கற்பழித்ததா இந்திய ராணுவம்?

அன்புள்ள ஜெ,

நான் இந்திய ராணுவத்தில் 28 வருடங்களாக கர்னலாக பணியாற்றி ஓய்வுபெற்றவன். பல்வேறு விவாதத்துக்குரிய விஷயங்களில் உங்கள் நன்கு சமன்செய்யப்பட்ட கருத்துக்களை வியந்து கவனித்து வருபவன்

சமீபத்தில் உங்கள் கட்டுரைகளில் ராணுவங்கள் கூட்டான பெரும் கொள்ளை மற்றும் கற்பழிப்புகளில் ஈடுபடுவதைப்பற்றி நீங்கள் எழுதியிருப்பதை வாசித்தேன். அதெல்லாம் கடந்தகாலத்தில் உண்மையாக நிகழ்ந்திருக்கலாம், ஆனால் அவை இப்போது அவ்வளவு சாதாரணம் அல்ல. நவீன ராணுவங்கள் எல்லாம் முப்பதுபேர் கொண்ட பிளாட்டூன் எனப்படும் அடிப்படை சிறுகுழுக்களால் வலுவாகக் கட்டப்பட்டவை. லெஃப்டினெண்ட் தரத்தில் உள்ள இளம் அதிகாரிகளால் அவை நடத்தப்படும். இந்த இளைஞர்கள் பெரும்பாலும் கொள்கைப்பிடிப்பும் அதற்கான களங்கமின்மையும் கொண்டவர்களாகவும் இலட்சியவாதத்தை இழக்காதவர்களாகவுமே இருப்பார்கள். ரோந்து சுற்றுதல், கண்காணித்தல் போன்ற வேலைகளை ஈடுபாட்டுடனேயே செய்வார்கள். அவர்கள் இதைப்போன்ற கீழ்த்தரமான செயல்களைத் தங்கள் வீரர்கள் செய்ய ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்கள். இதைப் பலமுறை நான் நேரில் கவனித்து உறுதிப்படுத்திக்கொண்டிருக்கிறேன். இந்த ராணுவ வீரர்கள் ஒரு அராஜகச்சூழலில் பிறந்துவளர்ந்தவர்கள் அல்ல. நாங்களும் மனிதர்களே. எங்களுக்கும் மனைவி குழந்தைகள் சகோதரிகள் அன்னையர் உண்டு. நாங்களும் அவர்களை நேசிப்பவர்கள்தான். நாங்களும் குடிமை மனசாட்சி கொண்டவர்களே.

நான் ஜம்மு காஷ்மீரில் பல்லாண்டுகள் தொடர்ச்சியாகப் பணியாற்றியவன். என் அனுபவத்தில் நான் ஒருமுறைகூட உண்மையிலேயே கற்பழிப்பு நடந்த ஒரு நிகழ்ச்சியைக்கூடக் கேள்விப்படவோ சந்திக்கவோ இல்லை. பரஸ்பர ஒப்புதல் மூலம் உறவு நடப்பதுண்டு. ஏழைப்பெண்களை அவர்களின் வறுமையைப்பயன்படுத்தி சிலர் பாலியலுக்கு பயன்படுத்திக்கொள்வதுண்டு. பணம், ரேஷன் பொருட்களை இதற்காகப் பயன்படுத்திக்கொள்வார்கள். அதுகூட மிக அபூர்வம். அதன் அபாயம் மிக அதிகம். மற்றபடி கற்பழிப்பு என்பதற்கெல்லாம் வாய்ப்பே கிடையாது. அப்படி சில குற்றச்சாட்டுகள் மிக அபூர்வமாக வரும், விசாரித்தால் அவை தவறென தெரியும்

