வரம்பெற்றாள்

ஞாயிறன்று காலை மூன்றுமணிக்கே எழுந்துவிட்டேன். மூன்றுமணிநேரமே தூங்கினாலும் மனம் துல்லியமாக விழித்திருந்தது. ஆறு மணிவரை எழுதிக்கொண்டிருந்தேன். கீழே சென்று டோராவுக்குச் சில பணிவிடைகள் செய்து குலாவிவிட்டு ஒரு காலைநடை கிளம்பினேன். இருபதடி தூரத்துக்கு அப்பால் தெரியாதபடி நல்ல இருட்டு. சிற்சில நீர்த்துளிகள் காற்றிலேறி வந்து விழுந்தன. மரங்கள் சலசலக்கும் ஒலி. காலையில் எழும் பறவைக்குரல்கள் குறைவாக இருந்தன.

பார்வதிபுரம் கால்வாயில் நீர் இருட்டாக ஓடிக்கொண்டிருந்தது. ஏழெட்டுப்பேர் குளித்துக்கொண்டிருந்தனர். ஒரு பெண்மணி துணிதுவைத்தாள். கால்வாயை ஒட்டியே புதிதாக வந்துள்ள தகரக்கொட்டகை டீக்கடையில் நுழைந்து ஒரு டீ சொன்னேன். டீக்கடைகளுக்கே உரிய மணம். சாம்பார், தோசை, ரசவடை வாசனைக் கலவையை சுமந்து வந்த விறகுப் புகை மணம். ஒரு பெரியவர் ஆவலாக தோசையை தின்றபடி ‘மளை உண்டும்’ என்றார். ‘இண்ணைக்கா?’ என்றேன். ‘ஓ…இந்நா இப்பம்…அதாக்கும் நான் வாளைக்கு வெள்ளம் கோராம வந்துபோட்டேன்’ நேராகப் போய்ப் படுப்பாராக இருக்கும். சாப்பிட்டதுமே இழுக்க ஒரு கட்டு பீடி காத்திருந்தது

நான் டீ குடித்து எழுந்து வரவும் தகரக்கூரைமேல் படபடவென அருவிபோல மழை கொட்ட ஆரம்பித்தது. இரைந்தபடி தகரவிளிம்பில் இருந்து நீர் பொழிந்தது. கால்வாய்நீர் புல்லரித்துப் பின் கொதிக்க ஆரம்பித்தது. மழையைப் பார்த்துக்கொண்டு கொஞ்சநேரம் நின்றிருந்தேன். இருபது நிமிடத்தில் கார்வானம் உருகி வழிந்து காலியாகியது. தெளிந்த நீல வெறுமையில் இருந்து மெல்லிய நினைவுபோல சில துளிகள். சாலையில் ஏறி நடக்க ஆரம்பித்தேன். நனைந்த வாழையிலைகள் பளபளவென அசைந்தன. சேம்பிலைகள் குட்டியானைக்காதுகளாகத் திரும்பின. தென்னைஓலை நுனிகளில் முத்துக்கள் தயங்கின. இரு காகங்கள் பாலத்துமேல் அமர்ந்து சிறகை விரித்துக் குடைந்தன

 

ரயில்பாதைக்கு அப்பால் தேரிக்குளத்தில் பொன்னிறநீர். அதில் நாலைந்து பயல்கள் குதித்துக் கூச்சலிட்டு நீந்தினார்கள். சைக்கிளில் வந்திருந்த ஒருவர் தலைதுவட்டிக்கொண்டிருந்தார். காலையில் குளித்துவிட்டு வயல்வேலைக்குச் செல்லும் மக்கள் அனேகமாக இங்கே மட்டும்தான் இருப்பார்கள். தார்ச்சாலை நனைந்து பளபளத்தது. வெள்ளிநகை அணிந்த கரிய அழகியைப்போல. கால்வாய்ப்பாலம் கடந்து மறுபக்கம் வாத்தியார்விளை சாலையில் நடந்தேன். ஏஇ வீட்டுமுன் சாலையில் முருங்கைப்பூக்கள் உதிர்ந்துகிடந்தன. அப்பால் ஒரு வாசலில் செம்மஞ்சள்நிறமான சீமைப் பூக்கள் ஈரத்துடன் குலுங்கின.

