விஷ்ணுபுரம் நாவல் வாசிப்பரங்கு

ஊட்டியில் குரு நித்யா ஆய்வரங்கு நடத்த எண்ணியபோது நண்பர்கள் பலர் விஷ்ணுபுரம் நாவலைப்பற்றி ஒன்றோ இரண்டோ அரங்குகள் நடத்தவேண்டுமென விரும்பினார்கள். அவர்கள் அனைவருமே விஷ்ணுபுரம் நாவலை அப்போது மறுமுறை வாசித்துக்கொண்டிருந்தார்கள், ஒருவரோடொருவர் விவாதித்துக்கொண்டிருந்தார்கள். எல்லாருக்கும் அந்நாவலின் தொன்மப்பின்புலம், தத்துவ விவாதம் சார்ந்த ஐயங்கள் இருந்தன.

ஆனால் நித்யா ஆய்வரங்கில் அப்படி ஒரு அமர்வு நடத்தப்பட்டால் அது பிறரால் குறைகூறப்பட வழிவகுக்கும் என கிருஷ்ணன் சொன்னார். ஆகவே அதைத் தவிர்த்துவிட்டோம். ஆனால் அப்படி ஓர் அரங்கு நிகழ்ந்தே ஆகவேண்டும் என வாசித்த நண்பர்கள் சொன்னார்கள். எனவே முறையான அறிவிப்பு ஏதும் இல்லாமல் முற்றிலும் அந்தரங்கமான ஒரு சந்திப்பு நிகழ்த்தலாம் என்று ஏற்பாடுசெய்யப்பட்டது. காரைக்குடி நண்பர் சுனில்கிருஷ்ணன் [காந்தி டுடே இணையதளம் நடத்துபவர்] பொறுப்பேற்று செய்தார்.

காரைக்குடி அருகே புதுவயல் கிராமத்தில் ஜூன் 30 ஜூலை 1 இரண்டுநாட்களும் விவாதம் நிகழ்ந்தது. நானும் அருண்மொழியும் 29 அன்று மதியம் மதுரைக்குப் பேருந்தில் கிளம்பிச்சென்றோம். அங்கே ஓட்டலில் தங்கினோம். அயோத்திதாசர் ஆய்வு நடுவம் பாரிசெழியனும், எழுத்து பிரசுரம் வெ.அலெக்ஸும் வந்தார்கள். இன்னொரு அறைபோட்டு அங்கே அமர்ந்து இரவு முழுக்க பேசிக்கொண்டிருந்தோம். மறுநாள் காலையில் ஒரு வாடகைக்காரில் நானும் அருண்மொழியும் அலெக்ஸும் காரைக்குடிக்குச் சென்றோம்.

புதுவயல் கிராமத்தில் ஒரு பழைய செட்டியார் பங்களா. முக்கால் ஏக்கர் பரப்புள்ள வீடு. தேக்காலும் பெல்ஜியம் கண்ணாடியாலும் இத்தாலிய தரைத்தளத்தாலும் உயர்தரச் சுண்ணாம்புக் காரையாலும் கட்டப்பட்டது. விரிந்த கூடங்கள் அங்கணம் கொண்டது. புதியதுபோலப் பராமரிக்கிறார்கள். வாடகைக்குக் கொடுப்பதில்லை. ஆனால் அதன் உரிமையாளரான உண்ணாமுலை என்னுடைய நல்ல வாசகர். இலவசமாகவே இடம் அளித்தார்.

இருபத்திநான்குபேர் பங்குபெற்றார்கள். விஷ்ணுபுரம் நாவலை இருமுறையாவது வாசித்தவர்கள், சென்ற ஒரு மாதத்துக்குள் மறுவாசிப்புசெய்தவர்கள் மட்டுமே அழைக்கப்பட்டார்கள். முதலில் விமர்சகரும் கவிஞருமான க.மோகனரங்கன் விஷ்ணுபுரம் பற்றி தொடக்கவுரை ஆற்றினார்.

