சின்மயி விவாதம்

அன்புள்ள ஜெயமோகன்,

நலம்தானே? இந்த சின்மயி விவகாரத்தில் நான் அநாவசியமாக வம்புக்கு இழுக்கப்பட்டிருக்கிறேன். நான் அவர்களைப் பின் தொடர்வதில்லை. சென்ற வருடமே அவர்கள் என்னிடம் வம்புச் சண்டைக்கு வந்தபோதும் நான் ஒதுங்கியே போயிருக்கிறேன்.”அணையாவிளக்’கில் அந்த 6 பேர் என்று படித்தபோது நான் துடித்துப்போனேன்.

என்னுடைய பத்திரிகைக் குறிப்பைப் படித்தீர்களோ?

http://dinamani.com/latest_news/article1311877.ece

பெண்களுக்கெதிரான இந்த ஆபாச, அருவருக்கத்தக்க குற்றச்சாட்டில் நான் வம்புக்கு இழுக்கப்பட்டிருப்பது துர்பாக்கியமே. என் கண்ணியம், கௌரவம் பற்றி உங்களைப்போன்ற நண்பர்கள் அறிவார்கள்.

அன்புடன்,

எல்லே ராம்

அன்புள்ள ராம்,

நான் டிவிட்டரிலோ பிற இணையக்குழுமத்திலோ இல்லை. இதைப்போன்ற விஷயத்தை ஆழ அகல விசாரித்தறிந்து பஞ்சாயத்து பேசுமளவுக்கு நேரமும் இல்லை. செய்தித்தாளில் வந்த அந்த இணையமுகவரி உங்களுடையது என அறிந்தது நீங்கள் எழுதியபின்னர்தான். நான் செய்தித்தாள் குறிப்பை மட்டுமே சுட்டிக்காட்டியிருந்தேன்.தனிப்பட்டமுறையில் உங்களை அல்ல. உங்களை சுட்டிச் சொல்வதாகத் தோன்றியிருந்தால் மன்னிக்கவும்.

ஜெ

அன்புள்ள ஜெயமோகன்,
நீங்கள் சொல்வது போல ஆறு பேரும் கைது செய்யப்படவில்லை. ஆறில் இருவர் மட்டுமே இதுவரை கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். நீங்கள் ட்விட்டரிலோ முகநூலிலோ பங்கெடுப்பதில்லை. இப்பிரச்சனை பற்றிய தகவல்களை மற்றவர் சொல்லி உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும் அல்லது “கட்டுப்படுத்தப்படும்” ஊடகங்களின் மூலமாக நீங்கள் அறிந்திருக்க வேண்டும். அந்தப் பின்னணிப் பாடகியைப் பற்றி அவர்கள் அவதூறாகப் பேசியதை நான் மறுக்கவில்லை. அப்பாடகியின் முதிர்ச்சியற்ற வன்முறையைத் தூண்டும் கருத்துகளுக்கு எதிர்வினையாகவே அவை அமைந்தன.ஒரு கட்டத்தில் இரு தரப்பிலும் வார்த்தைகள் தடித்தன என்பதே உண்மை. அப்பாடகி பெண் என்பதாலும் பிரபலமானவர் என்பதாலும் உடனடி கைது நடவடிக்கைகள் அரங்கேறி இருக்கின்றன. தலித்களை ஒட்டுண்ணிகள் என சித்தரிக்கும் பதிவுகளை அப்பாடகி எழுதியது வசை இல்லையா? அவர் மீனவர்களை சிறுமை செய்து கருத்து வெளியிட்டது இப்போது மறைக்கப்படுகிறது. “நான் அப்படி சொல்லவே இல்லை.நானும் மறவர் சீமை தமிழச்சிதான்” என்கிறார் அப்பிரபலம். உங்களுக்கு மேலதிக தகவல்கள் தரும் தொடர்புகள் இருக்கும். நீங்கள் விசாரிக்கலாம். இதுவரை எத்தனையோ பெண்கள் வன்கொடுமைப் புகார் செய்திருக்கும் போது அவை மீது ஆரம்பகட்ட நடவடிக்கைகள் கூட எடுக்கப்படாத நிலையில் இப்பிரச்சனையில் மட்டும் தீவிரம் காட்டும் செயலின் பின் ஒளிந்திருக்கும் அரசியல் செல்வாக்கு என்ன? பண பலமா? என்னாச்சு ஜெ?