உண்மையில் நான் இன்று தமிழக ஊடகங்கள் திட்டமிட்டு இலங்கை சென்ற இந்திய அமைதிப்படைக்கு எதிராக செய்து வரும் அவதூறுப்பிரச்சாரத்தால் மிக மனம் வருந்துகிறேன். இலங்கையில் இந்திய ராணுவம் தமிழ்ப்பெண்களைக் கூட்டுக்கற்பழிப்பு செய்தது என்று இங்கே எழுதுகிறார்கள், மேடையிலே பேசுகிறார்கள். மொத்தத் தமிழ்நாடே மெல்லமெல்ல இந்தத் திட்டமிட்ட அவதூறை நம்புகிறது. உங்கள் எழுத்துக்களைப்பார்க்கையில் அதை நீங்களும் நம்புவதாகவே தெரிகிறது. நீங்கள் இவ்விஷயத்தின் மறுபக்கத்தைச் சொல்லவில்லை என்பதனால் நான் இதை எழுதுகிறேன்.

நான் இவ்விஷயத்தை முன்னாள் ராணுவத்தினருக்கான பல தளங்களிலும் இதழ்களிலும் விவாதித்திருக்கி இதைப்பற்றிக் கேட்டபோது நான் பெற்ற பதில்களை இணைத்திருக்கிறேன். இந்த அதிகாரிகள் எல்லாருமே ஓய்வுபெற்றவர்கள். இந்திய அமைதிப்படையில் வேலைபார்த்தவர்கள். அவர்கள் பொய் ஏதும் சொல்லவேண்டிய தேவை இல்லை

ஜாஸ் டயஸ்

*

[email protected] – தளத்தில் ஜாஸ் டயஸ் எழுதியது

அன்புள்ள மூத்த வீரர்களே

நான் தமிழ் இதழ்கலில் இந்திய ராணுவம் ஆபரேஷன் பவன் நடவடிக்கையின்போது ஏராளமான தமிழ்ப்பெண்களை கற்பழித்தது என்ற செய்திகளை வாசிக்கிறேன். இது இன்று திட்ட்மைட்டு பரப்பட்டு பெரும்பாலானவர்களால் நம்பவும் படுகிறது. என்னுடைய நோக்கில் இது மிகமிக அபத்தமான ஒரு குற்றச்சாட்டு. ஏனென்றால் நான் பணியாற்றிய எந்த ராணுவ மையத்திலும் இந்தவகையான செயல்பாடுகளுக்கான வாய்ப்பே கிடையாது.

நான் எதையாவது கவனிக்காமல் விட்டுவிட்டேனா? அக்காலத்தில் இலங்கையில் பணியாற்றிய ஏதாவது மூத்த ராணுவ வீரர் என்னுடைய ஐயத்தை தீர்க்கமுடியுமா? நாம் ஏன் இந்த அப்பட்டமான அவதூறுகளை தீர்க்க எந்த நடவடிக்கையையும் எடுப்பதில்லை?

ஜாஸ்

[email protected] தளத்தில் ramantn sarma
எழுதியது

அன்புள்ள மூத்த வீரர்களே

ஜாஸ் டயஸின் மின்னஞ்சலை ஒட்டி இதை எழுதுகிறேன்.

நான் இந்திய அமைதிப்படை இலங்கையில் இருந்த மொத்த நாட்களிலும் அங்கே சி.சி. பீரங்கிப்படையில் பணியாற்றினேன். 1990ல் படைகள் அந்தத் தீவை விட்டு விலகுவது வரை அங்கிருந்தேன். கர்னல் ஹரிஹரன் அப்போது என்னுடைய தலைவராக அங்கே இருந்தார்

பாயிண்ட் பெட்ரோ மற்றும் பட்டிகொலாவ் இடங்களில் விடுதலைப்புலிகளை அரசு உத்தரவின்படி வைத்திருந்த தடுப்புக்காவல் நிலையங்கள் இந்திய ராணுவத்தினரால் காவல்காக்கப்பட்டன. நான் என் பணியின் பகுதியாக நான் அவற்றைப் பார்வையிடச் செல்வதுண்டு. ஒருமுறை நான் பாயிண்ட் பெட்ரோ மையத்துக்குச் சென்றபோது எல்.டி.டி.இ யின் ஒரு செய்தித் தொடர்பாளர் என்னிடம் இந்திய அமைதிப்படையால் கற்பழிக்கப்பட்ட ஒரு பெண் அங்கே இருப்பதாகச் சொன்னார்.

