யாருடைய கலை?

1

அன்புள்ள ஆசிரியருக்கு

தங்கள் விரிவான பதில்களுக்கு மிக்க நன்றி – திரும்ப எழுத நாளாகிவிட்டது.மன்னிக்கவும்.

என் ஐயத்தின் சாராம்சமே இதுதான் – “உண்மை – நன்மை- அழகு என்ற மூன்றையும் சுட்டக்கூடிய ஒரு கலைப்பொருள், அது உருவான விதத்தாலோ அல்லது அதன் பின்னணியில் இருந்த சம்பவங்களாலோ தன் மகத்துவத்தை இழக்கக்கூடுமா? ஒரு கலைப்பொருளை ஆராதிக்கும் ஒருவன் அதன் பின்னணியை தெரிந்து கொள்ளும்போதுபெற்றுக் கொள்ளும் சேதி என்ன ?” என்பதே.

இது ஒரு பக்குவமான கேள்வியா என்று தெரியவில்லை, ஆனால் இது என் மனதில்உருவான நேரம் தெரியும் – உங்கள் அருகர்களின் பாதை பயணக் குறிப்புகளில்அழகான வாவிக் கிணறுகளை பற்றி படிக்கும்போது, நான் சிறுவயதில் பார்த்த’பாவனி பவாய்’ திரைப்படத்தின் கதை நினைவுக்கு வந்தது. கூடவே ராஜராஜன்பற்றிய சந்தேகங்களும் சேர்ந்து கொண்டது. மற்றபடி எனக்கு எந்த வரலாற்றின்மீதும் முத்திரை குத்த வேண்டிய நோக்கமில்லை.

உங்கள் பதில்கள் என் கலை/வரலாற்றுப் பிரக்ஞைகளில் உள்ள ஓட்டைகளைஎடுத்துக் காட்டின. ஒரு வாசகனாக உங்களிடமிருந்து முதலில் நான்பெறக்கூடியது என்று எண்ணுவது வரலாற்று உணர்வு, அதன் மூலம் வரும் சமநிலைப்பார்வை, அதன் மீது எழும் முழுமை நோக்கிய தேடல் என்பதே – இவற்றை கலை என்றஅறிதல் முறை மூலம் அடைவது எனக்கு உவப்பாகவே இருக்கிறது.

மது

அன்புள்ள மது

நான் பதில் சொன்னது உங்கள் கருத்து மீதான தனிப்பட்ட விமர்சனமாக அல்ல என்றும் பொதுவாக நம் சூழலில் பரப்பப்படும் சில கருத்துக்களுக்கான எதிர்வினைதான் என்பதையும் உணர்வீர்கள் என நான் நம்புகிறேன்.

கலையும் இலக்கியமும் மெய்யியலும் ஒரு சமூகத்தின் உச்சியில் நிகழ்பவை. ஏதோ ஒருவகையில் மூலதனம் மையத்தில் குவிந்து அதனால் உருவாக்கப்பட்ட ஒரு சமூகக்கட்டுமானமே அவற்றை உருவாக்கி, பேண முடியும்.

அந்த மூலதனக்குவிப்பை சமூக உருவாக்கத்தின் இன்றியமையாத ஒரு செயல்பாடாக காணலாம். செல்வம் அவ்வாறு குவிக்கப்படுகையிலேயே அது மூலதனமாகிறது. மூலதனமே சமூகத்தை உருவாக்கமுடியும். நாமறியும் எல்லாமே அவ்வாறு உருவாகிவந்தவைதான்.

அதையே கீழ்மட்டத்தில் உழைப்பாளிகளால் உருவாக்கப்பட்ட செல்வம் அதிகாரத்தால் சுரண்டப்பட்டு மையத்தில் குவிக்கப்படுகிறது என்றும் சொல்லலாம். அந்தக்கோணத்தில் பார்த்தால் உலகில் உள்ள எல்லா கலைகளும் எல்லா சிந்தனைகளும் எல்லா சமூகக் கட்டமைப்புகளும் சுரண்டல் மூலம் உருவாக்கப்பட்டவைதான்.

