புல்வெளிதேசம், 4. தங்கவேட்டை

ஆஸ்திரேலியாயா செல்வ வளம் மிக்க நாடுகளில் ஒன்று. அந்நாட்டின் செல்வத்துக்கு ஊற்று என்ன? பொதுவாக இந்தியர்களாகிய நமக்கு ஒரு பார்வை உண்டு, எந்த நிலம் வளமாக இருக்கிறதோ அந்த ஊர் செல்வம் மிக்கது என்போம். இந்தியாவைப்பொறுத்தவரை அது ஓரளவுக்கு உண்மை. அது பழைய வேளாண்மையுகம் சார்ந்த பார்வை. ஆனால் நவீனத்தொழில்யுகத்தில் அதற்கு பெரிய மதிப்பு ஏதும் இல்லை என்பதே உண்மை. இன்று ஒரு நிலப்பகுதியின் பொருளியல்வளர்ச்சியைத்தீர்மானிக்கும் முக்கியமான கூறுகளில் நிலவளம் ஒரு முக்கியமான அம்சம் இல்லை. ஏனென்றால் வேளாண்மை இன்று ஒரு லாபம்தரும் தொழில் அல்ல.

ஒரு நிலப்பகுதியின் சமூக,அரசியல் நிலைதான் பொருளியல் வளர்ச்சியை முக்கியமாகத் தீர்மானிக்கும் சக்தி. சீரான நிர்வாகமும் வன்முறையில்லாத சூழலும். சூழல் சரியாக இருந்தால்  பொருளுற்பத்திக்கும் வினியோகத்துக்கும் அவசியமான சமூக ஒழுங்குகளும்,கல்வி முதலிய திறமைகளும் உருவாகிவரும். இரண்டவதாக முதலீடு. ஏற்கனவே வரலாற்றுக் காரணங்களால் முதலீட்டு வலிமை கொண்ட நாடுகள் பொருளியல் சக்திகளாக ஆகின்றன. மூன்றாவதாக கனிம வளம். இன்று பட்டினியில் வாடும் பல  ஆப்ரிக்க நாடுகள் இயற்கைவளம் செறிந்தவை. மேலும் பல நாடுகள் கனிமவளம் கொழிப்பவை. அவற்றை பயன்படுத்தும் சமூக, அரசியல் சூழல் அங்கே இல்லை. பொதுவாக இனப்பகையும் மோதலும் உள்ள நாட்டில் எது இருந்தாலும் இல்லாததற்குச் சமம்தான். அந்த வளங்களை உண்ண நினைக்கும் சக்திகளால் மோதல்கள் போற்றி வளர்க்கப்படும். கடைசியான உதாரணம் காங்கோ. 

ஆஸ்திரேலியா விவசாய நாடு அல்ல. அங்கே முக்கியமான தொழில் என்பது மேய்ச்சல்தான். புல்வெளிகளில் ஆடுகளும் மாடுகளும் ‘விளைந்து’ கொண்டே இருக்கின்றன. 1998 சர்வேயின்படி  இரண்டரைகோடி மாடுகள் அங்கே இருக்கின்றன. அவற்றில் முப்பது லட்சம் மாடுகள் கறவைப்பசுக்கள். மிச்ச மாடுகள் இறைச்சிக்காக வளர்க்கப்படுபவை. குயீன்ஸ்லாந்துக்கு அடுத்தபடியாக மெல்பர்ன் நகர் இருக்கும் விக்டோரியாபகுதிதான் அதிகமாக மாடுகள் கொண்டிருக்கிறது

