படைப்பு-கடிதங்கள்

அன்புள்ள ஜெ

2006 ல் இருந்து நான் தங்களின் வாசகன் . ஆனாலும் இதுவே முதல் கடிதம் . எனக்கு மிகவும் மன எழுச்சி , வாழ்வின் உன்னத கணங்களை தந்த கட்டுரைகளில் பகவத் கீதை , காந்தி பற்றிய கட்டுரைகள் , அருகர்களின் பாதை மற்றும் அறம் சிறுகதைத் தொகுப்புகள் உள்ளன.

ஒவ்வொரு முறையும் கடிதம் எழுத நினைக்கும் போதும் , நான் நினைப்பதை விடக் கூர்மையான விமர்சனம் மற்றும் பல கோண அணுகுமுறை உடைய சிறந்த வாசகக் கடிதங்களைப் பார்த்து அப்படியே விட்டு விடுவேன். மேலும் அறிமுகம் இல்லாத ஒரு வாசகனிடம் இருந்து வரும் ஒரு கடிதம் , அதுவும் ஒரு சாதாரணப் பாராட்டுக் கடிதம் உங்களிடம் ஆயிரக்கணக்கில் ஏற்கனவே இருக்கும் என்பதும் என் எண்ணம் .

உங்கள் மூலமாகவே நான் நாஞ்சில் நாடனை அறிந்தேன். தத்துவம் சார்ந்த நாவல் , கதைகளில் நீங்கள் எப்படி ஒரு சிகரமோ அதை போல அவர் யதார்த்த வாழ்வின் உச்ச கணங்களை எனக்குக் காட்டிய சிகரம் . நன்றி .

இப்பொழுது இந்தக் கடிதம் , விஷ்ணு புரதிற்காக. எதற்காக ஒரு மாபெரும் கட்டுப்பாடில்லாத கனவை உருவாக்கி அதை அழிக்கிறீர்கள் . இந்தக் கனவு இப்போது வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் கலக்கிறது . என் பார்வையில் , சிந்தனையில் ஓர் புதிய அறிதலை சேர்க்கிறது . இந்தக் கனவு எல்லா யுகத்திற்கும் , எல்லா நகரங்களுக்கும் உரியது. வெறும் பெயர்களை மட்டும் மாற்றிக் கொள்ளலாம் . அவ்வளவுதான்.

நன்றி.
செந்தில் குமார்
பெங்களூர்

அன்புள்ள செந்தில்குமார்

தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். . நீங்கள் தொடர்ந்து உங்கள் கருத்துக்களை எழுதலாம். நீங்கள் நினைப்பதைக் கூர்மையாகத்தான் எழுதியிருக்கிறீர்கள்.

கிட்டத்தட்ட ஏழு வருடங்களாக நாம் ஓர் உரையாடலில் இருந்திருக்கிறோம் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அந்த உரையாடலை நேரிலும் தொடர்வோம்.

விஷ்ணுபுரம் நீங்கள் சொல்வதுபோல ஒரு கனவுதான். கனவின் ஆழம் என்பது அதன் தற்காலிகத்தன்மையால் வருவது. அது அப்படியே இருக்கும் என்றால் அதை நாம் கவனிக்கவே மாட்டோம். கார்ல் சகனின் காண்டாக் நாவலில் ஒரு வரி வரும். வானில் நட்சத்திரங்கள் நூறு வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே வரும் என்றால் அது எவ்வளவுபெரிய நிகழ்வாக இருந்திருக்கும் என்று

ஆகவேதான் விஷ்ணுபுரம் அழிந்து இல்லாமலாகிறது

ஜெ

அன்புள்ள ஜெயமோகன்,

நான் தீவிர வாசிப்பின் வாசலில் இருக்கிறேன். உங்கள் வலைப்பதிவுகளைக் கிட்டத்தட்ட முழு நேர வேலையாகப் படித்து வருகிறேன். My wife is going crazy with this heightened level of attention, she has never seen me this way in a decade of marriage! அந்தத் தேடலில், ‘தமிழ் நாவல்கள் – விமர்சகனின் சிபாரிசு’ – http://www.jeyamohan.in/?p=84 பதிவைக் கண்டேன். இந்தப் பட்டியல் பதிவு செய்து 10 வருடங்கள் கடந்து விட்டன. இதில் ஏதேனும் மாற்றங்கள் செய்யும் உத்தேசம் இருக்கிறதா?

பணிவன்புடன்,

இலட்சுமணன்

அன்புள்ள இலட்சுமணன்

அந்த நாவல் பட்டியலை மறுபடியும் விரிவாக்கம்செய்தாகவேண்டும். நண்பர் ஆர்வி அதற்காகக் கடும் நிர்ப்பந்தம் அளித்துவருகிறார். ஆனால் அதற்கு நான் நிறைய புதியநாவல்களை வாசிக்கவேண்டும்

பார்ப்போம்

ஜெ
திரு ஜெமோ,

உங்களுடைய ‘சிறுகதை சமையல் குறிப்பு’ வாசித்துள்ளேன். அதே சமயம் ‘சிறுகதையில் என்ன நடக்கிறது’ என்ற கட்டுரையையும் வாசித்தேன். அதன் இறுதியில் நீங்கள் சொல்லியிருப்பது,

” இனிமேல் ஒற்றைப்புள்ளியில் உச்சம் கொள்ளும் ஒரு கதை முழுமையானதாக உணரப்படாது. இன்றைய கேள்வி பன்முகத்தன்மையையும் உரையாடல்தன்மையையும் ஒருங்கே கொண்ட ஒரு யதார்த்தவாதச் சிறுகதை வடிவை அடைவது எப்படி என்பதாக இருக்கும் என்று மட்டும் தோன்றுகிறது. ”
என் அனுபவத்தை வைத்து ஒரு கதை எழுதினேன்.

