பருவமழை- கடிதங்கள்

அன்புள்ள ஜெ,

தங்களின் யூத் கட்டுரை படித்தேன், ஒரு இளைஞனாய் நீங்கள் சொன்ன அனைத்தையும் ஒத்துக் கொள்கிறேன். எங்களைப் பற்றிய உங்கள் அவதானிப்பு ஆயிரம் விழுக்காடு சரியானதே. கடைசியாக நீங்கள் குறிப்பிட்டு இருந்த

“நாங்கள் இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறோம். எதிர்காலம் பற்றிய கவலைகளினால் முழுக்க முழுக்க லௌகீகமாக வளர்க்கப்பட்ட இளைஞர்கள் இவர்கள். குடும்பப் பண்பாட்டுப்பின்புலம் அவர்களுக்கு இல்லை. கல்விப்புலமும் இல்லை. ஆனால் வரும் தலைமுறை அப்படி இருக்காது”

இந்த வாக்கியங்கள் பலிக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை. சொல்வதற்கு வேறொன்றும் இல்லை, செய்வதற்கு நிறைய இருக்கிறது.

அன்புடன்,
குமார் கருப்பையா
cyclekaaran.blogspot.com

அன்புள்ள ஜெயமோகன்

உங்கள் பருவ மழைப் பயணக் கட்டுரை படித்து விட்டு ஒரு நீண்ட ஏக்கப் பெருமூச்சு மட்டுமே விட முடிந்தது. நான் அமெரிக்கா வந்ததினால் இழந்தவற்றுள் முக்கியமானது நமது பருவ மழைக் காலமும் ஆடி ஆனி மாதச் சாரல் காற்றுக்களுமே. கடும் கோடையில் பெய்யும் உக்கிரப் பெரு மழைகளும், கோடை முடிந்த பின் வீசும் சாரல் காற்றும் உலகின் பல பகுதிகளிலும் அனுபவிக்கக் கிடைக்காத இயற்கையின் பெருங் கொடைகள். பருவ மழைகளை மேற்குத் தொடர்ச்சி மலையிலும் அதன் சாரல் அமையும் பகுதிகளிலும் அனுபவிக்க ஒரு கொடுப்பினை வேண்டும். பச்சை மா மலைகளின் மேலே வழியும் வெள்ளிப் பனியுருக்கிய அருவிகள் கம்பம் பகுதி தாண்டியவுடனே காணக் கிடைக்கும் பரவசங்கள். அதை நான் இங்கு பெரிதாக இழக்கிறேன். இங்கு மழைகள் கூட அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றனவோ என்ற பெருத்த சந்தேகம் எனக்குண்டு. யாருக்கும் வலிக்காமல் சத்தம் போடாமல் வாசம் எழுப்பாமல் மறு நாள் மழை பெய்த எந்தச் சுவட்டையும் விட்டு விட்டுப் போகாத நாசூக்கு மழைகள் இவை. தவளை சத்தம் கேட்காத தளுக்கு மழைகள் இவை.

ஆனால் தமிழ் நாட்டிலும் கூடக் கடுமையான பருவ மாறுதல்கள் ஏற்பட்டுள்ளதை நான் ஒவ்வொரு வருடம் அங்கு வரும் பொழுதும் உணர முடிகிறது. 2009ம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் அதிகாலை நேரத்தில் கொடை ரோடு நிலையத்தில் ரயில் நின்ற பொழுது டிசம்பர் குளிரை சற்று அனுபவிக்க விரும்பி பெட்டியில் இருந்து வெளியே இறங்கினால் அந்த அதிகாலை நேரத்திலும் கூட ஒரு வித வெப்பத்தை உணர முடிந்தது பெரும் அதிர்ச்சி அளித்தது. ஒரு வேளை தொடர்ந்து நிலவும் குளிருக்குப் பழக்கப் பட்டுப் போன உடலால் தமிழ் நாட்டின் மார்கழியின் இளம் பனியை உணர முடியவில்லையோ என்று ஆசுவாசப் படுத்திக் கொண்டேன். ஆனால் உடன் நின்ற ரயில்வே ஊழியர் டிசம்பர் மாதக் குளிர் முன்பு போல இப்பொழுது இருப்பதில்லை நீங்கள் உணரும் வெப்பத்தையே நானும் உணர்கிறேன் என்று அதிர்ச்சியளித்தார். ஊருக்கு வரும் பொழுது கூடிய மட்டும் ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் வர விரும்புவதன் காரணமே அந்த மாதங்களில் கிடைக்கும் தென்மேற்குப் பருவத்தின் சாரல் காற்றுதான். ஆனால் கடந்த பல வருடங்களாக அந்தச் சாரல் காற்று அனுபவிக்கக் கிடைப்பதேயில்லை. ஒரு வேளை நாகர்கோவில் பகுதிகளில் அவை வீசக் கூடும் ஆனால் மேற்குத் தொடர்ச்சியின் மழை மறைவுப் பிரதேசங்களில் அந்தக் காற்று இப்பொழுதெல்லாம் மிகவும் அரிதான ஒரு பருவக் காற்றாகவே எப்பொழுதாவது வீசும் காற்றாக இருப்பதாகவே தோன்றுகிறது. அம்மியே பறக்க வைக்கும் காசு வீச வேண்டிய ஆடி மாதங்களில் கடுமையான வெப்பத்தையே உணர முடிந்தது. அதிகாலை நேரங்களில் லேசாக வீசும் பருவக் காற்றைத் தவிர சாரல் காற்று என்பது அனேகமாகக் காணாமல் போய் விட்ட ஒரு பழங்கனவாகிப் போனதோ என்ற அச்சம் ஏற்பட்டது.

