சேது சொக்கலிங்கம்

கவிதா பதிப்பக உரிமையாளரான சேது சொக்கலிங்கத்தை எனக்கு அறிமுகம்செய்தவர் என் நண்பர் செந்தூரம் ஜெகதீஷ். 1995ல்  நான் விஷ்ணுபுரம் எழுதிவிட்டு அதை வெளியிடுவதற்காக அலைந்துகொண்டிருந்தேன். எனக்கு பிரசுரகர்த்தர்கள் நெருக்கம் இல்லை. பொதுவாக அப்படித் தொடர்புகளை பேணுபவன் அல்ல நான்.

அப்போது மூன்று நூல்கள் வந்திருந்தன. தமிழ்புத்தகாலயம் ‘ரப்பர்’ நாவலை வெளியிட்டது, ஆனால் அவர்களுக்கும் என் வழிக்கும் வெகுதூரம். அன்னம் என் முதல் சிறுகதைத்தொகுதி ‘திசைகளின் நடுவே’யை வெளியிட்டது. ஆனால் மீரா உடல்நலம் குன்றி அன்னம் முடங்கியிருந்தது அப்போது. மூன்றாம் நூல் ‘மண்’ என்னும் சிறுகதைத்தொகுதி அதை வெளியிட்ட சினேகா பதிப்பகம் என்ன ஆனதென்றே தெரியவில்லை.

செந்தூரம் ஜெகதீஷ் அப்போது ஓஷோவின் ஒரு நூலை கவிதா பதிப்பகத்துக்காக மொழியாக்கம் செய்தார். ‘நான் ஒரு வெண்மேகம்’ என்னும் தலைப்பில் அந்நூல் வெளிவந்தது [My way the way of white clouds] அதன் பொருட்டு சேது சொக்கலிங்கத்தை சந்தித்தபோது விஷ்ணுபுரத்தைப்பற்றிச் சொன்னார். நாவலைக் கொண்டுவரும்படி சேது சொக்கலிங்கம் சொன்னதாக சொன்ன செந்தூரம் ஜெகதீஷ் என்னிடமிருந்து கைப்பிரதியை வாங்கிச்சென்றார்.

பின்னர் நான் சேது சொக்கலிங்கத்தை செந்தூரம் ஜெகதீஷ¤டன் சென்று சந்தித்தேன். சேது சொக்கலிங்கத்துக்கு என்பெயர் தெரிந்திருக்கவில்லை. அப்போது குறைவானவர்களுக்கே என்னை தெரியும். ”தெரியாத ஒருத்தரோட இத்தனை பெரிய புக்கை எப்டி போடுறது? ஆனா வந்திட்டீங்க, கேட்டுட்டீங்க…போனாப்போறது போடுறேன். பாதியாகக் குறைத்துக்கொடுங்க சார்” என்றார். ”போடக்கூடாதுண்ணு இல்லை சார்…ரிஸ்கு அதிகம்”

உண்மையில் அப்போது புத்தகங்கள் மிக மிகக் குறைவாகவே வெளிவந்து அதைவிடக்குறைவாக விற்றன. போட்டிருந்தால் அவரது மொத்த முதலீடும் தேங்கியிருக்கவே வாய்ப்பு அதிகம். ஆனாலும் நட்பு அடிப்படையில் அதற்கு முன்வந்தார். நான் அதை எப்படி பாதியாகக் குறைப்பது என தெரியாமல் விழித்து அப்படியே விட்டுவிட்டேன்.

அதன்பின் அகரம் கதிர் மூலம் விஷ்ணுபுரம் வெளிவந்தது. கோவை ஞானி உள்ளிட்ட நண்பர்கள் 150 பிரதிகள் முன்விலைக்கு விற்று உதவியதனால் நூல் வெளிவர முடிந்தது. ஆனால் நூல் வெளிவந்த சிலமாதங்களிலேயே பரபரப்பாக விற்று அம்மாதிரி ஒரு நூலுக்கு எதிர்பார்க்க முடியாத வரவேற்பைப் பெற்றது. மீண்டும் சொக்கலிங்கத்தைச் சந்தித்தபோது ”அடாடா, நாம போட்டிருக்கலாம் சார். தெரியாமல் போச்சு” என்றார். எனக்கும்தான் தெரியாமல் இருந்தது.

