புதியவர்களின் கதைகள் 3 ,காகிதக் கப்பல்- சுரேந்திரகுமார்

மழை பொழிந்துகொண்டிருக்கிறது. ஒரு நாளில்லை, இரண்டு நாளில்லை ஒரு வாரமாய் கொட்டித்தீர்க்கிறது. எங்கும் வெள்ளக்காடு…!

எனது சின்னப் பொண்ணு நித்யா வீட்டுக்கு முன்னே வெள்ளத்தில் காகிதக்கப்பல் விட்டு விளையாடிக் கொண்டிருக்கிறாள்.

இந்த மழையையும் அவளையும் பார்க்கும்போது என் எட்டாவது வயதில், நான் வாழ்ந்த ஊரில் பெய்த மழையும், அதன் பின்னர் வெள்ளக்காடாகிய எங்கள் வீடும் ஞாபகத்திற்கு வருகிறது.

“உங்களுக்கு நல்ல கொண்டாட்டம்தான்டா பள்ளிக்கூடமும் இல்லை படிப்பும் இல்லை, நல்லா மழையில கூத்தடிச்சுக் கொண்டு திரியுங்கோ…”

அம்மாவின் பேச்சை கேட்கும் நிலையில் நாங்கள் இருக்கவில்லை. நானும் என் தங்கையும் போட்டிக்கு காகிதக் கப்பல் செய்து விளையாடிக் கொண்டிருந்தோம்., அவளுக்கு என்னை விட இரண்டு வயசு குறைவு. என்னை விடக் கெட்டிக்காரி. பெரும்பாலும் என்னைக் கேள்வி கேட்டே படுத்தி எடுப்பாள். முடிந்தவரை பதில் சொல்லுவேன் சொல்லாவிட்டால் அன்று முழுவதும் வருவோர் போவோரிடம் எல்லாம் என் மானத்தைக் கப்பலேற்றுவாள்.

“அண்ணா இப்பிடியே மழை பெஞ்சு கொண்டே போய் எங்கட வீட்டுக்கயும் தண்ணி வந்திடுமே…!, அப்ப என்னண்ணா செய்யிறது?” நியாயமான கேள்விதான்…

“மேசைக்கு மேல ஏறி நிப்பம்”

“அதுக்கு மேலயும் தண்ணி வந்திட்டா என்னண்ணா செய்யிறது…?” தொடங்கீட்டாள்….!

ஒரு முடிவோடதான் இருக்கிறாள் போல, ம்ம்ம் முடிந்தவரை சமாளிப்பம்…!’

“அதுக்கு பிறகு என்ன… கூரைக்கு மேல ஏறவேண்டியதுதான்..!”

“அதுக்கு மேலயும் வெள்ளம் வந்திட்டா….?”

இது நான் எதிர்பார்த்ததுதான்.

“அதுக்கு மேல எனக்குத் தெரியாது போடி…..” அவள் கேள்வியால் எரிச்சலூட்டப்பட்டுச் சொன்ன பதில் இல்லை அது, தப்பிக்க அதைவிட ஒருவழியும் எனக்குத் தோன்றவில்லை.

“ஐயோ அண்ணா எனக்கு பயமா இருக்கு….!”

“அண்ணா அண்ணா என்ன செய்யிறதெண்டு அம்மாட்டக் கேப்பமா…?”

இப்ப எனக்குள் ஒருவிதமாய் பயம் தொற்றிக் கொண்டுவிட்டது. இரண்டு பேரும் அம்மாவிடம் ஓடிப்போய்,
“அம்மா நிறைய மழை பெஞ்சு வீட்டுக்கு மேலயும் வெள்ளம் வந்திடுமா… அப்பிடி வந்தா என்ன செய்யிறதம்மா…?”

“அப்பிடி வந்தா இந்தியாவில இருந்து ஒரு கப்பல் வந்து எங்கள எல்லாம் ஏத்திக் கொண்டு போவாங்கள்…”

எங்களுக்கு அதைக் கேட்டாப் பிறகு உற்சாகம் தாங்க முடியவில்லை. இரண்டு பேரும் துள்ளிக் குதித்தோம். கப்பல் வந்து ஏத்தேக்க என்னவெல்லாம் கொண்டு போக வேண்டும் எண்டு பிளான் பண்ணினோம்…. உடுப்புகள் புத்தகங்கள் எல்லாம் ஒரு சூட்கேஸில் அடுக்கி வைத்தோம்….

நாங்கள் கப்பலில் போக ரெடி….!

மழை இன்னும் பெய்ய வேண்டும் என்று வேண்டிக்கொண்டோம். வெள்ளம் கொஞ்சம் கொஞ்சமாய் கூடிக்கொண்டே போனது.வீட்டின் ஒவ்வொரு படிகளையும் தாண்டிக் கொண்டு போனது.வீட்டிற்குள் வெள்ளம் வரும் நாளை எதிர்பார்த்துக் காத்திருந்தோம்.

ஒரு நாள் காலையில் மழை எங்களை மோசம் செய்துவிட்டது….!மழை நின்றே போனது….!

முந்தைய கட்டுரைசுரேந்திரகுமார்
அடுத்த கட்டுரைமலர்மிசை ஏகினான்