ஃபெட்னா-கடிதம்

ஆசிரியருக்கு,

வணக்கம். இங்கு அமெரிக்க மண்ணில் வாழும் புலம் பெயர் தமிழ்ச் சூழலில் பல வகை அரசியல் செயல்பாடுகள், வடிவங்கள் உண்டு. அவரவர் நம்பிக்கைக்கு ஏற்றது போல அதை வெளிப்படுத்தவும் செய்கின்றனர். அது ஜனநாயக சமூகத்தில் இயல்பு. எனக்கு பெட்னாவின் உள் அமைப்பையோ அதன் இயங்கு தன்மை குறித்தோ எந்த அறிமுகமும் இல்லை. நான் கலந்து கொண்ட முதல் பெட்னா நிகழ்வு இதுதான். எஸ்.ராவின் வருகை காரணமாக அவரை சந்திக்கும் ஆவலில்தான் கலந்து கொண்டேன்.

இது ஒரு தமிழ்த் திருவிழா. தண்ணீரில் உள்ள மீன் தன்னை நீரின் உறுப்பாய் அறியாது, தண்ணீரைத் தாண்டும் பொழுதே அதற்கு அதன் தவிப்பு
தெரியும். இங்குள்ள புலம் பெயர் தமிழர் நாங்கள் தண்ணீரை விட்டு வெளியில் உள்ளோம். ஒரு தவிப்பு உண்டு. என்னைப் போல் மொழி பேசும் ஒருவனை , என்னைப் போல் குடும்பம் உள்ள ஒருவனை , ஒரு தெரிந்த முகத்தினைக் காண்போமா என்பது பெரும் தவிப்பு. இந்த விழாவில் எங்கு காணினும் தமிழ்க் கூட்டம். ஒரு கொண்டாட்ட சூழலில் குழந்தைகள்,ஆண்கள் , பெண்கள். எத்தனை வேறு வயது, வடிவங்களில் மனிதர். அமெரிக்காவின் எல்லாப் பகுதியில் இருந்தும் வருகின்றார்கள். தமிழகத்தின் அனைத்துத் தரப்பிலிருந்தும் பங்கு பெறுகின்றார்கள். இது ஒரு மன மகிழ் நிகழ்வு. எனவே குஷ்புவும் ,அமலா பாலும் அவசியம். அவர்கள் வெகு ஜன ரசனையின் ஒரு பகுதி. அவர்கள் கலைஞர்கள், எனவே அவர்களும் உண்டு. இது இலக்கிய நிகழ்வு மட்டுமல்ல. ஆன்மீக நிகழ்வு மட்டுமல்ல, நாத்திக நிகழ்வு மட்டுமல்ல என்றே எனக்குத் தோன்றியது.

அமெரிக்கத் தமிழ்க் குழந்தைகளுக்கு ஒரு மேடை.அவர்கள் தங்கள் தாய் மொழி வெளிப்பாட்டினை காட்டிக் கொள்ள ஒரு தருணம். தமிழச்சி பேசியது பெட்னாவின் பொது மேடையில் அல்ல , அவர் பேசியது பொது நிகழ்வுகள் முடிந்த பின்னர் அதன் மறு தினம் ஒரு சிறிய அளவிலான கலந்துரையாடல் நிகழ்வு. அந்த இடத்தில் பேசினார். அதற்கு சற்று முன்னர்தான் காந்தியின் பயணங்களின் சிறப்பினைக் குறித்து எஸ்ரா பேசினார். அவருக்குப் பின்னர் சுதந்திரப் போராட்ட அனுபவங்கள் குறித்து நல்லக்கண்ணு அவர்கள் பேசினார்கள். அதற்குப் பின்னர் சகாயம் அவர்கள் நேர்மையின் அவசியம் குறித்துப் பேசினார். தமிழச்சி அவர்களின் பேச்சு இந்த வரிசையில் ஒரு பகுதி. உங்களுக்குக் கடிதம் எழுதியவர் இதைக் குறிப்பிட மறந்து விட்டார். அவர் மறதி தற்செயல் என எனக்குப் படவில்லை.

