அறிவியல் மனம்,அமெரிக்கா:கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்,

அறிவியல் அறிவின்மை குறித்து பொத்தாம் பொதுவாக கார்ல் சாகன் சொன்னதை நான் என் வசதிக்காக திரித்துவிட்டதாக நண்பர் கூறியிருந்தார். இல்லை. நான் இண்டர் நெட்டில் எளிதில் கிட்டும் கார்ல்சாகன் மேற்கோளை கூகிளிட்டு அதனை என் வசதிக்கு திரிக்கவில்லை. அவருடைய “The Demon haunted world” என்கிற நூலில் இருந்து படித்ததைச் சொன்னேன். இதோ அதில் அவர் சொல்லியிருப்பது:

 “வயது வந்த அமெரிக்கர்களில் 63 சதவிகித அமெரிக்கர்களுக்கு கடைசி டைனசார் மானுட உதயத்துக்கு முன்னரே மடிந்துவிட்டது என்பது தெரியாது. 75 சதவிகித மக்கள் அண்டிபயாடிக்குகள் பாக்டீரியாக்களைத்தான் கொல்லும் வைரஸ்களை அல்ல என்பது தெரியாது. 57 சதவிகித மக்களுக்கு எலெக்ட்ரான் அணுவை விட சிறியது என்பது தெரியாது. ஏறக்குறைய பாதி அமெரிக்க மக்களுக்கு பூமி சூரியனை சுற்றிவருவதும் அப்படி சுற்றி வர ஒரு வருடம் ஆகும் என்பதும் தெரியாது என கருத்தறியும் கணிப்புகள் தெரிவிக்கின்றன. கார்னெல் பல்கலைக்கழக இளங்கலை வகுப்பில் சூரியன் ஒரு விண்மீன் என்பதை அறியாத மாணவர்களை நான் கண்டிருக்கிறேன் ” (பக்.324) இந்தியாவில் அறிவியல் கல்வியின் நிலை மிகமோசமானது என்பதை நான் அறிவேன். ஆனால் அமெரிக்கா நிச்சயமாக அறிவியல் அறிவு பொதுமக்களிடம் நிரம்பி இருக்கும் தேசமல்ல.

 Ceteris paribus என்பார்களே அது போல மற்றெல்லா காரணிகளும் சமமாக இருக்கும் போது என்றெடுத்து அமெரிக்க பண்பாட்டின் அறிவியல் ஏற்புத்தன்மையை நாம் பார்க்க வேண்டும். பார்க்கலாம். அமெரிக்காவில் வாழும் இந்திய மதங்களை சார்ந்தவர்களே பரிணாம அறிவியலை பெருவாரியாக ஏற்றுக்கொள்கிறார்கள் என்கிறது Pew Center எனும் அறிவமைப்பு (think-tank) செய்த சர்வே.

அமெரிக்காவில் காணும் ஜனநாயகம், அடக்கமான பண்பாடு அவர்கள் காட்டும் மேலோட்டமான நல்-நடத்தை, அன்னியரிடம் புன்னகைக்கும் முறை, கண்டமெங்கும் செல்லும் சாலைவசதிகள், ஊழலின்மை ஆகியவற்றுக்கு எல்லாம் சில வரையறைகள் இருக்கத்தான் செய்கின்றன. இறுதியாக அந்த நண்பருக்கு நான் சொல்ல விரும்புவதெல்லாம் ஒன்றுதான். அய்யா தங்களைப் போலவே மேற்கத்திய பண்பாட்டின் நன்மதிப்பீடுகளில் முழுமையாக விசுவாசம் கொண்டிருந்த ஒரு 24 வயது இளைஞன் 1893 இல் ஜோகன்ஸ்பர்க் ரயில் நிலையத்தில், குளிர் கவியும் இரவொன்றில் அதனை உணர்ந்தான். அவன் பெயர் மோகன்தாஸ்.

பணிவன்புடன்   

அரவிந்தன் நீலகண்டன்

 

 

அன்புள்ள அரவிந்தன்,

 

இந்த விஷயத்தை நானே கவனித்திருக்கிறேன். நான் சந்தித்த நூற்றுக்கணக்கான ஐரோப்பிய, அமெரிக்கர்களுக்கு பொதுவாக  பொதுஅறிவு மிகவும் குறைவு என்பதைக் கவனித்திருக்கிறேன். மிக முக்கியமான மிக அடிப்படையான தகவல்கள்கூட அவர்களுக்குத் தெரியாமல் இருக்கிறது. தங்கள் துறைசார்ந்த அறிவு, அதற்கப்பால் தங்களுக்குப் பிடித்தமான பொழுதுபோக்கு ஆகியவையே அவர்களின் உலகம்.  இந்த அனுபவம் இதை வாசிக்கும் பலபேருக்கு இருக்கலாம்

 

 