தொடர்ந்து கடலூர் சீனு, சாம்ராஜ், ராமசந்திர சர்மா, அரவிந்தன் நீலகண்டன், சுனில்கிருஷ்ணன், விஜயராகவன், ஜடாயு, கிருஷ்ணன், ராஜகோபாலன் போன்றவர்கள் கட்டுரை வாசித்தனர் . சுரேஷ், பிரகாஷ் சங்கரன், அர்விந்த் ஆகியோர் அனுப்பிய கட்டுரைகள் வாசிக்கப்பட்டன.

ஒவ்வொரு கட்டுரையும் ஒவ்வொரு கோணத்தில் விஷ்ணுபுரத்தை அணுகியது. ஒவ்வொரு திறப்பை அளித்தது. அவற்றின்மீது விரிவான விவாதங்களும் மறுவிவாதங்களும் நடந்தன. வழக்கத்துக்கு மாறாக தேவதேவன் கணிசமான விவாதங்களில் நுட்பமான முறையில் கருத்துரைத்தபடி கலந்துகொண்டார்.

வலுவான மாற்றுக்கருத்துக்கள் முன்வைக்கப்பட்டாலும் பொதுவாக நட்பான சூழலிலேயே விவாதம் நடந்தது. முப்பதாம் தேதி மாலை அனைவரும் அருகே உள்ள திருமயம் கோட்டைக்குச் சென்றிருந்தோம். கோட்டையில் அந்தி நேரத்தில் ஒருவரை ஒருவர் சீண்டியபடி சிரித்தபடி விவாதங்களை ஒட்டுமொத்தமாகத் தாண்டிச்செல்லவும் முடிந்தது.

மிகச்சிறப்பான செட்டிநாட்டு சாப்பாடு. இரண்டாம்நாள் பிரியும்போது பழங்காலத்தில் நடந்த மூன்றுநாள் திருமணங்கள் ஒன்றில் பங்கெடுத்து அரட்டையும் சிரிப்புமாகக் கொண்டாடி மீண்ட நிறைவு ஏற்பட்டது. விஷ்ணுபுரம் வெளிவந்து பதினைந்தாண்டுகளாகின்றன. அதற்கு இந்த வருடங்களில் மிகச்சிறந்த வாசகர்கள் அமைந்திருக்கிறார்கள். பற்பல வருடங்கள் அந்நாவலுடன் சேர்ந்து வாழ்ந்த பலரை நான் அறிவேன்.

ஆனால் கருத்துக்களாக வெளிவந்தவற்றில் அந்நாவலை உள்வாங்க முடியாமையின் தத்தளிப்பைப் பதிவுசெய்தவையும் அந்நாவலுக்குள் புகவே முடியாத அறியாமை அல்லது அகங்காரத்தின் தடையை வெளிப்படுத்தியவையுமே அதிகம். வாசிப்புகள் ஒன்றை ஒன்று நிறைவுசெய்து ஒரு கூட்டான வாசிப்பாக ஆகும் உரையாடலுக்கான வெளி இங்கே அமையவில்லை.

அந்த வெளி இப்போது அமைந்திருப்பதை இந்த அரங்கில் கண்டேன். உண்மையைச் சொல்லப்போனால் விஷ்ணுபுரம் வெளிவந்தபோது அதன் மீது உருவாக்கப்பட்ட அவதூறுகள் எல்லாம் காலத்தில் பின்னகர்ந்து சென்றபின் வாசிப்புக்குள் நுழைந்த தலைமுறையினரே அதை முழுமையாக உள்வாங்கி வாசிக்கிறார்கள். இப்போது விஷ்ணுபுரத்திற்கு உள்ள வாசிப்பும் கவனமும் முன்பிருந்ததை விடப் பல மடங்கு அதிகம்.

எதிர்காலத்தில் இன்னும் நுண்ணிய இன்னும் விரிவான வாசிப்புகள் நிகழுமென்ற எண்ணத்தை உருவாக்கியது இந்த வாசிப்பரங்கு.


புகைப்படங்கள்

முந்தைய கட்டுரைஇலக்கணம், அ.ராமசாமி கடிதம்
அடுத்த கட்டுரைரமணர்- நித்ய சைதன்ய யதியின் நினைவுக்குறிப்பு