ஏன் நாம் வரலாற்றை வெறுக்கிறோம்?

index

ஜெ,

சரியான சொல் கிடைக்காததால், தெரியாததால் ஆவணப்பதிதல் என்று documentation -ஐ இனி குறிக்கிறேன். நான் இனி கூறப்போகும் அனைத்து கருத்துகளிலும் “துல்லியம்” என்பதுதான் முக்கிய கருப்பொருள்.

தமிழர்கள், பொதுவாகவே, ஆவணப்பதிதலில் அதிகம் விருப்பு கொள்ளாதது ஏன்? எந்த ஒரு முக்கியமான சமூக நிகழ்வும், அதன் காரணிகளும், நிகழ்ந்த சமூகத்தின் அமைப்புகளும் மிகப் பெரிய பொக்கிஷங்கள், அல்லவா? உதாரணத்திற்கு, பாரதியின் இறுதி வாழ்வு/சாவு, அண்ணா, காமராஜ் போன்றோரின் தெளிவான சரிதங்கள். அவ்வளவு ஏன், MGR முதல்வரான அந்த தேர்தலின் பல்வேறு காரணிகள், அதன் உந்துதல்கள் எதற்கும் அறுதியான ஆவணம் பதிக்கப்படவில்லை என்றே தோன்றுகிறது. குறிப்புகள் இருக்கின்றன, அவற்றை நான் மறுக்கவில்லை, ஏன் “துல்லியமான”, விரிவான பதிப்புகள் இல்லை?

1800-களில் நடந்த அமெரிக்க அரசியலின் உள்நுட்பங்களும், லிங்கனின் அரசியல் பிரயாணம் போன்றவற்றைப் பார்க்கும் போது, அது குறித்த ஆவணங்களைப் பார்க்கும் போதும், அந்த அளவில் ஒரு சிறு முயற்சி இன்று கூட நம்முள் எடுக்கப்படுவதில்லை என்றே தோன்றுகிறது. அது ஏன்?

இந்தக் கருத்தை மற்ற துறைகள் எவற்றுக்கும் விரிவாக்கிக் கொள்ளலாம் என்றும் தோன்றுகிறது. “நவீன தமிழிலக்கிய அறிமுகம்” ஆளுமையின் காரணமாக நீங்கள் கொடுத்ததால், படிக்க எளிதாக, விருப்பாக இருப்பினும், அதன் பின்புலனை, இறந்தகால காரணிகளை அறிந்து கொள்ள விழையும் மனதுக்கு ஏன் எந்த பதிதல்களும் கிட்டுவதில்லை? அதையும் மீறி, ஏன் இன்னும் கூட அதற்கான முனைப்புகள் இல்லை?

சுலபமாகச் சொன்னால், சென்ற தமிழகத் தேர்தலில் வென்ற அணியின் பலம், பலவீனம் என்ன, அது வென்ற காரணம் என்ன என்று நமது அடுத்த தலைமுறை கற்றுக்கொள்ள ஏதாவது சார்பற்ற, துல்லியமான பதிப்புகள் இருக்கின்றனவா? இல்லையென்றால், எது நம்மைத் தடுக்கிறது?

டாக்டர் பாபு சுந்தரம்

அன்புள்ள பாபு சுந்தரம்

சமீபத்தில் நான் கவியோகி சுத்தானந்த பாரதியாரின் ‘சோதனையும் சாதனையும்’ என்ற நூலை வாசித்துக்கொண்டிருந்தேன். சுத்தானந்தர் நூறுவயதுக்கு மேல் நிறைவாழ்வு வாழ்ந்தவர். ஐம்பது ஆண்டுக்காலம் சுந்தந்திரப்போராட்டத்தில் ஈடுபட்டார். இருபதாண்டுக்காலம் சுதந்திர இந்தியாவில் ஆன்மீகமலர்ச்சிக்காகச் செயல்பட்டார். வரலாற்றைக் கூடவே வாழ்ந்தறிந்த வரலாற்றுநாயகன் அவர். சலிக்காமல் எழுதும் வழக்கம் கொண்டவராகையால் தன் வாழ்க்கையையும் ஓரளவு எழுதி வைத்திருக்கிறார்.

