இடஒதுக்கீட்டின் சிற்பிகள்- கடிதம்

ஆசிரியருக்கு,

தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டவர்க்கு இட ஒதுக்கீடு செய்தது தவிர திராவிட கட்சிகள் வேறெதுவும் செய்யவில்லை என்று நீங்கள் சொன்னது முழுமையானது அல்ல.

இந்த இடத்தில் சில கேள்விகள் வருகின்றன.

இந்தியா முழுதும் இட ஒதுக்கீட்டு எதிர்ப்பலை இருந்த பொழுது தமிழகத்தில் இல்லை. அதற்கு என்ன காரணமாக இருக்கக் கூடும்.

தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டவருக்கு இட ஒதுக்கீடு தேவை என ஏன் குரல் எழுப்பப்பட்டது? அதன் வரலாற்று நியாயம் என்ன? அந்தக் கால கட்டத்தில் அரசு அதிகாரத்திலும், கல்விக் கூடங்களிலும் எத்தனை சதம் பிற்படுத்தப்பட்டவர் பங்கு பெற்றார்கள்?

உங்களுக்குத் தெரியாத ஒன்றினை நான் சொல்ல முடியாது.

இன்று எல்லா அரசியல் கட்சிகளும் கிட்டத்தட்ட ஜமீன்தார் வடிவம் கொள்ளத்தான் முயல்கின்றன. திராவிடக் கட்சிகள் மட்டும் அல்ல. குடிமை ,மக்கள் ஆட்சி , அரசியலமைப்பு கூட்டு சமூக அமைப்பு மன நிலை போன்றவை வேகமாக நகராமல் முதலாளித்துவ பொருள் உலகில் வெகு வேகமாக நகருவதன் விளைவே இன்றைய நம் நிலமை. அரசியல் கட்சிகள் தனியார் சொத்தாகி விட்டன, அவை சாமான்ய மக்களிடம் இருந்து மெல்ல அந்நியப்பட்டு ஒரு நிறுவன வடிவத்தில் நிற்கின்றன.

நீங்கள் திராவிட இயக்கத்தினை நிராகரிப்பது ஏன் எனக் கட்டுரை எழுதிய பொழுது அதில் பதிலிடு செய்து இருந்த பீகாரில் பணி புரிந்த ஒரு தமிழக அதிகாரி சில கருத்துகளை சொல்லி இருந்தார், அந்தக் கருத்துகள் கவனிக்கத்தக்கது.

நில உடமைப் பண்ணையார்கள் , உயர் அரசதிகாரம் படைத்தவர்கள் இடம் இருந்த அரசதிகாரம். பின்னர் திராவிடக்கட்சிகள் காலத்தில் எளிதில் சாதாரண மனிதர் கையில் மாறியது.(தமிழகத்தில் பிள்ளைகள் படிக்கக் காரணமான பெருந்தலைவரே தன்னை ஒரு அரச குருவாக மாற்ற முயன்ற காலம்). ஆண்டி நாடரின் புத்தகம் இந்தக் கை மாறலைப் பற்றியதே. இது ஒரு பெரும் நிகழ்வு. இதன் துவக்கப் புள்ளிகள் ஒரளவு லட்சிய வாதிகளும் , ஜனநாயகவாதிகளும்தான், பின்னாளில் இது மாறிப் போனது.

இது ஒற்றைப் படையான அரசியல் நிகழ்வு அல்ல. ஒரு கால கட்டத்தின் மாற்றம்.

நீங்கள் பல இடங்களில் நாரயண குரு வழி சிறந்தது என்று சொல்வீர்கள். தமிழகத்திலும் ஒரு நாராயண குரு வந்திருக்கலாம். இதுவும் ஆன்மீக நம்பிக்கை உள்ள பூமிதான். யாரும் உருவாவதைத் தடுக்க வில்லை. அப்படி ஒருவர் வரவில்லை.

பெரியாரும் , அம்பேத்கரும் வைதீகம் பற்றி எரியும் காலத்தில் சொன்ன வழி முறை ஒன்றே. அதில் இருந்து வெளி நில்லுங்கள் என்பதே அந்த வழி.

பெரியார் வெளியேறி சுயத்தில் நில்லுங்கள் என்றார். அது செயல் முறையில் மிகக் கடினமான ஒரு காரியம். அது போன்ற வெட்ட வெளி இருப்பு சுக துக்கங்கள் நிரம்பிய ஒரு சாமான்ய குடும்ப உறுப்பினருக்கு எளிதல்ல. பெரியார் சொல்லிய வழி ஒரு லட்சியவாத வழி என்றே எண்ணுகின்றேன்.

அம்பேத்கர் வெளியேறி பௌத்தம் நில்லுங்கள் என்றார். பௌத்தமும் ஒரு அவைதீகமே.

பக்திக் கால கட்டத்தில் இந்து மரபினைப் பிடுங்கித் தின்ன ஆரம்பித்தால் வைதீகம் மட்டுமே இந்து மரபாகாது. வைதீகம் இந்து மரபில் வந்த ஒரு பயிர், பௌத்தம் போல,ஆசிவகம் போல. அது தன்னை முழு நிலமாக மாற்றி நிற்பதே பல நேரம் காட்சிப் பிழை தருகின்றது.