இடதுசாரிகள் தங்களுக்குச் சௌகரியமான முறையில் இந்த பார்வையை விரித்துக்கொள்வார்கள். அதைத்தான் நான் சுட்டிக்காட்டினேன். தங்களுக்குப் பிடிக்காத ஒன்றை, தாங்கள் அழிக்க விரும்பும் ஒன்றை அவர்கள் சுரண்டலின் சின்னம் என்பார்கள் தங்களுக்கு பிடித்தமானவையும் தாங்கள் உருவாக்குபவையும் எல்லாமே அதேபோல சுரண்டலின் மூலம் உருவானவை அல்லவா என சிந்திப்பதை வசதியாக விட்டுவிடுவார்கள்.

நம்மைச்சுற்றி உள்ள அத்தனை சமூக அமைப்புகளும் அத்தனை பண்பாட்டு நிகழ்வுகளும் மக்களின் உழைப்பின் ஒருபங்கை அதிகாரம் மூலம் மேலே தொகுப்பதன் விளைவுகளே. நம் கல்லூரிகள், நம் ஆய்வுக்கூடங்கள், நம்முடைய தொழில்நுட்பங்கள் எல்லாமே அவ்வாறு உருவானவையே. மாதம் ஒரு லட்சம் சம்பளம் வாங்கும் பேராசிரியர் தினம் முந்நூறு ரூபாய் சம்பாதிக்கும் தொழிலாளியிடம் இருந்து பெற்ற வரிப்பணத்தையே பெற்றுக்கொண்டிருக்கிறார். இதுதான் யதார்த்தம்.

இடதுசாரிகள் கலையையும் இலக்கியத்தையும் ஆன்மீகத்தையும் சுரண்டலின் விளைவு என்பார்கள். தொழில்நுட்பத்தையும் கோட்பாடுகளையும் அப்படிச் சொல்லமாட்டார்கள். ஏனென்றால் அவர்களுக்கு கலையிலக்கியம் தேவையில்லை, அவற்றின் தேவையை அவர்களுக்கு புரியவைக்கவும் முடியாது. அவ்வளவுதான்

இன்றைய நவீன அரசுகள் குவிக்கும் மூலதனத்தில் பெரும்பகுதி ஆயுதங்களாக ஆகிறது. இடதானாலும் வலதானாலும் அரசுகள் செய்வது இதையே. மிகமிகச் சிறு பங்கே நலம் நாடும் செயல்களாகின்றன. போருக்குத்தேவையான தொழில்நுட்பத்தை உருவாக்கவே இன்றைய மூளை உழைப்பில் பெரும்பகுதி செலவிடப்படுகிறது. அதற்குத்தான் செல்வம் மடைமாற்றப்படுகிறது. இன்றைய அரசுகளுடன் ஒப்பிடுகையில் பெரும்பகுதி செல்வத்தை ஏரிகளுக்கும் கால்வாய்களுக்கும் செலவிட்ட ராஜராஜன் ஒரு மகத்தான ஆட்சியாளன். நான் வலியுறுத்த நினைப்பது இந்த ஒப்பீட்டையே.

கலைகள் அல்லது சிந்தனைகளுக்குப்பின்னால் சுரண்டல் இருந்ததா இல்லையா என்ற வினாவை அவ்வாறுதான் எதிர்கொள்ளவேண்டும். அந்த மூலதனக்குவிப்பு எந்த அளவுக்கு வன்முறையில்லாமல் நிகழ்ந்தது, எந்த அளவுக்கு பக்கச்சார்பு இல்லாமல் செய்யப்பட்டது, எந்த அளவுக்கு அதன் விளைவுகள் மானுடத்துக்கு உதவின, அவ்வளவுதான் நாம் கேட்கவேண்டிய கேள்விகள்.