ஒட்டு மொத்தமான சித்திரம் தராமல் ஒரு சிறு பகுதியை உங்களிடம் காட்டி ஒரு மன மகிழ் நிகழ்வாக நடந்த ஒன்றினை அரசியல் நிகழ்வாக மாற்றிக் காட்டுகின்றார். ரவி சங்கர் வந்து வாழும் கலை குறித்துப் பேசினார், இலக்கிய வினாடி வினா நடந்தது, குழந்தைகளின் தமிழன் தமிழச்சி நிகழ்வு நடந்தது, சீதை, பாஞ்சாலி , சகுந்தலை , கண்ணகி எனும் காப்பிய நாயகிகள் குறித்து நாட்டிய நடனம் நடந்தது. குழந்தைகளின் தமிழிசை நிகழ்வு நடந்தது. இது போன்ற பல நல்ல நிகழ்வுகள் உண்டு.

இந்த நிகழ்வு நன்றாக நடக்க எனக்குத் தெரிந்த வகையில் சில நண்பர்கள் இரவு பகல் , பார்க்காமல் உழைத்தனர். அவர்களுக்கு அமலா பாலோ ,அரசியலோ முக்கியமாகப் படவில்லை. நிறைய நிகழ்வுகளின் பொழுது அவர்கள் பின் மேடையிலும் , வந்திருந்தவர் உணவு ஏற்பாட்டிலும், வந்திருந்தவர் தங்க வைக்கும் ஏற்பாட்டிலும் அலைந்து திரிந்து கொண்டு இருந்தனர். அவர்கள் தமிழ் நாட்டில் இருந்தால் வேறு வேறு பின் புலம் உடைய இந்தத் தன்னார்வ நண்பர்கள் இது போல இப்படி உணவு ,தூக்கம் மறந்து ஒரு மொழி அடிப்படையிலான நிகழ்வுக்கு ஊதியமின்றி உழைத்து இருப்போரோ என தெரியவில்லை. ஆனால் இங்கு செய்தார்கள்.

உதாரணத்துக்கு ராமக்ரிஷ்ணனின் வாசகரான அந்த பெட்னா உறுப்பினர் ராமகிருஷ்ணன் மேடையில் பேசும் பொழுது அரங்கத்திலேயே இல்லை. தண்ணீர் வாங்க சென்று விட்டார். 25 கேஸ் தண்ணீரை கொளுத்தும் 104 வெயிலில் காருக்கும் உணவுக் கூடத்துக்கும் சுமந்தலைந்தார். அவர்
உழைப்பு அவரது ஆர்வத்தின் காரணமாய். நிகழ்வு முடிந்ததும் ஒரு கல்யாணம் முடிந்த சந்தோசத்தில் அவர்கள் உள்ளம் இருந்ததைக் கண்டேன். அதற்கு மரியாதை தர வேண்டுமென நினைக்கின்றேன்.

அமெரிக்க மண்ணில் தமிழரில் எல்லாத் தரப்புகளும் உண்டு. இடதும் உண்டு , வலதும் உண்டு. இதன் நடுவே எதுவும் இல்லாமல் சினிமா பார்த்து, அமலா பால் பார்க்க ஆசைப்பட்டு, பிள்ளைக்குத் திருமண வாய்ப்பு தேடி , ஒரு திருவிழா மன நிலை தேடி நிற்கும் மனிதரும் உண்டு. இது அவர்களுக்குமான ஒரு நிகழ்வு.

நிகழ்ச்சி அமைப்பில், கவனிப்பில் , மேலாண்மையில் ,விருந்தினர் அழைப்பில் எனக்கு பெட்னாவோடு கருத்து வேறுபாடு உண்டு. ஆனால் அடுத்த பெட்னாவில் கலந்து கொள்வேனா என்பது ஆம் என்றே தோன்றுகின்றது. எனது குழந்தைக்கு இங்கு உன் தாய் மொழி பேசுபவர் எத்தனை உண்டெனக் காட்ட ஒரு வாய்ப்பு இதுவென எண்ணுகின்றேன். அவர்களுக்கான தாய்மொழி வெளிப்பாட்டுக்கான தளத்தில் ஒன்றாய் இது இருக்கலாம். நானும் இத்தனை தமிழ்க் குடும்பங்களை, மனிதர்களை ஒன்றாய்க் காண்பதில் மகிழ்வு கொள்கின்றேன். எனவே எனக்கு உண்டான கருத்து வேறுபாடு இருந்தாலும் இது முக்கிய நிகழ்வே. இது நிலம் துடிக்கும் மீன்கள் தண்ணீரைக் காணும் தருணங்களில் ஒன்று.