அன்புடன்
கோகுல் பிரசாத்

சில சுட்டிகள்
https://www.facebook.com/ISupportRajanSupportFreedomOfExpression?ref=ts&fref=ts
http://savukku.net/home1/1680-2012-10-23-05-56-48.html

அன்புள்ள கோகுல்,

இதேபோன்ற ஒரு தருணத்தில் நான் என்ன நடக்கிறது என்பதை சமநிலை உடையவர்கள் என நான் நம்பும் சிலரிடம் கேட்டுத் தெரிந்துகொள்வதே வழக்கம். அவ்விதமே தெரிந்துகொண்டேன்.

இணையத்திற்கு வரும் எல்லாப் பெண்களும் ஆபாசமனங்களால் ஓட ஓடத் துரத்தப்பட்டிருக்கிறார்கள். இன்று சின்மயி பிராமணப்பெண் என்றும் பிராமணவாதம் பேசினார் என்றும் ஆகவே அவரை வசைபாடலாம் தப்பில்லை என்றும் வாதிடும் இதே கும்பல் கொஞ்சநாள் முன்பு சிவகாசி விபத்து பேரைச்சொல்லி நிதிமோசடிசெய்த சிலரை அடையாளம் காட்டிய ஒரு மலேசியப்பெண்ணை ஆபாசத்தால் ஓடஒட விரட்டியது. அதற்குமுன்பு இடதுசாரி இயக்கங்களுடன் தொடர்புடைய ஒரு பெண்மணியைப்பற்றி இதேவகையான ஆபாசத்துரத்தல். குறைந்தது ஐம்பது நிகழ்ச்சிகளை நான் சுட்டிக்காட்டமுடியும். ஒவ்வொரு ஆபாசத்தாக்குதலுக்கும் இணையத்தில் ஆதரவு குவிந்தது, உங்களைப்போன்ற இளைஞர்களிடமிருந்து.

உங்கள் முக்கியமான வாதங்கள் இரண்டு. ஒன்று, ஒரு பெண் சரியாக இல்லை என்றால் ஆபாசமாகப் பேசலாம், தப்பில்லை. ஏன் ஆபாசமாக நடந்துகொண்டாய் என்று கேட்டால் எந்தப்பொறுக்கிக்கும் ‘அவ என்ன யோக்கியமா?’ என்ற ஒரு பதில் இருக்கும். அந்த விளக்கத்தையும் கேட்டு பஞ்சாயத்துசெய்துதான் முடிவெடுக்கவேண்டும் என்றால் அதைப்போல அபத்தாமான கோரிக்கை ஏதுமில்லை

இந்த மனநிலை நம் இளைஞர்கள் பெரும்பாலானவர்களிடம் உள்ள ஒன்று. கல்லூரி வகுப்பில் முதல் மதிப்பெண் வாங்கக்கூடிய பெண்ணை, போட்டிகளில் முந்திச்செல்லக்கூடிய பெண்ணை, கொஞ்சம் சுதந்திரமாகப் பேசக்கூடிய பெண்ணை, உடனடியாக அவள் நடத்தையை சுட்டிக்காட்டி இழித்துரைப்பது நம் இளைஞர்களின் வழக்கம். அதே மனநிலை இது. நாம் கொஞ்சமேனும் பரிசீலனை செய்துகொள்ளவேண்டிய ஆதார மனக்கோளாறு இது.

இந்த தளத்தில் நியாயம் பேசும் ஒவ்வொருவரும் தங்கள் வீட்டுப்பெண்கள் இந்த தளத்திற்கு வரமல் பாதுகாத்தபின்னரே இதைப்பேசுகிறார்கள்.

இணையத்தில் சின்மயி பேசியதாகச் சொல்லப்படுவதைவிட சாதிய விஷத்தைக் கக்கும் பலர் இருக்கிறார்கள். அங்கெல்லாம் இந்த ஆபாசக்கும்பல் செல்லவில்லை. அவர் பெண் என்பதும் பெண்ணைப்பற்றி ஆபாசமாகப்பேசுவது ஒரு மனச்சிக்கல் என்பதும் தவிர இதில் எதுவுமே இல்லை.