ஆகவே நான் அந்தப்பெண்ணைப் போய்ப் பார்த்தேன். தமிழ் ஊடகவியலாளர்களின் முன்னால் அந்தப்பெண்ணை விசாரித்தேன். அந்தப்பெண்மணிக்கு எண்பது வயதிருக்கும். அவர் மிகுந்த அமைதியுடன் இருப்பதாகவே தோன்றியது. இந்திய அமைதிப்படையின் முகாம் ஊழியர்கள் அவரை நன்றாகவே கவனித்துக்கொண்டிருப்பதாகச் சொன்னார்

விடுதலைப்புலிகளின் பேச்சாளர் அவளிடம் அவளை இந்திய அமைதிப்படை கற்பழித்த நிகழ்ச்சியைப்பற்றி சொல்லும்படி தூண்டினார். அவள் விழித்தாள். அவரிடம் ’யார் கற்பழித்தது, யாரை?’ என்று கேட்டாள்

கொஞ்சநாள் கழித்து நான் செனைக்கு வந்தேன். விமானநிலையத்தில் இருந்து இந்திய அமைதிப்படை தலைமையகத்துக்குச் சென்று கொண்டிருந்தபோது நான் பேருந்துகளில் இந்திய அமைதிப்படையை அவமதித்து ஒட்டப்பட்டிருந்த பல சுவரொட்டிகளைப் பார்த்தேன். இந்திய அமைதிப்படை கற்பழிப்புகளில் ஈடுபட்டது என்று அவை குற்றம் சாட்டின. விளம்பரப்பலகைகளில் ஒட்டப்பட்டிருந்த வண்ணச்சுவரொட்டிகளில் பாயிண்ட் பெட்ரோவில் நான் பார்த்த அதே வயதான பெண்மணியின் படமிருந்தது. இம்முறை அவர் செத்துப்போன இளைஞன் ஒருவனின் படத்தை தாங்கிக்கொண்டிருந்தார். அது அவரது மகன் என்று அந்த போஸ்டர் சொல்லியது

இன்றுகூட பல தமிழ் இதழ்கள் இந்த அவதூறுகளைத் திட்டமிட்டுப் பரப்பிக்கொண்டிருக்கின்றன. இவற்றில் முக்கியமானவை ஜூனியர் விகடன், ஆனந்த விகடன் என்னும் இரண்டு இதழ்கள். இந்திய ராணுவம் வெளிப்படையாக இதைப்பற்றி விவாதிக்கமுடியாது என்பதனால் இந்த அரசியல் உள்நோக்கம் கொண்ட பிரச்சாரங்கள் உண்மையாக ஆகின்றன. நான் அச்சு ஊடகங்களில் பல கடிதங்களை எழுதியிருக்கிறேன்.

முக்கியமான வினா என்னவென்றால் தமிழர்கள் இந்த எதிர்மறைப் பிரச்சாரத்தை நம்புகிறார்களா என்பதுதான் . என் பதில் இல்லை என்பதே. ஏனென்றால் விடுதலைப்புலிகளுக்காக இந்த பொய்ப்பிரச்சாரத்தை முன்னெடுத்த எந்தத் தலைவரும் எந்த தேர்தலிலும் வென்றதில்லை. வை கோபாலசாமி, ராமதாஸ் ஆகியோரைச் சுட்டிக்காட்டுவேன். பெரிய கட்சிகளுடன் உடன்பாடுகொண்டு சில இருக்கைகளை அவர்களால் வெல்ல முடிகிறது அவ்வளவுதான்.

