படைப்பில் காலம்

அன்புள்ள ஜெ.

சில சந்திப்பின்போதுகூட கேட்கவேண்டும் என நினைத்தது இது. கேள்விகளின் அலைக்கழிப்பில் மறந்து போய்விடுகிறது. சமீபத்தில் உங்கள் சில சிறுகதைகளை வாசித்ததில் மீண்டும் துளிர்விட்டுவிட்டது. அசோகமித்ரன், சுந்தரராமசாமி, கிரா போன்றவர்களின் கதைகளில் கூட அதன் காலம் தெரிந்தோ தெரியாமலோ வலியுறுத்தப்பட்டிருக்கும். அப்பட்டமாகவே சில கதைகளில் சொல்லப்பட்டிருக்கும். இது இந்தக் காலத்தில் நடைபெறுகிறது. இத்தனை ஆண்டுகள் முன்னால் இப்படி இருந்திருக்கிறது என தோற்றம் ஏற்படுத்துகிறது. உங்கள் பழைய, புதிய கதைகளில் இது கவனமாக தவிர்க்கப்படுவதாக தெரிகிறது. எங்குமே காலம் சொல்லப்படவில்லை. சிலவற்றிற்கு கதைக் களம் காரணமாக இருக்கலாம், ஆனால் ‘பெயர்’ போன்ற நடைமுறை கால கதைகளில்கூட கவனமாக தவிர்க்கப்பட்டதுபோல தெரிகிறது. ஏன்? இதை வழிமுறையாக நினைக்கிறீர்களா?

அன்புடன்
கே.ஜே.அசோக்குமார்.

அன்புள்ள அசோக்

சுந்தர ராமசாமி, அசோகமித்திரன் ,ஆதவன், இந்திரா பார்த்தசாரதி ,ஜி நாகராஜன்போன்றவர்களின் கதைகள் நவீனத்துவ காலகட்டத்திற்குரியவை. அவை திட்டவட்டமான புறவயமான ஓர் உலகைப்பற்றியவை. அந்த உலகை தொடர்ந்து ஆராயும் தனிநபர் பற்றியவை./அவர்களின் கதைகளில் பெரும்பாலும் அவர்கள் இருந்துகோண்டே இருக்கிறார்கள்.

சில சமயம் அவர்களின் கதைகளில் காலமோ இடமோ சொல்லப்படாதபோதுகூட திட்டவட்டமாக வரையறுக்கப்பட்ட ‘நான்’ வழியாக அந்த காலகட்டமும் இடமும் தெளிவாகத் தெரிகிறது

என்னுடைய கதைகளில் பெரும்பாலும் நான் இல்லை. என்னை நான் வரலாறு முழுக்கவாக பரப்பி இல்லாமலாக்கிவிட்டிருக்கிறேன். பற்பல கதாபாத்திரங்களாக உடைத்து விடுகிறேன். ஒருங்கிணைவுள்ள என்னை நான் படைப்புக்குள் கொண்டுவர முயன்றது இல்லை. என் வழி அதற்கு நேர் எதிரானது.

ஆகவே என்னுடைய படைப்புகளில் வரலாற்றுக்காலம் இருக்கும். என்னுடைய ஆளுமையும் நான் அறியும் புறவயமான சூழலும் அச்சூழலின் காலமும் திட்டவட்டமாக இருக்காது.

நான் என் படைப்புகளில் தனிநபர் உண்மைகள் முன்னிற்கக்கூடாதென நம்பக்கூடியவன். இது மிக இளம் வயதிலேயே என் அனுபவம் மூலம் நானறிந்தது. ஓர் அனுபவத்தை இன்னொரு அனுபவம் மூலம், ஒரு கதாபாத்திரத்தின் நோக்கை மாறான இன்னொரு கதாபாத்திரம் மூலம், ஒரு தரிசனத்தை இன்னொரு தரிசனம் மூலம் சமன்செய்து அதன் வழியாக ஒரு முழுமையை அடையவே நான் முயல்கிறேன்

நீங்கள் ஹெர்மன் ஹெஸ்ஸின் சித்தார்த்தாவை விஷ்ணுபுரத்துடன் ஒப்பிட்டால் இதைக் காணலாம். சித்தார்த்தா ஒற்றைச்சரடாக ஓடும் ஒரு மனிதனின் தேடலின் கதை. விஷ்ணுபுரம் ஒன்றை ஒன்று முற்றாக மறுக்கும் பல்வேறு மனிதர்களின் பல்வேறு தேடல்களின் ஒட்டுமொத்தப்பரப்பு

இது இன்னொருவகை எழுத்து. அவர்கள் எழுதியதற்கு அடுத்த காலகட்டத்தைச் சேர்ந்தது.

ஜெ

முந்தைய கட்டுரைஉறவு பற்றி…
அடுத்த கட்டுரைஈரோட்டில் ஓர் உரை