இசையும், பிராமணர்களும்

download

ஆபிரகாம் பண்டிதர்

து.ஆ.தனபாண்டியன்

திரு ஜெயமோகன்

உடனடியாக பதில் போட்டமைக்கு நன்றி.
நான் ஆதி தமிழ் இசை பிராமணர்களிடம் இருந்ததாகக் கூறுவது பரிபாடல் மூலம்தான். அதுவே நமக்குக் கிடைத்த முதல் இசைக் குறிப்புகள் உள்ள நூல். அதில் காணப்படும் பல புலவர்கள் பெயர்கள் சம்ஸ்கிருதப் பெயர்கள். மேலும் அவை சுட்டும் விஷயங்கள் வைதீக புராண விஷயங்கள்.

நீங்கள் அந்த நாளில் தாழ்ந்ததாகக் கருதுவது பாணர் மரபை என நினைக்கிறேன். அது அவர்களின் பல முனை வாழ்க்கையின் ஒரு அங்கம். ஆனால் ரிக் வேதமே இன்னின்ன ஸ்வரங்களில்தான் பாடப்பட வேண்டும் என்று பாராயண விதி உள்ளது. சாம வேதம் இன்னொரு உதாரணம்.

பக்தி மார்க்கத்தின் ஆரம்பமே இசைதான். பரிபாடல் அங்கேதான் முக்கியத்துவம் பெறுகிறது. பின்னாளைய பாடல்களுக்கு அங்கே தான் அஸ்திவாரம் போடப்பட்டது. பிராமண , வேளாள இயக்கமான பக்தி இயக்கம் , இசை ஒன்றினாலேயே பிரபலப்படுத்தப் பட்டது. தாளமும் பண்ணும் குறிக்கப் படாத பாடல்களே தேவாரத்திலும், பிரபந்தத்திலும் இல்லை. பாணர் , விறலியர் போன்றோரின் பங்களிப்பு பக்தி இயக்கத்தில் மிகவும் குறைவு.

புராணக் குறிப்புகளை நோக்கும் போது ருத்திர வீணை காலத்தால் முந்துகிறது . அதுவும் சரசுவதி வீணை போன்றே ஒரு சம்பூரண வாத்தியம். மூன்று ஸ்தாயிகளில் எளிதாக சஞ்சாரம் செய்யலாம். நம் பக்கத்தில் அது கிடையாது. ஆக இசை பாரதமெங்கும் விரவியே இருந்துள்ளது.

பாடகரான என் தாத்தா, ஒரு விதமான ஊது கருவியை விழாக்காலங்களில் வாசிப்பாராம். ஒவ்வொரு சமூகமும் தத்தம் இசைப் பாரம்பரியங்களைக் கொண்டிருந்தன என்றாலும், நுண்ணறிவுடன் ஆராய்ச்சி செய்யப்பட்டு எழுதப்பட்டவை பிராமணர்களின் படைப்புகளே.

சங்க காலப் பாடல்களில் பிராமணர்களின் வாழ்க்கையை ஒரு விதமான objective நோக்குடன் தான் காண முடிகிறது. subjective ஆக எந்த பிராமணனும் தன வாழ்க்கை முறையை எடுத்து எழுதவில்லை. எல்லாம் பிறர் கூற்று தான். வைதீகத்தில் ஊறியவர்கள் இந்த விஷயங்களில் எழுத வந்திருக்க மாட்டார்கள். கபிலர், பரணர் போன்றோர் இதில் சற்று விதி விலக்கு. கபிலர் விஷயம் சற்று விளங்கிக் கொள்ளலாம். அவர் தாம் ஒரு பிராமணரால் எடுத்து வளர்க்கப் பட்டதால் பிராமணன் ஆனேன் என்றே கூறிக் கொள்கிறார்.