சேது சொக்கலிங்கம் அதன்பின் என்னிடம் என் நூல்களை வெளியிட விரும்புவதாகக் கேட்டார். என் நூல்கள் எதுவுமே அச்சில் இல்லாத நிலை வராமல் பார்த்துக்கொள்வதாகச் சொன்னார். அதை ஏற்று நானும் அவருக்கு நூல்கள் அளித்தேன்.விஷ்ணுபுரம் மேலும் இரு பதிப்புகள் அவரது பதிப்பகத்தில் வெளிவந்தது. நாலாம் பதிப்பு வரவிருக்கிறது. என்னுடைய பலநூல்களை அவர் வெளியிட்டிருக்கிறார்.

சேது சொக்கலிங்கம்நூல் வெளியிடுவதில் ஒரு கொள்கை வைத்திருக்கிறார். அவருக்கு நூல்கள் அழகுபொருட்கள் அல்ல. பயன்படும் பொருட்கள். ஆகவே அவற்றின் அட்டை போன்றவை அழகாகவோ சிலசமயம் நவீனமாகவோ இருப்பதில்லை. ஆனால் மிகத்திடமான நூல்களாக இருக்கும். விஷ்ணுபுரம் போன்ற தடித்த நூல்களின் கட்டு எத்தனை இறுக்கமானதாக இருக்கிறதென்பதைப் பார்த்தால் தெரியும். கீழே விழுந்தாலும் அவை நலுங்குவதில்லை. தாள் தரமானதாக இருக்கும்.

பொதுவாக பிற நவீன இலக்கிய நூல்கள் கொஞ்சம் சிறிய எழுத்துருவுடன் இருக்கும். சேது சொக்கலிங்கம் வெளியிட்ட என் நூல்களில் எல்லாம் அச்சு அளவு பெரிதாகவும் தெளிவாகவும் இருக்கும். அதற்கு அவர் சொன்ன காரணம்  அவரது அனுபவ அறிவுக்குச் சான்று. ”சார், பெரும்பாலும் இந்தமாதிரி புக்ஸ் படிக்கிறவங்க நாப்பது வயசுக்கு மேலே உள்ளவங்க. கொஞ்சம் பெரிய எழுத்துதான் அவங்களுக்கு வசதி…” நாற்பது வயதுக்குமேல் நான் அதை உணர்ந்தேன். இப்போது மேலைநாட்டு ‘பேப்பர்பேக்’ நூல்களை என்னால் படிக்கவே முடிவதில்லை.

சேது சொக்கலிங்கம்எளிய பின்னணியில் இருந்து வந்தவர். உழைப்பின் மூலம் பதிப்பகத்துறையில் ஒரு இடத்தை அவர் பெற்றார். அத்துடன் அவரது சிரித்த முகமும் ஓரு பெரிய முதலீடு. சிரிப்பில்லாமல் அவரை நான் பார்த்ததே இல்லை. அந்த நட்பான சிரிப்புதான் அவரை பிற பதிபகத்தார் அனைவருக்கும் நட்பாக்கியது. பதிப்பாளர் சங்கத்தின் சார்பில் அவர் பல புத்தக விழாக்களை பொறுப்பேற்றுச் செய்திருக்கிறார்.

இவ்வருடம் சேது சொக்கலிங்கம் அவர்களுக்கு அறுபது வயது நிறைகிறது. அறுபது என்பது ஒரு மறுதொடக்கம். வணிகத்திலும் பொதுவாழ்க்கையிலும் இன்னும் பெரிய விஷயங்களை செய்வதற்கான வாசல். வாழ்த்துக்கள்.

முந்தைய கட்டுரைஅமெரிக்கா பயணம்
அடுத்த கட்டுரைமனமெனும் நோய்..