பொதுவெளியில் பெண்

அன்புக்குரிய ஜெயமோகன்

நலம். நலமாக இருக்க வேண்டுகிறேன்.

சின்மயி தொடர்பான விவாதங்களில், பெண்களை வசை பாடுவது பற்றிய உங்கள் கருத்துகளுக்கு நன்றி, நன்றி, நன்றி. இப்படிப்பட்ட பல சந்தர்ப்பங்களை எங்கள் சமுதாயத்திலும், அதற்கு வெளியிலும் அடிக்கடி சந்தித்துக் கொண்டே இருக்கிறேன். என் மகள்கள் மூலமாகவும் இந்த விவாதம் பல தளங்களில் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. பல சமயங்களில் பெண்கள் கூட இதை நியாயப்படுத்துகிறார்கள். உங்கள் பதிவுகள் மிக எளிதாக இந்த விஷயத்தில் உள்ள சிக்கலை விளக்குகிறது.

“நம் அடிப்படை மனநிலையில் இது இருக்கிறது. நமக்குக் கற்பிக்கப்படுகிறது. சொந்த மனைவியுடன் சண்டையிடும்போதுகூட அவளை வெல்ல சட்டென்று ஆபாசத்தை ஆயுதமாக்குவதைப் பல இடங்களில் கண்டிருக்கிறேன். அது அவளை சரித்துவிடும் என நமக்கு நன்றாகவே தெரியும். இந்த அடிப்படைக் கோளாறை மட்டுமே நான் இங்கே சுட்ட விரும்புகிறேன்.”

இது அடிப்படைக் கோளாறு என்பதைச் சொல்லி இருப்பதற்கு நன்றி. அதன் பின் அந்த விவாதம் அதற்குரிய தளத்தை விட்டு விலகி விடுகிறது.

அடிக்கடி எழுதாவிட்டாலும், ஒரு நாள் கூட உங்கள் பதிவுகளை வாசிக்காமல் விட்டதில்லை. நமீபியப் பிரயாண அனுபவங்கள் அருமை.

ரவிச்சந்திரிகா

அன்புள்ள ரவிச்சந்திரிகா,

நான் இங்கே நான் வாழும் நாகர்கோயில் சூழலில், நான் சந்தித்துக்கொண்டிருக்கும் விஷயங்களைக் கொண்டே அனைத்தையும் புரிந்துகொள்கிறேன். அதுவே இயல்பானதும் சாத்தியமானதுமாகும் என நினைக்கிறேன். ஒருபோதும் என் சொந்தச் சாதி மதம் அரசியல்நிலைப்பாடு சார்ந்து நிலைப்பாடு எடுக்கக்கூடாதென முயல்கிறேன். ஒரு விழுமியத்தை ஒட்டியே முடிவெடுக்கிறேன். அதைச் சொல்லவும் செய்கிறேன். அதை ஏற்கவும் மறுக்கவும் எவருக்கும் உரிமையுள்ளது

ஜெ

அன்பு ஜெ,

பொதுவெளியில் பெண்கள் படித்தேன். உங்களது ஆழ்ந்த அக்கறை குறித்து நன்றி.
ஆயினும் தாக்குதல்கள் தொடரட்டும். இப்போதுதானே துவங்கியுள்ளது எங்கள் பயணம்.
ஆணாயினும் பெண்ணாயினும் பொதுவெளி என்பது மலர்ப்பாதை அல்ல என்பதை அறிந்தேதான் இருக்கிறோம்.
எங்கள் எதிரிகள் வல்லவர்களாகவே இருக்கட்டும். எங்களைவிடவும் வலிமை நிறைந்தவர்களாகவே இருக்கட்டும்.
அது குறித்து எந்தக் கவலையும் இல்லை. இன்னும் எங்களைப் பாதுகாக்கிறோம் என்ற போர்வையில், பலவீனர்களாகவே வைத்திருக்காதீர்கள்.
எங்களுக்கு மகன்களும், சகோதரர்களும், நட்புகளும், கணவர்களும், தந்தைகளும் உண்டு. பாதுகாப்பு என்பது ஒரு கையிலிருந்து இன்னொரு கை மாறுதல் என்பதாகவே இதுவரை இருந்து வருகிறது.