ஆனால் ஆஸ்திரேலியா தோல் பதனிடும் தொழிலை முழுமையாகவே கைவிட்டுவிட்டிருக்கிறது– சூழல் மாறுபாடு காரணமாக. கம்பிளிரோமம் ஒருகாலத்தில் நல்ல ஏற்றுமதியாக இருந்திருக்கிறது . ஆஸ்திரேலியாதான் உலகின் மிகப்பெரிய கம்பிளி ஏற்றுமதியாளர். 10 கோடிக்குமேல் செம்மரியாடுகள் அங்கே உள்ளன என்று கணக்கு.  சோவியத் ருஷ்யாவின் வீழ்ச்சிக்குப் பின் ஆஸ்திரேலியக் கம்பிளி தன் முதன்மை நுகர்வோரை இழந்து அவ்வணிகம் அழிந்தபடி இருக்கிறது. உள்நாட்டு உற்பத்திபோக ஆஸ்திரேலியா இறைச்சியை ஏற்றுமதி செய்கிறது. அதிலும் அவ்வப்போது ‘பசுப்பித்து’ போன்ற நோய்கள் சர்வதேச அளவில் பீதியைக் கிளப்பி பெரும் அடி விழுகிறது.

ஆஸ்திரேலியாவின் முக்கியமான வேளாண்மை என்றால் பழங்கள்தான். ஆஸ்திரேலியா முழுக்க திராட்சைப் பண்ணைகள் உள்ளன. ஒயின் உற்பத்தியும் நடக்கிறது. அஸ்திரேலிய ஆப்பிள் புகழ்பெற்றது. டாஸ்மேனியாவை ஆஸ்திரேலிய வரைபடத்தில் ஆப்பிள் போலவே வரைந்திருக்கிறார்கள். ஆனால் இவற்றையெல்லாம் கொண்டு தன் செல்வ வளத்தை ஒரு நாடு உருவாக்கிக் கொள்ள முடியாது

ஆஸ்திரேலியாவின் செல்வம் அதன் கனிம வளத்தில்தான் உள்ளது.  1788ல் ஆஸ்திரேலியாவில் பிரிட்டிஷ் காலனியர்கள் குடியேறிய பத்து வருடங்களுக்குள்ளேயே ஆஸ்திரேலிய கனிமங்கள் அகழ்ந்து ஏற்றுமதிசெய்யப்பட்டன. உண்மையில் பிரிட்டிஷ் தொழில்புரட்சியின் விளைவாக உருவான கனிமப்பற்றாக்குறையே காலனியம் என்னும் அரசியலாதிக்கமுறைமையை உருவாக்கியது என்றால் மிகையல்ல. நியூ சவுத்வேல்ஸ் பகுதியில் நியூகேசில் அருகே நிலக்கரி முதலில் தோண்டி எடுக்கப்பட்டது. க்ளென் ஆஸ்மாண்ட் அருகே அகழ்ந்தெடுக்கப்பட்ட ஈயம்தான் முதல் உலோகம். அதன்பின் செம்பும் இரும்பும்.

பதினெட்டாம் நூற்றாண்டில் ஆஸ்திரேலியா உலகின் மிகப்பெரிய டின் ஏற்றுமதியாளராக இருந்தது. செம்பும் பெருமளவுக்கு ஏற்றுமதிசெய்யப்பட்டது. பின்னர் மெல்ல மெல்ல உலோக அகழ்வில் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. மரபான உலோக அகழ்வு பெரும் செல்வேறியதாக ஆகியது. 1960களுக்குப் பின்னர் நவீன அறிவியல் முறைகளைக் கொண்டு விரிவான நிலவியல் ஆய்வுகள் செய்யப்பட்டு மீண்டும்  கனிம அகழ்வுகள் ஆரம்பித்தன. இன்று உலகின் மிகப்பெரிய இரும்பு உற்பத்தியாளர் ஆஸ்திரேலியாதான். நிலக்கரியும் செம்பும் ஈயமும் அங்கிருந்து உலகமெங்கும் செல்கின்றன. இன்றைய ஆஸ்திரேலியா உலகின் மிகப்பெரிய கச்சாப்பொருள் ஏற்றுமதியாளர். அதன்செல்வ வளம் முழுக்க கனிமங்களினால்தான்.