சுத்தானந்தர் தொடர்ச்சியாகத் தமிழகம் முழுக்க பயணம்செய்துகொண்டே இருந்திருக்கிறார். கணிசமான ஊர்களுக்கு நடந்தே சென்றிருக்கிறார். அவரது வாழ்க்கைவரலாற்றின் சிறப்பம்சம் என்னவென்றால் அவை நெடுங்காலம் கழித்து நினைவிலிருந்து எழுதப்பட்டவை அல்ல என்பதே. அவர் அவர் தொடர்ச்சியாக நாட்குறிப்புகள் எழுதியிருக்கவேண்டும். அந்த நாட்குறிப்புகளையே அவர் சுயசரிதையாக ஆக்கியிருக்கிறார். ஆகவே ஒவ்வொரு ஊருக்குச்சென்ற கதையைச் சொல்லும்போதும் அங்கே சந்தித்தவர்களைப்பற்றிப் பெயர்கள் சொல்லிக் குறிப்பிடுகிறார். அவரது வரலாறு முழுக்க மனிதர்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள்

சுத்தானந்தர் சமரச நோக்கு கொண்டவர். வேதாந்தி, துறவி. ஆனால் ஈ.வே.ரா அவர்கள் வீட்டுக்குச் சென்று அவர் வீட்டிலேயே தங்கி தன் தியானத்தையும் யோகத்தையும் செய்ய அவருக்குத் தயக்கமில்லை. அல்லாவையும் கிறிஸ்துவையும் அவர் புகழ்ந்து பாடுகிறார். தர்ஹாவில் பிஸ்மில்லா சொல்லி தொழுகை செய்யவோ மாதாகோயிலில் ஜெபம்செய்யவோ முதலாளாக முன்னிற்கிறார். ஆகவே அவர் காலகட்டத்தின் எல்லாவகையான இலட்சியவாதிகளும் அவரது நூலில் வந்து கொண்டே இருக்கிறார்கள். இந்தியாவே இலட்சியவாதத்தால் அலையடித்துக்கொண்டிருந்த காலகட்டம் அது.எத்தனை முகங்கள். எல்லாரும் சுதந்திரப்போரிலும் சமூகசீர்திருத்ததிலும் ஆர்வம் கொண்டவர்கள்.

உதாரணமாக அவர் பாமணி என்ற சிற்றூரைப்பற்றிச் சொல்கிறார். திருத்துறைப்பூண்டியில் இருந்து மூன்றுமைல் அப்பால் உள்ள ஊர். அங்கே ஒரு கிராமசபை உருவாக்கப்பட்டு சீர்திருத்தச்செயல்பாடு தீவிரமாக நடந்திருக்கிறது. தீண்டாமை ஒழிப்பு, மதுவிலக்கு, ஆசாரசீர்திருத்தம், தேசிய உணர்ச்சி ஊட்டல் பணிகள் நடந்திருக்கின்றன. அவற்றில் ஈடுபட்டவர்களின் ஒரு பட்டியலை சுத்தானந்தர் அளிக்கிறார். முத்துக்குருக்கள், அன்புமணி ராமச்சந்திரன், ராசையா, சேஷையா, அரங்கநாதர், அய்யாவு, சீனிவாச முதலியார், செங்கல்மூப்பனார், ராதாவெள்ளைச்சாமி, மணி, சண்முகம் வெங்கடாசலம், திருத்துறைப்பூண்டி கிருஷ்ணசாமி, ஐயப்பா…

இந்த வரலாற்றை வேறெங்கும் நாம் காணமுடியாது.இந்த மனிதர்கள் தடமில்லாமல் அழிந்து போயிருப்பார்கள். இப்படி நம் வரலாற்றின் தடங்கள் அழிந்துகொண்டே செல்கின்றன. வரலாற்றை மேலிருந்து எழுதக்கூடாது. அவ்வாறு எழுதினால் அது அதிகாரத்தின் வரலாறாகவே இருக்கும். அந்த வரலாறு சமகால அதிகார சக்திகளால் எழுதப்படும். வரலாற்றைக் கீழிருந்து எழுதவேண்டும். வட்டார வரலாறுகள் எழுதப்பட்டு அவற்றின் தொகையாகவே ஒட்டுமொத்த வரலாறு எழுதப்படவேண்டும். அதுவே சரியான வரலாறு.

