உரை- கடிதங்கள்

ஆசிரியருக்கு,

வணக்கம். சிறுகதைகதைகள் பற்றிய கடிதமே இன்னமும் பாக்கி இருக்கும் பொழுது, இதை பற்றி எழுதலாமா வேண்டாமா என்று குழப்பம் உண்டு.

நீங்கள் வாசிங்டன் டிசி வந்திருந்த பொழுது உரையாற்றினீர்கள். மிக சிறந்த உரையினுள் ஒன்று. ஆனால் அந்த உரையினுள் உள்புக உங்களை தொடர்ந்து வாசித்த்து இருக்க வேண்டும் அல்லது ஒரு கல்லூரி முதுகலை மாணவன் தன்னிடம் பேச வரும் ஆசிரியர் குறித்து கொண்டிருக்கும் எதிர்பார்ப்பு போல ஒரு எதிர்பார்ப்பு இருக்க வேண்டும். அந்த எதிர்பார்ப்பில்லா இரு நண்பர்கள், ஆனால் உங்களிடம் மிகுந்த மரியாதை உடைய நண்பர்களில் சிலர் உங்கள் உரை சுத்தமாக புரியவில்லை என்றார்கள். புரியவில்லை என சொன்ன நண்பர்கள் உங்கள் உரையை பழிக்க வேண்டும் எனும் உணர்விலோ, உங்களை குறை சொல்ல வேண்டும் என்ற நோக்கிலோ சொல்லவில்லை, உண்மையான கவலையோடு சொன்னார்கள்.

உங்கள் உரை குறித்த எதிர்பார்ப்பு, அதன் தலைப்பு குறித்த அறிதல், உங்கள் எழுத்துக்கள் வைக்கும் கருப்பொருள்களின் தொடர்வாசிப்பு உடையவர்களுக்கு உங்கள் உரையை புரிந்து கொள்ள முடியும், ரசிக்க முடியும். இந்த நிலைப்பாடுகளில் இல்லாதவர்களுக்கு சிக்கலே. அவர்கள் எதிர்பார்த்திருகும் ஆசிரியர் வேறு, அந்த கூட்டத்தில் உரையாடுபவர் மேலை நாடுகளின் கல்லுரி விரிவுரையாளர் போன்று ஆய்வு தன்மை மிக உடையவராக இருந்தால் குழப்பமே.

நீங்கள் தனி உரையாடலில் ஆட்களை கண்டு அவர்களுக்கான அளவில் பேசினீர்கள். அது உங்களுடன் உரையாடும் ஆர்வத்தை அதிகரித்தது, இன்னமும் அதிகம் கவனிக்க சொன்னது. ட்ரிப்ஸ் போடும் மருத்துவரை போல மறுபுறத்தின் எல்லைக்கு உட்பட்டு ஆனால் எது தேவையோ அந்த அளவுக்கு உங்கள் உரையாடலை வடிவமைத்து கொண்டீர்கள். ஆய்வு தன்மையோடு மட்டுமில்லாமல், உரையாடல் தன்மையையும் தங்கள் உரைக்கு கொண்டு வந்தால் கல்வி கூடங்கள் மற்றும் சிறப்பு உரை அல்லாத பொது உரை தளங்களில் பலமே என்று எண்ணுகின்றேன்.

அன்புடன்
நிர்மல்

இதற்கு முன் ஜெ பார்வையாளர்கள் “திறந்த வெளியில்” (அல்லது தற்காலிக பந்தலில்) அமரும் அரங்கு எதிலாவது பேசியிருக்கிறாரா? இல்லை என்றே எனது ஞாபகம். கூட்டம் கலைந்ததற்கு இதுவே முக்கிய காரணமாக இருந்திருக்கக் கூடும்.

முந்தைய உரைகள் எல்லாம் எல்லாம் உள்ளரங்குகளில், மக்கள் வசதியாக உட்கார்ந்து கேட்கும் இடங்களில் நிகழ்த்தப் பட்டவை என்று நினைக்கிறேன். செறிவான உரைகளைக் கேட்பதற்கான சூழலை, கவனத்தை அத்தகைய அரங்குகள் மட்டுமே உருவாக்க முடியும்..

“மேடை இயலாமை” எதுவும் ஜெ.க்கு இல்லை என்பதே என் அவதானிப்பு. அவரை முதன்முதலில் 2009இல் கும்பகோணத்தில் மேடையில் அருகில் அமர்ந்து சந்தித்ததில் இருந்து கவனித்து வருகிறேன். அவரைப் போன்று முழுமையான முன் தயாரிப்புடனும் அதே சமயம் மிக இயல்பாகவும் தன்னிச்சையாகவும் மேடையில் பேசக் கூடிய ஆளுமைகள் மிகச் சிலர் மட்டுமே.

இன்னொன்று, சம காலத்தில் தமிழகத்தின் எத்தனை சிறந்த பேச்சாளர்களின் மேடைப் பேச்சுகள் புத்தகங்களாக வரும் தரத்தில், அப்படி வந்து தொடர்ந்து வாசிக்கப் பட்டாலும் ரசிக்கும் அளவில் உள்ளன? சந்தேகத்திற்கிடமின்றி ஜெயின் உரைகள் அந்தத் தரத்தில் உள்ளன என்று சொல்லலாம்.

ஜடாயு

முந்தைய கட்டுரைதொலைதல் பற்றி…
அடுத்த கட்டுரைஒருபாலுறவின் உலகம்