கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் சார்,

சமகாலத் தமிழ் இலக்கியச் சூழலில் பெருமைப்படக்கூடிய இலக்கியப் படைப்புகள் ஏதும் குறிப்பிடும்படியாக அமையவில்லையே ஏன்?புதிதாக இலக்கியம் படைக்கவெனக் கிளம்புபவர்களின் படைப்புகள் ஒரு தடவை வாசிப்புக்கேனும் தீனிகொடுப்பதாக இல்லை. சு.ரா, அசோகமித்திரன், ஜெமோ, எஸ்.ரா, முத்துலிங்கம் என்று ஏற்கனவே இலக்கியவாதிகளாக அறியப்பெற்றவர்கள்தான் ஆங்காங்கே செயலாற்றிக் கொண்டிருக்கின்றனர்.

அதைத் தவிர்த்து, எதிர்கால நட்சத்திரங்கள் அனைவரும் இணையத்தில் வாதப்பிரதிவாதங்களையே தினசரி கடமைகளாக கொண்டு செயலாற்றிவருகின்றனர். ஏன் சில சமயங்களில் உங்கள் விடயத்திலும் அது நடந்துவிடுகிறது. ஆக்கபூர்வமான படைப்புகள் வருவதை இத்தகைய பயனற்ற (பெரும்பாலான) இணைய விவாதங்கள் தடுத்துவிடுவதாக நான் உணர்கிறேன். உங்களைப்போன்றவர்கள் செய்யும் இணைய விவாதங்கள் புத்தகங்களாக வெளிவந்துவிடும். ஆனால் மற்றையவர்கள்?

ஏற்கனவே அதிகம் இருந்தாலும், எதிர்காலத்தில் தமிழ் இலக்கியச்சூழலில் இணையம் காரணமாக அதிகரித்திருக்கும் போட்டி மனநிலை காத்திரமான படைப்புகள் வெளிவருவதை பாதிக்கும் என்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா? இப்படியான ஒரு இலக்கிய வறுமை/வெற்றிடம் ஏற்பட்டுக்கொண்டிருப்பதற்கான வேறு காரணங்கள் எவையாக இருக்கக்கூடும்?விஷ்ணுபுரம், ஜே ஜே சில குறிப்புகள் போன்ற படைப்புகள் எதிர்காலத்தில் வெளிவர சாத்தியமிருக்கிறதா இத்தகைய சூழலில்?

மைந்தன் சிவா-கொழும்பு,இலங்கை

அன்புள்ள சிவா,

இணையம் பயனற்ற வாதப்பிரதிவாதங்களை அதிகம் உருவாக்குகிறதென்பது உண்மை. அதற்கு இரு காரணங்கள். முகம் காட்டாமல் விவாதிக்கமுடியும் என்ற வசதி. இன்னொன்று உடனடியாக எதிர்வினையாற்றமுடியும் என்ற வசதி.

ஆனால் ஒருசாரார் நிறைய வாசிக்க இணையம் வசதிசெய்து தருகிறது. தொலைக்காட்சியால் அழிக்கப்பட்ட வாசிப்பை இணையம் மீட்டளித்தது. என்னவாக இருந்தாலும் இணைய விவாதங்கள் மொழியில் நிகழ்கின்றன. மொழி நுண்ணுணர்வுள்ள ஒருவரை எப்படியோ இலக்கியத்தை நோக்கியே கொண்டுவரும்.

வாசகர்களின் இருப்பு எந்நிலையிலும் இலக்கியத்தை தக்கவைக்கும் என்றே நினைக்கிறேன். பெருமளவில் வாசகர்கள் வந்துவிடமாட்டார்கள். காரணம் வாசிப்பு வளர்வது ஒரு பண்பாட்டு நிகழ்வு. அதற்கு அதற்கேயுரிய வரலாற்றுக்காரணங்கள், ஆன்மீகக் காரணங்கள் இருக்கும். இலக்கியம் ஓர் இயக்கமாக நீடிக்க இந்த வாசகர் வட்டம் உதவும் என்பதே என் எண்ணம்.

ஜெ

அன்புள்ள ஜெயமோகன்,

நலம் தானே?

நமது தொழில்நுட்பம் மற்றும் நமது ஆய்வு மனநிலை குறித்த கட்டுரையையும் அதற்கு வந்த எதிர்வினைகளுக்கு நீங்கள் அளித்திருந்த பதிலையும் மிகவும் ஆர்வத்துடன் படித்தேன். நல்லதொரு உரையாடல்.