அதற்கான காரணம் அவர்கள் உலகம் என்பது ஐரோப்பாவையும் அமெரிக்காவையும் மட்டுமே என்பதுதான். 2000த்தில்  இருபது நூற்றாண்டுக்கால உலகநிகழ்வுகள் என டைம்ஸ் வெளியிட்ட ஒரு அட்டவணையை நான் மலையாள மனோரமாவுக்காக மொழியாக்கம்செய்தேன். அதில் ஒரு ஆர்ச்பிஷப் லண்டனில் பதவி ஏற்பது ஒரு நிகழ்வு என்றால் சீனாவில் டாங் அரசவம்சம் பதவி ஏற்பதுதான் ஒரு நிகழ்வு. ஒட்டுமொத்த இந்தியச் சுதந்திரப்போரா¡ட்டமே இரண்டு நிகழ்வு. ஐரீஷ் போராட்டம் பதினெட்டு நிகழ்வு! இந்த மனநிலையால் வடிக்கப்பட்டவர்கள் அவர்கள். தங்கள் வட்டத்துக்குள் சொகுசாக இருப்பவர்கள்.

 

இந்தியாவில் கல்வியறிவு குறைவு. நவீனக்கல்வி அடைந்த வட்டத்துக்குள் உள்ள பொது அறிவை ஐரோப்பா முதலிய உலகநாடுகளுடன் ஒப்பிட்டால் கண்டிப்பாக அது மேலானதாகவே இருக்கும் என நான் நினைக்கிறேன். ஏனென்றால் நாம் உலகம் முழுக்கப்போய்  பிழைக்க விரும்பும் மக்கள்

ஆனால் , இன்னொன்றையும் நான் கவனப்படுத்த விரும்புகிறேன். நவீனக் கல்வி நவீனசெய்தித்தாள் ஞானம் ஆகியவற்றை மட்டுமே நாம் அறிவு என்கிறோம். பல்லாயிரம் ஆண்டுக்கால பாரம்பரிய அறிவு மிக்க நம் விவசாயிகளையும் தொழிலாளர்களையும் நாம் நம்முடைய கல்லூரி-செய்தித்தாள் கல்வி பெற்றவர்களை விட கீழானவர்களாக எண்ணுகிறோம். நம்முடைய நாட்டுமக்கள் தலைமுறைகளாக சேமித்த ஞானம் நமக்கு ஒரு பொருட்டே அல்ல. அவற்றை மேலைநாடார் கண்டுகொண்டால் மட்டுமே நமக்கும் அவை முக்கியமாக ஆகும்.

 

 

குமரிமாவட்டத்தில் நீங்கள் கவனித்திருப்பீர்கள், பச்சிலை ஞானம் இல்லாத கிராமவாசியே இருக்கமாட்டார்கள். ஒரு சராசரி விவசாயியால் முந்நூறு செடிகளை நூற்றுக்கும் மேல் பூச்சிகளை பறவைகளை அடையாளம் காண, அவற்றின் இயல்புகளை விவரிக்க முடியும். ஆனால் நான்குவருடம் வேளாண்மைக்கல்லூரியில் படித்த ஒருவர் தன்னை அவ்விவசாயிக்கு ஆலோசனை சொல்லும் அறிஞராக எண்ணிக்கொள்வார்.  இந்த மனந்லையே நம்முடைய கல்வித்துறை உருவாக்கிய மாபெரும் சாபம். எஸ்.என்.நாகராஜன், நம்மாழ்வார் போன்ற வேளாண்மை அறிஞர்கள் இதை தலைதலையாக அடித்துக்கொண்டு சொல்லிவருகிறார்கள்.

 

 

வெள்ளையன் உருவாக்கிய கல்விமுறையின் அடிமைகளாக நாம் இருப்பதன் விளைவு இது. நாம் அவர்களை வழிபடுவதில் இருந்து மீள்வது மிகவும் கடினம்.

 
ஜெ

 

 

நூற்றுக்கு நூறு உண்மையான வார்த்தைகள். கண்ணெதிரில் ஒரு பெரிய செல்வம் அழிந்து கொண்டிருக்கிறது. எப்படி காப்பாற்றுவது என்பது கூட தெரிகிறது ஆனால் முடியவில்லை. அதற்கான கல்வி முறையை அந்தந்த வட்டார அளவில் அங்குள்ள பாரம்பரிய ஞானத்தின் சேமிப்பாளர்களிடம் பேசி உருவாக்க வேண்டும்.   அறிவியல் குறித்த வரையறையும் மாற வேண்டும். தொழில்நுட்பம் குறித்த பார்வையும் மாற வேண்டும். இது குறித்து உங்களிடம் விரிவாக பேசவேண்டும்.