இரண்டு, சின்மயி பிரபலம் ஆகவே அவர் புகார் கொடுக்கிறார் என்பது. ஆக, உங்களுக்கே தெரியும், இங்கே எல்லாப் பெண்களும் அவமதிக்கப்படுகிறார்கள் என்பது. ‘அவளெல்லாம் சும்மாதானே இருந்தா நீ மட்டும் ஏன் துள்றே?’ என்கிறீர்கள். ஆம், இம்மாதிரி விஷயங்களில் நடுத்தரவர்க்கப் பெண்கள் அடங்கித்தான் செல்வார்கள். எப்போதாவது ஒரு பிரபலமோ பணமுள்ளவரோ மட்டுமே துணிந்து நியாயம் கேட்பார்கள். உடனே அவர்கள் பிரபலம், பணமுள்ளவர்கள், அந்தத் திமிர் அவர்களுக்கு என ‘நியாயம்’ பேச ஆரம்பித்துவிடுவீர்கள் இல்லையா?

இந்த இணையச்சூழலில் எவ்வளவோ நியாயமான சமூகப்பிரச்சினைகளுக்காக, அரசியல்போராட்டங்களுக்காக நான் உட்பட பலர் நிதிச்சேகரிப்புக்கு அறிக்கை கொடுத்திருக்கிறோம். தலித்முரசு நிதிக்காக, நம்மாழ்வார் நிதிக்காக, நாட்டார்கலைகளுக்கான நிதிக்காக …. எங்கும் எவருக்கும் சில ஆயிரங்களுக்குக் கூட இளையதலைமுறை நிதியளித்ததில்லை

இந்த ஆபாசமனிதர்களைக் காப்பாற்ற இதுவரை 15 லட்சம் வரை நிதி வசூலாகியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. நிதியளித்த ஒவ்வொரு இளைஞனும் வாய்ப்புக்கிடைக்கும்போது இதே ஆபாசத்தைப் பெண்கள் மேல் உமிழக்கூடியவன் என்பதே காரணம். இந்த ஆபாசமனிதர்களை இந்த இணையக்கும்பல் நிதியளித்து ஊக்குவிக்கிறது, மேலும் தூண்டிவிடுகிறது. இது இன்னும் தொடரும். இந்த ஆபாசத்தைக் கொட்டி நிதி வசூல் செய்யமுடியும் எனற நிலை உருவாகியிருக்கிறது.

இந்த ஆபாசமனிதர்களை ஆதரித்து மனுஷ்யபுத்திரன் தொலைக்காட்சியில் வந்து பேசினார் என அறிந்ததும் எழுந்த மனக்கொந்தளிப்பு சாதாரணமல்ல.

சமீபத்தில் நம் கலாச்சாரச்சூழல் பற்றி மிக அவநம்பிக்கையாக உணர்ந்தது இந்த ஆபாசமனிதர்களுக்குப் பெருகிவரும் ஆதரவைக்கண்டுதான். இங்கே வாழ்வதற்காக வெட்கி நாணும் தருணம் இது.

கடைசியாக, இந்தக்கடிதம் ஒன்றைக்காட்டுகிறது, நம்மிடையே தார்மீகமாக மிகப்பெரிய தூரம் உள்ளது. அது சமீபகாலத்தில் நிரம்பும் என நான் நினைக்கவில்லை. உங்களைப்பற்றிய மதிப்பை நான் மீட்டுக்கொள்ள வெகுகாலம் பிடிக்கும். அதுவரை நம்மிடையே விவாதமோ சந்திப்போ நல்லதல. இருவருக்குமே.நன்றி

*

இந்த தரப்பில் ஒரு விவாதமோ மாற்றுக்கருத்தோ இருக்கமுடியும் என நான் நம்பவில்லை. அப்பட்டமான நேரடியான ஒரு தார்மீகம் இதில் உள்ளது. அதைக் காணமுடியாத எவரிடமும் எனக்கு பேச்சு இல்லை. இதை இங்கே முடித்துக்கொள்கிறேன்

ஜெ

முந்தைய கட்டுரைகாந்தியின் சீடர்களின் செல்வம்
அடுத்த கட்டுரைஐரோப்பாவும் விடுதலைமனநிலையும்