அன்புடன்
நிர்மல்

அன்புள்ள நிர்மல்

மன்னிக்கவும் . உங்கள் உணர்ச்சிகளுடன் என்னால் உடன்பட முடியவில்லை.

தமிழின் மசாலாசினிமா, மாசாலாமேடைப்பேச்சுக் கலாச்சாரத்தைத் தமிழ்ப்பண்பாடு என நீங்கள் நினைக்கலாம். அதை தயவுசெய்து உங்கள் குழந்தைகளுக்கும் அறிமுகம்செய்யவேண்டாம் என்று மட்டுமே கோருவேன். அதிருஷ்டவசமாக மேலான கல்விச்சூழலும் ரசனைச்சூழலும் கொண்ட ஒரு நாட்டில் அவர்கள் பிறந்திருக்கிறார்கள். இப்படி தமிழ்ப்பண்பாட்டை அறிமுகம் செய்தமைக்காக வளர்ந்தபின் அவர்கள் உங்களை இழிவாகவே எண்ணுவார்கள்

ஜெ

மதிப்பிற்குரிய எழுத்தாளர் ஜெயமோகனுக்கு

வணக்கம். எனது பெயர் சிவா, அமெரிக்காவில் வெர்ஜினியாவில் வசிக்கிறேன். நீங்கள் அமெரிக்கா வந்து இருந்த பொழுது உங்களுடைய வெர்ஜினியா கூட்டத்தை ஒருங்கிணைத்த குழுவில் நானும் ஒருவன். உங்களிடம் ஒரு சில கேள்விகளும் கேட்டேன்…நீங்கள் என்னை மறந்து இருக்க கூடும்.

நேற்று உங்களுடைய பதிவில் பெட்னாவும் காந்தியும் என்று நீங்கள் தோழர் அரவிந்தனுக்குக் கொடுத்த பதிலில் சில தவறான வார்த்தைகள் நீங்கள் சொல்லி வீட்டீர்களோ என்று ஐயப்படுகிறேன்.

தமிழ்ச் சங்கப் பேரவையின் முன்னாள் செயலர், மற்றும் இந்த ஆண்டு வெள்ளி விழாவின் துணை ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஒரு சிறு விளக்கத்தை அளிக்க விரும்புகிறேன்.

தமிழ்ச் சங்கப் பேரவை என்பது அமெரிக்காவில் உள்ள தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு. அமெரிக்கா வாழ் தமிழர்களுக்கு மற்றும் கனடா வாழ் தமிழர்களுக்கு தமிழர்களின் கலை, பண்பாட்டை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் ஒரு அமைப்பு.

ஒவ்வோரு ஆண்டும் பேரவை (FETNA – Federation Tamil Sangam of North America) சூலை மாதம் கூடி, தமிழர் விழா எடுப்பது வழக்கம். இதில் முழுக்க முழுக்க தமிழர் நலன், மொழி சார்ந்த விசயம், கலையின் வாயிலாக அனைத்தும் சொல்லப்படுவது உண்டு. அப்படிப்பட்ட விழாவில், தமிழ்நாட்டில் இருந்து பல அறிஞர்களை, சமூக அக்கறை உள்ள எழுத்தாளர்களை, கவிஞர்களை, அரசியல் பிரமுகர்களை அழைத்து வந்து அவர்களை இங்குள்ள உள்ள இளைய தலைமுறைக்கும், எங்களைப் போன்ற எண்ணற்ற இளைஞர்களுக்கும் அறிமுகப்படுத்தி வைத்து இருக்கிறது.

தமிழ்ச் சங்கப் பேரவையில் கலந்து கொண்ட தமிழ் அறிஞர்கள்….

