வேளாண்மை-கிராமம்-கடிதங்கள்

அன்புள்ள ஜெ,
“இந்திய வேளாண்மையின் துயரக் காவியம்” வாசித்தேன்.
நான் என் பள்ளிப் பருவத்தில் தீவிரமாக விவசாயத்தில் ஈடுபட்டேன். பின் கல்லூரிப் படிப்பின் போது, எனக்கும் விவசாயத்திற்கும் சிறு இடைவெளி உண்டானது. வேலையில் சேர்ந்த பின் இடைவெளி மிக அதிகமாயிற்று. நான் ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்தவன். இந்த பகுதியில் விவசாயமே பிரதானம். எங்கள் தோட்டத்தில் முன்பெல்லாம் சீமெண்ணெய் பூடு, வேப்பம் புண்ணாக்கு போன்றவற்றைப் பயன்படுத்துவோம். மஞ்சள், வாழை, நெல், கரும்பு போன்ற அனைத்திற்கும் ஆட்கள் மூலம் களைகளை மண் வெட்டிக் கொண்டும், நேரடியாகப் பிடுங்கியும் அகற்றுவோம். இந்த மண்ணில் அதிகமான களைகள் வளரும். அவை பெரும்பாலும் ஆடு,மாடுகள் உண்ண ஏற்றவை. இப்போது முற்றிலும் ரசாயன களைக் கொல்லிகளை மட்டுமே நம்பி உள்ளனர் எங்கள் பகுதி விவசாயிகள். கடந்த ஏழு – எட்டு வருடங்களில், ஆட்களின் பற்றாக்குறையால் ரசாயன களைக் கொல்லிகளின் பயன்பாடு தீவிரமாகி உள்ளது. ரசாயன களைக் கொல்லிகளால் ஏற்படும் விளைவுகளைk கண்ணெதிரே கண்டு அனுபவித்துள்ளேன். மர வள்ளிக் கிழங்கு நட்டு ஒரு வாரத்திற்குள், வீரியமான களைக் கொல்லி அடிக்க வேண்டும் என்ற விதி பரவலாக்கப்பட்டுள்ளது. அவ்வாறு அடிக்கும் போது, விதைக் குச்சிகள் முளைப்பு விட்டிருக்காது. விதைக் குச்சிகளை சிறிய டப்பாக்கள் கொண்டு மூடி வைத்து விட்டு மருந்து தெளிக்க வேண்டும். அவ்வாறே செய்தோம். குச்சிகள் முளைப்பு விட்டன. பின்னர் இரண்டு வாரத்தில், இரண்டு ஏக்கர் பரப்பில் இருந்த அனைத்து செடிகளும் கருகி வறண்டன. பலரும் பல காரணங்களைச் சொன்னார்கள். ஆனால் ரசாயன களைக் கொல்லி தான் காரணம் என்று நான் உறுதியாக நினைக்கிறேன். முன்பெல்லாம் வரப்புகளில் அருகம்புல் நிறைய வளர்ந்திருக்கும். எருமை மற்றும் மாடுகளை அந்த வரப்புகளில் மேய விடுவோம். இப்போது தோட்டத்தில் ஒரு வெற்றிடம் கூட பாக்கி இல்லாமல் களைக் கொல்லி அடித்து கருக்கி விடுகிறார்கள். இதற்கென்றே கையால் இயக்கி மருந்து தெளிக்கும் கருவி வாங்கி, மாதம் இரு முறை புல் பூடுகளைக் கருக்கி விடும் வேலையைத் தவறாமல் செய்கிறார்கள். இவற்றை அகற்ற ஆட்கள் கிடைப்பதில்லை என்று சொல்லி, களைக் கொல்லி தெளிப்பதை கட்டாயம் என்று அறிவுறுத்துகிறார்கள் . நான் தற்போது ஜெர்மனியில் ஒன்பது மாத ஒப்பந்தப் பணியில் வேலை செய்து கொண்டிருக்கிறேன்.இங்கே விடுமுறை நாட்களில் விவசாய முறைகளை நேரில் சென்று கள ஆய்வு செய்து வருகிறேன். இங்கு பெரும்பாலும் பெருவிவசாயிகளே உள்ளனர். நவீன தொழில் நுட்பம் விவசாயத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. John Deere போன்ற நிறுவனத்தின் உருவத்திலும்,ஆற்றலிலும், தொழில் நுட்பத்திலும் மிக உயர்ந்த இயந்திரங்களைப்பயன்படுத்தி ஆட்களின் தேவையை கிட்டத்தட்ட இல்லாமலாக்கி விட்டிருக்கின்றனர். 20-30 ஏக்கர் பரப்பை தனி ஒரு ஆள் நிர்வகித்து விளைச்சல் எடுப்பதை நம் விவசாயிகளால் நம்பவே முடியாது. ஆனால் இது உண்மை. இங்கே ஒரு கத்தரிக்காய், நம் ஊரின் பெரிய நான்கு கத்தரிக்காய்களுக்கு சமம்.ஒரு தக்காளி கால் கிலோ இருக்கின்றது. இவற்றை இங்கே உள்ள துருக்கி கடைகளில் மட்டும் அதிகமாக காணலாம். நம்மைப் போன்ற மக்கள் தொகை அதிகம் உள்ள நாட்டிற்கு இது போன்ற வீரிய வகைகள் தேவை என்று கூட நான் நினைத்ததுண்டு. (விளைவுகளை எண்ணிப் பார்க்கவில்லை). ஆனால் “Bio ” என்ற முத்திரையுடன் எல்லா வகை உணவுப் பொருட்களும் கிடைக்கின்றன. இவை முற்றிலும் இயற்கை உரங்கள் கொண்டு ரசாயனக் கலப்பில்லாமல் பயிரிடப்படவை. “Bio ” முத்திரையுடன் துணிகள் கூடக் கிடைக்கின்றன. இங்கே விவசாயம் வேறு ஒரு பரிமாணத்தைத் தொட்டிருப்பதாக உணர்கிறேன். அமெரிக்கா விவசாயத்தில் முன்னோடியாக இருப்பதால் அதன் மீது எப்போதும் ஒரு கண் இருக்கும்.
இந்த விடியோக்களை பாருங்கள்.
http://www.youtube.com/watch?v=24LJSJqpYuY&feature=related
http://www.youtube.com/watch?v=zkwbJJpeiVs&feature=related