சிலப்பதிகாரம் படிக்க ஆசைதான். ஆனால் இன்று நான் திரும்ப திரும்பப் படிக்கும் விஷயங்களில்தான் ஈடுபட்டு இருக்கிறேன். கீதை, சுலோகங்கள் என்று ஆழ்ந்துதான் போய்க் கொண்டு இருக்கிறேன். இன்றைய தகுதியில் என் ஒரே விதிவிலக்கு நீங்கள் தான்.

ஆபிரஹாம் பண்டிதரின் புத்தக அமைப்பும் அதன் நோக்கமாக அவர் கூறும் செய்திகளும் ஒருவாறாக இந்த கால்டுவெல் போன்றோரின் பாணியில் தான். ஆராய்ச்சி என்பது முடிவை மனதில் கொண்டு செய்யப் படும் பாணி அது. என் அளவில் நான் படித்தவரை அதில் நான் கற்றுக் கொள்ள எதுவும் இல்லை. உங்கள் தளத்தில் மம்முது எழுதிய கட்டுரைகளை வெகு காலத்துக்கு முன்னாலேயே வாசித்து விட்டேன்.

வெங்கட்

அன்புள்ள வெங்கட்

உங்கள் கடிதங்கள் மூலம் உங்களைப்பற்றிய ஒரு மனப்பிம்பம் எனக்குள்ளது. உங்கள் தேடலும் ஆய்வும் ஒரு நோக்குடனேயே முன்னெடுக்கப்படுகின்றன. அவ்வகை விவாதங்களில் ஈடுபடுவதில் பொதுவாக எனக்கு ஈடுபாடில்லை. பிராமண வெறுப்பரசியலையும், பிராமணவாத அரசியலையும் நான் அவ்வகையில் சமமாகவே காண்கிறேன்.

பரிபாடல் சங்கப்பாடல்களில் மிகப்பிந்தைய காலத்தையது. மொழியமைப்பைக் கொண்டு பரிபாடல், திருமுருகாற்றுப்படை போன்றவை சிலப்பதிகார காலகட்டத்திற்குப் பிற்பட்டவை என்று கூறமுடியும். பௌத்த, சமண மதங்களின் மேலாதிக்கம் சரிய ஆரம்பித்த காலத்தில் உருவான நூல் பரிபாடல். சொல்லப்போனால் சைவ, வைணவப் பெருமதங்கள் உருவாக ஆரம்பித்த காலகட்டத்தில், பக்தி இயக்கத்தின் தொடக்கத்தில் உருவான ஆக்கம் அது. சங்கப்பாடல் தொகையில் அது சேர்க்கப்பட்டது பத்தாம் நூற்றாண்டு உரையாசிரியர்களால்தான்.

பரிபாடலின் கவிஞர்கள் கீரந்தையார், கடுவனிளவெயினனார் ,நல்லந்துவனார், மையோடக்கோவனார் குறும்பூதனார், குன்றம்பூதனார், கரும்பிள்ளைப் பூதனார், நல்வழுதியார், நல்லெழுநியார், இளம்பெருவழுதியார், நல்லழிசியார், நப்பண்ணனார் போன்றவர்களை நீங்கள் எப்படி பிராமணர்கள் என்ற முடிவுக்கு வருகிறீர்கள் என்று எனக்குப்புரியவில்லை.

சங்ககால சமூகவியலை கொஞ்சம் அறிந்தவர்கள் கீரந்தையார் [கீரன் தந்தை] கீரன் சாதியைச்சேர்ந்தவர் என்றும் இளவெயினர், நல்வழுதியார், நல்லெழினியார், போன்றவர்கள் மறவர்கள் என்றும்தான் முடிவுக்கு வருவார்கள். எயினன், வழுதி, எழினி போன்றவை மறவர் குலப்பெயர்கள்.

குறும்பூதன், குன்றம்பூதன், கரும்பிள்ளைப்பூதன் போன்ற பெயர்கள் வேளாளர்களுக்குரியவை. பூதவழிபாடு மருதநிலத்தின் முக்கியமான மரபு. அழிசி என்பது கம்மாளர்குலப்பெயராக இருக்கலாம். சங்கப்பாடல்களில் கொல்லன் அழிசி என்று ஒருவர் இருக்கிறார். பண்ணனார் என்பவர் பாணன் என்பதில் ஐயமில்லை.

