நமது பேச்சாளர்கள்

அன்புள்ள ஜெயமோகன் சார், நலமா?

கடந்த 20ம் தேதி புத்தகக் கண்காட்சிக்கு சென்றிருந்தேன். விஷ்ணுபுரம், கொற்றவை, இன்றையகாந்தி, திருக்குரான், அம்பேத்கா்- முத்துராமலிங்கத்தேவா், MGR வரலாறு…இப்படி இன்னும் சில புத்தகங்கள் வாங்கிக் கொண்டு, அன்று இரவு நடைபெற்ற சொற்பொழிவுக்குக் கேட்கச் சென்றேன்.

கவிஞர் தமிழச்சி, ச.தமிழ்ச்செல்வன், பிரபஞ்சன் ஆகியோர் பேசினார்கள். பொதுவாக இது போன்ற ”முற்றிய நிலையில்” உள்ள முற்போக்காளர்களின் கூட்டங்களுக்குச் சென்று ரொம்ப நாட்களாகி விட்டது.

திருவண்ணாமலையில் பவா ஏற்பாடு செய்யும் டிசம்பா் 31 இரவு- கலை நிகழ்ச்சிகளுக்கு செல்லும் போது கேட்டதோடு சரி!

கவிஞா் தமிழ்ச்சி, நாட்டில் பிறந்துள்ள எல்லா ஆண்களும் அயோகியா்கள் என்பது போலவும், பெண்கள் உயா்வுக்குப் பெண்கள் மட்டுமே பாடுபடுவது போலவும் பேசினார். பெண்களின் அந்தரங்கப்பகுதிகளை பாடுபொருளாக வைத்துக் கவிதை எழுதும் 7,8 பெண் கவிஞர்களை சிலாகித்துப் பேசினார் (மறக்காமல் கனிமொழியின் பெயரையும் சொல்லிவிட்டார்)

அடுத்துப் பேச வந்த தமிழ்ச்செல்வன், இந்த நாட்டில் தலித் சமுதாய மக்களை எல்லோரும் அடக்கி ஒடுக்குவதாகவும், அம்பேத்கர் சிலைகள் தலித்பகுதிகளில் மட்டுமே நிறுவப்படுவதாகவும் பேசினார்

“மக்களைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?” என்று காந்திக்கு பகத்சிங் கடிதம் எழுதினாராம்.இப்படி காந்தியை கொஞ்சம் விளாசினார். ஒட்டு மொத்த ஜனநாயகம், கல்விமுறை, மக்கள் பண்பு என அனைத்துமே மோசடி என்பது போல் பேசினார். பிரபஞ்சன் கொஞ்சம் பரவாயில்லை. யதார்த்தமான, நம்பிக்கை ஊட்டும் வகையில் பேசினார்.

இந்தக் கூட்டம் முடிந்து வெளியில் வந்ததும் உங்களைத்தான் நினைத்துக் கொண்டேன். இந்த முற்போக்குகள் எல்லாம் உங்களை ஏன் இப்படி வசைபாடுகிறார்கள் என்பதை அறிய அந்த சிறு கூட்டமே வாய்ப்பாக அமைந்தது.

என்னுடைய கேள்வி எல்லாம் இதுபோன்ற எதிர்மறையாளர்களும், விட்டேத்திகளும்தான் இப்போதைய சிந்தனையாளர்களா?

எம்.எஸ்.ராஜேந்திரன்

அன்புள்ள ராஜேந்திரன்,

நீங்கள் குறிப்பிடுபவர்கள் தமிழகத்தில் சென்ற அரை நூற்றாண்டாக வேரூன்றிய ஒரு மேடைமரபு உருவாக்கிய ஆளுமைகள். இந்தப் பேச்சளர்களை விடுங்கள். பொதுவாக நம்முடைய மேடைகளில் என்ன பேசப்படுகிறது என்பதை கொஞ்சம் புறவயமாகக் கவனியுங்கள்.

மேடைகளில் இங்கே தேவைப்படுவது கோபமான, நக்கலான ஒரு பாவனை. அதற்கேற்ப ஒரு மொழிநடை. மேடையில் கர்ஜிக்க வேண்டும், அல்லது கிண்டலடிக்கவேண்டும். அதை ஒரு கலைநிகழ்ச்சி போல ரசித்துவிட்டுச்செல்வார்கள் நம் ரசிகர்கள்.இந்தக்கலைநிகழ்ச்சிக்குத் தேவையானவை உதிரி மேற்கோள்கள், சில்லறைத்தகவல்கள், மிகைப்படுத்தப்பட்ட சம்பவக்கதைகள் மற்றும் குட்டிக்கதைகள். அவற்றில் கொஞ்சத்தை மனப்பாடம் செய்துகொண்டால் எந்தமேடையிலும் பேசலாம்.

