ஒளியை அறிய இருளே வழி .

ஆசிரியருக்கு ,
ஓரிரண்டு ஆண்டுகளுக்கு முன் ஒரு வானொலி குரல் பதிவு அறைக்கு சென்றிருந்தேன் , இறுக்கமான கதவுகளால் ஆன ஒரு குளிரூட்டப் பட்ட கண்ணாடி அறை. உள்ளே சென்று எனது நண்பரிடம் பேசிய முதல் வாக்கியத்திலேயே சற்று துணுக்குற்றேன் , எனது குரல் அன்னியமாக முற்றிலும் வேறு மாதிரி ஒலித்தது, அதுதான் எனது அசல் குரல் , இதுவரை அதை நான் கேட்டதில்லை. மேஜையில் ஒரு பேனா வைக்கப் படும்போதும் ஒலித்த ‘டக்’ ஒலி விநோதமாகவும் துல்லியமாகவும் இருந்தது , அப்போது தான் புற உலக பாதிப்பின்றி ஒலிகளை அதன் அசல் வடிவில் கேட்கிறோம் , அது ஒரு அபாரமான செவி அனுபவம். நமக்கு வாய்க்கப் பெற சாத்தியமான எந்த நிசப்தமும் முழுமையானது அல்ல , சற்றே மாசடைந்தது.

இப்போது இந்த குகைப் பயணம் , இது ஒரு அபாரமான விழி அனுபவம். குகைகளுக்குள் நமக்குக் கைகூடியது இதுவரை அனுபவமாகாத அடர் இருட்டு, நமக்கு வாய்க்கப் பெற சாத்தியமான எந்த இருளும் முழுமையானது அல்ல , சற்றே மாசடைந்தது. குகைக்குள் நிலவும் நிசப்தமும் இருளும் நமக்குள் நாம் செல்ல ஏதுவானது . இருள் நமது துவாரங்கள் வழியே உள்ளே வழியும், கூடவே சப்தமின்மையும். வெளியில் நமது சிந்தனைத்தொடர் ஒன்றும் அடுத்ததும் எல்லை மங்கி கலந்தே ஓடும், குகைக்குள் அப்படி அல்ல ஒன்றுக்கும் மற்றொன்றுக்கும் தெளிவான எல்லையை நாம் உணர முடிகிறது அது கத்திகளை அருகருகில் வைப்பது போலத் தெளிவான விளிம்புகளினால் ஆனது , எனவே தியானிக்க பிற எந்த இடத்தை விடவும் குகையே சாதகமானது.

அடுத்தது குகையிலிருந்து வெளிப்படல், உலகம் இவ்வளவு ஒளியாலானதா, இவ்வளவு வண்ணமயமானதா என உணர்வோம், குடும்சரில் இருந்து முதலில் வெளி வந்த போது ஒரு அதி துல்லியமான உலகைக் கண்டேன் , கூடவே இப்பார்வை எதனை நேரம் தங்கும் என்ற அச்சமும், அதிருஷ்ட வசமாக அது ஒவ்வொரு குகையில் இருந்து மீளும் போதும் வலுவானது , ஆம் இன்றும் எனது இப்போதைய புற உலகம் மிக அழகாக இருக்கிறது , மனமும் மிக மகிழ்வாக. மரங்களும், கிளைகளும், இலைகளும் அதன் விளிம்பும் அதி துல்லியம் , நிறம் அதி அழுத்தம் , பின்னணி வெட்டும் கச்சிதம். நிசப்தம் நிலவ நிலவப் பிறகு வரும் ஒலி துல்லியமாகிறது , இருள் நிலவ நிலவப் பிறகு வரும் ஒளி துல்லியமாகிறது.

வாசிப்பும் , வாழ்வனுபவமும் கூடக் கூட ஒரு புறம் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் நிகழ்வுகள் மற்றும் சிந்தனைகள் குறைகிறது, வயோதிகம் துவங்குகிறது , சுவாரசியம் குறைகிறது , வாழ்வு சலிக்கிறது . பயணத்தில் நாம் பார்க்க வேண்டிய இடங்களுக்கிடையே வழியில் நாம் காணும் நிலக் காட்சிகளின் கவர்ச்சி மங்குவது என்பதும் இதேபோலத்தான். இப்பயணத்தில் நான் உறுதிப் படுத்திக் கொண்ட விஷயம் இன்னும் எனக்கு அது நேரவில்லை, நிலம் இப்போதும் சுவாரஸ்யமாக இருக்கிறது .

ஒளியை அறிய இருளே வழி .

கிருஷ்ணன்

முந்தைய கட்டுரைகந்தர்வன்
அடுத்த கட்டுரைகடைசிக் குடிகாரன்