பெண்களிடம் சொல்லவேண்டியவை-கடிதங்கள்

அன்புள்ள ஜெ.,

என் தனிப்பட்ட வாழ்வில் சில விஷயங்களைக் கவனித்துள்ளேன்:

1) அலுவலகத்தில் ஒரு இக்கட்டான முடிவெடுக்கும் நேரத்தில் ‘நீ செய் நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்று சொன்ன ஒரு பெண் மேலாளரைக் கூட நான் பார்த்ததில்லை… பல ஆண்கள் இதைச் சொன்னதுண்டு…
2) பெண்கள் நிர்வகிக்கும் கடைகள், தன் வாடிக்கையாளர்களை நம்புவதே இல்லை.. மாதக்கணக்கில் தினம் சென்றால் கூட, குறிப்பாகப் பண விஷயத்தில் கறாரான பெண்களை மட்டுமே பார்த்திருக்கிறேன்…
3) காதலர்கள் சாலையைக் கடக்கும்போது பாருங்கள்… பெண் ஆண் கையைப் பிடிக்கிறாள் – தன் பாதுகாப்புக்காக.. ஆண் அவள் கையைப் பிடிக்கிறான் – அவள் பாதுகாப்புக்காக…

இது எப்போது மாறும் என்று தெரியவில்லை… மாறத்தான் வெண்டுமா என்றும் சொல்லத் தெரியவில்லை.

நன்றி
ரத்தன்

அன்புள்ள ரத்தன்,

இந்நிலைமை ஒரு சமகால யதார்த்தமாக இருக்கலாம். ஆனால் என் பாட்டியும் பெரியம்மாவும் அப்படி இருக்கவில்லை. முற்றிலும் தற்சார்புள்ள நிமிர்ந்த சுதந்திர ஆளுமைகள் அவை. என் வரையில் என் மகன் எதற்காகவாவது கண்ணீர்விட்டால் ஒத்துக்கொள்வேன். பெண் கண்ணீர்விட்டால் கடுப்பாகி விடுகிறேன். அவள் வாழ்நாள் முழுக்க பிடியானைபோல நடந்து சென்று மறைந்த லட்சுமிக்குட்டியம்மாவின் கொள்ளுப்பேத்தி என்பதைத்தான் சொல்வேன்.

ஜெ

அன்புள்ள ஜெமோ,

மனித குலத்தின் மிகப்பெரிய அதிர்ஷ்டம், சிம்பான்சிக் குரங்குகளிடம் இருந்து பரிணாமப்பிச்சை பெற்றது. அந்த வரமே ஒரு பெரும் சாபத்தின் வித்தாக உருமாறியிருப்பது சமீப காலமாக வெளிப்பட்டிருக்கும் பாலியல் வன்முறை பூதத்தின் தாண்டவத்தில் நமக்குத்தெரிகிறது. முதலில் நான் இது ஒரு சட்ட ஒழுங்குப்பிரச்சினை என்று எண்ணியிருந்தேன். ஆனால் தினமும் நான் படிக்கும் செய்திகள் என்னை மிகவும் உளைச்சலுக்குள்ளாக்கியிருக்கின்றன.

ஆண் மனம் அடிப்படையிலேயே மிருகத்தன்மையானது என்ற முடிவுக்கு என்னால் வராமல் இருக்க முடியவில்லை. மதம், ஆன்மீகம், அறம், தர்மம், சட்டம், நீதி என்று எத்தனை போர்வைகள், வேலிகள் அந்த மனத்தைச்சூழ்ந்தாலும், அதன் நிதர்சனம் எவற்றையும் கிழித்தெறிந்து நிற்பது எனக்கு ஒருவித பயத்தை உண்டு பண்ணி இருக்கிறது. ஒட்டுமொத்த நாடே மனீஷ் ஜா இயக்கிய மாத்ருபூமி படத்தில் வரும் நிலைக்கு நிஜமாகவே வந்து விடும் போல இருக்கிறது. மனநல மருத்துவம் இல்லாமை ஒருபுறம் என்றால் பெருநகரங்களில் இரு பெற்றோரும் வேலைக்குப் போகும் இல்லங்களில் வளரும் குழந்தைகளும் இதுபோன்ற மன நோயாளிகளின் இலக்கில் எப்போதும் இருக்கும் நிலை இருக்கிறது. காணாமல் போகும் குழந்தைகளின் நிலையை இன்று வரும் செய்திகளுடன் ஒப்பிட்டுப்பார்த்தால் அன்றிரவு தூக்கம் வரமாட்டேனென்கிறது.

விஞ்ஞானம் வளர்ந்து ஆணின்றிப் பெண்களே வாழும் ஒரு உலகம் வந்தாலும் அது நல்லதே என்று எனக்குப்படுகிறது. இந்த நிலை எப்போது மாறும்?

இந்தக்கடிதத்தை எப்படி முடிப்பது என்று கூட எனக்குத்தோன்றவில்லை. ஒரு ஆணாக நான் இவ்வாறு ஒரு கசப்பையும் கூச்சத்தையும் என் வாழ்வில் இதுகாறும் நான் உணர்ந்ததே இல்லை.

சஞ்சலத்துடன்,
வா.ப.ஜெய்கணேஷ்.

அன்புள்ள ஜெய்கணேஷ்

ஆணோ பெண்ணோ அவர்களுடைய அடிப்படை மிருக இயல்பிலிருந்து அதிகம் வெளியேற முடிவதில்லை. லட்சக்கணக்கான ஆண்டுகளாக மானுடப்பண்பாடு என்பது அந்த அடிப்படை இச்சைகளில் இருந்து வெளியேறுவதற்கான பயிற்சிதான்.

பாலியல் கொடுமை பற்றி ஒரு கோணத்தில் யோசித்து நீங்கள் இந்த அதி தீவிர நிலைப்பாடு எடுக்கிறீர்கள். சென்ற சில மாதங்களுக்கு முன் கேரளத்தில் ஒருமாத இடைவெளியில் இரு நிகழ்ச்சிகள் செய்திகளில் வெளிவந்தன. ஐந்து பத்து வயதான குழந்தைகளை மாதக்கணக்கில் அடித்து சூடுபோட்டு நம்பமுடியாத கொடுமைகளுக்கு ஆளாக்கியிருக்கிறார்கள். செய்தவர்கள் பெண்கள். அவர்களுக்கு சொந்தமாகக் குழந்தைகள் இருக்கின்றன

இந்த விஷயத்தை நீங்கள் எங்கும் காணலாம். குழந்தைகளுக்கு எதிரான வன்முறை -வேலைக்காரக் குழந்தைகள், மூத்தாள் குழந்தைகள் மீது – பெரும்பாலும் பெண்களால்தான் இழைக்கப்படுகின்றன.

ஆகவே எளிமையாக எதையும் யோசிக்கவேண்டியதில்லை

ஜெ

முந்தைய கட்டுரைவடக்கும் தெற்கும்
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் இலக்கியக் கூடல் 2013