‘அடிமைமுறை இல்லாமல் பிளேட்டோவும் அரிஸ்டாடிலும் இல்லை. அவர்கள் இல்லாமல் உலகசிந்தனை இல்லை. ஆகவே அடிமைமுறை இல்லாமல் உலகசிந்தனை இல்லை’ இது பிரெஹ்ட் பாதிவேடிக்கையாக குறிப்பிட்ட ஒரு வாசகம். ஆனால் இது உண்மை. நீங்கள் கற்ற கல்வி பெற்ற பண்பாடு அனைத்துமே மூலதனக்குவிப்பின் – அதாவது சுரண்டலின்- மூலம் உருவானவைதான்.

கலைகளும் இலக்கியமும் எந்த நோக்கத்தில் உருவாக்கப்பட்டவை என்பது அவற்றின் அழகியல் பெறுமதியையும் அறிவார்ந்த முக்கியத்துவத்தையும் தீர்மானிக்குமா , அவற்றின் பின்னணியின் தார்மீகம் அவற்றை மதிப்பிடுவதற்கான அளவுகோலா என்பது உண்மையில் எளிதாகப்பதில்சொல்லத்தக்கதல்ல.

நான் சிறுவனாக இருந்தபோது ஒரு சோவியத் நூலில் ஒரு செய்தியை வாசித்தேன். லெனின் தலைமையில் செம்படை கிரெம்ளின் மாளிகையை கைப்பற்றியபோது பெரும்பாலும் விவசாயிகளும் படிக்காத படைவீரர்களும் சேர்ந்த அந்த படையின் பிரிவு ஒன்று ஹெர்மிட்டேஜ் அருங்காட்சியகத்துக்குள் நுழைந்தது. அங்கே சக்கரவர்த்தி பீட்டர் காலம் முதல் சேகரிக்கப்பட்ட அரிய கலைப்பொக்கிஷங்கள் இருந்தன. அவற்றை தங்களை ஒடுக்கியவர்கள் சுரண்டிச் சேர்த்த செல்வம் என்றே அம்மக்கள் நினைத்தனர். ஆகவே அவற்றை உடைக்க முயன்றார்கள்

செய்திகேட்டு லெனின் ஓடி வந்தார். ‘இவை நம் உழைப்பைச் சுரண்டுபவர்களால் ஆதரிக்கப்பட்ட கலைஞர்களால் உருவாக்கப்பட்டவை. நம் குருதியை விற்று வாங்கப்பட்டவை. ஆகவே இவை நமக்கு ஒவ்வாதவைதான். ஆனால் இன்னொரு கோணத்தில் அவை நம்மை சுரண்டி உருவாக்கப்பட்டவை என்ற காரணத்தாலேயே இவை நம் சொத்துக்கள். இதுவரை நம்மை அடக்கி ஒடுக்கியவர்களிடம் இருந்தன. இனி இவை நம்முடையவை. இவற்றை பேணுவது நம் கடமை. இவற்றைச் செய்தவர்கள் நம் தோழர்கள் அல்லவா?’ என்றாராம்

அந்தக்கூட்டத்தில் எத்தனைபேருக்கு அது புரிந்திருக்கும் என தெரியவில்லை. தன் வரையில் கலையார்வம் கொண்டவரான லெனின் அந்த தருணத்தை தனக்காக பயன்படுத்திக்கொண்டார் என்றுதான் நாம் பார்க்கவேண்டும். ஹெர்மிட்டேஜ் அருங்காட்சியகம் மிகச்சிறப்பாக கம்யூனிஸ்ட் ஆட்சிக்காலத்தில் பேணப்பட்டது.