Give us a good, strong fight. We know what has to be done. It is not the PAST anymore.
நல்ல சண்டைக்குத் தயாராகவே இருக்கிறோம். நாங்கள் நாங்களாக.

சாந்தினி ராமசாமி

அன்புள்ள சாந்தினி,

நல்ல விஷயம். அப்படி ஒரு தலைமுறை உருவாகட்டும்

ஆனால் நான் பணியாற்றிய துறை கொஞ்சம் ‘பிற்பட்டது’. அரசுத்துறை. துடிப்போடு,நம்பிக்கையோடு, நேர்மையாகச் செயல்படும் விருப்போடு பெண்கள் வருவார்கள். ஏற்கனவே இருக்கும் அமைப்புடன் முழுமையாக ஒத்துப்போய் அடிபணியாவிட்டால் பாலியல் அவதூறு கிளப்பப்படும். அதிகம்போனால் இரண்டு மாதங்களுக்குள்.

விளைவாக இரு வகை மாற்றங்கள் அவர்களில் ஏற்படும். பெரும்பாலானவர்கள் ஒதுங்கிச் சுருங்கிவிடுவார்கள். எது எக்கேடோ போகட்டும் எனத் தன் குடும்பவாழ்க்கையில் மட்டுமே ஆர்வமுடையவர்களாக ஆகிவிடுவார்கள். எஞ்சியவர்கள் மிக எதிர்மறைப்பண்பு கொண்டவர்களாக ஆகிறார்கள். கோபம், கடுமை, தேவையற்ற குரூரம் கொண்டவர்களாக. சமநிலையைத் தக்கவைப்பவர்கள் நூற்றில் ஒருவரே

நான் இந்தச் சூழலைக் கருத்தில்கொண்டுதான் பேசுகிறேன். பெண்களுக்கு ஆதரவாக அல்ல. நம் சூழலில் ஒரு மனநிலை உருவாகவேண்டும் என்பதற்காக. அது எழுத்தாளனின் வேலை அல்லவா?

ஜெ

அன்பின் ஜெ எம்.,

பொதுவெளிக்குப் பெண்கள் வர முற்படும் தருணங்களிலெல்லாம் அவர்களை வீழ்த்துவதற்கான ஒரே ஆயுதம் அவர்கள் மீதான பாலியல் தூஷணைகளை…வசைகளை முன் வைப்பதே என்று நீங்கள் இப்போது செய்திருப்பது போன்ற பட்டவர்த்தனமான பிரகடனத்தை இதுவரை எந்த ஆணும் செய்யத் துணிந்ததில்லை. ஏன்..மனதளவில் கூட ஒத்துக் கொண்டதில்லை. திரும்பத் திரும்பப் பெண்களாகிய நாங்களேதான் அதைச் சொல்லவேண்டியதாக இருந்தது. அப்போதெல்லாம் மற்றவர்களுக்கு அது வெறும் வெற்றுப்புலம்பலாகத்தான் பட்டதே தவிர அதன் உண்மை உறைக்கவில்லை. இப்போது உங்களைப்போன்ற வலுவான ஆளுமை வழி அது வெளிப்பட்டிருப்பதால் அதன் தாக்கம் பரவலான பாதிப்பையும்,மாற்றத்தையும் ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது. அதற்காக என் நன்றி…