என் வயது 26 . நான் மேலே குறிப்பிட்டவை என் வயதில் நான் பார்த்தவை. நீங்கள் குறிப்பிட்டது போல், பாரம்பரிய முறைகளை நான் பார்த்ததில்லை.
எனக்குத் தெரிந்த பெரியவர்கள், அவர்களுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்ட முறைகளை மறந்து, ரசாயன முறையில் ஊறி, அதை எங்களைப் போன்றவர்களுக்கு சொல்லிக் கொடுப்பவர்கள். என் தலைமுறை விவசாய நண்பர்களின் உரையாடல்கள் உரம்,பூச்சி,களைக் கொல்லிகளின் விலை ஏற்றம் பற்றியே பெரும்பாலும் அமைகின்றது . கடந்த மூன்று மாதங்களில், உரங்களின் விலை மூன்று மடங்கு உயர்ந்துள்ளது.

அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் அடிப்படை நுட்பங்களை அறிந்து கொண்டு விவசாயத்தில் ஈடுபட என்னை நான் தயார் செய்து கொண்டிருக்கிறேன்.
நம்முடைய பாரம்பரிய வேளாண் முறைகளைக் கடைப்பிடித்து (கண்டுபிடித்து), மேற்கத்திய விவசாய முறைகளுடன் போட்டி போட்டு ஈடு கொடுக்க முடியுமா என்ற மாபெரும் ஐயம் எனக்குள்ளது.

விவசாயம் தொடர்பான (சங்கீதா ஸ்ரீராம் போன்ற எழுத்தாளர்களின்) புத்தகங்கள் சிலவற்றைப் பரிந்துரைக்கவும்.
வலைப்பூக்கள் இருந்தால் தெரியப்படுத்துங்கள்.

தொந்தரவுக்கு மன்னிக்கவும்.!
நன்றி.

அன்புடன்,
சக்தி.

அன்புள்ள ஜெயமோகன்,

உங்களுடைய பதிவை (http://www.jeyamohan.in/?p=28665) படித்தேன். மிகவும் மன எழுச்சியை உருவாக்கிய பதிவு. முழுப் புத்தகமும் படிக்க வேண்டும்.

பெரும்பாலான உங்கள் வாசகர்களைப் போலவே நானும் உங்கள் இணையதளத்தில் ஆரம்பித்து, காந்தியை மையம் கொண்டு, பித்துப் பிடித்து இருந்த மன நிலைதான் எனக்கும். காந்தியை வில்லனாகவும், துரோகியாகவும் மட்டுமே அறிமுகம் செய்த கழகக் கண்மணிகள், தோழர்களால் ஆட்கொண்டிருந்த என்னைப் போன்றவர்களை காந்தியைப் பற்றி சரியான புரிதல் ஏற்படுத்தும் உங்கள் முயற்சியை முதலில் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.