[email protected] தளத்தில் Col N Viswanathanஎழுதுகிறார்

அன்புள்ள மூத்த வீரர்களே

நான் இந்திய அமைதிப்படை யாழ்ப்பாணத்தில் இருந்த இறுதி ஒரு வருடம் டெபுடி டவுன் கமாண்டண்ட் ஆகப் பணியாற்றும் அதிருஷ்டம் கொண்டிருந்தேன். எங்கள் அமைப்பு யாழ்ப்பாணத்தில் இருந்த மக்களை மீள்குடியமர்த்துவது அவர்களுக்கான தங்குமிடம் ஆரோக்கியம் போன்ற நலப்பணிகளைச் செய்வது கட்டுமானங்களை அமைப்பது போன்றவற்றை மட்டுமே செய்துவந்தது. என்னுடைய பணிக்காலத்தில் பல்வேறு கோரிக்கைகள் மற்றும் புகார்களுடன் தொடர்ந்து எங்கள் அலுவலகத்துக்கு வந்துகொண்டே இருந்த ஏராளமான சாதாரண தமிழர்களுடன் பழக நேர்ந்தது. நான் உறுதியாகவே சொல்கிறேன், ஒரேஒரு கற்பழிப்புச்செய்தியைக்கூட நான் கேள்விப்படவில்லை. இவையெல்லாம் அன்று புலிகள் அமைப்பு அவர்களுடைய அரசியல் ஆதரவு அமைப்புகளுடன் இணைந்து திட்டமிட்டு செய்த பிரச்சாரம் மட்டுமே

விஸ்வநாதன்

******

அன்புள்ள ஜாஸ்,

உங்கள் கடிதம் கொஞ்சநாளாகவே என்னை நிம்மதியிழக்கச் செய்கிறது. இதைப்பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன். மிக முக்கியமான சிலரிடம் நானும் இதைப்பற்றிக் கடிதம் மூலம் விசாரித்தேன்.

நான் ஆயுதப்படைகளை அதிகம் சந்தித்ததில்லை. என்னுடைய கருத்து பெரும்பாலும் வரலாற்று வாசிப்பு வழியாக வந்தது. ஒரே ஒரு விதிவிலக்கு, நான் வாச்சாத்திக்குச் சென்று அங்கே இருந்த மக்களைச் சந்தித்திருக்கிறேன்.

வாச்சாத்தியில் காவலர் அக்கிராமத்து மக்களைக் கற்பழித்தார்கள் என்பது உண்மை, நானே இரு பெண்கள் அதைப்பற்றி சொல்வதை நேரில் கேட்டேன். அவர்களின் கண்களை நினைவுகூர்கிறேன். ஆகவே என் எண்ணம் உறுதிப்பட்டது.

இலங்கைக்குச் சென்ற அமைதிப்படையின் நடவடிக்கைகளைப்பற்றி நான் என்னுடைய கருத்து என எதையும் சொன்னதில்லை, காரணம் எனக்கு உறுதியாக ஏதும் தெரியாது. நான் பொதுவாக உலக வரலாற்றில் உள்ள ராணுவம் பற்றிய என் மனப்பதிவை மட்டுமே சொன்னேன்.

ஆனால் இதை ஒட்டி சிலவற்றை நினைவுகூர்கிறேன். இந்திய அமைதிப்படை இலங்கைக்குச் சென்ற நாட்களில் அ.ஏசுராசா அவர்கள் காலச்சுவடு இதழில் நா.அமுதசாகரன் என்ற பெயரில் ‘சிங்கத்தின் கால்களும் அசோகச்சக்கரமும்’ என்ற கட்டுரையை எழுதினார்.

மிகவும் கசப்புடன் ஒற்றைப்படையான வேகத்துடன் எழுதப்பட்ட கட்டுரை அது என இப்போது நினைக்கிறேன். அக்கட்டுரை இந்தியஅமைதிப்படையைத் தமிழர்களுக்கு எதிரியாகக் கட்டமைக்க முயன்றது. அதை நான் மலையாளத்தில் மொழியாக்கம் செய்தேன்[ எம்.காளீஸ்வரன் என்ற பேரில்] விரிவான குறிப்புகளுடன் ஜயகேரளம் என்ற இதழில் வெளிவந்தது. மேலும் பலகட்டுரைகளை நான் அவ்விஷயம் பற்றி மலையாளத்திலும் தமிழிலும் எழுதினேன்.

