2. அப்பாவின் குரல் – ஜெயன் கோபாலகிருஷ்ணன்

மீண்டும் புதியவர்களின் கதைகள்

அப்பா இறந்து ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு நான் திருமணம் செய்தபொழுது எடுத்த முடிவு இதுதான். எந்த ஒரு சூழ்நிலையிலும் மனைவியை இரண்டு சொற்களால் திட்டக்கூடாது. “தேவடியா பலவட்டறை”. அதற்கான காரணம் என்னிடம் இருந்தது. அப்பா கோபம் கொள்ளும்பொழுதெல்லாம் அந்த இரண்டு சொற்களாலேயே அம்மாவை திட்டுவார். அம்மா அதற்கான எதிர்வினையாக லேசான புன்முறுவல் மட்டுமே புரிவாள். ஆனால் அந்த இரண்டு சொற்களும் அம்மாவின் மனதை மிகவும் காயப்படுத்துபவை என்று எனக்குத் தெரியும். அப்பா திட்டுவது சாதாரணம்தான் என்றாலும் அந்த சொற்களால் திட்டும்பொழுது மட்டும் இரவில் அம்மா விளக்கை அணைத்துவிட்டு இருட்டில் தொழுவத்தில் படுத்துக்கிடக்கும் மாட்டையே பார்த்துக்கொண்டு வெகுநேரம் நிற்பாள். நான் சென்று பார்க்கும்பொழுது கண்ணீர் வழிந்துகொண்டிருக்கும்.

அப்பா இறப்பதற்கு முன் கடைசியாக பேசிய சொற்களும் அவைதான். வெளியே சென்றுவிட்டு பசியோடு பகல் ஒரு மணிக்கு வீட்டிற்கு வேகமாக திரும்பியவர் அம்மா கோழிக்கூட்டை சரிசெய்வதற்காக வைத்திருந்த கட்டையில் தட்டி பின்மண்டை தரையில் அடிக்க கீழே விழுந்தார்.சத்தம் கேட்டு அம்மா ஓடிச்சென்று பார்த்தபொழுது கண்கள் சொருகியிருந்தது. அப்பா எப்பொழுதும் போல் முகத்தை வைத்துக்கொண்டு கத்தினார்.

“இத என்ன மயித்துக்குட்டீ இங்க வச்ச பலவட்டற தேவடியா” சொல்லியதும் அப்பாவின் கண்கள் மெல்ல மூடின. அம்மா நெஞ்சில் அறைந்து கதறினாள்.

அப்பா பணியிலிருக்கும் பொழுதே இறந்ததால் அவர் வேலை எனக்குக் கிடைத்து. நாகர்கோயில் கோட்டார் வட்டாட்சியர் அலுவலகத்தில்தான் அப்பா வேலை பார்த்திருந்தார். அம்மா அலைந்து திரிந்து கடைசியில் திக்கணங்கோட்டில் பெண்பார்த்து திருமணம் செய்துவைத்தாள். சுந்தரியும் நானும் நாகர்கோயில் செட்டித்தெருவில் வாடகை வீட்டில் தனியாக தங்கினோம். நீரில் விழுந்த மண்கட்டி கரைவதுபோல காமம் கரைந்த பொழுதுதான் சுந்தரிக்கும் எனக்கும் சண்டை வரத்தொடங்கியிருந்தது. அப்பா சேர்த்துவைத்துவிட்டுப் போயிருந்த கடனை அடைப்பதற்காக அவளின் நகைகளை கழற்றி கேட்டபொழுது சுந்தரி பிடிவாதமாக மறுத்தாள்.கடன்காரர்களின் தொல்லை அதிகமிருந்தது.நான் அவளிடம் கெஞ்சினேன். எல்லாவற்றையும் இரண்டே வருடங்களில் திருப்பி தந்துவிடுவதாக சத்தியம் செய்தேன்.அவள் சலனமற்று இருந்தாள். அவளின் பதில் எப்பொழுதும் ஒன்றாகவே இருந்தது.

“எனக்க அப்பனுக்க சம்பாத்தியமாக்குமே”

நான் சொல்ல சொற்களின்றி விலகிவிடுவேன்.