கவிஞர் கண்ணாதாசன்
கவிஞர் வைரமுத்து
கவிஞர் அப்துல் ரஹ்மான்
கவிஞர் அறிவுமதி
கவிஞர் தாமரை
கவிஞர் முனைவர் நா முத்துக்குமார்
கவிஞர் ஜெய பாஸ்கரன்
கவிஞர் முல்லை நடவரசு

கவிஞர் தமிழச்சி தங்கப் பாண்டியன் (இந்த ஆண்டு)

எழுத்தாளர் ஜெயகாந்தன்
எழுத்தாளர் பிரபஞ்சன்
எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன்(இந்த ஆண்டு)

பேராசிரியர் சாலமன் பாப்பையா
பேராசிரியர் முனைவர் கு ஞானசம்பந்தன்
பேராசிரியர் அறிவொளி
பேராசிரியர் புனிதா ஏகாம்பரம்
பேராசிரியர் முனைவர் பர்வீன் சுல்தானா
பேராசிரியர் முனைவர் மோகன்
பேராசிரியர் முனைவர் மருதநாயகம்

பேராசிரியர் சுப வீரபாண்டியன்
பேச்சாளர் முனைவர் சுந்தர ஆவுடையப்பன்
பேச்சாளர் வலம்புரி ஜான்
பேச்சாளர் குமரி அனந்தன்

தமிழ் அறிஞர் சிலம்புஒலி சு செல்லப்பன்
தமிழ் அறிஞர் மணவை முஸ்தாபா
மொழி ஆராய்ச்சியாளர் மதிவாணன்
தமிழ் இசை ஆராய்ச்சியாளர் பேராசிரியர் முனைவர் மம்மது
நாடகத்துறை பேராசிரியர் முனைவர் அ இராமசாமி
துணை வேந்தர் முனைவர் பொற்கோ

இந்திய ஆட்சிப் பணியாளர் திரு சகாயம்

அய்யா நல்லக்கண்ணு

தொல் திருமா

மருத்துவர் கிருஷ்ணசாமி

வைகோ

இப்படி இவர்களை அழைத்து வந்து அவர்களின் அனுபவங்களைக் கேட்டு அறிந்து இருக்கிறது. அவர்களை மிக மிக மரியாதையாக பேரவை கெளரவப்படுத்தியும் இருக்கிறது என்பதை இவர்களைக் கேட்டாலே நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

தமிழ்ச் சங்கப் பேரவைக்கு என்ற நீண்ட வரலாறும், ஒரு மிகுந்த மரியாதையும் அமெரிக்கா வாழ் தமிழர்கள் மட்டும் அல்லாமல், தமிழ்நாட்டு வாழ் தமிழர்கள் மத்தியிலும் ஒரு பெருத்த மரியாதையை அதன் செயல்களின் மூலம் சேமித்து வைத்து இருக்கிறது.

ஆனால் நீங்கள் பேரவை பற்றி தவறான புரிதலோடு, ”அந்தக் கூட்டத்தில்” என்ற சொன்னது என் மனதிற்கு மிகுந்த மன வருத்ததைக் கொடுத்தது. தமிழச்சி தங்க பாண்டியன் “காந்தியை”ப் பற்றிய ஒரு பார்வையை சொன்னார். அவர் காந்தியை முழுக்க நிராகரிக்கவும் இல்லை! அவருடைய கருத்து எப்படி தமிழ்ச் சங்கக் கருத்தாகும்? ஒவ்வோரு எழுத்தாளருக்கும், கவிஞருக்கும், பேச்சாளருக்கும் சொந்தக் கருத்துகள், சிந்தனைகள், கொள்கைகள் இருக்கலாம், ஆனால் அது எப்படிப் பேரவையின் கருத்தாக இருக்க முடியும்?

நீங்கள் தமிழ்நாட்டில் மிகப் பெரிய எழுத்தாளர். உலகு எங்கும் நிறைய தமிழர்களை உங்களுக்குத் தெரியும். பல விடயங்களை உங்கள் தளத்தில் விவரித்து எழுதும் நீங்கள், உங்களுக்குத் தெரியாத அல்லது பிடிக்காத விசயங்களை எழுத மாட்டீர்கள் என்று அறிந்து இருக்கிறேன்…

அப்படிப்பட்ட நீங்கள் தமிழ்ச் சங்கப் பேரவையைப் பற்றித் தவறுதலாகப் புரிந்து வைத்து இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன்.