சிறியவரலாறுகள் உண்மையை மிக நெருக்கமாகத் தொடக்கூடியவை. குடும்பவரலாறுகள், கிராம வரலாறுகள் போன்றவை. அப்படி எழுதும் வழக்கமே நம்மிடமில்லை. ஆகவே நம்மிடமிருப்பதெல்லாம் பொத்தாம்பொதுவான வரலாறுகள்தான். இங்கே வருடத்துக்கு முப்பதாயிரம் நூல்கள் வெளியாகின்றன. பெரும்பாலான நூல்கள் அபத்தமான மரபுக்கவிதைகள்,புதுக்கவிதைகள். மிஞ்சியவை ஏற்கனவே செவிவழியாக சொல்லப்பட்ட செய்திகளையே திருப்பி எழுதும் அசட்டு நூல்கள். ஒரு சின்ன கும்பல் ஆங்கிலத்தில் எதையாவது அரைகுறையாக வாசித்து அந்தத் தகவல்களையும் கொள்கைகளையும் சொல்லிக்கொண்டிருக்கிறது. இவர்கள் ஏன் இவர்கள் வாழும் கிராமத்தை, நகரத்தைப்பற்றிக் கொஞ்சம் அங்கே இங்கே விசாரித்து ஒரு நூலை எழுதக்கூடாது?

தமிழகத்தில் திருச்சியைப்பற்றி ஒரு வரலாறு உண்டா? ஈரோடு, காஞ்சீபுரம் ,கடலூர்? கிடையாது. கிராமங்களின் வரலாறே கிடையாது. தமிழினி வசந்தகுமார் ஒவ்வொரு மாவட்டத்தைப்பற்றியும் ஒரு நூலை வெளியிடத் திட்டமிட்டு முயன்றார். குமரிமாவட்டம் பற்றி அ.கா.பெருமாள் எழுதிய ‘தென்குமரியின்கதை’ என்ற நூல் மட்டுமே வெளிவந்தது. அதன்பின் எவரும் எழுத முன்வரவில்லை.

ஏன்? நம்முடைய மனம் ஏன் தகவல்சார்ந்த வரலாற்றில் படிவதில்லை? ஏன் அதை முறையாகப் பதிவுசெய்ய நமக்குத் தோன்றவில்லை? வரலாற்றாசிரியர்களுடன் உரையாடும்போது உருவான சில புரிதல்கள் என்னிடமுள்ளன.

ஒன்று, நம் மக்களுக்கு உண்மையான வரலாற்றில் ஆர்வமே இல்லை. அப்படி வரலாற்றை எழுதுபவர்கள் எவ்வகையிலும் அங்கீகரிக்கப்படுவதில்லை. பட்டமோ பணமோ பதவியோ கிடைப்பதில்லை. ஆகவே மெல்லமெல்ல நம்மிடம் வரலாற்றாசிரியர்களே இல்லாமலாகிவருகிறார்கள். உதாரணமாக அ.கா.பெருமாள் அவர்களின் தலைமுறையில் வட்டார வரலாற்றை எழுதியவர்களில் செ.இராசு, குடவாயில் பாலசுப்ரமணியம் போல வெகுசிலரே இருந்தனர்.அவர்கள் எந்த அங்கீகாரமும் இல்லாமல் இருக்கிறார்கள். அடுத்த தலைமுறையில் நானறிந்து பெயர்சொல்லும்படி இருப்பவர்கள் ஆ.இரா.வெங்கடாசலபதி போல ப.சரவணன் [அருட்பா மருட்பா ஆய்வு] போன்று மிகச்சிலரே.

ஏன் நமக்கு வரலாற்றில் ஆர்வமில்லை? ஏனென்றால் நாம் வரலாற்றுக்குப் பதிலாக மிகையான பிம்பங்களையே உருவாக்கிக் கொள்கிறோம். தலைவர்களைப்பற்றி, நிகழ்ச்சிகளைப்பற்றி நம்மிடமிருப்பவை நாம் நம்பவிரும்பும் சமகாலத் தொன்மங்கள். உண்மையான வரலாறு நமக்குச் சொல்லப்பட்டால் நம்மிடமிருக்கும் பிம்பங்களை அது உடைக்கிறதென்பதனால் நாம் அதை ஏற்பதில்லை. மட்டுமல்ல அதைச் சொல்பவர்களை வசைபாடவும் அவமதிக்கவும் முடிந்தால் தாக்கவும் முயல்கிறோம். அ.கா.பெருமாள் உட்பட வரலாற்றாசிரியர்கள் எல்லாமே பாராட்டுக்கள் எதையுமே பெறாவிட்டாலும் எல்லாவகையான வசைகளையும் பெற்றவர்கள்தான்