அந்தக் கிழவனின் சிந்தனையில் நம் நிகழ்காலப் பிரச்சனைகளில் பெரும்பாலானவற்றிற்குத் தீர்வு இருப்பதை என்னால் உணர முடிகிறது. நீங்கள் குறிப்பிட்ட அந்த விவசாயம் உட்பட. “எங்கள் போராட்டத்திற்குத் தேவையான உணர்வை எங்கள் பாரம்பரியத்தில் இருந்தே பெற்றேன்” என்ற அவரின் அறைகூவல் என்னைத் திரும்பத் திரும்ப உலுக்கிய வாக்கியம்.

அவரின் மறைவிற்குப் பிறகு, அவர் காட்டிய வழியில் நாம் செல்லாமல்  முற்றிலும் வேறு பாதையைத் தேர்வு செய்து விட்டோமோ என்ற எண்ணம் அடிக்கடி வந்து சோர்வூட்டுவதைத் தவிர்க்க முடியவில்லை.

அடிக்கடி நான் என் நண்பர்களிடம் சொல்லுவதுண்டு..”ஒன்பது கோள்கள் இருக்கு என்பதை வெள்ளைக்காரன் கண்டுபிடிச்ச தொலைநோக்கியை வாங்கி நம்ம ஆமா ஆமான்னு சொல்றது இல்ல கல்வி. அது எப்படி ஆர்யபட்டருக்குத் தெரிஞ்சதுன்னு நாம வானவியலைப் படிக்க ஆரம்பிச்சி இருக்கணும்.”. இதுதானே நாம் நம் பாரம்பரியத்திற்கும், முன்னோர்களுக்கும் செய்யும் வணக்கமாக இருந்திருக்கும். நெருப்பு கண்டுபிடித்தவன் மகனோ, பேரனோ மீண்டும் மீண்டும் நெருப்பைக் கண்டு பிடித்திருக்க வேண்டிய நிலை இருந்திருந்தால், நம் இனம் எதையாவது அடைந்திருக்குமா என்ன?. நம் தாத்தனும், பூட்டனும் விட்ட இடத்தில இருந்துதானே நாம் ஆரம்பித்திருக்க வேண்டும்?. அவர்களை எல்லாம் முட்டாள்கள் என்று ஒதுக்கி வைப்பது பல்லாயிரம் வருடங்களாக நாம் சேமித்து வாய்த்த அறிவை மிக சாதாரணமாக உதாசீனப்படுத்துவது தானே?

கடவுள் நம்பிக்கையை விடுத்து, எதிர்மறை எண்ணங்களின் குவியலாக இருந்த எனக்கு, எங்கள் ஊரில் வீடு கட்டும்போது வந்த கிழவர் ஒருவர் தண்ணீர் கண்டு பிடிக்க வந்த நிகழ்வு வெகுவாக உலுக்கியது. அப்போது கையில் கிடைத்த செயின் அல்லது வாட்சை வைத்துத் தலைகீழாகப் பிடித்துக் கொண்டு எங்கள் நிலத்தில் நடந்து ‘இங்க போர் போடுங்க’ என்று சொன்னபோது உண்மையிலேயே சிரித்து விட்டேன். கண்டு பிடித்த பிறகு, ஒரு தேங்காயும், வெற்றிலையும், ஐம்பத்து ஒரு ரூபாய் பணமும் பெற்றுக் கொண்டபோது அவரிடம் தோன்றிய ஒரு கர்வமும், அதை மரியாதையாகக் கொடுக்க வலியுறுத்திய பாங்கும்..அவரிடம் அதைப் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தை அளித்தது. கற்றுக் கொண்ட பிறகு, நான் இதுவரை அலுவலக வேலை காரணமாக ஒரு பத்து முறையாவது வீடு மாறியிருப்பேன். போர் போட்டிருந்த இடமெல்லாம் என் வாட்சைப் பிடித்து கொண்டு சுற்றி அந்த ‘சுழற்சியை’ உணர்ந்திருக்கிறேன். இது பத்தாம்பசலித்தனம் என்று என்னால் அவ்வளவு எளிதாக ஒதுக்க முடியவில்லை.

