

ஜெ

[நற்றிணை வெளியீடாக வரவிருக்கும் நிழல்வெளிக்கதைகள் மறுபதிப்புக்கான முன்னுரை]

முந்தைய கட்டுரைவினவுவின் அடித்தளம்?
அடுத்த கட்டுரைவெள்ளையானையும் கையறுநிலையும்