நேர் எதிரில் வேளிமலை சாம்பல்நீலத்தின் அடுக்குகளாக நிறைந்து பரந்து நின்றது. சிகரங்களில் பக்கவாட்டில் ஈரம் சூரிய ஒளிபட்டு இரும்புப்பரப்பு போல மினுங்கியது. பச்சைச்சரிவுகளில் மேகங்கள் கைக்குழந்தைபோலக் கிடந்தன. மலையின் மடிப்புகளில் வெள்ளிச்சரிகைபோல சிற்றருவிகள். நான் வயல்வெளியில் இறங்கினேன். கால்புதையும் சதுப்பில் நண்டுவளைகளில் இருந்து சேற்றுருண்டைகள் வெளியே துப்பப்படுவதைக் கண்டேன். உள்ளே அவை ஜோடியாக உழைத்துக்கொண்டிருக்கும். தவளைகள் க்ராக் க்ராக் என்று ஓலமிட்டன. ஒரு தண்ணீர்ப்பாம்பு அவசரமாக சாட்டையாகச் சொடுக்கப்பட்டு சென்றது. அதற்கான தவளை அப்போதும் சத்தம்போட்டுக்கொண்டிருந்தது.

வயல்களில் ஒருமாத நாற்றுக்கள் பச்சை இருட்ட ஆரம்பித்திருந்தன. காற்று அலையலையாகச் செல்லும் வழி தெரிந்தது. வயல்வெளி வேளிமலையைத் தொடும் எல்லையில் ஒளி கொஞ்சம் அதிகமாக இருப்பதுபோலிருந்தது. சட்டென்று அந்த வானவில்லைப்பார்த்தேன். நீருக்குள் விழுந்த வண்ணம்போலக் கரைந்துகொண்டே இருந்தது. பலகணங்களுக்கு நினைப்பே இல்லை. இப்போதுதான் ஒரு வானவில் தோன்றுவதை எழுதிவிட்டு வெளிவந்திருக்கிறேன். ஆச்சரியம்தான்!

கிருஷ்ணனைத் தொலைபேசியில் கூப்பிட்டேன். தூக்கம் கலைந்து எழுந்தார். நான் காலைநடையில் வானவில்லைக் கண்டதைப்பற்றிச் சொன்னேன். அவர் கனவிலேயே இங்கே வந்துவிடக்கூடியவர். வானில் ஒளி மங்கிக்கொண்டே வந்தது. மேகத்திரைச்சீலைகளைக் காற்று இழுத்து விட்டது. இருட்டில் வயல்வெளிகளில் நீலம் பரவியது. நாற்றுப்புதர்களுக்குள் கருமை. தவளைக்குரல் ஓங்கியது. பின் பல்லாயிரம் கண்ணாடிச்சவுக்குகளாக மழை மண்ணை வீற ஆரம்பித்தது. செல்பேசியை ஒரு சேம்பிலையில் பொதிந்து பைக்குள் வைத்துக்கொண்டேன். கைவீசி நடக்க ஆரம்பித்தேன். மழை குளிரக்குளிர அறைந்தது. காதுகளில் ஓலமிட்டது.

கணியாகுளம் சாலையில் ஏறினேன். உடம்பெல்லாம் சேறுடன் இருவர் மழையில் பீடி பிடித்தனர்.ஆம் சேம்பிலையைப் புனல் போல சுருட்டி எரியும் பீடியை உள்ளே வைத்து இழுத்தால் பிரச்சினை இல்லை. ஈரம் வழியும் உடலுடன் கடந்துசென்றனர். மழையில் சொட்டச்சொட்ட நனைவதை எவரும் வேடிக்கை பார்க்காத ஒரே ஊரும் இதுதான். தென்னைஓலைகள் சுழன்று ஆழ சேம்பிலைகள் ஒரே வீச்சில் கவிழ்ந்து நிறம்மாற மழை வீசியடித்தது. என் சட்டைக்குள் நீர் வழிந்தது. புருவம் சொட்டியது