உதாரணமாக, வள்ளலாரின் பாடல்கள் அருட்பா அல்ல அவை மருட்பாக்கள்தான் என்று ஆறுமுகநாவலர் வழக்கு தொடுத்தார் என்றும், வழக்குக்காக வள்ளலார் நீதிமன்றம் வந்தபோது அனைவரும் கைகூப்பியபடி எழுந்து நின்றார்கள் என்றும், வாதியான ஆறுமுகநாவலரும் எழுந்து நின்றார் என்றும், அதைக்கண்டு ‘நீங்கள் ஏன் எழுந்தீர்கள்?’ என நீதிபதி  கேட்டார் என்றும் ஒரு கதை உண்டு. ‘அவர் என் மதத்தின் ஞானி. ஆகவேதான் எழுந்தேன்’ என்றாராம் நாவலர். ‘நீரே சொல்லிவிட்டீர். ஆகவே அவர் பாடியது அருட்பாதான். வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது’ என்றாராம் நீதிபதி

தமிழக மேடைகளில் திரும்பத்திரும்பச் சொல்லப்படும் ஒரு பொய்க்கதை இது. மேடைகளில் இது கிளர்ச்சியூட்டக்கூடியதாக இருக்கிறது. உடனடியாகக் கைதட்டல் விழுகிறது. ஆனால் உண்மை என்ன? ஆறுமுகநாவலரை வள்ளலார் சிதம்பரம் கோயிலில் நிகழ்ந்த ஒரு கூட்டத்தில் நாய் என்று சொல்லிவிட்டார் என்று நாவலர் மானநஷ்டவழக்குதான் தொடர்ந்தார். மஞ்சக்குப்பம் நீதிமன்றத்தில் நிகழ்ந்த அந்தவழக்கில் வள்ளலார் நீதிமன்றம் வந்து தான் அப்படிச் சொல்லவில்லை என மறுத்தார். சொன்னார் என்று நிரூபிக்கவேண்டிய பொறுப்பு நாவலருக்கு வந்தது. நாவலரிடம் ஆதாரங்கள் இல்லை. ஆகவே அவர் வழக்கைத் திரும்பப்பெற்றுக்கொண்டார்.

இந்தவழக்கை முழுமையான நீதிமன்ற ஆவணங்களுடன் ப.சரவணன் முன்வைத்து ‘அருட்பா மருட்பா வழக்கு’ என்றபேரில் ஒரு நூலாக வெளிக்கொண்டுவந்தார். தமிழகத்தில் வள்ளலார் ஒரு பெரிய பிம்பம். வள்ளலார் பற்றிய நூல்கள் மாதம் ஐந்தாறு வெளிவந்துகொண்டிருக்கின்றன. வள்ளலார் மன்றங்கள் நூற்றுக்கணக்கில் உள்ளன. ஆனால் ப.சரவணனின் அந்த நூலை எவருமே கண்டுகொள்ளவில்லை. இப்போதும் வள்ளலார் பற்றிய நூல்களில் அந்தத் தொன்மமே திரும்பத்திரும்பச் சொல்லப்படுகிறது. சிலநாட்கள்முன்பு கூட ஒருவர் தொலைக்காட்சியில் இந்தக்கதையைச் சொல்லிக்கொண்டிருந்தார்.

கட்டபொம்மன், பாரதி, ஈவேரா, அண்ணாத்துரை,எம்ஜிஆர் எவரைப்பற்றியும் ஒரு புறவயமான வரலாற்றைத் தமிழில் எழுத முடியாது. புறவயமான வரலாற்றுக்குத்தேவை சமநிலையான, விருப்புவெறுப்பற்ற பார்வை. ஈவேரா என்று பெயரைச் சொன்னாலே அது ஈவேராவுக்கு அவமதிப்பு என்று எண்ணக்கூடியவர்கள் இங்கே வாசகர்களாக இருக்கையில் எப்படி ஒரு வரலாறு சாத்தியம்? வைக்கம்போராட்டம் உட்பட ஈவேராவின் வரலாறு இதுவரை முழுக்கமுழுக்க தொன்மங்களால் மட்டுமே புனைந்து வைக்கப்பட்டிருக்கிறது. அதை உடைப்பது அவதூறாகவே நினைக்கப்படும்.