அன்று காலைக்குள் ஒரு லட்சம் ருபாய் தருவதாக ராமச்சந்திரனிடம் சொல்லியிருந்தேன். யாரிடம் கேட்டும் பணம் கிடைக்கவில்லை. அலைந்துவிட்டு வீட்டிற்கு வந்தேன். சுந்தரி அடுக்களைக்குள் நிற்பது தெரிந்தது. மெதுவாக உள்ளே சென்றேன். நகையை தரும்படி கேட்டேன். வழக்கம்போல பதில் வந்தது. எனக்கு ஆத்திரம் பொங்கியது. என்னை அறியாமல் அந்த சொல் நாக்கில் வந்தது. “தேவடியா” நாக்கு உச்சரிக்க துடித்தது. நான் வேகமாக அருகிலிருந்த ஒரு சொம்பு தண்ணீரை வாயெடுக்காமல் குடித்தேன். குடிக்கும்பொழுது பல எண்ணங்கள். அவளை அடித்துவிட்டு நகையை பறித்துவிடலாம்.அவளுக்குத் தெரியாமல் எடுத்துவிடலாம்.இல்லை மண்டையில் கல்லை தூக்கி போட்டுவிடலாம். “தேவடியா” நாக்கு மீண்டும் துடித்தது.நான் என் முழு ஆற்றலையும் திரட்டி என்னை கட்டுப்படுத்திக் கொண்டேன். அருகிலிருந்த மஞ்சள் நிற பிளாஸ்டிக் குடத்தை எட்டி உதைத்தேன். அது அப்படியே சரிந்து விழுந்தது. தண்ணீர் அடுக்களையெங்கும் பரவியது. சுந்தரி தலையை கவிழ்ந்தபடியே சுவரில் சாய்ந்து நின்றுகொண்டிருந்தாள். நான் கையிலிருந்த சொம்பை வேகமாக தரையில் வீசியெறிந்துவிட்டு அடுக்களையிலிருந்து வெளியேறினேன்.முன் அறையிலிருந்த நாற்காலியில் அமர்ந்த பொழுது ஏதோ பிரக்ஞையில் தட்ட நிமிர்ந்து பார்த்தேன். எதிர் நாற்காலியில் அப்பா அமர்ந்திருந்தார். அவர் இறந்தபொழுது போட்டிருந்த அதே சட்டையும் வேட்டியும். என் இதயம் ஒரு நொடி நின்று துடித்தது.

சுந்தரி அருகில் வந்து நின்றாள். கத்தத் தொடங்கினாள். நான் அப்பாவின் கண்களையே பார்த்துக்கொண்டிருந்தேன். அது வன்மத்தையும் கோபத்தையும் பரிதாபத்தையும் ஒரே நேரத்தில் காட்டியது. நான் பதில் பேசாததை கண்ட சுந்தரி கோபத்தின் உச்சத்தில் கத்தினாள். அப்பா இப்பொழுது முறைத்தார். அவர் கண்களைப் பார்க்கத் திறனற்று நான் தலையை கவிழ்ந்தேன். உடலெங்கும் மின்சாரம் பாய்வது போலிருந்தது.

திடீரென்று அப்பாவின் குரல் கேட்டது.

“லே விஜயா ஏசுல அவள தேவடியாணி சொல்லுல அப்பந்தாம்ல அடங்குவா”

நான் பீதியோடு அப்பாவை நிமிர்ந்து பார்த்தேன். அப்பா கோபத்தில் எழுந்து நின்று கத்தினார் .சுந்தரி இடதுபக்கம் நின்று கத்தினாள்.

“ஊமையாவோயி நீரு”

அப்பா வலப்புறம் நின்று கத்தினார்.

“லே சொல்லுல தேவடியாண்ணி சொல்லுல”

நான் முற்றிலும் தளர்ந்து போனேன்.அப்பாவை இயலாதவனாக பார்த்தேன்.அப்பாவின் சத்தம் இப்பொழுது குறைந்திருந்தது. அவர் நெஞ்சு மட்டும் ஏறி ஏறி இறங்கிக் கொண்டிருந்தது. சுந்தரியும் நிறுத்தியிருந்தாள். என் நடவடிக்கை அவளுக்கு வித்தியாசமாக தோன்றியிருக்கக்கூடும். கடைசியாகச் சொன்னாள்.