60 வயதுக்குப்பின்பு இணையம் போன்ற பொதுவெளிக்கு வரும் என்னைப்போன்ற பெண்களுமே கூட சில பாதுகாப்புக் கவசங்களை அணிந்து கொண்டுதான் [பேரன் பேத்தியோடு கூடிய புகைப்படம் போல] உள்ளே பிரவேசிக்க வேண்டியிருக்கிறது என்பதே யதார்த்தம். இணைய வெளிக்குள் உலவ விரும்பும் என் இளம் வயதுத் தோழிகளுக்கும்,மாணவிகளுக்கும் எத்தனையோ ஆலோசனைகளை வழிகாட்டுதல்களை நான் தொடர்ந்து அளித்துக்கொண்டேதான் இருக்கிறேன். குழும விவாதங்களிலும், தனிப்பட்ட வலைப்பூ வலைத்தளங்களிலும் பெயர் மறைத்து,முகவரி மறைத்து -எழுத்தார்வம் ஒன்றினால் மட்டுமே உந்தப்பட்டவர்களாய்- பல பெண்கள் [குறிப்பாகப் பொது வெளிக்கு வர அதிகம் முற்படத் தயங்கும் முஸ்லிம் பெண்கள் உட்பட] இயங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும்,அப்படி இயங்குவதே அவர்களுக்குப் பாதுகாப்பாக உள்ளது என்பதையும் வேதனையோடு அறிந்திருக்கிறேன்.
//தங்கள் வீட்டுப்பெண்கள் இந்த தளத்திற்கு வராமல் பாதுகாத்தபின்னரே இதைப்பேசுகிறார்கள்.//என்று நீங்கள் சொல்லும் இந்த இரட்டை மனப்போக்கு இன்றைய சமூகத்தின் பலதரப்பட்ட நடைமுறைகளிலும் ஓர் அன்றாட இயல்பாகவே ஆகி விட்டிருப்பதும் வருத்தம் தருவதுதான்.

என் 35 ஆண்டு கால ஆசிரியப் பயணத்தில் பிற காரணங்களுக்காக இளம் மாணவிகளும்,பெண் அலுவலர்களும்,ஆசிரியர்களும் தற்கொலைசெய்துகொள்ளும்போதெல்லாம் மனிதம் துறந்த- பாலியல் சார்ந்த அவதூறுகளே அவர்கள் மீது சுமத்தப்பட்டது கண்டு கொதித்திருக்கிறேன். குடும்பத்திலும், அலுவல் புரியும் பணிக்களங்களிலும் தனித்தன்மையோடு எழுந்து நிமிர்ந்து நிற்கும் ஒரு பெண்ணைக் குப்புறச்சரித்து அவளது ஆளுமையையே அடியோடு குலைத்துப் போட்டு அவளைத் தலையெடுக்க விடாமல் செய்து விடும் அதே வகையான போக்கின் இன்றைய விஞ்ஞான நீட்சியே இணையத்தில் நடக்கும் இத்தகைய தாக்குதல்கள்.இவற்றையெல்லாம் தாண்டித்தான் நாங்கள் சாதம் படைப்பதும் சாத்திரம் செய்வதும் செய்கிறோம்…நீங்கள் சொன்னபடி பட்டங்கள் ஆளவும் சட்டங்கள் செய்யவும் முயல்கிறோம்…
அதற்கும் தடை ஏற்பட்டு விடாமல் இருக்க உங்கள் கட்டுரை உதவும்.

ஒரு முறை ஒரு எழுத்தாளருக்கு ஜெயகாந்தன் ஒரு அறிவுரை கூறியதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்.
சக பெண்களைப் பற்றி எழுத முற்படும்போதெல்லாம் மகளாய் சகோதரியாய் மட்டுமே அவர்களை பாவிக்க வேண்டும் என்பதே அது;
அந்த எண்ணம் வந்தால் இத்தகைய ஆபாச வக்கிரங்கள் தலையெடுக்காது.
//நாளை நமது மகளும் பட்டங்கள் ஆளவும் சட்டங்கள் செய்யவும்வேண்டும். அதை மட்டும் நினைத்துக்கொள்ளுங்கள்//

என்ற உங்கள் வரிகள் எனக்கு அதை நினைவூட்டுகின்றன.

