கதைகள் – கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் சார்,

புதியவர்களின் கதை “பூ” கதை படித்தேன். படித்தேன் என்பதை விட பார்த்தேன் என்பதுதான் பொருத்தமாக இருக்கும். கதையை படிக்கப் படிக்க, என் கண்ணில் காட்சிகளாக விரிந்து கொண்டே இருந்தது. படித்து மூன்று நாட்கள் கழித்தும், கிருஷ்ணனின் அம்மா கண் முன்னே நிற்கிற மாதிரியும், ஆலமரத்தின் பின்னால் நின்று கிருஷ்ணனைப் பார்த்துக் கொண்டிருப்பதாகவும் இருக்கிறது. வைத்தியரைப் பார்க்கும்பொழுதும், கிருஷ்ணனின் அம்மா இறந்த காட்சிகளிலும், உங்கள் முகம் வந்து போனது.

நாகலிங்கப்பூவின் வாசனை தரும் மயக்கத்தைப் போலவே பூ கதையிலும் ஒரு மயக்கம் இருக்கிறது. இன்று நாம் வழிபடும் எல்லா குல தெய்வங்களுக்குப் பின்னாலும் பூ மாதிரியான கதை இருக்கும்.

போகன் அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.

ராஜி

அன்பான ஜெயமோகன்,

இது வரை வந்தவற்றில் கடலாழம், கதாபாத்திரங்களின் பிரதேசம் இரண்டும் என்னளவில் சிறந்த கதைகள்.

கடலாழம்:

கடல் பற்றி அதன் அதிகம் பேசப்படாத மறுபக்கம் பற்றிப் பேசுவதில் கதை வித்தியாசப்படுகிறது.

“அப்பா கரையிலிருந்து நீந்தி வந்து என்னை காப்பாறுவது போல், நாங்கள் நீந்திக்கொண்டிருக்கும் கடல் வற்றுவதுபோல், ஒரு பெரிய அலைவந்து எங்களை கரைக்கு கொண்டுசெல்வதுபோல், டால்பின் எங்களை அதன் முதுகில் ஏற்றிச்செல்வதுபோல், ஹெலிகாப்டர் வந்து காப்பாற்றுவது போல், ஏசு தண்ணீரில் நடந்து வருவதுபோல், இளநீரும் தண்ணீரும் நிரம்பிய விசைப்படகுகள் எங்களைக் காப்பாற்ற வருவதுபோல். ஏதேதோ நினைவுகள்.”

நம்மால் எதுவுமே முடியாது என்ற நிலை வருகிறபோது என்னென்ன கற்பனைகள் ஏற்படுகின்றன.

அந்த ஆன ராஜா கதை “பின்ன, அதும் ஒரு குட்டிதானே. அதுக்க தள்ள ஆனச்ச ஓர்ம வராதா?.” அருமையான உரையாடல்.

கதாபாத்திரங்களின் பிரதேசம்:

மரணங்களின் கைகள் கோர்த்த நடனம், மரணத்தின் விகாரமான சிரிப்பு, தவ்விக் குதித்து நடனமிட்டபடி மரணம் வந்து கொண்டிருந்தது.

“ஒரு எழுத்தாளன் தன் வாழ்நாளெல்லாம் ஒரே கதையைத்தான் திரும்ப திரும்ப எழுதிக் கொண்டிருக்கிறான். உண்மையில் அனைத்து எழுத்தாளர்களுமே ஒரே கதையைத்தான் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அது முடிவிலியாய் நீண்டு கொண்டேயிருக்கிறது. பிரபஞ்சத்தைப் போல.எனவே அனைத்துக் கதைகளும் ஒரே மையத்தில்தான் சிருஷ்டிக்கப்படுகின்றன. பின்னர் அதே மையத்தில் மரித்து கதைகளின் சுழற்சியில் அங்கிருந்தே திரும்பவும் உயிர்பெற்று நீள்கின்றன. இதில் காலமும் வெளியும் மனிதர்களும் மாயையே. எல்லாமே கதை. யாவருமே கதாபாத்திரங்கள்”

இந்தக் கதை உள்ளே பல குழப்பமான சித்திரங்களாக விரிகிறது.

அன்புடன்

ரவிச்சந்திரிகா

முந்தைய கட்டுரைகடலாழம் – கடிதங்கள்
அடுத்த கட்டுரைபரிசுத்தவான்கள் – ஒரு விவாதம்