“என்ன நடந்தாலும் தரமுடியாது”

“ஏசுல லேய்”

நான் கிணற்றில் சுற்றிலும் குரல்கள் நடுவே இருப்பது போலிருந்தது. அப்பா கோபத்தில் வேகமாக கதவை சாத்தியபடி வெளியேறினார். இனி இங்கிருந்தால் நல்லதல்ல என்று தோன்றவே நான் வீட்டைவிட்டு வெளியேறினேன். என் பழைய யமகா ஆர் எக்ஸ் வண்டியை உதைத்து பறக்கவிட்டேன். நேராக எஸ் எல் பி மேனிலைப்பள்ளி கால்பந்து மைதானத்தில் வண்டியை நிறுத்திவிட்டு கல்வி அலுவலர் அலுவலக திண்ணையில் சென்று அமர்ந்தேன்.என்னால் இரண்டு நிமிடங்களுக்கு மேல் உட்காரமுடியவில்லை. வண்டியை மீணடும் எடுத்தேன். வேலைவாய்ப்பு அலுவலக சாலை வழியாக சென்று கோபாலபிள்ளை மருத்துவமனை அருகிலிருக்கும் எழுத்தாளர் வீட்டின் முன் வண்டியை நிறுத்தினேன். செல்வனை நினைத்து கோபமாக வந்தது. நான்கு ஆண்டுகளுக்கு முன் தற்செயலாக இந்த வீட்டின் முன் வந்த பொழுதுதான் அவன் அந்த எழுத்தாளரைப் பற்றி சொன்னான்.

“லே பெரிய ஆளாக்கும் கேட்டியா, ஆனா இங்கிண போற வாற ஒருத்தனுவளுக்கும் இது தெரியாது”

எனக்கு ஆர்வமாக இருக்கவே அவர் புத்தகங்களை வாசித்தேன். பின்பு வேறொருவர். வேறொருவர்.

ஏனோ தோன்றியது “எளவு இந்த எலக்கியம் மயிரு மத்ததுணி படிக்கலண்ணா இந்த தேவடியாள நாலு சவுட்டு சவுட்டி ஏசிட்டு நிம்மதியாவது இருக்கலாம்”

தலையை உதறிவிட்டு அருகிலிருந்த மரத்தடியில் சற்றுநேரம் நின்றுகொண்டிருந்தேன். அம்மா என்றோ சொன்னது நினைவு வந்தது.

“உனக்க அப்பா ஒரு நாளும் அன்பாட்டு ஒரு வார்த்தை சொன்னது கெடையாது பாத்துக்க. வேற ஒண்ணுக்கும் கொறவில்ல. ஆனா பொம்பளைக்கு தேவ நாலு வார்த்ததான”

கண்களில் நீர் வழிந்தது. அருகிலிருக்கும் வேட்டாளி அம்மன் கோயிலில் சென்று கும்பிட்டேன். பைக்கை செட்டிகுளத்தை நோக்கி விட்டேன்.செட்டிகுளம் முக்கில் திரும்பும்பொழுது அங்கிருந்த பூக்கடையில் கொஞ்சம் பிச்சிப்பூ வாங்கினேன். மனம் சற்று இலகுவானது போலிருந்தது. வீட்டின் முன்னால் வண்டியை நிறுத்தினேன்.

சட்டென நினைவு வந்தவனாக சுற்றிலும் தேடினேன். அப்பா எங்கும் தென்படவில்லை. இரண்டாவது மாடி ஏறி திரும்பி வீட்டு வாசலை அடைந்தபொழுது யாரோ பின்னால் நிற்பது போல மூளையில் தோன்றல். துணிச்சலை வரவழைத்து திரும்பிப் பார்த்தேன். எதிர்வீட்டுக் குழந்தை விரல் சூப்பிக்கொண்டு நின்றது. பெருமூச்சுவிட்டு அதன் கன்னத்தை கிள்ளிவிட்டு கதவைத் தட்டினேன். வெகுநேரமாக கதவு திறக்கவில்லை. மீண்டும் மீண்டும் வேகமாக தட்டினேன். சுந்தரி வந்து கதவைத் திறந்தாள். அவள் முகம் வீங்கிப்போயிருந்தது. நான் கையிலிருந்த பிச்சிப்பூவை அவளிடம் கொடுத்தேன். ஒன்றும் பேசாமல் வாங்கிகொண்டாள்.தற்செயலாக லேசாகத் திறந்திருந்த படு்க்கையறை கதவிடுக்காக பார்த்தேன். அப்பாவின் கால்கள் லேசாக ஆடிக்கொண்டிருந்தன. என் உடல் மெல்ல நடுங்கியது. அடிவயிற்றில் ஏதோ நெளிவதைப் போல. உடனே கழிவறைக்குச் சென்றால நன்றாக இருக்கும் என நினைத்தேன்.