பெண்கள் சார்பில் என்று மட்டும் அல்லாமல்….மனிதத்தின் மதிப்பைப் போற்றும் அனைவர் சார்பாகவும் உங்களுக்கும் உங்கள் எழுத்துக்கும் மீண்டும் என் வந்தனங்கள்…

அன்புடன்,
எம்.ஏ.சுசீலா
புதுதில்லி

அன்புள்ள ஜெ.,

மிகவும் வருந்தத் தக்க மனநிலையே இதில் பிரதிபலிக்கிறது. ‘பொதுவிவகாரத்தில் கருத்துச் சொன்னால் எதிர்வினை வரத்தான் செய்யும்… முழுமையான சமூக, வரலாற்றுப் புரிதல் இல்லாமல் கருத்துச் சொன்னால் இப்படித்தான் நடக்கும்’ என்றெல்லாம் மனுஷ்யபுத்திரன் உட்படப் பலர் குரல் கொடுத்து இருக்கிறார்கள்.

இட ஒதுக்கீட்டுக்கும், மீனவர்களுக்கும் ஆதரவாகப் பேசுவோரில் எத்தனை பேருக்கு வரலாற்றுப் புரிதல் உண்டு. பெரியார் தலித் விடுதலைக்காகப் பாடுபட்ட முதன்மைத் தலைவர் என்று நம்பும் புத்திசாலிகள் அல்லவா இவர்கள்.

ஒருவர் சொல்லும் கருத்துடன் உடன்பாடு இல்லையேல், ஆபாசமாகப் பேசுவது சரிதான் என்று சொல்கிறாரா மனுஷ்யபுத்திரனும் மற்றவர்களும்.

இதே நியாயங்களைக் கற்பழிப்புக்குக் கூடப் பயன்படுத்தலாம் – திமிராகப் பேசினாள்; அரைகுறையாக உடையணிந்தாள் என்று நியாயம் கற்பிக்கலாம்.

கீழ்த்தரமான மனிதர்கள்; கீழ்த்தரமான மனநிலை…

நன்றி
ரத்தன்

அன்புள்ள ரத்தன்,

இது தனிமனிதக் கீழ்மை அல்ல. நம் சமூக மனம் நமக்களிப்பது

நான் இளைஞனாக இருந்தபோது ஒரு பெண் அதிகாரி என்னைக் கண்டித்தார். கடும் கோபம் கொண்டு ஏழெட்டுநாள் கொந்தளித்தேன். அவரை எப்படி அவமதிக்கலாமென்று சிந்தித்தேன்.

அன்று ஒரு மூத்த தோழர்[ நந்தகுமார் ] என்னிடம் பேசினார். சென்ற வராம் ஒரு ஆண் அதிகாரி கண்டித்தாரே அன்று நீ இப்படிக் குமுறவில்லையே, ஏன் என்று யோசி என்றார். அப்போதுதான் அது எனக்கு விடிந்தது. நான் அந்த அதிகாரியைப் பெண்ணாக மட்டுமே பார்க்கிறேன் என. பெண் ஆணுக்கு அடங்கியிருக்கவேண்டும் என்ற என் சமூகப்பயிற்சி எனக்குள் இருக்கிறது என. அந்தப்பெண் திமிராக இருக்கிறாள் என எனக்குத்தோன்றுவதே என் ஆணாதிக்க அகப்பயிற்சியினால்தான் என

நான் அதை விட்டு விலக முப்பதாண்டுக்காலமாக ஒவ்வொருநாளும் போராடிக்கொண்டிருக்கிறேன். என் மகன் இன்னும் எளிதாக அதிலிருந்து வெளிவந்திருக்கிறான் என்றால் அதற்கு நான் எனக்குள் செய்துகொண்ட போராட்டமே காரணம்

ஜெ

முந்தைய கட்டுரைபண்ணையார்
அடுத்த கட்டுரைபனிமனிதன் – சுனில்கிருஷ்ணன்