ஆனால் நடுவே  ஐம்பது வருடம் நீடித்த தங்க அலைதான் ஆஸ்திரேலியாவை இன்றைய நிலைக்குக் கொண்டுவந்து என்று சொல்லலாம். ‘மாபெரும் தங்கவேட்டை’ என்று இன்று சொல்லப்படும் அந்த அலை 1823ல் நியூ சவுத் வேல்சில் பதூரஸ்ட் என்னும் இடத்தில் ஒரு பொது ஊழியரான ஜேம்ஸ் மெக்ப்ரியன் என்பவர் தங்கத்தைத் தோண்டி எடுத்ததுடன் ஆரம்பிக்கிறது.  அவர் சாலை போடுவதற்கான சர்வே வேலையில் ஈடுபட்டிருந்தார். அவரது தங்கக்கண்டுபிடிப்பு அவ்வளவாக மக்களை சென்றடையவில்லை. ஆனால் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் தங்கம் கண்டடையப்பட்டது.  புகழ்பெற்ற தங்கவேட்டைக்காரரான எட்வர்ட் ஹாம்மோண்ட்  ஹார்க்ரேவ்ஸ் கலி·போர்னியாவில் தன்னுடைய தங்கவேட்டையை நிறுத்திவிட்டு விக்டோரியாவுக்கு வந்தார். அத்துடன் உலகம் முழுக்க இருந்து தங்கவேட்டைக்காரர்கள் ஆஸ்திரேலியாவுக்குப் படையெடுத்து வர ஆரம்பித்தார்கள்.

1850 முதல் அரை நூற்றாண்டுக்காலம் உலகம் முழுக்க இருந்து தங்கம் தேடி வந்துகொண்டே இருந்தார்கள். அவர்களால்தான் ஆஸ்திரேலியாவின் மக்கள்தொகை அதிகரித்தது.  அந்த மக்கள்தொகைதான் ஆஸ்திரேலியாவின் தொழில்களும் விவசாயமும் வளர வழியமைத்தது. விக்டோரியா மகாணம் முக்கியமான தங்க உற்பத்தி மையமாகியது .1850ல் ஆஸ்திரேலியா  உலகின் மிகப்பெரிய தங்க உற்பத்தியாளராக ஆகியது.

தங்கம் மற்ற உலோகங்களைப்போன்றது அல்ல. அதாவது அது ஒரு நாணயம். அதிலும் பதினெட்டாம் நூற்றாண்டில் இப்பூமியின் முதல் உலகமயமாதல் ஆரம்பித்தபோது தங்கத்தின் மதிப்பு மேலும் அழுத்தம் பெற்றது. பிரிட்டன் உலகின் பெரும்பகுதியைக் கைப்பற்றி ஆள ஆரம்பித்தது. காலனிநாடுகள் தங்களுக்குள் சர்வதேச வணிகம் செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது. அதுவரை சர்வதேச வணிகம் பண்டமாற்று அடிப்படையில் நிகழ்ந்தது. ஒரு தேசத்தின் நாணயத்தின் உண்மையான மதிப்பை எப்படி தீர்மானிப்பதென்ற கேள்வி எழுந்தது. அவ்வாறு நிலையான ஓர் உலகநாணயத்துக்கான தேவை எழுந்ததும் தங்கம் அந்த இடத்தை வகிக்க ஆரம்பித்தது. எந்த ஒருநாடும் தன் மொத்த நாணயத்தின் தொகைக்குச் சமானமான தங்கத்தை ரிசர்வ் வங்கியில் கைவசம் வைத்திருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு உருவாக்கப்பட்டது. அதாவது தங்கம்தான் உண்மையான நாணயம். தாள் ரூபாய் என்பது அந்த தங்கத்தை ஈடாக அளிக்கத்தயார் என்ற வாக்குறுதிப்பத்திரம் மட்டுமே.