ஒரு முறை தமிழ்ச் சங்கப் பேரவை வந்து பாருங்கள். இங்கு பிறந்து வளர்ந்து குழந்தைகள் எப்படி தமிழில் பேசுகிறார்கள், எப்படி தமிழ் இலக்கியத்தைப் படிக்கிறார்கள் என்று பாருங்கள். நமது குழந்தைகள் பாரதி, பாரதிதாசன் பாடலுக்கு எப்படி நடனம் ஆடுகிறார்கள் என்று பாருங்கள். அமெரிக்காவில் வளரும் அடுத்த தலைமுறை எப்படி இங்கு வளருகிறார்கள் என்று பாருங்கள். இவற்றிக்கு பேரவை எப்படி தளம் அமைத்துக் கொடுக்கிறது என்று பாருங்கள், ஆனால் இது பற்றி எதுமே அறியாமல்,  பேரவை பற்றித் தவறான கருத்து உங்கள் மனதில் உள்ளது என்பதை நான் அறிகிறேன்…அதனை நீங்கள் மாற்றிக்  கொள்ள வேண்டுகிறேன்….

எழுத்தாளர் நாஞ்சில் நாடன் வந்து இருக்கும் பொழுது, உங்களை மிகப் பெரிய “இலக்கியப் பெருவெளி என்றார், ”இலக்கிய ஆளுமை” என்றார், அதில் 100% நான் ஒத்துப்போகிறேன். அப்படிப்பட்ட நீங்கள் அமெரிக்காவில் இயங்கும் மிகப் பெரிய தமிழ் அமைப்பைத் தவறாகப் புரிந்து கொண்டு எழுதி விட்டீர்கள் என்று வருந்துகிறேன்…

இந்தக் கடிதத்தை உங்கள் தளத்தில் வெளியிட்டால் மகிழ்வேன்…

நன்றி

மயிலாடுதுறை சிவா…

தமிழ்ச் சங்கப் பேரவை – துணை ஒருங்கிணைப்பாளர்

வாசிங்டன்

அன்புள்ள மயிலாடுதுறை சிவா அவர்களுக்கு,

உங்கள் கடிதம் வெளியிடப்படுகிறது.

ஃபெட்னா என்ற அமைப்புக்கு இந்திய எதிர்ப்பு அமைப்புகளுடன் உள்ள உறவு, சென்றகாலத்தில் அது இலக்கியவிழா என்ற பேரில் நிகழ்த்திய இந்திய எதிர்ப்புப்பிரச்சாரம் பற்றி எனக்கு ஒரு புரிதல் உண்டு

சென்றமுறை அதன் பொறுப்பிலிருப்பவர் ஒரு கடிதம் எழுதியபோது எனக்கு விரிவான தகவல்கள் தெரியாது என்பதனால் அதை வெளியிட்டேன். அதன்பின் தீர விசாரித்தேன். அந்த அமைப்பு பற்றி நீலகணடன் அரவிந்தன் – ராஜீவ் மல்கோத்ரா எழுதிய நூலில் உள்ள தகவல்கள் முழுக்கவே ஆதாரபூர்வமானவை என நினைக்கிறேன்

இத்தகைய ஓர் அமைப்பில் அதைப்பற்றி அறியாமல் ஒருசில நல்ல படைப்பாளிகள் கலந்துகொள்வதோ அல்லது சில நடுநிலையாளர் அதன் பொறுப்பில் இருப்பதோ அதன்மீதான ஆதாரபூர்வ குற்றச்சாட்டுகளை மழுங்க வைப்பதில்லை.

நீங்கள் கொடுத்திருக்கும் பட்டியலில் உள்ள பல பேச்சாளர்களை நான் கேள்விப்பட்டதே இல்லை. அவர்கள் என்ன பேசுவார்கள் என்றும் தெரியவில்லை. ஆனால் தெரிந்த சிலர் என்ன பேசுவார்கள் என்பதே நான் நம்பும் சித்திரத்தை மேலும் வலுப்படுத்துகிறது

ஜெ

முந்தைய கட்டுரைபருவமழைப் பயணம் 2012
அடுத்த கட்டுரை‘யூத்து’