9. நூலகத்தில் – லூசிஃபர் ஜே வயலட்

[மீண்டும் புதியவர்களின் கதைகள்]

மறுபடியும் அவனேதான். குரூரம், அன்பு என்றெல்லாம் எதையும் வெளிக்காட்டாத கண்கள், வாரிச் சீவிய தலைமுடி. இன்று ஒரு நீல நிற டி-ஷர்ட்டும் காக்கிபேண்ட்டும் அணிந்திருந்தான். கிட்டத்தட்ட புன்னகை என்று சொல்லிவிடக்கூடிய ஒரு முக பாவனையுடன் சரிந்து கிடந்த என்னை அமர்த்தி பின்புறமாக என்கைகளை சேர்த்து கட்டினான், பின் கால்களை கட்டினான். ஒரு பிளாஸ்டிக் பையை என் தலையில் கவிழ்த்தான்.

இத்தனைக்கும் நான் தூங்கிக் கொண்டோ, மயங்கியோ கிடந்தேன். என்ன இழவோ நான் கண்களை கூட திறப்பதாக தெரியவில்லை. அவன்பாக்கெட்டிலிருந்து ஒரு ரப்பர் பாண்டை எடுத்து என் தலை வழியாக அந்தபிளாஸ்டிக் பையோடு சேர்த்து என் கழுத்தில் மாட்டினான். அடுத்து ஐந்துநிமிடங்கள் என் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்து விட்டு அடுத்த ரப்பர்பாண்டை மாட்டினான். பிளாஸ்டிக் பையில் காற்று தீரத் தொடங்கியிருந்தது,

சுவாசிக்க முயல்கையில் வாய்க்குள் பிளாஸ்டிக் ஒட்டி அருவருப்பான சுவையைத்தந்தது. அடுத்த ரப்பர் பாண்ட், அடுத்தது, அடுத்தது, அடுத்தது. . ..எத்தனையாவதோ ரப்பர் பாண்டில் நான் சுவாசிப்பதை நிறுத்தி இருந்தேன். பொறுமையாக, திருப்தியுடன் கட்டுகள், பிளாஸ்டிக் பை, ரப்பர் பாண்டுகள் எல்லாவற்றிலும் இருந்து என்னை விடுவித்துவிட்டு சென்றான். காலையில் எழுந்தபோது இந்தக் கனவு முடிந்து (நான் இறந்து) எவ்வளவு நேரம்ஆகியிருந்ததென தெரியவில்லை. ஆனால் முழுமையாக, தெளிவாக நினைவில் இருந்தது.

கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக இதே கனவு. அதே மனிதன், அதே முக பாவங்கள். கொலை செய்யும் முறையும், அவனது ஆடைகளும் மட்டும் முறைக்கு முறை மாறும். நாம் நேரில் கண்டிராத முகத்தை கனவில் காண இயலாதென ஃப்ராய்டோ, யுங்கோ சொன்னதாக வாரமலரிலோ, இணையத்திலோ படித்த ஞாபகம். ஆனால் எவ்வளவு யோசித்தாலும் இவனை கனவிலன்றி வேறெங்கும் பார்த்ததாக நினைவில்லை. இவ்வளவு நாட்களாக, இத்தனை கனவுகளை, இவ்வளவு தெளிவாக ஞாபகம் வைத்திருப்பதும் சாத்தியமில்லை என்று கூடத்தான் சொல்லியிருக்கிறார்கள்.

அன்றைக்கு போன வேலைக்கான நேர்காணலும் ஊத்திக்கொண்டது. வழக்கம்போல் அண்ணா நூற்றாண்டு நூலகத்துக்கு எதிரிலிருந்த டீக்கடையில் அமர்ந்து டீ குடித்தபடி நூலகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். இதன் ஏழாவது மாடியில் இருந்து தள்ளிக் கூட ஒருமுறை என்னைக் கொன்றான். ஏழாவது மாடி வரலாற்று புத்தகப்பகுதி, அந்தப் புத்தகங்களை படிக்கச் சொல்லி இருந்தால் நானே குதித்திருப்பேன்என்று அவனுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.

கிட்டத்தட்ட சென்னை வந்த இரண்டு மாதங்களாக நாள் தவறாது அண்ணா நூலகம் வந்து கொண்டிருக்கிறேன், நாலாவது மாடிதான் என் சொர்க்கம். புதினங்கள், சிறுகதைகள் மற்றும் ஒரு தேவதை வாழும் பகுதி. தினமும் அவள் எனக்கு முன் வந்திருப்பாள், அநேகமாக நூலகம் மூடும் நேரத்தில் போவாளாக இருக்கும்.

அவள் காத்திருந்து பார்த்ததில்லை. சொல்லப் போனால் அந்த நாலாவது மாடி படிப்பறைக்கு வெளியே அவளைப் பார்ப்பதில் எனக்கு விருப்பமும் இருந்ததில்லை. ஒரு வனயட்சியைப்போல அவள் வனத்துக்கு வெளியே இருக்க முடியுமா தெரியாது, இருந்தாலும் நான்விரும்பும் யட்சியாக இருக்கவே முடியாது. ஒரு ஃபிளாஸ்க் நிறைய காபியுடன் (டீயாகவும் இருக்கலாம்) அமர்ந்து படித்துக் கொண்டிருப்பாள். பெரும்பாலும் நான்கைந்து பாகங்கள் எழுதப்பட்ட குண்டு குண்டான அமெரிக்க புதினங்கள். அடிக்கடி சிரித்துக் கொள்வாள், சமயத்தில் உரக்கச் சிரித்துவிட்டு சாரி என்பது போல ஒரு பார்வை பார்ப்பாள் எதிரிலிருக்கும் என்னை. நான் சுதாரித்து இளிப்பதற்குள் மறுபடி புத்தகத்தில் மூழ்கியிருப்பாள். இவளாலேயே கவனம் குவியாமல் பெரும்பாலும் ஒரு புத்தகத்தையும் முழுதாய் படிக்க முடியாமல் போனது.