இந்திய மரபில் வந்த குறள் போன்ற நூல்கள் வழி அறிவு நகர்ந்து பக்தி யுகம் வராமல் இருந்திருந்தால் மேம்பட்ட குடிமைச் சமுதாயம் உள்ளிருந்தே வந்திருக்க வாய்ப்பு உண்டு.

நீங்கள் சொன்ன சாதிய அடுக்கின் கீழ் இருந்து மேல் வந்த குப்தனும் ,மராட்டிய மன்னனும் , விஜய நகர அரசும் வைதீக அங்கீகாரத்தில் தான் துவங்குகின்றன.
அந்த அங்கீகாரம் இல்லை என்றால் அவை இல்லை. எனவே அடுக்கின் மேல் கீழ் விசையை அடுக்கின் வெளியே நிற்கும் ஒரு சக்தி கட்டுப்படுத்துவதை இதில் நாம் காணலாம்.

போகன் எழுதிய ஒரு சிறு கட்டுரையை அல்லது புனைவை உங்கள் பார்வைக்கு இணைத்துள்ளேன். மிகச் சிறப்பாக இருந்தது.

http://ezhuththuppizhai.blogspot.com/2012/10/blog-post.html

நன்றி
நிர்மல்

அன்புள்ள நிர்மல்,

நான் சொல்ல நினைப்பதைச் சொல்லிவிட்டேன் என நினைக்கிறேன். இட ஒதுக்கீடு என்பது இந்தியச் சமூக வெளியில் பிரிட்டிஷாரின் சலுகையை எதிர்பார்த்து நிற்கும் ஆதரவுச்சமூகங்களை உருவாக்கும் பொருட்டு பிரிட்டிஷாரால் அளிக்கப்பட்டது. தேவையானவர்களுக்கு அல்ல, தங்களுக்குச் சாதகமானவர்களுக்கே இட ஒதுக்கீடு என்பது அவர்களின் கொள்கை.

அதை இந்திய சமூகத்தில் சமூகப்-பொருளியல் ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கான ஒரு சமூகப்பாதுகாப்பாக ஆக்கப் போராடியவர் அம்பேத்கர். இந்தியச் சமூகம் தன் மக்களில் ஒரு பகுதியினருக்கு தானே அளிக்கும் சலுகை என உருவாக்கியவர், அதை ஒடுக்கும்சாதியினர் உள்ளிட்ட இந்திய சமூகமனம் ஏற்கும்படி செய்தவர் காந்தி. ஆகவே அவர்கள் முன்னோடிகள்.

அப்படி ஒரு கொள்கையும் அதற்கான மனநிலையும் உருவான பின் ஒவ்வொரு சாதிக்குழுவும் சலுகைகளுக்காக அரசியல்ரீதியாகப் போராடியது, பலர் அதை அடைந்தனர். அப்படிப் போராடிய அனைவரும் இட ஒதுக்கீடு என்ற முறையின் பிதாமகர்கள் அல்ல. இட ஒதுக்கீடுக்காக அவர்களுக்கு நன்றி சொல்வதென்பது குறுகிய சாதி நோக்கு மட்டுமே

வெள்ளைய ஆட்சியில் இஸ்லாமியருக்கு இட ஒதுக்கீடு இருந்தது. டாக்டர் அம்பேத்கர் அதை ரத்துசெய்தார். வெள்ளை ஆட்சியில் இட ஒதுக்கீடு வெள்ளையர்களுக்கான ஆதரவுச்சமூகங்களுக்கு அளிக்கப்பட்டது, அந்தச் சலுகை இந்திய அரசால் அளிக்கப்படவேண்டியதில்லை என்பதுதான் அவர் சொன்ன காரணம். அரசியல்சட்ட நிர்ணய சபையில் போக்கர் பகதூருக்கு அம்பேத்கார் அளித்த பதில்களில் இதைக் காணலாம்

நாளை இங்கே அரசியல் நிர்ப்பந்தம் மூலம் இஸ்லாமியருக்கு இட ஒதுக்கீடு வரலாம். உடனே இஸ்லாமியர் அம்பேத்கரை விட்டுவிட்டு போக்கர் பகதூரைப்போல இஸ்லாமியருக்கான இட ஒதுக்கீட்டுக்காகப் பேசியவர்களை மட்டும் ‘இட ஒதுக்கீட்டின் சிற்பிகள்’ என்று சொல்லி வணங்கி , அவர்களை முன்னிறுத்தித் தங்கள் வரலாற்றை எழுத ஆரம்பித்தால் அது பெரும் வரலாற்றுப்பிழை. நான் சுட்ட விரும்புவது அதை மட்டுமே

ஜெ

சாதியும் ஜனநாயகமும்

முந்தைய கட்டுரைமனிதசக்தி
அடுத்த கட்டுரைஎம்.வி.வி நினைவு