ஏனென்றால் மொசாதின் இசையை , ஷேக்ஸ்பியரின் நாடகங்களை எல்லாம் லெனின் நிலப்பிரபுத்துவத்தின் ஆக்கங்களாக பார்க்கவில்லை, மானுடத்தின் சாதனைகளாகவே பார்த்தார். அதுவே சரியான பார்வையும் கூட. எங்கே எவரால் எப்படி உருவாக்கப்பட்டிருந்தாலும் கலையிலக்கியமும் அறிவியலும் மெய்ஞானமும் மானுடத்தின் உருவாக்கங்கள் என்பதுதான் உண்மை. தீ தனக்குக் கிடைத்த எல்லாவற்றையும் உண்டு மேலே எழுவதுபோல மானுடத்தின் படைப்பூக்கம் தனக்குச் சாத்தியமான எல்லா வழிகளையும் பயன்படுத்திக்கொண்டு மூண்டெழுகிறது.

அந்தப்பார்வை இல்லாமல் கலையை யாருடையது, ஏன் உருவாக்கப்பட்டது, எவ்வாறு உருவாக்கப்பட்டது என்றெல்லாம் ஆராயப்புகுந்தால் என்னாகும்? கலையை கலையாக அணுகாதவர்கள்தான் தங்கள் எதிரிகளின் கலைச்செல்வங்களை எல்லாம் அழித்தார்கள். தாங்கள் உருவாக்காத, தாங்கள் ஏற்றுக்கொள்ளாத அனைத்தையும் உடைத்தார்கள். அவற்றை தங்களுக்கு எதிரானவை என்றே அவர்களால் பார்க்கமுடிந்தது. கலை அவர்களுக்கு எந்த பரவசத்தையும் அளிக்கவில்லை. அவற்றை உருவாக்கியவர்களைப்பற்றி மட்டுமே அவர்கள் நினைத்தார்கள்.

அந்த மனநிலையை மானுடவிரோதமான காட்டுமிராண்டித்தனம் என்றுதான் நான் சொல்வேன். உண்மையில் இன்றுகூட அந்த மனநிலையே பெரும்பாலானவர்களின் மனங்களுக்குள் உள்ளது. ஏனென்றால் அதுவே பாரம்பரியமாக ஒருவருக்கு அளிக்கப்படுவதும் அவரிடம் இயல்பாக இருப்பதுமாகும். அதை தன் கல்வியால் பண்பாட்டால் ஒருவர் வென்று செல்லும்போதே கலையையும் சிந்தனைகளையும் மானுடநோக்கில் பார்க்கும் மனவிரிவை அடைகிறார்.

அவ்விரிவை அடையாத குறுகிய மனங்கள் தங்கள் மனக்குறுகலையே மனிதாபிமானம் என்றும் தார்மீக ஆவேசம் என்றும் வெளிப்படுத்துகின்றன. அவை கொள்கைகளால் முக்காடு போட்ட மூடத்தனங்கள் அன்றி வேறல்ல. உலகிலுள்ள எந்த ஒரு கலைச்செல்வமும் அவற்றை உருவாக்கிவர்களுக்கு அன்றி பிறருக்கு அன்னியமானவையே. அவற்றை அவர்கள் அழிக்கமுனைந்தால் உலகில் கலையே இருக்காது.

இந்த உலகின் இலக்கியச்செல்வங்களை கலைச்சாதனைகளை மெய்ஞானநூல்களை கணிசமான அளவுக்கு அழித்தது அந்த குறுக்குநோக்குதான். அதிலிருந்து மெல்லமெல்லத்தான் மானுடம் மேலே வந்தது. இன்னும் உலகில் பெரும்பகுதி அந்த எல்லைக்குச் செல்லவில்லை. புத்தர்சிலைகளை உடைத்த மாவோ சே துங்கும் தாலிபான்களும் ஒரே மனநிலையின் இரு முகங்களையே காட்டுகிறார்கள்

