வாசிப்பும் பகுத்தறிவும்

ஐயா , என் பெயர் காளிதாசன் , பொறியியல் படிப்பை முடித்து விட்டு தற்போது தகவல் தொழில் நுட்பத் துறையில் வேலை பார்த்து வருகிறேன். எனக்கு சினிமாவில் ஆர்வம் உண்டு. நான் ஒரு மூன்று மாதங்களுக்கு முன்பு ஒரு செய்தி படிக்கும் பொது அதில் அங்காடி தெரு திரைப்படத்தின் வசனம் ஜெயமோகன் என்று ஒரு செய்தி இருந்தது , பின்பு யார் அந்த ஜெயமோகன் என்று தேடும் போது எனக்கு மிகவும் சந்தோசமாகவும் அதே நேரத்தில் வியப்பாகவும் இருந்தது, நீங்கள் என்னுடைய ஊர்தான் என்ற செய்தி , அதன் பிறகு உங்களை பற்றிய அறியும் ஆர்வம் அதிகரித்தது. பிறகு உங்களை பற்றி படிக்க படிக்க அதை விட பெரிய அதிர்சிகளும் ஆனந்தங்களும் எனக்கு விடையாய் கிடைத்தன . இதற்கு பின் எனக்குள்ளே ஒரு ஆசை, ஒரு தூண்டுதல், ஒரு விருப்பம் உங்கள் நூல்களை படிக்க. அன்றே நான் ஆன்லைன மூலமாக வாங்கினேன் உங்களுடைய நாவல் தொகுப்பு (ஜெயமோகன் குறுநாவல்கள்) . அதை படிக்கும் போது தான் தெரிந்தது அவை அனைத்தும் உங்கள் சிறு வயதில் நடந்த நிகழ்வுகளின் தொகுப்பு என்று.

இதில் வேதனை தர கூடிய விஷயம் என்ன வென்றால் அதில் பல வார்த்தைகளுக்கு எனக்கு விளக்கம் புரியவில்லை , அப்போது தான் தெரிந்தது உங்கள் புலமையும் என் அறியாமையின் நிலைமையும் , இருந்தாலும் சில வார்த்தைகளுக்கு அர்த்தம் கேட்டு தெரிந்து கொண்டேன் ஆனாலும் இன்னும் சில வார்த்தைகள் புரியாமல் புதைந்து கிடக்கின்றன.

இப்போது என் ஆர்வம் இன்னும் அதிகரித்து உள்ளது , நிறைய நூல்கள் படிக்க வேண்டும் என்று. பொதுவாக நான் ஒரு சோம்பேறி , அதனால் அதிக நேரம் கிடைப்பதில்லை கிடைத்தாலும் நான் பயன் படுத்துவதில்லை. நான் வேலை செய்யும் துறை என்னை அப்படி மாற்றியதா அல்லது இது நோயா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் இப்போது எனக்குள்ளே ஒரு மாற்றம் , ஒரு ஆசை இன்னும் நிறைய நூல்கள் படிக்க வேண்டும் என்று.

மீண்டும் இறைவனை வேண்டி நீங்கள் நீண்ட நாள் நலமாக வாழ விரும்பும் உங்கள் அன்பு வாசகர்கள் வட்டத்தில் என்னையும் ஒரு புள்ளியாக இணைத்து கொள்கிறேன்.

காளிதாசன்

அன்புள்ள காளிதாசன்

நன்றி

தாமதமான மின்னஞ்சலுக்கு மன்னிக்கவும். மின்னஞ்சல் எங்கோ மாட்டிக்கொண்டுவிட்டது

நீங்கள் அடைந்த ஆரம்பகட்ட தயக்கங்கள் பெரும்பாலும் நான் கையாளும் மொழி சார்ந்தவை. சிற்றிதழ்ச்சூழலில் தொடர்ச்சியாக பலர் பேசிப்பேசி உருவாக்கிக்கொண்ட மொழி இது. பொதுமொழியில் பல பக்கங்களுக்கு விரித்துப் பேசக்கூடிய அதே விஷயங்களை சுருக்கமாகவும் செறிவாகவும் பேச இந்த மொழி உதவுகிறது. பெரும்பாலும் கலைச்சொற்கள் அடங்கியது இது. விரிவாகப்பேசப்பட்டு அனைவரும் பொதுவாக அறிந்த விஷயங்களை சுட்டிக்காட்ட ஒரு குறிப்பிட்ட சொல்லை பயன்படுத்துவைதே கலைச்சொல் என்கிறோம். அவ்விஷயங்களை மீண்டும் சொல்லாமல் சுட்டிக்காட்டிச்செல்ல அந்த கலைச்சொல் நமக்கு உதவுகிறது.கொஞ்சம் வாசித்தாலே இது பழகிவிடும். அதன்பின் முதலில் எழும் திகைப்பு மறந்துவிடும்.