நாம் நீர் அறியும் கருவியைக் கொண்டு உபயோகப்படுத்துவதை விட, இந்த மாதிரி ஆட்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு , அல்லது முயற்சித்து நாமே அல்லவா கருவியை கண்டு பிடித்திருக்க வேண்டும்?.

முழுவதும் வேறு திசையில் அல்லவா நாம் பயணப்பட்டிருக்கிறோம்?.

எனது கற்பனையில் ஒரு விவசாய நிலம் உண்டு. அங்கே மாடுகள் செக்கு சுற்றுவது போல் ஒரு உருளையை சுற்றும். அது சிறுது நேரம் அருகில் இருக்கும் கிணற்றில் இருந்து நீர் இறைத்து, வயலுக்கும், மரத்திற்கும், செடி, கொடிகளுக்கும் பாய்ச்சும். மீதி நேரம், அந்த உருளை அருகில் இருக்கும் ஜெனரேட்டரை இயக்கும் , அதிலிருந்து வரும் மின்சாரம் சேமிக்கப்பட்டு மின்விளக்குகளை ஒளிரச் செய்யும். வயலில் விளையும் பயிர்களும், கிழங்குகளும், எனக்கும் அந்த மாடுகளுக்கும் உணவாகும். முற்றிலும் தன்னிறைவான ஒரு நிலம், என் மாடுகள், மற்றும் நான்.

நிகழில் இதைப் பார்ப்பது, எவ்வளவு கடினம் என்பதை நானும் உணர்வேன். ஆயினும் அது நோக்கிய பயணம் சாத்தியமே என்பதையும் என்னால் உணர முடிகிறது.

இவ்வகையான சிந்தனைகள், உணர்ச்சிகள், தற்போது யாரோ அல்லது ஒரு கூட்டமோ ஐ-போன் 5 உபயோகப்படுத்த ராப்பகலாக உழைத்து கொண்டிருக்கும் சக ஊழியர்களை (என்னையும் சேர்த்துத்தான்) பார்த்து சிரிக்க வைக்கின்றது. ஒரு அயர்ச்சியை, வெறுமையை உருவாக்குகிறது. அந்த போன் வரவிட்டால் உலகம் அழியப் போவதில்லை, குறைந்த பட்சம் ஒரு மனிதன்….ஏன் ஒரு சிறு உயிரினம் கூட வாழ்விழக்கப் போவதில்லை. ஆனாலும் ஊண் மறந்து, உறக்கம் மறந்து, மனைவி மறந்து உழைத்து கொண்டிருக்கிறோம். உண்மையில் வெறுமையாக இருக்கிறது.

தன்னிறைவான கிராமம் என்ற அவரின் கனவுதான் எத்தனை வீரியமிக்கது?. எங்கோ உள்ள இராக்கில் குண்டு வெடித்தால் என் வீட்டுப் பருப்பின் விலை ஏறும் அளவிற்கு நிலைமை ஆனது அந்தத் ‘தன்னிறைவு’ கனவு நனவாகாமல் போனது தானே? பெரும்பாலான பொருளும், நேர விரயமும் போக்குவரத்தில் அல்லவா ஏற்படுகிறது?. அருகிருக்கும் விளைபொருள்களை உபயோகப்படுத்தினாலோ, வேண்டியவற்றை அருகில் விளைய வைத்தாலோ இந்த ‘தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டும்’ நிலை மாறும் இல்லையா?

மின் கடத்தலில் ஏற்படும் இழப்பு மற்றுமொரு உதாரணம். இந்தத் தன்னிறைவு கிராமம், நகரம், மாநிலம், ஏற்பட்டால் இந்த இழப்பும் தவிர்க்கப்படும் அல்லவா?..

ஆனால் நாம் நீண்ட தூரம் எதிர்த்திசையில் நடந்து வந்து விட்டோமா? மீளவே முடியாதா?

வழி மீண்டும் நம் பாரம்பரியத்தில் இருக்கும் & அது நம்மையும் அத்துடன் தன்னையும் மீட்டெடுக்கும் என்றே நான் நம்புகிறேன். உங்களின் எழுத்துக்கள் அதற்கு ஒரு காரணியாக இருக்கும் (குறைந்தபட்சம் உங்கள் வாசகர்களில் ஒரு சிலருக்கு) என்று நம்புகிறேன்.

ஒரு வார்த்தையில் சொல்வதானால் ‘நன்றி’!!

அன்புடன்,

காளிராஜ்.

முந்தைய கட்டுரைபருவமழை- கடிதங்கள்
அடுத்த கட்டுரைநீங்களும் மேடைப்பேச்சாளராகலாம்.