வரலாற்றுநாயகர் ஒரு சாதியாலோ கட்சியாலோ கொண்டாடப்படுபவர் என்றால் அந்த சாதியின், கட்சியின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் அந்த வரலாற்றாசிரியர் சந்திக்கவேண்டியிருக்கும். மேலும் இன்று இங்கே ஒவ்வொரு சாதியும் தன் வரலாற்றை ஆதாரங்களே இல்லாமல் புனைந்துகொண்டிருக்கிறது. அவற்றுக்கு மாற்றாகத் தகவல்சார் வரலாற்றை சொல்லவே முடியாது. அது இங்கே கிட்டத்தட்ட தற்கொலை. ஆகவே பெரும்பாலான வரலாற்றாசிரியர்கள் எழுதுவதே இல்லை. தனிப்பட்ட பேச்சுகளில் தமிழகத்தின் முக்கியமான வரலாற்றாசிரியர்கள் ‘இதான் உண்மை, ஆனா இங்க அதைச் சொல்லமுடியாது. தலைய எடுத்திருவானுக’ என்று சொல்லிப் பல விஷயங்களைச் சொல்லிக் கேட்டிருக்கிறேன்.

என் கட்டுரைகளில் நான் என்னால் முடிந்தவரை கறாரான புறவய வரலாற்றை முன்வைக்க முயல்கிறேன். என்னுடைய மதிப்பீட்டை அதனடிப்படையில் உருவாக்குகிறேன். உடனே எழுந்துவரும் குரல்கள் நான் அந்த வரலாற்றுநாயகர்களை அவமதிக்கிறேன் என்றுதான். சரளாராணி சௌதராணியைப்பற்றி சொல்லிவிட்டேன் என்பதற்காக தமிழகத்தின் காந்திய அமைப்புகள் எவையும் ‘இன்றையகாந்தி’ நூலை வாங்கவில்லை. ஈவேரா வைக்கம்போராட்டத்தை நடத்தவில்லை என்று சொன்னேன் என்பதனால் நான் அவரை அவமதிக்கிறேன் என்கிறார்கள்.

நம்முடைய நீத்தார், மூத்தார் வழிபாட்டு மனநிலையே வரலாற்றுக்கு எதிரியாக இருக்கிறது. ‘செத்துப்போனவர்களைப்பற்றி எதிர்மறையாகச் சொல்லக்கூடாது’ என்ற வரி என்னிடம் திரும்பத் திரும்பச் சொல்லப்படுகிறது. செத்துப்போனவர்களை விமர்சிப்பதும் கறாராக மதிப்பிடுவதும் ‘அநாகரீகம்’ என்று சொல்லும் படித்தவர்கள்கூட இருக்கிறார்கள். அதை விதியாக எடுத்துக்கொண்டால் இங்கே வரலாறு எழுதப்பட முடியுமா என்ன?

செத்துப்போனவர்கள் சாமியாகிவிட்டார்கள் என்ற பழங்குடி மனநிலையின் சமகால நீட்சிதான் மேலே சொன்ன மனநிலை. காந்தி சிலைக்கோ ஈவேரா சிலைக்கோ மாலையிட்டுக் கும்பிடும் பக்தனால் வரலாற்றை எதிர்கொள்ளமுடியாது. வரலாறு எப்போதுமே கறுப்புவெள்ளையாலான ஊடுபாவுகளால் நெய்யப்படுவது. புகழ்மொழிகளால், புல்லரிப்புகளால் வரலாற்றை எழுதமுடியாது. அது வரலாறே அல்ல.

நமது நீத்தார்-மூத்தார் வழிபாட்டு மனநிலை வரலாற்றுக்கு எதிரானது, அதேசமயம் தொன்ம உருவாக்கத்துக்குச் சாதகமானது. நீத்தாரையும் மூத்தாரையும் பற்றித் தொன்மங்களைக் கட்டியெழுப்ப நாம் விழைகிறோம். ஒரு பெரியவரைப் புகழ்ந்து முற்றிலும் கற்பனையாக ஒரு தொன்மத்தை உருவாக்கிச் சொல்லுங்கள், ஒருவர் கூட அதற்கு ஆதாரம் கேட்க மாட்டார்கள். பாரதி காந்தியிடம் ‘நான் உங்களை ஆசீர்வதிக்கிறேன்’ என்றார் என்றால் ஒருவர்கூட காந்தியின் அன்றாடநிகழ்ச்சிகள் முற்றிலும் பதிவாகியிருக்கின்றனவே, இந்நிகழ்ச்சி ஏன் பதிவாகவில்லை என்று கேட்கப்போவதில்லை.

