சங்க காலம் கடிதங்கள்

அன்புள்ள ஜெமோ ,
சங்க காலமும் அது சார்ந்த உரையாடல்களும் மிகவும் சுவையானதாக உள்ளன .
சிறு வயதில் என் தந்தை நக்கீரர் எழுதிய திருமுருகாற்றுப்படை படிப்பதைக் கண்டிருக்கிறேன் . அதில் முருகனுக்கு காணிக்கையாக குறிப்பிடப்படும் பொருள்களும் பூஜா விதிகளும் தற்போதுள்ள வேத மரபுப்படி கொஞ்சம் கூட இல்லை என்பதை வியந்து சொல்லி இருக்கிறார் . அதே நக்கீரர் திருவிளையாடல் புராணத்தில் தருமி எனும் வேதியனுக்கு சிவன் உதவ எரிக்கப்பட்டு மீட்டேழுந்தார் . சங்கத் தொன்மை கண்டு சேவலையும் அதன் உதிரத்தையும் முருகனுக்கு படையல் அளித்த நக்கீரன் உண்மையில் யார்? நவீன வைதீக வழிபாட்டுமுறை தமிழகத்தில் தோன்றியது என்றிலிருந்து? சேர நாடு ராஜா ராஜா சோழன் காலத்தில் இருந்து சோழர் ஆட்சியில் இருந்திருந்தால் ஏன் தமிழ் தாக்கங்களை புதுப்பித்துக்கொள்ள வில்லை?
இது போன்ற பல கேள்விகள் உள்ளன இவற்றை பெரிதாக யாரும் இது வரையில் கருதி ஆராய்ந்ததில்லை (இணையத்தில்) . இந்த விவாதங்களுக்கு என் கேள்விகள் துணை புரிந்தால் மகிழ்ச்சியே. 
நன்றி,
ஜெய்கணேஷ்

 

அன்புள்ள ஜெய்கணேஷ்,

சங்ககாலம் முதல் இன்றுவரையிலான காலகட்டத்தில் வைதீகத்துக்கும் தமிழுக்கும் இடையே இருந்த உறவைப்பற்றி விரிவாகவே விவாதிக்கப்பட்டிருக்கிறது. நமக்கு எப்போது முதல் இலக்கியப்பதிவு கிடைக்கிரதோ அப்போதே வைதீக தொடர்பு சம்பந்தமான தகவலும் கிடைக்கிறது. ப·றுளி ஆறு ஓடியிருந்த முதல் சங்க காலத்து மன்னன் பெயர் பல்யாகசாலை முதுகுடுமி பெருவழுதி…

ஆனால் வைதீகம் ஒரு தரப்பாகவே இருந்தது. அப்படி பல்வேறு பண்பாட்டுத்தரப்புகள் தமிழ் நிலத்தில் இருந்தன. பழங்குடி வழிபாடுகள், இனக்குழுச்சடங்குகள், சிறிய மதங்கள். இன்றும் கூட அவை அப்படி பன்முக வடிவிலேயே ஓர் எல்லைவரை தமிழ்நாட்டில் உள்ளன.

வைதீகத்துக்குப் பின்னர் சமணம் வந்து தமிழ்நாட்டில் இருந்த பல்வேறு மதக்கொள்கைகளையும் வழிபாட்டுமுறைகளையும் இணைத்து பெருமதமாக ஆகியது. அதன்பின் பௌத்தம். இக்காலகட்டத்திலேயே இங்கே சிலம்பு, குறள் போன்ற நூல்கள் உருவாயின.

பத்தாம் நூற்றாண்டுக்குப் பின்னர் பிற்கால சோழர்களின் காலகட்டத்தில் சைவமும் வைணவமும் பெருமதங்கள் ஆக வளர்ந்தன. ராஜராஜ சோழன் முதல் இரண்டாம் ராஜராஜன் வரையிலான காலகட்டமே இதன் உச்சம். வைதீகம் புத்துயிர் பெற்று பெரிதாக வளர்ந்தது. அத்துடன் வெகுமக்களிடையே பெருந்தங்கள் பக்தி மூலம் சென்று சேர்ந்தன. எல்லா கோயில்களும் ஆகம முறைபப்டி இன்றுள்ள வழிபாட்டுக்குள் வந்தது சோழர் காலத்தில்தான்

சேரநாடு 300 வருடம் சோழர் ஆட்சிக்குள் இருந்தது ஆனால் அது தன் தனித்தன்மையைப் பேணிக்கொண்டது. சோழர் ஆட்சி முடிந்ததுமே அதன் இயல்பான பண்பாட்டுக்கூறுகள் மேலோங்கின
ஜெ

 

அன்புள்ள அண்ணன்
நான் ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த போது…
“படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் ஆறுமுடையான் அரசருள் ஏறு” என்ற குறளை எனது ஆசிரியர் கூறி மேற்கூறிய 6 காரியங்கள் சரியாக இருந்தால் ஒரு அரசன் சிறந்தவன் என்று கூறினார். நான்  7 முக்கிய காரியங்களை திருவள்ளுவர் முன்னிறுத்துகிறார் என்று சிறுபிள்ளைத்தனமாகக் கூறினேன். அவர் மீண்டுமாக ஆறு காரியங்கள் தானே இருக்கின்றன என்ற போது நான் ” அது தான் சார்! ஆறு என்றால் நீர் நிலை தானே! அதுவும் முக்கியமில்லையா என்று கேட்டேன். அவர் அவ்விதமாகவே என்னை விட்டுவிட்டார். எனக்கும் குறளுக்கும் தூரம் அதிகம் இப்போது. நீங்களோ குறளைப்பற்றி  என்னவெல்லாமோ சொல்லுகிறீர்கள். பயமாக இருக்கிறது!
“வாழ்க நமது கல்வி! வளர்க திருவள்ளுவர் சிலையின் புகழ்”
 இப்போதைக்கு இவ்வளவு தான்!
அன்புடன்
காட்சன்

முந்தைய கட்டுரைசாருவின் அவதூறு
அடுத்த கட்டுரைசுதாகர் ஃபெர்னான்டோ