மருதநிலம் ஏற்கனவே வைதிக மதத்தால் ஆளப்பட்டிருந்தது. அதன் தெய்வமே இந்திரன்தான். இந்திரவிழா சங்க காலத்திலேயே மிகச்சிறப்பாக நடந்து வந்தது. மாயோனும், செவ்வேளும் மருதநிலத்தில் பெருமளவுக்கு வழிபடப்பட்டு வந்தனர்.

இசையமைத்த கண்ணனாகனார், பெட்டகனார், பித்தாமத்தர், நாகனார் போன்ற பெயர்கள் எல்லாமே பாணர்களைச் சுட்டுபவை என்பதும் ஏறத்தாழ தெளிவு. பெயர்களில் உள்ள நாகன் என்பது கவனிக்கத்தக்கது. அது பிராமணர்களின் பெயராக அமைவதில்லை. நல்லச்சுதன், கேசவன் என்ற இரண்டே பெயர்களைத்தான் பெயர்களைக்கொண்டு பிராமணர்கள் என்று சொல்லமுயலலாம். இருக்கலாம். ஆனால் அக்காலகட்டத்தில் வைதிகமதம் மருதநிலத்தில் வேரூன்றியிருந்தமையால் பாணர்களும் பிறரும் அப்பெயரைச்சூட்டிக் கொண்டிருக்கக் கூடும்.

நல்லச்சுதன் பெயருடன் மருத்துவன் என்றிருப்பதைக் கவனிக்கும்போது இது மேலும் உறுதிப்படுகிறது. மருத்துவத்தொழில் அக்காலத்தில் பிராமணர்களால் செய்யப்படவில்லை. அது நெடுங்காலம் சற்று மதிப்புக் குறைந்த தொழிலாகவே இருந்தது. தமிழ்ச் சமூகத்தில் பதினெட்டாம் நூற்றாண்டில்கூட மருத்துவர், நாவிதர், இசைக்கலைஞர் ஆகிய மூன்று தொழிலாளர்கலும் ஒருவராகவே இருந்திருப்பதைக் கொண்டு பார்த்தால் அவரை ஒரு பாணர் என்று எடுத்துக்கொள்வதே சரியாக இருக்கமுடியும்.

வேதங்களின் ஓதுமுறையில் இருந்துதான் இசை பிறந்தது என்று பிடிவாதமாக சொல்லிக் கொண்டிருக்கும் ஒரு பெரும் கூட்டம் இருக்கிறது. அவர்களுக்குக் கலை எப்படி உருவாகும், எப்படி வளரும் என்பதைப் பற்றிய எந்தப்பிரக்ஞையும் இருப்பதில்லை. கூடவே இந்திய சிந்தனை மரபிலும் தொன்ம மரபிலும் இசை குறித்து வரும் செய்திகளைத் தொகுத்துப் பார்க்கும் மனநிலையோ ஆற்றலோ இருப்பதில்லை. அதை சாதிப்பித்தின் ஒரு வெளிப்பாடாக மட்டுமே நான் காண்கிறேன்.

எந்தக்கலையும் ஒரு மையத்தில் இருந்து பலவாகப் பிரிந்து உருவாவதில்லை. ஒரு மையத்தைச் செயற்கையாக,உள்நோக்குடன் வலியுறுத்தும் முன்முடிவு இல்லாத எவராலும் அதைப் புரிந்து கொள்ள முடியும். இவற்றைப் பற்றி இன்று எவ்வளவோ பேசப்பட்டு விவாதிக்கப் பட்டாயிற்று. புராதனக்குகை ஓவியங்கள் எல்லாம் காட்டு மிராண்டித்தனம், வேள்விகளுக்கு பீடம் அமைப்பதில் இருந்துதான் ஓவியக்கலை பிறந்தது என ஒருவர் வாதிட ஆரம்பித்தால் ஒன்றும் செய்யமுடியாது.