தொன்ம உருவாக்கத்தை நான் நிராகரிக்கவில்லை. அது ஒருவகை வரலாறு என்றே நினைக்கிறேன். தகவல்சார்ந்த வரலாற்றில் இல்லாத விழுமிய உள்ளடக்கம் தொன்மங்களில் உள்ளது. ஒரு தலைமுறையின் வாழ்க்கையில் இருந்து உயர்விழுமியங்களை மட்டும் அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசென்றால்போதும் என்ற நம்பிக்கையில் இருந்தே தொன்மங்கள் உருவாகின்றன. ராஜராஜன் எப்போது கடாரத்துக்குப் படைகொண்டு சென்றான் என்பது ஒரு ராஜராஜனைக் கட்டமைக்கிறது. அவன் சிற்பிக்கு வெற்றிலை மடித்துக்கொடுத்தான் என்பது இன்னொரு ராஜராஜனைக் கட்டமைக்கிறது. இரண்டாம் ராஜராஜனின் பிம்பத்தில் ஒரு விழுமியம் உள்ளடங்கியிருக்கிறது. ஆகவே தொன்மவரலாறுகள் முக்கியமானவை.

ஆனால் அவை மட்டுமே வரலாறாக எஞ்சும்போது வரலாற்றின் நம்பகத்தன்மை இல்லாமலாகிறது. பொய்களை உருவாக்கி வரலாறாக நிலைநிறுத்த முடிகிறது. இன்று நம் அரசியலியக்கங்கள் உருவாக்கும் தியாகவரலாறுகளும் போராட்ட வரலாறுகளும் பெரும்பாலும் பொய்கள். நம் சாதியமைப்புகள் உருவாக்கும் ‘ஆண்ட சரித்திரங்கள்’ முழுக்க பொய்கள். ‘தமிழகத்தில் ஆண்ட சாதிகள் மட்டுமே இருக்கின்றன, ஆளப்பட்ட சாதிகள் எல்லாமே அழிந்துவிட்டன’ என ஒரு வரலாற்றுக்கூற்று உருவாகும் நாள் நெருங்கிக்கொண்டிருக்கிறது.

ஆகவே கசப்பாக இருந்தாலும், நமக்கே எதிரானதாக இருந்தாலும், நாம் உண்மையான வரலாற்றை உருவாக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அதற்காக நம் பழங்குடி மனநிலைகளுடன் போராடியாகவேண்டியுள்ளது. வழிபாட்டுவரலாறுகள் தொன்மவரலாறுகளை உடைத்து எதிர்த்து முன்னகரவேண்டியிருக்கிறது. இங்கே இறந்தகாலம் சார்ந்தும், நீத்தார் மூத்தார் சார்ந்தும் உருவாக்கப்பட்டுள்ள போலியான மிகையுணர்ச்சிகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

அதுதான் நம் அறிவுலகில் இன்றிருக்கும் மிகப்பெரிய அறைகூவல். உண்மையான முற்போக்காளர் செய்யவேண்டிய வரலாற்றுப் பணி அதுவே. ஆனால் நம் அறிவுலகில் எந்தப் பிரச்சினையுமில்லாமல் பார்த்துக்கொண்டு பெரும்பான்மையினரின் நம்பிக்கைகளையும் சமகால அரசியல்சரிகளையும் மிகையுணர்ச்சியுடன் பேசுவதே முற்போக்கு என்று நம்பப்படுகிறது. அவர்களே புரட்சியாளர்கள் என்றும் கிளர்ச்சியாளர்கள் என்றும் முன்வைக்கப்படுகிறார்கள்.

அடுத்த தலைமுறையில் எதிர்நீச்சல் போடும் ஆற்றல் கொண்ட அறிஜீவிகள் வரலாம். உண்மைகளை எதிர்கொள்ளும் சமநிலைகொண்ட சமூகச்சூழலும் உருவாகலாம். பார்ப்போம்

ஜெ

மறுபிரசுரம்/ முதற்பிரசுரம் Dec 19, 2012

 குடவாயில் பாலசுப்ரமணியம் 

முந்தைய கட்டுரைமேரி மக்தலீன் -கடிதம்
அடுத்த கட்டுரைஇருதீவுகள் ஒன்பது நாட்கள் – 11