அக்கட்டுரையில்கூட இந்திய அமைதிப்படை குண்டுதேடும் சாக்கில் பெண்களை மரியாதையில்லாமல் சோதனை செய்கிறார்கள், முன்னறிவிப்பில்லாமல் வீடுகளுக்குள் நுழைந்து சோதனயிடுகிறார்கள் என்ற வகையிலான குற்றச்சாட்டுகளே இருந்தன.

இந்திய அமைதிப்படை பற்றிய பெருமளவில் கற்பழிப்புக்குற்றச்சாட்டுகள் உருவானது பிரேமதாசாவுக்கும் புலிகளுக்கும் இடையே ஏற்பட்ட புரிந்துணர்வுக்குப் பின்னர்தான். இந்தியாமீதான கடும் வெறுப்பை உருவாக்குவது சிங்கள தேசியத்தின் தேவை. அதை உருவாக்க புலிகளை பிரேமதாசா பயன்படுத்திக்கொண்டார்.

இன்றுகூட இந்திய அமைதிப்ப்டை அதிகாரிகளுக்கு அன்றைய அரசியல் சுழற்சிகள் புரியவில்லை. ராஜீவ்காந்தி கொலைக்குப்பின்னர்தான் அப்பிரச்சாரம் தமிழகத்தில் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது. புலிகளின் அரசியல் உத்திகளை ஒட்டி இப்பிரச்சாரங்கள் வடிவமைக்கப்பட்டன.

இதைப்பற்றிப் புலிகளில் சில முக்கியமானவர்களிடம் பேசியிருக்கிறேன். ’போராட்டம் என்பது பிரச்சாரக்களத்தில்தான் முதலில் வென்றெடுக்கப்படும்’ என்று சொல்வாகள். ’போரில் வெற்றி மட்டுமே எல்லாவற்றையும் நியாயப்படுத்தும்’ என்பார்கள். ‘தோல்வி வந்தால்?’ என்று கேட்டால் ‘அதைப்பற்றி யோசிக்கவே கூடாது, கண்டிப்பாக வெற்றிதான்’ என்பார்கள்.

போர் என்று வந்தபின், மரணவெளி கண்முன் திறந்தபின், எல்லாமே நியாயமாகிவிடுகிறதென்பது ஒருவகையில் உண்மையே. அதைப்பற்றி இன்று பேசிப்பயனில்லை.

ஆனால் புலிகளின் இந்தப்பிரச்சாரத்தை தமிழகத்தில் முன்னெடுத்தவர்கள் தமிழ்த்தேசியம் பேசும் ஃபாசிஸ்டுகள். அவர்களுக்கு நிதியுதவி அளிக்கும் இந்தியவிரோத அன்னிய அமைப்புகள். இந்த உச்சகட்ட பிரச்சாரத்தை இந்திய ராணுவமோ இந்திய அரசோ எதிர்கொள்ளவே இல்லை. ஆனால் அவர்கள் தாங்களே மிகையாக நாடகத்தனமாகப் பேசி அவற்றை சாயம்வெளுக்கச்செய்தனர்

இந்தப் பிரச்சாரத்தின் முக்கியமான எதிர்விளைவு என்பது உண்மையிலேயே தமிழர்களுக்குப் பேரழிவு வந்து அதைத் தமிழ் ஊடகங்கள் உலகம் முன் கூவிச்சொன்னபோது அதையும் வழக்கமான மிகை, பொய்ப்பிரச்சாரம் என்றே அனைவரும் எடுத்துக்கொண்டார்கள் என்பதே

இந்திய அமைதிப்படைக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட உக்கிரமான பொய்ப்பிரச்சாரம் பற்றிய கசப்புதான் பின்னர் பேரழிவின் கடைசிக்கணங்களில் இந்தியா தலையிடவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தபோது அதை ராணுவமோ இந்திய ஊடகமோ பொதுமக்களோ ஆதரிக்காமலானதற்குக் காரணம். வரலாற்றின் கசப்பான பழிவாங்கல்.

ஜெ

முந்தைய கட்டுரைஇந்திய அமைதிப்படை -ஷோபா சக்தி
அடுத்த கட்டுரைஅமைதிப்படை- திருமாவளவன் கடிதம்