அவர்கள்

அன்புள்ள ஜெயமோகனுக்கு,

வைரமுத்துவிடம் ஒருமுறை ட்விட்டரில் கேள்வி கேட்கும் வாய்ப்பு வந்தது. தொல்காபியத்தில் திராவிடம் என்ற சொல் இனத்தை குறிப்பதாக எங்குமே சொல்லப்படவில்லையே என்று கேட்ட போது “குழந்தைகள் பெறுவதற்கு முன்பே ஒருத்தியைத் தாய் என்று எப்படிச் சொல்ல முடியும்? திராவிட மொழிக் குடும்பம் பிறக்காமல் தமிழ் கன்னியாய் இருந்த காலம் அது” என்று பதிலளித்தார். நான்,அவை ஐரோப்பியர்களின் வருகைக்கு பின்பு, மெக்கலேயால் போலியாக “உருவாக்கப்பட்டவை” என்று பதில் அளித்தேன். அதற்கு மறுபதில் இன்னும் அவரிடமிருந்து வரவில்லை. தொல்காப்பியத்தின் காலம் குறித்தும் ஐயங்கள் எனக்கு உண்டு.

முகநூலிலும் திராவிடம் குறித்த சர்ச்சை எழுந்த போதும் எத்தனையோ ஆதாரங்களை முன்வைத்து விவாதித்த போது தங்களின் கட்டுரை ஒன்றையும் சான்றாக சுட்டிக்காட்ட நேர்ந்தது. உடனே வெற்றுக் கூச்சல்கள். “ஆர்.எஸ்.எஸ்.ஜெயமோகனையா மேற்கோள் காட்டுகிறாய்? நீங்கள் ஆர்யர்கள்.பார்ப்பனர்கள். நாங்கள் சுயமரியாதை மிக்க இனம்” என்றெல்லாம் கொதித்தெழ ஆரம்பித்து விட்டார்கள். இவர்களுக்கு எதிரான ஒரு நிலைப்பாட்டை எடுத்த ஒரே காரணத்திற்காக என்னை பார்ப்பானாக்கியது எப்படி என்பது இன்னும் விளங்கவில்லை. ஒரு கருத்து முன்வைக்கப்படும்போது, அக்கருத்தை மேற்கொண்டு விவாதிக்காமல் அதை முன்வைத்தவனையே விமர்சிப்பவர்களிடம் போதிய stuff இல்லை என்றே எண்ணத் தோன்றுகிறது.

காந்தி குறித்த கட்டுரைகளை எனது வலைப்பூவில் வெளியிட்ட போதுதான் காந்தி மீது இந்நாட்டில் எத்தனை விதங்களில் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது என்பதை அனுபவப்பூர்வமாக உணர முடிந்தது. “தென்னாப்ரிக்காவில் காந்தி ரயிலில் இருந்து தள்ளி விடப்பட்டதற்கு இனப்பாகுபாடு காரணமில்லை.சரியான பயணச்சீட்டு இல்லாததே காரணம் என கேள்விப் பட்டேன். அது பற்றி உங்கள் கருத்து என்ன?” என்றெல்லாம் கேட்டிருந்தார்கள்.

இவர்களை எப்படி ஒரு ஆரோக்கியமான விவாதத்திற்கு உட்படுத்துவது? எனது கருத்துகள் தவறாக இருப்பின் அதை வலுவான ஆதாரங்களோடு நிரூபிப்பார்களானால் என் தரப்பை மாற்றிக்கொள்ள நான் தயாராக உள்ளபோது, இவர்களிடம் அத்தன்மையை எங்கனம் உருவாக்குவது? நேர விரயத்தை தவிர எவ்வித மாற்றமும் இல்லை.

பின்குறிப்பு : தங்களின் “காந்தியின் சனாதனம்” கட்டுரைகளை எனது வலைப்பூவிலும், முன் அனுமதி பெற்று, வெளியிட்டுளேன். நன்றி. http://platonicwave.blogspot.in/

என்றென்றும் அன்புடன்
கோகுல்ப்ரசாத்

 

அன்புள்ள கோகுல்பிரசாத்,

எண்பதுகளில் நான் ராடிக்கல் ஹ்யூமனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரும் கேரளச் சிந்தனையாளருமான எம்.கோவிந்தனை அவரது இல்லத்தில் சந்தித்துப்பேசிக்கொண்டிருந்தேன். கோவிந்தன் சி.ஐ.ஏ அமைப்பின் நிதியுதவி பெறும் கைக்கூலி என்பதற்கான ‘ஆதாரங்கள்’ கைவசமிருப்பதாக ஓர் இடதுசாரி இதழ் அப்போது ஆவேசமான கட்டுரை ஒன்றை எழுதியிருந்தது. அதன் மூர்க்கமும் அபத்தமும் என்னை கொந்தளிக்கச் செய்தது. நான் அதைப்பற்றி கோவிந்தனிடம் கேட்டேன்.