கணியாகுளம் வந்தபோது மழை நின்றுவிட்டிருந்தது. வயல்களில் மழைபெய்த சாயலே இல்லாமல் வேலை நடந்துகொண்டிருந்தது. ‘மழையா எப்ப?’ என்று நாலைந்து எருமைகள் மேய்ந்துகொண்டிருந்தன. ஒரு எருமை என்னை சந்தேகத்துடன் பார்த்தது. அதன் மேல் வந்தமர்ந்த காகம் ‘சொகமா இருக்கியளா? பாத்து நாளாச்சே’ என்று எருமையிடம் விசாரித்தது. எருமையின் கரிய பள்ளையில் அப்போதும் ஈரம் சொட்டிக்கொண்டிருந்தது

கணியாகுளம் ஆலமரத்தடி சந்திப்புக்கு வந்தேன். கலுங்கில் குமரேசன்பாட்டா மழையில் நனைந்து ஈரமாக அமர்ந்திருந்தார். மழையில் நனைந்த ஒரு பெண் ஈரமான குழந்தையுடன் சென்றாள். மூடிய டீக்கடைச் சுவரில் கரிய நிறத்தில் ஒரு சுவரொட்டி. ‘கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்’ யார் என்று பார்த்தேன். கரிய கறையாக உருவம். ஆனால் கிழவியைப் பார்த்த நினைவிருந்தது. ‘வரம்பெற்றாள்’ . நல்ல பெயர்தான். வயது 103. அஞ்சலி செலுத்துவது மகள்கள் மகன்கள் பேரர்கள் பேத்திகள் கொள்ளுப்பேத்திகள் மற்றும் பங்குத்தந்தை.

‘பாட்டா ஆராக்கும் கிளவி?’ என்று கேட்டேன். ‘வரப்பெத்தாளே…இங்கிணதானே கெடப்பா…காலம்பற ஆறுமணிக்கு மலைக்குக் கொழையொடிக்கப்போவாளே’ . ஆமாம் பார்த்திருக்கிறேன். காலை மாலை எந்நேரமும் ஆட்டுக்கான தழையும் வளைந்த துரட்டியுமாக அப்பகுதியில் எங்கும் காணக்கிடைப்பாள். அவளுக்கு நூற்றிமூன்று வயதா? ‘இந்நேற்றுகூட இங்கிண வந்திருந்தா… குமரேசண்ணாண்ணு அருமையா விளிப்பாளே…பாவம் நல்ல குட்டியாக்கும்…’ இது கிழவிக்குக் கொஞ்சம் மூத்தது என்று புரிந்துகொண்டேன். ‘என்னத்துக்கு இங்க இருக்கேரு?’ ‘சாய குடிச்சணும்…பய கட திறக்கல்லலா?’

கணியாகுளத்தின் விதிகளில் ஒன்று பொறுமை. பேருந்து,டீ எதுவானாலும் பொறுத்து பூமியாள்பவருக்கே கிடைக்கும். எங்கும் எந்நேரமும் எவரேனும் காத்திருப்பார்கள். மழையில் வெயிலில். இங்கே காலம் மிக மெதுவாகப்போகிறது. இந்தக் கிழத்துக்கு மூத்தகிழம் ஒன்று உண்டு. எண்பத்தைந்து வயதான எம்.எஸ் சாரின் சித்தப்பா அவர். நூற்றைந்து வயதுக்குள் எட்டுமுறை ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ள நாகர்கோயிலுக்கும் இரண்டுமுறை பத்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சுசீந்திரத்துக்கும் போனதை விட்டால் ஊரைவிட்டே வெளியே போனதில்லை. ஆனால் அவருக்கு வேளிமலையில் தெரியாத இடம் இல்லை.


அம்புரோஸ் நாடார் கடைப்பலகையைத் தூக்கி வைத்தார். ‘வாக்கிங்கா?’ என்றார். மழை மறுபடியும் சீறியடித்தது. சேம்பிலைக்குள் செல்பேசி அதிர்ந்தது. பாட்டா மழையில் சொட்டியபடி டீ குடிக்கச்சென்றார். நான் மழை நின்று அசைந்த திரையை ஊடுருவி நடந்தேன். என்ன அருமையான பெயர். வரம்பெற்றாள். இந்த மண்ணில் இந்த மழையில் நூறுவருடம் நலமாக வாழ்வதை விடப் பெரிய வரம் ஏது?

[படங்கள் சைதன்யா சிலவருடங்களுக்கு முன்பு எடுத்தவை]

 

 

மறுபிரசுரம் முதற்பிரசுரம் Aug 6, 2012

முந்தைய கட்டுரைதேவதேவன் -தக்காளி
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–46