கலை எப்போதும் மக்களின் வாழ்க்கையில் இருந்து தன்னெழுச்சியாக உருவாகிறது. இசை, ஓவியம், இலக்கியம் நடனம் எல்லாமே அப்படித்தான். எல்லாக் கலைகளுக்கும் பழங்குடி, நாட்டார் கலைகள்தான் ஆதாரம். அடுத்த கட்ட பண்பாட்டியக்கம் என்பது அந்தப் பலமுகம் கொண்ட கலைகளை ஒன்று திரட்டுவதுதான். திரட்டுவது என்பதைவிட திரள்வது என்று சொல்வதே சரியாகும். பல்வேறு இனக்குழுப்பண்பாடுகள் ஒன்றுடன் ஒன்று உரையாடும்போது அந்த திரள்தல் நிகழ்கிறது

அவ்வாறு ஒன்று திரட்டும் பணியின் விளைவாகப் பொதுக்கூறுகள் அடையாளம் காணப்படுகின்றன. இலக்கணம் வகுக்கப் படுகிறது. இலக்கணம் மேலும் மேலும் அனைத்தையும் உள்ளடக்குவதாக ஆக்கப்படுகிறது. மெல்ல, மெல்ல செவ்வியல் கட்டமைக்கப்படுகிறது. இப்படித்தான் கலையின் வளர்ச்சி நிகழ்கிறது. அந்தச் செவ்வியலில் அந்த பண்பாட்டில் உள்ள எல்லாக் கலை மரபுகளுக்கும் பங்களிப்பிருக்கும்

இந்தியப் பெருநிலத்தில் உள்ள பல்லாயிரம் பழங்குடி மக்களுக்கு அவர்களுக்குரிய இசையும், இலக்கியமும், கலைகளும் இருந்திருக்கின்றன. நாம் காண்பது பல ஆயிரம் வருடங்களாக நிகழ்ந்து வந்த ஒரு மகத்தான தொகுப்பு முயற்சியை. அவ்வாறுதான் நம் செவ்வியல் கலைகளும் செவ்விலக்கிய மரபும் உருவாகி வந்துள்ளன. அதில் இந்நிலத்தின் எல்லா மரபுகளுக்கும் பங்குள்ளது

பைசாசிக மொழியில் குணாத்யர் எழுதிய பிருஹத்கதா என்னும் மாகாவியத்தைப் பற்றிய புராணம் இதைச் சொல்கிறது. பழங்குடிகளில் இருந்து கற்றறிந்த இசையையும், இலக்கியத்தையும் கொண்டு குணாத்யர் அவர்களின் மொழியில் அந்த காவியத்தை எழுதினார். அதை அன்றைய செவ்வியல் சபை ஏற்கவில்லை.சபையில் அதை வாசிக்கவே அனுமதிக்கவில்லை

மனமுடைந்த குணாத்யர் காட்டுக்குச் சென்று தன் காவியத்தைத் தீயிலிட்டார். தீயிலிடும் முன் ஒவ்வொரு பாடலாக வாசித்தார். அந்த இசையைக் கேட்டுக் காட்டு மிருகங்கள் எல்லாம் மெய்மறந்து நின்றன. அதைக் காட்டில்வேட்டைக்கு வந்த மன்னன் கேட்டு ஓடிச்சென்று குணாத்யரைத் தடுத்தான். குணாத்யர் தீயில் விழுந்து இறந்தார். அந்தக் காவியத்தின் சிறுபகுதி மட்டுமே எஞ்சியது. அதை மாகாவியம் என அறிஞர் ஏற்றுக்கொண்டனர். அது சம்ஸ்கிருதத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டது

தெளிவாகவே இந்தக்கதை சில விஷயங்களைச் சுட்டுகிறது. இது இந்தியா முழுக்க மைய ஓட்டமாக இருந்த செவ்வியல் மரபுக்கு வெளியே இருந்து வந்த மாபெரும் கலை, இலக்கிய, இசை மரபுகளைப்பற்றி சொல்கிறது. அவற்றில் இருந்து உருவாகும் ஆக்கங்களை உள்ளிழுத்துக் கொண்டுதான் இங்கே செவ்வியல் வளர்ந்து வந்திருக்கிறது.