கல்வி என்பது ஒரு நல்ல வேலையை, சமூகத்தில் ஒரு அந்தஸ்தை, வாங்கித் தரக் கூடிய ஒரு கருவியாக மட்டுமே கருதப்படுவதின் விளைவே, நம் ஊரில் நிலவி வரும் தொழில்நுட்பத்தின் அவலநிலை. தம் வேலையை திறம்பட செய்பவர்கள் கூட, தங்கள் திறமையை அதன் விளைவாக வரும் பலன்களை (பணம், மரியாதை, என) மட்டுமே கொண்டு எடைபோடுவதையும் கண்டிருக்கிறேன். நம் ஊரில் கண்கூடாக பார்க்கக்கூடிய இந்த சராசரித்தனமான தொழில்நுட்ப நிலையை மறுப்பவர்கள், நம் கல்வி முறை ஏன் இப்படி இருக்கிறது என்ற கேள்வியை எழுப்பாதவர்கள் என்பது உண்மையே.

ஒரு வட்டத்தின் பரப்பளவு 3.14*(ஆரம்)*(ஆரம்), என்று எப்படிக் கண்டுபிடித்தார்கள் என்ற ஒரு கேள்வியை மாணவர்களிடம் எழுப்புபவர், நல்ல கணித ஆசிரியர். அதற்கான விடையை மாணவர்களே கண்டு பிடித்தால், அந்தக் கண்டுபிடிப்பின் மேதைமையை உணருவார்கள். இந்தக் கேள்விக்கான விடையை கண்டுபிடித்த இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் எழுந்த சிந்தனையின் ஆழத்தைப் புரிந்து கொள்வார்கள். பிரமிப்படைவார்கள். அந்த வியப்புணர்வு வருவதற்கான ஒரு வாய்ப்பையே அளிக்காமல், வட்டத்தின் பரப்பளவின் சூத்திரம் இது என்று சொல்லித் தருவது, வெறும் குமாஸ்தாக்களை உருவாக்கும் கல்விமுறை மட்டுமே. இந்தக் கல்விமுறையில் நல்ல மதிப்பெண்கள் எடுப்பவர்கள், தேர்ந்த குமாஸ்தாக்களாக இருக்கும் வாய்ப்பை மட்டுமே அடைய முடியும். காலனி ஆதிக்க காலத்தில், தொலைபேசியும், இணையமும் இல்லாத காலத்தில், உலகெங்கும் பரந்து விரிந்த காலனி அரசை நிர்வகிக்க நல்ல குமாஸ்தாக்கள் மட்டுமே தேவைப்பட்டனர். அந்தத் தேவையை இந்தக் கல்வி முறை ஒரு காலத்தில் பூர்த்தி செய்தது. இன்றைய பெருவாரியான அரசு வேலைகளுக்கும், சிந்திப்பவர்கள் தேவையில்லை. சொன்னபடி செய்யக்கூடிய குமாஸ்தாக்கள்தான் தேவை. அவர்களது தேவையை தற்கால கல்வி நிறுவனங்கள் பூர்த்தி செய்கின்றன.

இது சமூக, கலாச்சாரத்தைச் சார்ந்த பிரச்சினை. ஆசிரியர் ச. மாடசாமி, இது பற்றி தொடர்ந்து எழுதி வருகிறார். அண்மையில்தான், ஆசிரியர் ச. மாடசாமி எழுதிய, ‘ஆளுக்கொரு கிணறு’ கட்டுரைத் தொகுப்பை படித்தேன். இந்த விவாதத்தைத் தொடர்ந்து முன் செல்ல விரும்புபவர்கள் அவரது கட்டுரைத் தொகுப்பைப் படிக்கலாம்.

மேலை தேசங்களில், குழந்தைகளின் ஆரம்ப நிலைக் கல்வியைப் பற்றி தொடர்ந்து ஆய்வுகள்/விவாதங்கள் நடத்தப்பட்டு வருகின்றன, குறிப்பாக கணிதக் கல்வியைப் பற்றி மாணவர்களிடம் நிலவும் எதிர்மறையான எண்ணத்தைப் பற்றி. கல்வி பற்றிய ஒரு ஆக்கபூர்வமான விவாதம் நிகழும் வெளியை உருவாக்கி உள்ளீர்கள் – அதுவும் நம் ஊரில் அனைவரும் பெருமைப்பட்டுக்கொள்ளும் தொழில்நுட்பக் கல்வியைப் பற்றி!

அன்புடன்,
ராஜா

அன்புள்ள ராஜா,

நம் கல்விமுறை அதன் முட்டுச்சந்தை அணுகிவிட்டதை அனேகமாக எல்லாருமே ஒப்புக்கொள்கிறார்கள். இந்தச்சிக்கலை புரிந்துகொள்ள , தாண்டிச்செல்ல பலகோணங்களில் சிந்தனைகள் நிகழ்கின்றன. மாற்றுக்கல்வி என முன்வைக்கப்படுவன இன்றியமையாத ஓர் அபாயத்தைக் கொண்டுள்ளன. கல்வியில் சோதனைகள் செய்யமுடியாதென்பதே அது. அவை தவறென்றால் ஒருதலைமுறையை அழித்துவிடும். ஆகவே மெல்ல சோதனை-அவதானிப்பு-மாற்றம் என்ற முறையே உகந்தது.

ஜெ

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் – யார் வாசகர்கள்?
அடுத்த கட்டுரைஇரு பொற்கபாடங்கள்