ஜெ

திரு ஜெ அவர்களுக்கு வணக்கம்,

தங்களை தொடர்ந்து வாசிக்கிறேன், அறம் வரிசை கதைகள், காடு, விஷ்ணுபுரம். நீங்கள் பரிந்துரைக்கும் படைப்புகளையும் தேடி வாசிக்கிறேன். உங்கள் வழியாகவே புத்துயிர்ப்பு, போரும் அமைதியும் வந்தடைந்தேன்.

காடு நாவலை வாசிக்கும் போது அடைந்த பரவசம், அதிலிருந்து மீளவே முடியவில்லை. வழி தெரியாமல் பெரு வனத்தில் தொலைந்த உணர்வு, வெளியே வரவும் வழி தேட தோன்றவே இல்லை. நானும் ஒரு வன நீலியை மனதிற்குள் தேடிக்கொண்டிருந்தேன். மேலும் உங்களை வாசிக்க வேண்டாம், காடு ஏற்படுத்திய பரவசத்தை வேறு உங்கள் படைப்புகள் கொடுக்குமா என்ற அச்சம், நன் அந்த பரவசத்தை இழக்க விரும்பவில்லை. ஆனால் அந்த மன நிலையில் இருந்த போதுதான் நீங்கள் அறம் வரிசை படைத்தீர்கள். அது மேலும் எனக்குள் வேறு திறப்புகளும் சிந்தனைகளும் கொடுத்தது.

விஷயதிற்கு வருகிறேன், எல்லா சூழலிலும் பகுத்தறிவே சிறந்த தர்க்கம், அந்த தர்க்கத்தை கொண்டே அனைத்தையும் அணுகவேண்டும் என ஆரம்ப காலங்களில் உறுதியோடிருந்தேன் (இலக்கியம் வாசிக்க அறிமுகம் ஆனபோது, 5 ஆண்டுகளுக்கு முன்பு) தற்ப்போது ஆன்மிக தர்க்கங்களும் ஒரு விஷயத்தை அணுக பொருத்தமாகவும் உள்ளது. ஆன்மிகமும் பகுத்தறிவும் ஒரே புள்ளியா, அல்லது நீங்கள் கூறுவது போல முரணியக்கமா? இல்லை நான் என்னை குழப்பிக்கொள்கிறேனா?

சரியாக நினைவிருக்கிறது அறம் வாசித்த பிறகு தான் எனக்கு இந்த அகச்சிக்கள் ஆரம்பித்திருக்க வேண்டும்.நான் பின் தொடர வேண்டியது எது. என் தேடுதல் எதை நோக்கி முன்னகர்ந்தால் சரியாக இருக்கும்.

தங்களுக்கு நேரம் இருக்குமாயின் விளக்கவும்.

நன்றி

அருள் பிரசாத்

அன்புள்ள அருள் பிரசாத்

பகுத்தறிவு ஆன்மீகம் போன்ற சொற்களை நாம் சூழலில் பலரும் பலவகையாக போட்டுப்பேசுவதைக் கேட்டு குழப்பிக்கொள்கிறோம். பகுத்தறிவு என்பது ஆன்மீகத்தும் உணர்வெழுச்சிகளுக்கும் கலையுணர்ச்சிக்கும் எல்லாம் எதிரானதாக இருந்தாகவேண்டும் என்று நினைத்துக்கொள்கிறோம். அப்படி இருக்கவேண்டுமென்பதில்லை.

பகுத்தறிவு என நாம் இங்கே சொல்வது புறவயமான தர்க்கத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட ஓர் அணுகுமுறையை. இதை ஆங்கிலத்தில் Rationality என்கிறார்கள். நம்பிக்கை அல்லது உணர்வெழுச்சி ஆகியவற்றை மட்டுமே கருவியாகக் கொள்ளாமல் புறவயமான பார்வையை, நடைமுறை நோக்கை எப்போதுமே அடிப்படையாக வைத்திருப்பதுதான் இது

என்னுடைய நோக்கில் இது ஒரு நவீன மனிதனுக்கு இன்றியமையாதது. இதிலிருந்தே எல்லா சிந்தனைகளும் ஆரம்பிக்கவேண்டும். எப்போதும் உண்மையறிதலின் ஒரு ஆதார விதியாக இது இருந்துகொண்டிருக்கவேண்டும்.

