மீண்டும் கமலா, கடிதங்கள்

அன்புள்ள ஜெ,

கமலா சுரையா பற்றி எழுதியிருந்தீர்கள். அவரது இலக்கியத்தில் என்ன பிரச்சினையை நீங்கள் பார்க்கிறீர்கள்? அவரை விட முக்கியமான இந்தியப்பெண் எழுத்தாளர் யார்?

சாய் மகிளா
சென்னை [SMS]

***

அன்புள்ள மகிளா,

விரிவான பதில் எழுதுவதனால் இதை மின்ஞஞ்சல் செய்கிறேன்.

கமலா சுரையா ஒரு ‘சிறிய’ எழுத்தாளர். சிறிய எழுத்தாளர் என்பவர் தான் தன் அனுபவங்கள் மற்றும் இச்சைகள் வழியாக அடைந்த உணர்ச்சிகளையும் கருத்துக்களையும் தாண்டிச்செல்ல முடியாதவர். அதை மட்டுமே சார்ந்து வாழ்நாளெல்லாம் எழுதுபவர். அவர்களின் எழுத்தில் அவர்கள் மட்டுமே இருப்பார்கள்.

‘பெரிய’ எழுத்தாளர் என்பவர் தன் அனுபவத்தில் இருந்து எப்படியோ ‘மானுட’ அனுபவத்தின் தளத்துக்குச் சென்றுவிட முடிந்தவராவார். அவ்வாறாக அவர் தனக்கே உரிய ஒரு வரலாற்றுப்பிரக்ஞையை அடைகிறார். டி.எஸ்.எலியட் முதல் ஹரால்ட் புளூம் வரை விமரிசகர்கள் இந்த வரலாற்றுபோதத்தைப்பற்றி பல கோணங்களில் விரிவாகவே பேசியிருக்கிறார்கள். பெரிய எழுத்தாளர்கள் ஒரு கட்டத்தில் ஒரு நிலப்பரப்பின், ஒரு சமூகத்தின், ஒரு காலகட்டத்தின் குரல்களாக ஆகிவிடுகிறார்கள்.

சிறந்த உதாரணம் தகழிதான். தகழி என்ற கலைஞர் தகழி சிவசங்கரப்பிள்ளை என்ற நாயரின் தனிப்பட்ட கசப்புகள் விருப்புகள் காமம் குரோதம் நெகிழ்ச்சி ஆகியவற்றால் ஆனவர் அல்ல. அதுதான் தொடக்கப்புள்ளி. ஆனால் அவர் குட்டநாட்டின் இதிகாச கர்த்தா. மாறாக கமலா எப்போதுமே கமலாவின் பதிவுதான். அந்த கதைகளை நியாயப்படுத்தும் ஒரே விஷயம் கமலாவின் ஆளுமைதான். ஆகவே கமலாவின் கதைகளை கமலாவை வைத்தே பேசமுடியும்.

கமலாவின் சிறப்பு என்னவென்றால் அவர் பாவியல்பை [Lyricism ]  அடைந்ததுதான். தனிமனித அந்தரங்க உணர்ச்சிகள் சிறந்த இலக்கியமாக ஆவது அவை பாவியல்பு கொள்ளும்போதே. அவரது சிறந்த கதைகளில் ‘மாதவிக்குட்டி’ மொழியை கவிதைக்கருகே கொண்டுசெல்கிறார். உள்ளமுருகும் சொற்களின் அழகை உருவாக்குகிறார். பாவியல்பு கைகூடிய கதைகளில் உணர்ச்சியும் மொழியும் கலப்பது மட்டுமே முக்கியம்.

இந்திய மொழிகளின் ஆகச்சிறந்த பெண் எழுத்தாளர் குர்ரதுலைன் ஹைதர். உருது. அவரது ‘அக்னிநதி’ தமிழில் வெளிவந்திருக்கிறது.  [குர்அதுல் ஜன் ஹைதரின் ‘அக்னி நதி ‘ ]அடுத்தபடியாக ஆஷாபூர்ணா தேவி. வங்கம். அவரது மூன்று நாவல்கள் முக்கியமானவை. பிரதமபிரதிசுருதி, ஸ¤பர்னலதா, பகுலின் கதை. அவை தமிழில் வெளிவந்ததில்லை.

ஜெ

***

அன்புள்ள ஜெ

கமலாவின் சிறுகதைகள் மற்றும் சில கவிதைகள் மட்டுமே நான் படித்து உள்ளேன். செயல்பாடுகள் குறித்து அதிகம் அறிந்து இருக்கவில்லை. அவரது மத மாற்றம் மற்றும் சில செயல்பாடுகள் பற்றி பத்திரிக்கைகளில் படித்து இருந்ததோடு சரி. அவரது கருத்துகள் சமூக நிலைப்பாடுகள் இவை பற்றி எனக்கு அதிகம் தெரியாது.

உங்கள கட்டுரை மேல் எனக்கு விளைந்த உறுத்தல் இத்தகு அறியாமையுடனே நிகழ்ந்தது. ஆகவே முழுமை இல்லாதது..மன்னிக்கவும். ஆயினும் உலக இலக்கிய விமர்சன போக்கு குறிப்பாக மேலை நாடுகளில் தனி மனித வெளிக்கு அதிகம் மதிப்பு கொடுக்காதது போலவே உள்ளது. எனது இந்த நெடு நாளைய சங்கடம் உங்களின் கட்டுரை மூலம் வெளிப்பட்டது என்றும் சொல்லலாம்.

மதிப்புகள்,விழுமியங்களை தூர எறிவது இலக்கியத்தின் ஒரு பகுதியாகவே இருந்த போதும் எங்கோ ஒரு இடத்தில அதற்கான எல்லைகள் இருக்கவே வேண்டும்.

 உங்கள் கட்டுரையே கூட கமலாவின் கருத்துகளின் அபாயங்கள் குறித்தோ அல்லது தவறுகள் குறித்தோ குவியாமல் அதன் உளவியல் பின்புலம் பற்றி மட்டுமே அதிகம் பேசி உள்ளது. இதனால் என் போன்ற வாசகனுக்கு அது ஒரு பிழைபட்ட புரிதலை தர வாய்ப்புள்ளதாய் அமைகிறது

உங்கள் பதில், இலக்கிய விமர்சனம் குறித்த எனது புரிதலை சற்று குழப்பியது சற்று விரிவாக்கவும் செய்தது. இந்த இரண்டுமே என்னளவில் முக்கியமானது. நன்றி.

ராஜரத்தினம்

***

கமலா சுரையா:விவாதம்

அஞ்சலி:கமலா சுரையா

குர்அதுல் ஜன் ஹைதரின் ‘அக்னி நதி ‘

முந்தைய கட்டுரைமீசை, மீண்டும் கடிதங்கள்
அடுத்த கட்டுரைபுல்வெளி தேசம் 16 நீலமலை