காந்தியின் உடை-கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்,

தங்களுடைய காந்தியின் உடை கட்டுரை மிக அருமை. விஷ்ணு புரமும், ஆனந்த விகடனில் சங்க சித்திரங்களும் தங்களை மிகவும் நேசிக்கவைத்தது. அதன் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு வலையில் சிக்கிக் கொண்டீர்கள். நான் தீவிர இலக்கிய வாசிப்பாளன் கிடையாது. ஆனால் சுஜாதாவிற்குப் பிறகு எனக்குப் பிடித்தவர் நீங்கள் மட்டும்தான். ஏனெனில் பாசாங்கில்லாத உண்மை தங்களிடம் இருப்பதுதான்.

காந்தியை மனப்பூர்வமாகப் பின்பற்றும் ஒரு வைணவன் நான். காந்தி குறித்த தங்கள் கட்டுரை பாராட்டுக்குரியது. காந்தியடிகளை வட்ட மேசை மாநாட்டின்போது கிறிஸ்தவர்கள் பேச அழைத்தார்கள். அவர்கள் கூட்டத்திலேயே கிறிஸ்தவம் குறித்த தன் கருத்துகளையும், தான் ஒரு ஸனாதனி என்பதனையும் திட்டவட்டமாக காந்தியார் உரைத்துள்ளார்.

அன்புடன்,
அபய்சரண்

அன்புள்ள அபய்,

நன்றி.

காந்தி எப்படி ஒரு சனாதன இந்து என்பதை நான் விரிவாக எழுதியிருக்கிறேன். தங்கள் பார்வைக்கு

ஜெ

காந்தியின் சனாதனம்

அன்புள்ள ஜெ

காந்தியின் உடை என்ற கட்டுரை சமீபத்தில் என்னை உணர்ச்சிக்கொந்தளிப்புக்கு ஆளாக்கியது. அதன் கடைசி வரிகளை வாசிக்கவே முடியவில்லை. நான் செண்டிமெண்ட் விஷயங்களில் உணர்ச்சிவசப்படமாட்டேன். ஆனால் இந்தக்கட்டுரையில் உள்ள உச்சகட்டம் என்னை அழ வைத்தது. காந்தி மன்னருக்கு முன்னால் ஏழை இந்தியனாகச் சென்று நின்ற இடம். காந்தியைப்பார்க்கும்போது ஒரு இந்தியனாகக் கூட தெரியவில்லை. ஒரு கறுப்பு மனிதனாகத் தெரிகிறார். என்னுடைய தாத்தா மன்னரைக் காணச்சென்றதைப்போல இருக்கிறது. மகாராஜாக்களை வரிசையாக வேலைக்கார வேஷம் போட்டு நிற்கவைத்த மன்னர் காந்திக்காக இறங்கிவந்ததுதான் ஜனநாயகத்தின் வெற்றி. நன்றி ஜெ

ராமகிருஷ்ணன் எம்

அன்புள்ள ராமகிருஷ்ணன்

நன்றி.

வரலாறாக மாறிய எல்லாத் தருணங்களும் குறியீடுகளாகவும் ஆகிவிடுகின்றன

ஜெ

அன்புள்ள ஜெ,

நலமா.

காந்தியைப் பற்றிய உங்களுடைய எல்லாக் கட்டுரைகளையும் படித்திருந்தாலும், காந்தியின் உடை பற்றியது அதன் உச்சம் என்றே சொல்வேன். நீங்கள் அதை எழுதிய நவம்பர் 2 இல் இருந்து கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் ஒருமுறையாவது அதை வாசித்து விடுகிறேன். ஒவ்வொரு முறை அதை வாசித்து முடிக்கும்போதும் என் மனம் ஒரு உணர்ச்சி மிகுந்த நிலைக்குத் தள்ளப்படுவதை உணர்கிறேன்.

காந்தியின் ஒவ்வொரு செய்கைக்கும் ஒரு பொதுநல நோக்கமிருந்திருக்கிறது. இதுபோல ஒரு மனிதன் எப்படி சிந்தித்து செயல்பட்டிருக்க முடியும் என்பதை நினைத்துப்பார்க்கவே முடியவில்லை. அந்தக் கட்டுரையில் உள்ள “மாமன்னரை சந்திக்கச் செல்லும் காந்தி” என்ற தலைப்பிட்ட புகைப்படத்தை சென்ற நூற்றாண்டின் ஆகச்சிறந்த புகைப்படம் என்றே சொல்வேன். எத்தனையோ நெருக்கடியான சூழ்நிலையிலும் அவருடைய தீர்க்கமமான முடிவுகளும், நெறியான வாழ்க்கைமுறையும் நாம் அனைவரும் பின்பற்றக்கூடிய ஒன்று. அவரைப்பற்றி இன்னும் நிறைய எழுதுங்கள்.

அஜிதன், சைதன்யா மற்றும் அருண்மொழி அக்காவை நலம் விசாரித்தாகச் சொல்லுங்கள்.

என்றும் அன்புடன்,
குமரேசன்.

அன்புள்ள குமரேசன்

நன்றி

ஆம், அந்தப்புகைப்படத்தில் காந்தியின் உறுதி தெரிகிறது

பத்மநாபபுரம் அரண்மனையில் பெரும் உத்தரங்களை ஏற்றி சுவர் மீது வைத்திருக்கும் மரக்கட்டையை நினைத்துக்கொள்கிறேன். அது தாங்கும் எடை எவ்வளவு பிரம்மாண்டமானது. அது பெரும்பாலும் காஞ்சிர[எட்டி] மரக்கட்டை. சிதலரிககாது, மட்காது, எக்காலமும் அழியாது

ஜெ

முந்தைய கட்டுரைமீல்ஸ் ரெடி
அடுத்த கட்டுரைசாய்வுநாற்காலி