ஆனால் இதையே ஒரு மதமநம்பிக்கை போல, மூடநம்பிக்கைபோல கையாள ஆரம்பித்தால் பல விஷயங்களை இழக்க ஆரம்பிப்போம். கலையுணர்ச்சியை, நுண்ணிய உணர்வுகளை, பிரம்மாண்டமான மனவிரிவை எல்லாம் நிராகரிப்போம். அது நம்மை வெறும் நடைமுறைவாதிகளாக ஆக்கும். கலையும் அறிவியலும் நம்மை விட்டு அகலும். அன்றாடவாழ்க்கையின் அன்றாட விஷயங்கள் மட்டுமே எஞ்சும்.

கலையுணர்ச்சிகளும், பல்வேறு உணர்வெழுச்சிகளும் மனிதனின் அகம் கொள்ளும் இயல்பான பயணங்கள் என்று கொண்டு அவற்றுக்கும் பகுத்தறிவு சார்ந்த ஒரு விளக்கத்தை நாம் அடைய முடியும். அந்த விளக்கம் ஒரு உறுதியான கல்பீடம்போல. அதன்மேல் நின்றபடி நாம் அருவமான, சரியாக விளங்கிக்கொள்ளமுடியாத எல்லா உணர்வெழுச்சிகளையும் அடைய முடியும்.அவற்றை நுட்பமாக ஆராய முடியும்.

நீலவானத்தை நிமிர்ந்து பார்க்கையில் நாம் அடையும் உச்சகட்ட மனவிரிவை பகுத்தறிவைக்கொண்டே எளிதில் விளக்கலாம். எல்லைக்குட்பட்டதும் பருவடிவமானதுமான பூமியை அறிந்து இதில் வாழும் மனிதனுக்கு நேர் மாறான ஒன்றாக, எல்லையின்மையும் அருவத்தன்மையும் கொண்டதாக வானம் இருக்கிறது. ஆகவே என்றுமே விண்ணை மண்ணுக்கு மாற்றானதாக எண்ணிக்கொள்கிறான். மண்ணின் துயரங்களுக்கெல்லாம் விண் மாற்றானது என கற்பனை செய்துகொள்கிறான். ஆகவே அந்த மன எழுச்சி ஏற்படுகிறது. இது ஒரு பகுத்தறிவு விளக்கம்.

இந்த விளக்கத்தைக்கொண்டு விண்ணைப்பற்றி மதநூல்களில் உள்ள எல்லா உருவகங்களையும் நிராகரித்து எள்ளி நகையாடினால் நாம் முதிராத பகுத்தறிவுவாதி. விண்ணைப்பற்றி கவிஞன் அடையும் மன எழுச்சிகளையும் படிமங்களையும் சாதாரணமாக நினைத்தால் நாம் பகுத்தறிவை மூடநம்பிக்கையாகக் கொண்ட அசடு. நேர்மாறாக இந்த விளக்கம் நமக்கு அந்த உணர்வெழுச்சிகளை நாமும் அடைய, அவற்றை அடைந்தவர்களின் அந்த அடிப்படை தரிசனநிலைகளை உணர தடையாக இல்லை என்றால் நாம் சிந்தனை முதிர்ச்சி கொண்டவர்.

வானத்தைப்பற்றிய நம்முடைய பகுத்தறிவு விண்வெளியையே தன் உடலாகக்கொண்டு விரிந்து கிடக்கும் விஷ்ணு என்ற மதப்படிமத்தை மேலும் நுட்பமாக புரிந்து உள்வாங்க உதவ வேண்டும்.அந்த படிமம் உருவாக்கும் பிரபஞ்ச டஹ்ரிசனத்தை, அதன் மூலம் உருவாகும் உச்சகட்ட உணர்வுகளை நாமும் உணரமுடியவேண்டும். அப்போது மட்டும்தான் அது அறிவு. இல்லையேல் அது இன்னொரு நம்பிக்கை மட்டுமே.

பகுத்தறிவு என்றோ நுண்ணறிவு என்றோ ஆன்மீகஅறிவு என்றோ சொல்லப்படுவதெல்லாம் அறிவின் பல முகங்கள்தான். அறிவை நாம் புரிந்துகொள்ளும் வழிகள் மட்டும்தான் அவை. அறிவு ஒன்றுதான். அது நம்மையும் நாம் வாழும் இப்புடவியையும் அறிதல். அறிதலினூடாகக் கடந்து செல்லுதல். அதில் பேதங்கள் இல்லை. அறிவின் எந்த ஒரு பகுதியும் இன்னொன்றை மறுதலிக்காது. ஒன்று இன்னொன்றை விளக்கும், முழுமைசெய்யும்

ஜெ

முந்தைய கட்டுரைஓணம்பாக்கம்
அடுத்த கட்டுரைசாமர்வெல்