நமது இசையும் அப்படித்தான் உருவாகி வந்தது. ஐவகை நிலத்து மக்களும் பாடிய பாடல்கள் அம்மக்கள் ஒருவரோடொருவர் தொடர்புகொண்டு ஒரு சமூகமாக ஆனபோது தொகுக்கப்பட்டன. அவ்வாறு தொகுத்தவர்கள் ஐவகை நிலங்களிலும் அலைந்து திரிந்த பாணர்கள். பண் என்பதிலிருந்து வந்த சொல்லே பாணர்கள். அவர்கள்தான் தமிழ் செவ்வியலிசையின் இலக்கணத்தை அமைத்தவர்கள். அதைப் பரப்பியவர்கள்.

வேதங்களில் உள்ளது இசை மரபின் இலக்கணம் அல்ல. ஓதுமுறையின், உச்சரிப்பின் இலக்கணம் மட்டுமே. கண்டிப்பாக அதில் இசையிலக்கணத்தின் ஒருவகை தொடக்கம் உண்டு. ஆனால் மொத்த இசையும் அங்கே பிறந்தது என்று சொன்னால் வேதங்களைக் கொஞ்சம் அறிந்தவர்கள் புன்னகை செய்வார்கள். வேதங்களை இன்று பிறரும் வாசிக்கலாமென்பதையாவது நீங்கள் நினைவில்கொள்ளவேண்டும், அதைப்பற்றி எதையும் சொல்ல பிராமணர்களால் முடியுமென்ற நிலை இன்றில்லை.

இந்தியப் பெருநிலத்தில் வரலாற்றுக் காலத்திற்குத் தொடக்கத்திலேயே வைதிக மதம் முழுமையாகப் பரவியிருந்ததைக் காண்கிறோம். அது பிராமணர்கள் வழியாகப் பரவவில்லை. பிராமணர்கள் அந்த மதத்தின் புரோகிதர்கள் மட்டுமே. பிராமணர்கள் வைதிகத்தின் அதிபர்களோ மொத்த வணிகர்களோ அல்ல. மற்ற வர்ணத்தவர்களுக்கும், வைதிக மதத்தின் சிந்தனைகளையும். பண்பாடுகளையும் கொண்டு சென்று சேர்த்ததில் பெரும் பங்குண்டு.

ஆகவே இந்தியாவில் உருவான எல்லாக் கலை இலக்கிய சிந்தனை மரபுகளிலும் வைதிகத்தின் பங்களிப்புண்டு. அதிகமோ குறைவோ அதன் இருப்பை நாம் உணர முடியும். அதை நிராகரிப்பது அறியாமை. அதேசமயம் அது மட்டுமே இந்தியாவின் கலையிலக்கிய மரபின் தொடக்கம், வழிகாட்டு நெறி என வாதிடுவது சாதிப்பற்றின் குருட்டுத்தனம்.

நான் எந்நிலையிலும் ஒரு புறவய உண்மையை நோக்கிச் செல்லவே விரும்புகிறேன். ஆகவே நம்மிடையே ஒரு விவாதம் நிகழும் மையமில்லை என நினைக்கிறேன். ஆன்மீகமாகவும், அறிவுத்தளத்திலும் மிகமிக ஓரம் சாய்ந்தவர் நீங்கள்.

என் வழியும் இலக்கும் வேறு

ஜெ

ஆபிரகாம் பண்டிதர்

து.ஆ.தனபாண்டியன்

 

முந்தைய கட்டுரைகம்பனும் அம்பிகாபதியும்
அடுத்த கட்டுரைமுழு மகாபாரதம்