திராவிட இயக்கம் உருவாக்கிய இந்த மேடைமரபின் உதாரணங்கள் நீங்கள் சுட்டியவர்கள். இங்கே அதற்கு முன்னரே ஒரு மேடை மரபு இருந்தது. முன்னால் இருப்பவர்களை மகிழ்விப்பதற்காகப் பேசுவதற்குப்பதிலாக அவர்களுக்குக் கற்பிக்கவும் அவர்களுடன் உரையாடவும் பேசுவது அது. அதை இங்கே உருவாக்கியவர்கள் மாபெரும் சைவ மேடைப் பேச்சாளர்க்ள், மற்றும் இடதுசாரிப்பேச்சாளர்கள். அந்த மரபில் வந்தவர்கள் கூட மெல்லமெல்ல அந்த மரபைக் கைவிட்டு திராவிட இயக்கத்தின் பேச்சுமுறைக்கு மாறிவிட்டார்கள். மிகச்சிறந்த உதாரணம் தமிழ்ச்செல்வன். இத்தனை வருடங்களாக மேடையில் பேசும் இந்தத் தோழரின் பேச்சில் ஒரு நல்ல சிந்தனையாளனை, இலக்கிய ஆசிரியனை அறிமுகம் செய்து நான் கேட்டதில்லை.அங்கே கூடியிருப்பவ்ர்களின் மனநிலைக்கேற்ப சிலவசைகள், நக்கல்கள், கொஞ்சம் கோபாவேசம். அவ்வளவுதான் மெனு

சென்ற அரைநூற்றாண்டில் நம்முடைய மேடைகளில் சென்ற நூற்றாண்டைக் கட்டியெழுப்பிய எந்த சிந்தனையாளனைப்பற்றியும் பேசப்பட்டதில்லை. ஃப்ராய்டைப்பற்றி, டார்வினைப்பற்றி, ஐன்ஸ்டீனைப்பற்றி, தல்ஸ்தோய் பற்றி ஒரு மேடையில் நம்மால் கேட்கமுடியுமா என்று யோசித்துப்பாருங்கள். அப்படிப்பேசவேண்டுமென்றால் அடிபப்டையான வாசிப்பு தேவை. வாசித்தவற்றைச் சொந்தமான சொற்றொடர்களாக மாற்றிக்கொள்ளும் வல்லமை தேவை. அது இல்லாத இடத்தில்தான் இதெல்லாம் வந்து சேர்கிறது

மேடையில் கோபமாகத் தோற்றமளிக்க எளிய வழி காந்தியை விமர்சிப்பதுதான். அதற்கு காந்தியைப்பற்றி ஒன்றும் தெரிந்திருக்கவேண்டியதில்லை. ஐம்பதாண்டுக்காலமாக காந்தியைப்பற்றிய தவறான தகவல்களையும் அவதூறுகளையும் மட்டுமே மேடையில் சொல்லிவருபவர்கள் இவர்கள். அந்த ஒவ்வொரு வசையும் அப்பட்டமாகும்போதுகூட இவர்கள் வெட்கப்படுவதில்லை.

தமிழச்சியை விடுங்கள். தமிழ்ச்செல்வனுக்கு தலித்துக்கள் மீதான பாசமும் உண்மையான சமூகக்கோபமும் இருந்தால் அந்த விமர்சனத்தைத் தன் சொந்தச் சாதியியில் இருந்தும் அதன் புனிதபிம்பங்களிடமிருந்தும் அல்லவா தொடங்க வேண்டும்?

நீங்கள் இவர்களை அடையாளம் கண்டுகொள்வதேகூட ஒரு நல்ல தொடக்கம்தான். ஒரு நல்ல உரை என்பது எழுந்து வரும்போது நாம் அறியாத சில ஆசிரியர்களை சில சிந்தனையாளர்களை நமக்கு அறிமுகம் செய்திருக்கும். அப்படிப்பட்ட உரைகளும் அபூர்வமாக நிகழத்தான் செய்கின்றன

ஜெ

பிகு: காந்திக்குத் தெரியாத எந்த மக்களை பகத்சிங் பார்த்துவிட்டார்? இந்தியா முழுக்க, பர்மாவிலும் இலங்கையிலும் மலாயாவிலும் கூட, மூன்றாம் வகுப்பு ரயிலில் எவெரென்று தெரியாத பயணியாக மாதக்கணக்கில் தன்னந்தனியாக அலைந்தவர் காந்தி. அதன்பின்னர்தான் அவர் இந்திய அரசியலுக்குள் நுழைந்தார். இந்தியாவில் அவர் காலடி படாத முக்கியமான ஊர் கிடையாது. அவர் அறியாத நிகழ்ச்சி கிடையாது. இந்தியாவில் எவருக்கேனும் மக்கள் என்ற சொல்லைச் சொல்ல முழுத்தகுதி உண்டு என்றால் அது காந்திக்குத்தான். புத்தகங்களில் இருந்து மக்களை வாசித்தறிந்த அன்றைய மார்க்ஸியர்களுக்கோ பஞ்சாபுக்குள் பெரும்பாலும் தலைமறைவாகவே பதுங்கி வாழ்ந்த பகத்சிங் போன்ற கற்பனாவாதப் புரட்சியாளர்களுக்கோ அல்ல.

முந்தைய கட்டுரைகாதலர்தினம்-கடிதங்கள்
அடுத்த கட்டுரைகதைகள் -கடிதங்கள்