 

இந்த விதத்திலும் மகாத்மா காந்தி தம்முடைய சமகால தலைவர்களிடமிருந்து மாறுபட்டு இந்த மண் சார்ந்த முழுமையான பார்வை கொண்டிருந்தார். தொழில்நுட்பம் என்பது ஆற்றல் பயன்பாடு, அதன் தெளிவான சிக்கலற்ற தன்மை ஆகியவை மூலம் மக்களுக்கு அருகில் வர வேண்டுமென விரும்பினார். இன்றைக்கு சாணஎரிவாயு, உயிரி எரிவாயு எனும் மாற்று ஆற்றல் தொழில்நுட்பங்களில் வளரும் நாடுகளுக்கு ஓரளவாவது ஒரு நடைமுறை சாத்திய மாற்றுப்பாதையை இந்திய தன்னார்வ அமைப்புகளால் வழங்க முடிகிறதென்றால் அதற்கு நிச்சயமாக மகாத்மாகாந்தியிடமிருந்தே தொடக்கம் இருக்கிறது.

 

 

அவ்வாறே கழிவறை தொழில்நுட்பம். இன்றைக்கு வளரும் நாடுகளுக்கான கழிவறை தொழில்நுட்ப தலைமை கேந்திரமாகவே இந்தியாவை சொல்லலாம். இவையெல்லாமே தொழில்நுட்பம்தான் அறிவியல்தான். ஆனால் நம்மில் பலருக்கு ராக்கெட்டை மட்டுமே அறிவியலாக காணமுடிகிறது. பாரம்பரிய அறிவை பயன்படும் விதத்தில் மீண்டும் நகரிய இந்தியனின் பிரக்ஞையில் நிறுவுவதிலும் காந்திதான் வழிகாட்ட முடியும்.

 

 

அத்தகைய கிராம அறிவின் இருப்பினை அங்கீகரித்து அதனை பெற்றடைவதன் மூலமே நம் ஒட்டுமொத்த சமுதாயத்தின் வளங்குன்றா வளர்ச்சி (sustainable development) நம் அனைவருக்கும் சாத்தியப்பட முடியும். ஐரோப்பிய-அமெரிக்க வளர்ச்சிக்கு உலகம் கொடுத்த கொடூர விலையைக் கொடுக்காமல் உலகம் அனைத்தையும் ஒருங்கிணைக்கும் ஒரு வளர்ச்சியை இயற்கையை சேதப்படுத்தாத தொழில்நுட்ப வளர்ச்சியை நாம் முன்வைக்க முடியும். தேவைப்படுவதெல்லாம் இதயத்தை உணர்ந்து கொள்ளும் அறிவும் அதன் மூலம் உருவாக்கப்படும் தொழில்நுட்பமும். 

 

பணிவன்புடன்   

அரவிந்தன் நீலகண்டன்

 

 

 


அன்பு ஜெ,

பலமுறை உங்களின் இணையத்தளத்துக்கு வந்திருக்கிறேன் ஆனால் இதுதான் முதன்முறை எழுதுவது. மணி என்பவற்றின் கடிதமும் அதற்கு உங்களின் மற்றும் மற்றவர்களின் பதிலும் பார்த்து மிகுந்த சங்கடம் அடைந்தேன். நானும் அமெரிக்காவில்தான் இருக்கிறேன். மணி என்ன சொல்லவந்தார் என்பதை என்னால் சரியாக புரிந்துகொள்ள முடிந்தது. இந்தியாவிலிருந்து இங்கு வருபவர்களுக்கு ஏற்படும் கோபம்தான் அவருடையதும். நம் நாடும் இப்படி இருக்க கூடாதா அனும்போது வரும் மனக்குறையின் தாக்கம்.

 

 

ஈழப்பிரச்சனையில் வெளிநாட்டில் இருக்கக்கூடிய எல்லோருக்கும் இருந்த மனப்பதற்றம்தான் அவருடையதும். வெளிநாட்டில் இருப்பவர்கள் இந்தியாவை குறை சொல்கிறார்கள் என்று சொல்லும் அதே நேரத்தில் வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் எதை சொன்னாலும் அதற்கு கூட்டமாக சேர்ந்து எதிர்வினைகளை  உண்டாக்கி அவனை வென்றுவிட்ட மகிழ்சியில் உழல்வதை நிறைய இணையத்தில் கண்டாகிவிட்டது. அவரை வெல்லவேண்டிய அவசரத்தில் அவர் சொல்ல வந்த கருத்துக்களை தவறவிட்ட ஜெயமோகன் உட்பட அனைவருக்கும் என் கண்டனம்.

 

சோம்நாத்

 

 

அன்புள்ள சோம்நாத்,
உங்கள் கருத்து புரிகிறது.  என் ஆஸ்திரேலிஒய கட்டுரை உட்பட அனைத்திலுமே நாம் எல்லாருமே வளர்ந்த நாடுகளைப் பார்க்கையில் நம்முடைய நிலையை எண்ணி வருந்தவே செய்கிறோம். ஆனால்  மணிவண்ணன் அபப்டிஎ ழுதவில்லை. அவர் தன்னை இந்தியன் என எண்ணக்கூடாது என்றே சொல்கிறார்.
ஜெ

முந்தைய கட்டுரைபுல்வெளி தேசம் 16 நீலமலை
அடுத்த கட்டுரைமீட்சி