http://kaalaveli.blogspot.com/2012/09/blog-post.html

உங்களுடைய சிறுகதை சமையல் குறிப்பை வைத்துப் பார்த்தால் அதை சிறுகதை என சொல்ல இயலாது.
சிலிகான் செல்ப் குழுமத்தில் அதை வெளியிட்டு விமர்சனங்களைக் கோரினேன். ஒருவர் மட்டும் (ஸ்ரீனிவாசன் உப்பிலி) அதை ஒரு எழுத்தாளரிடம் (நட்சத்திர எழுத்தாளர் என்றார் – யாரென்று சொல்லவில்லை…நானும் கேட்கவில்லை ) கொடுத்துக் குறிப்புக்கேட்டிருக்கிறார். அவரும் ஒரு விமர்சனத்தை என் கதையின் இடையிலேயே அடைப்புக் குறிகளிட்டு சொல்லியிருக்கிறார்.

அவர் என்னுடைய வாக்கிய அமைப்புகளிலும், கதையின் அடர்த்தியிலும் சொல்லிய கருத்துகளை நான் மிகவும் உடன்படுகிறேன். எழுத எழுத அவை இன்னும் சரியாக வரும் என நம்புகிறேன்…ஆனால் நான் கதையில் சேர்த்திருந்த சம்பவங்கள் பலவற்றைத் தேவையற்றவை என சொல்லியிருக்கிறார்….நான் இந்தக் கதையை எழுதும் பொழுது எதுவும் சிறுகதை இலக்கணத்தைத் தழுவி எழுதவேண்டும் என நினைத்து எழுதவில்லை…தேவையானவை என நினைத்து தான் எழுதினேன்….அவற்றை நீக்கினால் “பன்முகத்தன்மை’ என்பது இழக்கப்பட்டுவிடும் எனத் தோன்றுகிறது…

அதே போல ஒரு கதையில் “திருப்பம்” இறுதியில் இருக்க வேண்டும் என்பதும் ஒரு விதியா? அவருடைய விமர்சனத்தை இந்த அஞ்சலுடன் இணைத்துள்ளேன்…(அடைப்புக் குறிகளுக்குள் உள்ளவை அவரது விமர்சனங்கள்..)

உங்கள் பார்வையிலும் அவை அந்தக் கதையிலிருந்து அகற்றப்பட வேண்டியவைதானா எனத் தெரிந்து கொள்ள நினைக்கிறேன்.
நன்றி.

வேறு குறைகளையும் சுட்டிக் காட்டினால் மேலும் உதவியாகவே இருக்கும்.

முத்துகிருஷ்ணன்

அன்புள்ள முத்துக்கிருஷ்ணன்

கதையை வாசித்தேன். அந்த எழுத்தாளர் ஏறத்தாழ சரியாகத்தான் சொல்லியிருக்கிறார் என்றுதான் எனக்கும் படுகிறது. ஆனால் இது ஒரு வாசக மறுவினை மட்டுமே. நூறு வெவ்வேறு வாசகர்களிடம் கொடுத்து அவர்களுக்குப் பிடிக்காதவற்றை வெட்டச்சொன்னால் எந்த கதையிலும் எல்லா வரிகளும் வெட்டப்பட்டுவிடும். இறுதியாகத் தீர்மானிக்கவேண்டியவர் நீங்கள் மட்டுமே. இது ஒரு சிபாரிசு என்று எடுத்துக்கொள்வதே சரியாகும்.

திரு உப்பிலி சொல்வதை நான் இப்படிச் சொல்கிறேன். நீங்கள் உங்களுக்குத் தெரிந்த ஒருவரிடம் பேச ஆரம்பிக்கிறீர்கள். அப்போது மதிய உணவு இடைவேளையில் புதிதாய் வேலைக்கு சேர்ந்த நண்பனுடன் ’திரைப்படப் பாடல்களைப் போலவே ரீமிக்ஸ் பாடல்களை உருவாக்குவதற்கு இசை ஞானம் தேவையில்லை என உணர்ச்சிகரமாக விவாதித்ததை இப்போது நினைக்கையில் கூச்சமாக இருந்தது.’ என்று பேச ஆரம்பிக்கலாம். ஆனால் நீங்கள் பேருந்தில் செல்லும்போது முன்பின் அறிமுகமில்லாத ஒருவரிடம் சொல்லியே ஆகவேண்டிய உணர்ச்சிக்கொந்தளிப்பைச் சொல்ல முனைந்தால் அப்படி ஆரம்பிப்பீர்களா என்ன? சட்டென்று அவரது கவனத்தைக்கவரக்கூடிய வகையில்தான் ஆரம்பிப்பீர்கள். அதுதான் சிறுகதையின் இலக்கணம்

சிறுகதைக்கு இறுதிமுடிச்சு தேவையா என்றால் தேவை என எந்த விதியும் இல்லை என்பதே பதிலாகும். ஆனால் சிறுகதை சொல்லப்பட்ட கதையில் இருந்து எந்த அளவுக்கு விரிந்து மேலும்பலமடங்கு உணர்த்துகிறதோ அந்த அளவுக்குத்தான் அது நல்ல கதை

இறுதிமுடிச்சு என்பது அப்படி ஒரு புதிய கதையை ஆரம்பிப்பதுதான். கவித்துவமான ஓர் உச்சமும் அதைச்செய்யக்கூடும்.

ஜெ

முந்தைய கட்டுரைபெயர்ந்தோர்
அடுத்த கட்டுரைஇந்தியின் தேவை