‘அவர்களின் தெய்வம் அப்படிச் செய்யச்சொல்கிறது. என்னசெய்ய?’ என்று அவர் சிரித்தார். பின்னர் அருகே இருந்த ஒரு நூலை எடுத்தார். கெ.பானூர் எழுதிய ‘கேரளத்திலே ஆப்ரிக்கா’ என்ற நூல். கேரள மலைப்பழங்குடிகளைப்பற்றியது. அதிலிருந்து சில பகுதிகளை வாசித்து வேடிக்கையாக இடதுசாரிக் குழுக்களை அவர்களுடன் ஒப்பிட்டுப் பேச ஆரம்பித்தார்.

கேரளப் பழங்குடிகளுக்கு புழவிலக்கு என்ற ஆசாரம் உண்டு. அவர்கள் ஒரு ஆற்றில் இருந்து இன்னொரு ஆறு வரைக்குமான நிலத்தில்தான் வாழவேண்டும். அந்த எல்லையை தாண்டக்கூடாது. தாண்டினால் சாதிவிலக்கு உண்டு.

அவர்களுக்கு பிற பழங்குடிகள் பிறவி எதிரிகள். அவர்களில் ஒருவர் குடித்த நீரை இவர்கள் குடிக்க மாட்டார்கள். அந்த நீரில் கொஞ்சம் காட்டு இலைகளை பறித்துப்போடுவார்கள். அப்போது ஆறு இன்னொன்றாக ஆகிவிடுகிறது. அந்த நீரை குடிக்கலாம்

அவர்களிடம் பல தீயசக்திகள் உண்டு. நோய், அழுக்கு போன்றவற்றின் அதிதேவதைகள் அவை. ஒருவரை பிடிக்கவில்லை என்றால் அந்த தேவதைகளை அவர் மீது ஏவி விடுவார்கள். அந்த தேவதைகள் அவர்மேல் ஏறிக்கொண்டதும் அவர் நோயும் அழுக்கும் கொண்டவராக ஆகிவிடுகிறார்.அதன்பின் அவரைக் கொல்லலாம், தப்பில்லை.

யானைமீது உண்ணிகள் இருந்து காட்டுக்குள் நடமாடுவதுபோலத்தான் அவர்கள் தங்கள் கடவுளில் ஒட்டிக்கொண்டு வாழ்கிறார்கள். அவர்கள் செய்பவை எதற்குமே அவர்கள் பொறுப்பில்லை. கடவுள்தான் செய்கிறார்.

தெய்வங்களுக்கு ஒருவனை பிடிக்காமலாகும்போது அவன் மனதில் தங்களைப்பற்றிய ஐயங்களை உருவாக்குகின்றனர். அப்படி ஐயப்படுபவர்களை உடனடியாக அந்த தெய்வங்களுக்கே பலியிடவேண்டும்.

நம்மூர் ‘பகுத்தறிவு’ ‘முற்போக்கு’ கும்பல்களும் முழுக்கமுழுக்க இதே விதிகளின்படி இயங்குபவர்கள். அவர்களைப்போல ஒற்றைப்படையான மூர்க்கமான நம்பிக்கைகள் கொண்ட, எல்லைகளை ஒருபோதும் தாண்டாத, பிறதரப்பு மீது வெறுப்பை மட்டுமே கொண்ட, எந்தவித அறிவார்ந்த மாற்றுவழிகளுக்கும் இடம்தராத தேங்கிப்போன கூட்டம் எதுவும் இங்கில்லை.

அதற்கும் அப்பால் ஒன்றுள்ளது. இன்று திராவிடவாதம் அல்லது தமிழியம் என்பது பெரும்பாலும் சாதிவெறியின் பொதுவெளி முகம் மட்டுமே.

என்னைப்பொறுத்தவரை நான் விவாதிப்பது இந்த தரப்புகளை தங்கள் அடையாளங்களாகக் கொண்டு கூச்சலிடுபவர்களிடமல்ல. இங்கே இந்த தரப்பு உருவாக்கும் வாதங்களுடன் மட்டுமே.

ஜெ

May 27, 2012 முதற்பிரசுரம்

முந்தைய கட்டுரைஞானக்கூத்தன், நினைவுகள்
அடுத்த கட்டுரைசாகான்!