சுந்தரி மெதுவாகச் சொன்னாள்.

“இந்த பூவ வாங்கிட்டு வந்துட்டு நாள விடியுமுன்ன உருப்படிய கேட்டா ஒண்ணும் கிட்டாது”

“தூர போட்டி தேவடியா”

என்னால் என்னை நம்பமுடியவில்லை. ஒரு நொடி தவறிவிட்டேன். அப்பாவின் கால்களையே பார்த்துக்கொண்டிருந்ததால் நடந்துவிட்டது. சுந்தரியின் தாடை பொங்கித்துடித்தது. எந்நேரமும் அவள் அழப்போகிறாள் என்று தெரிந்தது. வேகமாக அடுக்களைக்குள் நுழைந்தாள். விட்டு விட்டு மெல்லிய விசும்பல்கள். படுக்கையறை கதவைத்திறந்து அப்பா வெளியே வந்தார். குரூரமான சிரிப்பும் நிம்மதியும் கலந்த முகபாவம்.

“அவள ஏசிட்டம்ணி வருத்தப்படாதல அவளுவள எங்க வைக்கணுமோ அங்கதான் வைக்கணும் அல்லணா இப்படிதான் ஆடுவாளுவ. அடுத்த வார்த்தையையும் சொல்லிரு”

நான் இப்பொழுது மனதிற்குள் உறுதி எடுத்துக்கொண்டேன். இவரிடம் தோற்கக்கூடாது. அந்த சொல்லை ஒருபொழுதும் சொல்லக்கூடாது.

சுந்தரியின் அழுகை சத்தம் லேசாக கேட்டுக்கொண்டிருந்தது. நான் அடுக்களைக்குள் எட்டிப்பார்த்தேன். அவள் தலையை குனிந்தபடியே அழுதுகொண்டிருந்தாள். நான் சென்று படுத்துவிட்டேன்.

அடித்துப் போட்டது போல தூக்கம். காலையில் எழும்பி பார்த்தபொழுது நல்ல மழை பெய்து ஓய்ந்திருந்தது. ஏதாவது வறண்ட நிலப்பகுதிக்கு போய்வந்தால் நன்றாக இருக்கும் என தோன்றவே சுந்தரியிடம் சொல்லாமலே பைக்கை எடுத்துக்கொண்டு வடக்கன்குளம் வரை போகலாம் என நினைத்து புறப்பட்டேன். என்னை அறியாமல் செட்டிக்குளம் போய் கோபாலப்பிள்ளை மருத்துவமனை அருகே போய் வண்டியை நிறுத்தினேன். சற்று நேரம் நின்று அந்த வீட்டையே பார்த்துக்கொண்டிருந்தேன். மழை மீண்டும் லேசாக தூறத்தொடங்கியிருந்தது. கைப்பேசியை அணைத்துவிட்டு வண்டியை உதைத்து வடக்கன்குளம் நோக்கி போனேன். ஆரல்வாய்மொழி தாண்டியதும் மழை சுத்தமாக இல்லை. வானம் தெளிவாக இருந்தது. மேற்கே கரு மேகங்கள் மலை முகட்டில் முட்டி கவிழ்ந்தன. முப்பந்தல் கோயிலில் சென்று சற்று நேரம் உட்கார்ந்திருந்துவிட்டு மீண்டும் வண்டியை எடுத்தபொழுது அப்பா சிரித்தவாறு சாலையின் எதிர்ப்புறம் நின்றார். நான் வேகமாக வண்டியை முறுக்கினேன். வேகம் நுறு கிலோமீட்டரை எட்டியது. அப்பா வண்டி இருக்கையின் பின்புறம் வளைத்து விட்டிருந்த கம்பியை பிடித்தபடி வேகமாக ஓடிவந்துகொண்டிருந்தார்.