ஹம்பியை மீட்டெடுக்க பெரும்பணியாற்றிய பிரிட்டிஷ் ஆய்வாளர் ராபர்ட் சீவெல் [Robert Sewell ] ஒருமுறை சொன்னாராம். பிரிட்டிஷார் பதினைந்தாம் நூற்றாண்டின் மதமோதல் காலகட்டத்தில் தங்கள் நாட்டில் இருந்த அரிய கத்தோலிக்க கலைச்செல்வங்களை உடைத்து அழித்தமைக்கு இந்தியாவில் பிராயச்சித்தம் செய்ய வேண்டும் என்று. இந்தியாவின் கலைப்போகிஷங்கள் பிரிட்டிஷார் இல்லையேல் அழிந்திருக்கும். அவற்றை ‘பிற’ருடைய கலை என பார்க்காமல் மானுடத்தின் கலை என்று பார்க்கும் பார்வையை அவர்கள் கொண்டிருந்தார்கள் என்பது மானுடத்தின் நல்லூழ்.

சோற்றுக்கும் துணிக்கும் ஒன்றுக்கொன்று முரண்டுகொண்டு போராடிக்கொண்டு, நோயிலும் விபத்துக்களிலும் செத்துக்கொண்டு, பெற்றுப்பெருகி இந்த மண்ணில் வளர்ந்துகொண்டிருக்கும் மனிதகுலம் என்ற இந்த பிரம்மாண்டமான உயிர்த்தொகை ஏனோ தன் ஒட்டுமொத்தமாக ஓர் அறிவுப்பேரியக்கத்தை கொஞ்சம் கொஞ்சமாக நூற்றாண்டுகளினூடாக திரட்டிக்கொண்டிருக்கிறது. கலை தத்துவம் இலக்கியம் அறிவியல் மெய்யியல் எல்லாம் அடங்கிய ஒற்றைச்செயல்பாடு அது.

மானுடம் உருவாக்கிக்கொண்டு செல்லும் இந்த அறிவியக்கத்தின் இறுதி இலக்கென்ன, இதன் ஒட்டுமொத்த பயன் என்ன என்றெல்லாம் நம்மால் சொல்லிவிட முடியாது. அது நம்மை விட பலகோடி மடங்கு பிரம்மாண்டமானது. மண்ணில் உள்ள ஒட்டுமொத்த மனிதர்களின் ஒட்டுமொத்த அறிவைவிட பல்லாயிரம் மடங்கு பெரியது அது.நாம் உணர்ந்துகொள்ள முடியாத பிரம்மாண்டமான காலவெளியில் அது இங்கே நிகழ்கிறது.

அந்த அறிதல் ஒருவனுக்கிருக்குமென்றால் தஞ்சைபெரியகோயிலும் தாஜ்மகாலும் நியூயார்க் சுதந்திரதேவி சிலையும் ஷேக்ஸ்பியரும் கம்பனும் தியாகராஜ சுவாமிகளும் மொசாதும் என கோடானுகோடி துளிகள் அடங்கிய மகத்தானதொரு விராடரூபத்தை அவன் ஒவ்வொரு கலையிலும் ஒவ்வொரு ஞானத்திலும் கண்டுகொள்ளமுடியும்.

ஒரு கலைரசிகன் ஒவ்வொரு கலைப்படைப்பிலும் அந்த பிரம்மாண்டமான இயக்கத்தை உணர்வான் என்றால்தான் அவன் உண்மையில் கலையை ரசிக்கிறான். ஒரு கலைஞன் அந்த விஸ்வரூபத்தை தரிசித்துவிட்டான் என்றால் தான் அதன் ஒரு பகுதி என்ற மாபெரும் தன்னகங்காரமும் அதன் மிகமிகச்சிறிய துளிமட்டுமே தான் என்ற தன்னடக்கமும் ஒரேசமயம் அவனுக்கு உருவாகும்

ஜெ

மறுபிரசுரம்/ முதற்பிரசுரம் Jun 17, 2012


எகிப்திய பிரமிடுகளை அடிமைகள் கட்டினார்களா?


ராஜராஜன் காலகட்டம் பொற்காலமா?


who built the pyramids?

முந்தைய கட்டுரைஇருதீவுகள் ஒன்பது நாட்கள் – 10
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 65