ஆனால் இதைப் பற்றி நான் பேசிய பலருக்கும் அதைப் பற்றிய எந்தவித பிரக்ஞையும் இருப்பதாகவே தெரியவில்லை. அதிலும் குறிப்பாக சென்னை வாசிகளுக்கு இது போன்ற ஒரு அருமையான பருவக் காற்றும் சாரலும் தமிழ் நாட்டின் தென் பகுதிகளில் நிலவுவதே கேள்விப் பட்டிராத ஒரு ஆச்சரியச் செய்தியாக இருக்கிறது. ’ஓ அப்படியா இந்த மாசம் காத்து வீசுமா? அதெல்லாம் யாருக்கு யோசிக்க நேரமிருக்கு இங்க எப்பவும் வெயில்தான் ’என்கிறார்கள். நம் பருவ நிலை மாற்றங்கள் பற்றிய நுண் உணர்வுகள் அற்றுப் போய் விட்டனவா அல்லது என்னால் மட்டும் உணர முடியவில்லையா என்பது தெரியவில்லை. சென்ற முறை ஜூலை/ஆகஸ்ட்டில் நான் வந்திருந்த பொழுது ஒரு நாள் கூட மதுரையில் என்னால் சாரல் காற்றை உணர முடியவேயில்லை, கடும் வெயிலையும் புழுக்கத்தையுமே தொடர்ந்து அனுபவித்தேன். நல்ல சாரலை அனுபவிக்க நான் திருவனந்தபுரம் வரை தேடிச் செல்ல வேண்டி வந்து அங்கும் ஏமாற்றமே மிஞ்சியது. பொதுவாகவே குற்றாலச் சாரல் வீசும் மாதங்களில் ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் பகுதிகளில் துவங்கி திருநெல்வேலி, குமரி மாவட்டங்கள் வரை மப்பும் மந்தாரமும் கூடிய அற்புதமான ஒரு பருவ நிலை நிலவும். இப்பொழுதெல்லாம் அந்தப் பருவ நிலை ஒரு சில நாட்களில் வெகு அபூர்வமாகவே அங்கு தோன்றுகின்றன. அதிர்ஷ்டம் இருந்தால் ஏதேனும் ஒரு சில தினங்களில் அவை உருவாகலாம் என்பதே நிலைமையாக இருக்கிறது. குற்றாலத்தில் இப்பொழுது தென் மேற்குப் பருவ காலத்தில் நீர் வருவதும் கூட அதைப் போன்ற அபூர்வமாகி வருகின்றது என்றே நினைக்கிறேன். சென்ற முறை ஆடி மாதத்தில் பாபநாசம் பாண தீர்த்தம் அருவிக்குச் சென்றிருந்த பொழுது கடும் புழுக்கமும் வெயிலும் அடித்துக் கொண்டிருந்தது. ஊட்டியில் இருந்து கிளம்பும் பொழுது இரவு ஏழு மணி அளவில் உடன் வேர்த்திருந்தது. பருவ நிலை நிச்சயம் மாறி வருகிறது. ஆனால் அதை உணரும் நுண்ணுர்வு மக்களிடம் அழிந்து போய் விட்டதோ என்று தோன்றுகிறது. வாழ்க்கை ஓட்டத்தில் மக்கள் பருவ நிலை குறித்த நுண் உணர்வுகளை இழந்து விட்டதாகவே தோன்றுகிறது. சித்திரை மாதம் வெயில் அடிக்கும் ஐப்பசி மாதம் அடை மழை பெய்யும் ஆடி மாதம் காற்று வீசும் என்பதில் சித்திரை மாதத்து வெயில் மட்டுமே தமிழ் நாட்டின் நிரந்தரப் பருவ காலமாக மாறி விட்ட உணர்வு ஏற்படுகிறது. மாறும் பருவங்கள் அவை குறித்தான உணர்வுகளையும் மழுங்கடித்து விட்டனவோ என்ற அச்சமே ஏற்படுகிறது. நாஞ்சில் நாட்டில் இருந்து ஆனி ஆடிச் சாரலை யாராலும் கொண்டு போக முடியாது என்று திவான் சொன்னதாகச் சொல்லியிருப்பீர்கள். நாஞ்சில் நாட்டில் இருந்து இல்லா விட்டாலும் கூட தமிழகத்தின் பிற தென்பகுதிகளில் இருந்து நிச்சயமாக அந்த அற்புதமான இயற்கையின் மாபெரும் கொடை ஒன்று  தொலைந்து போய் விட்டதாகவே தோன்றுகிறது. இப்பொழுது மிஞ்சி இருப்பது கடும் கோடை காலம் மட்டுமே. அது எனது பிரமையாக, தேவையற்ற அச்சமாக மட்டும் இருந்தால் மகிழ்வேன். இங்கு எப்பொழுதாவது அபூர்வமாகக் குளிர் இல்லாத நல்ல சாரல் காற்றை அனுபவிக்க நேரும் பொழுதெல்லாம் எனது மனத்தில் ஏற்படும் விகசிப்பை விவரிக்க இயலாது உடனே மனம் குற்றாலத்துக்கும் நெல்லைக்கும் பறந்து விடுகிறது. பருவ மழையைத் தேடிப் பயணிப்பது போலவே நல்ல சாரல் காற்றையும் தேடிப் போக வேண்டி வரலாம்.

அன்புடன்
ராஜன்

முந்தைய கட்டுரைஎழுதுவதுபற்றி…
அடுத்த கட்டுரைவேளாண்மை-கிராமம்-கடிதங்கள்