இரவு வீட்டிற்கு வந்தவுடன் சுந்தரி கேட்டாள்.

“இண்ணைக்கு வேலைக்கு போவல்லியோ”

“இல்ல போவல்ல”

“அப்படி லீவு போட்டுட்டு சுத்தாட்டா என்ன”

கடுத்த கனமான அப்பாவின் குரல் பின்னாலிருந்து கேட்டது.

“ஏசுல பலவட்டறைணி”

நான் திரும்பி அப்பாவைப் பார்த்து கோபத்தில் கத்தினேன்.

“நீரு வெளிய போவும் ஓய்”

“நீ அவளை ஏசாம நான் வெளிய போவமாட்டேன்.”

நான் கோபத்தில் அவரை எட்டி உதைத்தேன். ஜன்னலில் என் கால்பட்டு ரத்தம் சொட்டியது. அப்பா இப்பொழுது டீவி இருந்த மேசை மீது அமர்ந்திருந்தார். நான் அருகே இருந்த நாற்காலியைத் தூக்கி அவரை அடித்தேன். டீவி உடைந்து விழுந்தது. சுந்தரி கத்தினாள்.

“ஓய் ஒமக்கு கிறுக்காவோய் புடிச்சிருக்கு”

அப்பா இப்பொழுது நாற்காலியில் அமர்ந்திருந்தார். நான் நாற்காலியைத் தூக்கி சரித்தேன். நாற்காலி மல்லாந்து விழுந்தது. படுக்கயறைக்குள் சத்தம் கேட்டு நான் படுக்கையறைக்குள் ஓடினேன். சுந்தரிக்கு இப்பொழுது நிலைமை ஓரளவு புரிந்திருந்தது. வீட்டைவிட்டு வெளியேறி வெளியே வீட்டை பூட்டிவிட்டு ஜன்னல் வழியாக பார்த்துக்கொண்டிருந்தாள். அப்பா வேகமாக ஒரு கயிற்றை எடுத்து தொங்கிக்கொண்டிருந்த மின்விசிறியில் மாட்டினார்.

“லே நீ சொல்லலண்ணா நான் நாண்டுகிட்டு செத்திருவேன்.”

“நீரு சாவும் ஓய்”

“லே விளையாட்டுக்கு சொல்லல உண்மைக்கும் செத்திருவேன்.”

அப்பாவின் கண்களில் கண்ணீர். இத்தனை கண்ணீரை நான் அவரிடம் கண்டதேயில்லை. அப்பா நா தழுதழுக்க சொன்னார்.

“நீ ஆம்பிளல என் மொவன்”

“அப்பா நீரு போயிரும்பா தயவுசெய்து போயிரும்”

நான் அவர் கால்களை அணைத்துப் பிடித்தவாறு கெஞ்சினேன்.

“நீ அவளை ஏசுல நான் போயிருரம்ல”

“முடியாதுப்பா”

அப்பா கால்களால் வேமாக என் கைகளை உதறினார். கயிற்றை கழுத்தில் மாட்டினார்.

“ஏசமாட்டியால ஏசமாட்டியால” என அவர் வாய் புலம்பிக்கொண்டிருந்தது.

நான் வேகமாக எழுந்தேன். “லே நான் ஓன்கிட்ட தோக்கமாட்டம்ல” என்று கத்தியவாறு அடுக்களைக்குள் ஓடிச்சென்று கத்தியை எடுத்துவிட்டு படுக்கை அறைக்குள் நுழைந்தேன். கத்தியைப் பார்த்ததும் அப்பாவின் கண்கள் அச்சத்தில் உறைந்தது.நான் கத்தியை வலதுகையில் அழுத்திப்பிடித்து என் நாக்கை இடக்கையால் பிடித்து வேகமாக அறுத்தேன். குருதி பொங்கி வழிந்தது. அப்பா கதறி அழுது மௌனமானார்.

நான் அரை மயக்கத்தில் கிடந்தேன். அப்பா கதவைத்திறந்து வெளியேறினார்.

முந்தைய கட்டுரைபுறப்பாடு – வறுமை – கடிதம்
அடுத்த கட்டுரைபூ – கடிதங்கள்