அன்று மாலையும் அப்படித்தான். அவள் முகத்தைப் பார்த்தபடி, மனம் நிறைந்திருக்கும் காதல் போன்ற எதோ ஒரு உணர்வுடன் காஃப்காவின் ட்ரயலை படிக்க முயன்று கொண்டிருந்தேன். ட்ரயலின் கதாநாயகனும் எதிர்பாராத ஒருசூழலில் சிக்கிக்கொண்டு, அதிலிருந்து வெளிவரவோ முன்னரோ பின்னரோ பயணிக்கவோமுடியாத ஒரு சுழலில் எதுவுமே புரியாது என்ன செய்கிறோம் என்று புரியாது போராடிக் கொண்டிருந்தான். அவன் மீது ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்படுகின்றது. அவனை விசாரிக்கும் அமைப்பைப் பற்றியும் அவன் செய்த குற்றங்களைப் பற்றியும்கூட அவனுக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை. .. எப்படி ஒரு ஆள் நாள் தவறாது தினம் இவ்வளவு நேரம் படிக்க இயலும், அண்ணா நூலகம் வரும்முன் இவள் கன்னிமாராவில் படித்துக் கொண்டிருந்தாளா என்றெல்லாம் யோசிக்கத் தொடங்கினேன். பின் அடப்போய்யா காஃப்கா என்று புத்தகத்தை போட்டுவிட்டு வெளியே வந்தேன்.

மறுபடி டீ குடித்துவிட்டு பஸ் ஏறலாம் என்று ரோட்டை கடப்பதற்காக சிக்னலுக்குக் காத்திருந்தேன். அப்போது சிக்னல் விழுந்தவுடன் முதலாக வந்துநின்ற யமஹா க்ரக்ஸ் வண்டியையும் அதை ஒட்டி வந்த ஆரஞ்சு டீ ஷர்ட்டும், வெள்ளை பாண்டும் அணிந்திருந்தவனை கவனித்தேன். அதே வாரிசீவிய தலைமுடி. அத்தனை முறை என்னை கொலை செய்தவன். ரோட்டை கடக்காமல் உறைந்து நின்றேன்.

சிக்னல் மாறியது. நான் நின்றிருந்த இடது புறத்தை ஒட்டியிருந்த ரோட்டில் திரும்பியவன் சிறிது தூரம் சென்று வண்டியை நிப்பாட்டினான். நான் அசையாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன். என்ன செய்வது என்று எனக்குத் தெரிந்திருக்கவில்லை. எங்கோ எனது கனவுலகும், நிஜமும் குழம்பிப்போயிருக்கின்றது. வண்டியிலிருந்து இறங்கியவன் பிளாட்ஃபாரத்தில் அமர்ந்து அழத் தொடங்கினான். கண்ணீரை துடைக்கக் கூட விருப்பமற்றவன் போல, இன்றைக்கே ஒரு வாழ்நாளின் அழுகையை தீர்த்துவிடுவது போல அழுதான். கடந்து சென்ற சிலர் அவனை விநோதமாக பார்த்தபடி சென்றனர். எனக்கு எதுவோ உரைத்தது.

நூலகத்துக்கு திரும்பி ஓடினேன், லிஃப்டுக்கு காத்திருக்கவில்லை, வாசலில் கையொப்பம் போடவில்லை. படிகளில் ஏறி ஓடினேன். நாலாவது மாடி முழுக்க தேடினேன். அவள் இல்லை. அவளது புத்தகங்கள், காபி ஃபிளாஸ்க் எதுவுமே இல்லை. அவளது இருப்பின் எந்த மிச்சமும் இல்லை அங்கு. நான் விட்டுச்சென்ற ட்ரயல் அங்கேயே இருந்தது. அமர்ந்து அதை எடுத்துப் படித்தேன் அம்பது பக்கங்கள், அறுபது, எழுவது, என்பது, தொண்ணூறு . . .

மூடி வைத்தேன். பக்க எண்களைத் தவிர்த்து எதுவும் மனதில் பதியவில்லை. ட்ரயலின் நாயகனுக்கு என்ன நடந்தது தெரியவில்லை, கவலையும் இல்லை. மெதுவாக வெளியே வந்தேன். வானம் அவன் அணிந்திருந்த டி ஷர்ட்டின் ஆரஞ்சு வண்ணத்தில் இருந்தது. அவன் சென்றிருந்தான், இல்லை அவன் அங்கு இல்லை. அங்கே சென்று அமர்ந்து அழத்தொடங்கினேன். இனி அவன் கனவில் வரமாட்டான், இனி என்னால் இந்த நூலகத்தின் நான்காவது மாடி படிப்பறைக்கு செல்லவே முடியாது. எதோ ஒன்று சரியத் தொடங்கி டொமினோஸ் எஃபக்ட் போல எல்லாம் சரிந்து முடிந்திருந்தது என்று உணர்ந்தேன். உலகம் எதுவுமே மாறாதது போல் என்னையும் சுமந்தபடி சுழன்று கொண்டிருந்தது.

முந்தைய கட்டுரைநிர்வாணம், நீர்க்கோடுகள் – கடிதங்கள்
அடுத்த கட்டுரைநூலகத்தில், அழைத்தவன், நீர்க்கோடுகள் – கடிதங்கள்