இவ்வாறு தங்கம் முக்கியமான சர்வதேச நாணயமாக ஆனபோது தங்கம் ஒரு பொருள் என்பதற்கு மேலாக நேரடியாகவே நாணயமாக ஆகியது. உலகின் மிகப்பெரிய தங்கக் கையிருப்பை பிரிட்டன் வைத்திருந்தது. தங்கத்தின் மதிப்பு இவ்வாறு ஏறியபோதுதான் உலகமெங்கும் தங்கவேட்டைக்காரர்கள் கிளம்பினார்கள். மெக்கென்னாஸ் கோல்ட் முதலிய சாகஸப்படங்களும் சாப்ளினின் கோல்ட் ரஷ் முதலிய கேலிப்படங்களும் அந்த தங்கவேட்டைக்காலகட்டத்தின் சித்திரங்கள்.

உலகின் மிகப்பெரிய தங்கச்சேகரிப்பு இருந்த நாடுகளில் ஒன்று இந்தியா. அந்தத்தங்கம் அப்படியே இருந்திருந்தால் இந்தியா இன்று உலகின் மிகப்பெரிய முதலீடுள்ள நாடுகளில் ஒன்றாக இருந்திருக்கும். ஆனால் கிட்டத்தட்ட இருநூறு வருடம் பிரிட்டிஷ்காலனி அரசு இந்தியாவின் தங்கத்தை உறிஞ்சி எடுத்துக்கொண்டே இருந்தது. இந்திய மன்னர்கள் தங்கத்தில் வரிகட்ட கட்டாயப்படுத்தப்பட்டார்கள். ஆகவே இந்திய ஆலயங்களிலும் மன்னர்களின் கஜானாகளிலும் இருந்த தங்கம் முழுக்க பிரிட்டிஷ் கஜானாவுக்குச் சென்றுசேர்ந்தது. திருவிதாங்கூர் மன்னர்கள் கோயில்நகைகளைக்கூட உருக்கி கப்பம் கட்டியிருக்கிறார்கள். அத்துடன் கோலார் முதலிய தங்கச்சுரங்கங்களின் தங்கமும் நேரடியாக பிரிட்டனுக்குக் கொண்டுசெல்லப்பட்டது. இந்தக்கதிதான் பெரும் தங்கச்சுரங்கங்கள் கொண்ட தென்னாப்ரிக்கா முதலிய ஆப்ரிக்க நாடுகளுக்கும்.

பிரிட்டிஷார் விட்டுச் செல்லும்காலத்திலேயே கோலார் தங்கம் வற்ற ஆரம்பித்திருந்தது. ஆனால் ஆஸ்திரேலியத்தங்கம் அது காலனியாதிக்கத்தைவிட்டு விலகிய பின்னரும் தொடர்ந்து கிடைத்தது. தங்கம் அதன் செல்வத்தை தீர்மானித்தது. ஆரம்பகட்ட முதலீடுகள் முழுக்க அதன்மூலம் நிகழ்ந்தன. அந்த முதலீடு இல்லாமலிருந்திருந்தால் அறுபதுகளின் கனிம அகழ்வுகளுக்கான முதலீடுக்காக ஆஸ்திரேலியாவும் மேலைநாட்டு கம்பெனிகளுக்கு கையேந்தியிருக்கும். அவை இன்று அரேபியப் பெட்ரோலியத்தை உறிஞ்சுவதுபோல ஆஸ்திரேலியாவை உறிஞ்சியிருக்கும்.

ஏப்ரல் பன்னிரண்டாம் தேதி கிருஷ்ணமூர்த்தி அவரது குடும்பத்துடன் வந்து எங்களை பலாரட் என்னும் ஊருக்குக் கூட்டிசெல்வதற்காக வந்தார். பலாரட் மெல்பர்னில் இருந்து கிட்டத்தட்ட அறுபது கிமீ தூரத்தில் உள்ளது. ஒரு மலைச்சரிவில் உள்ள இந்த ஊர் 1837ல் கடுமையான தண்ணீர் பஞ்ச காலத்தில் தாமஸ் லெர்மோந்த் என்னும் பயணிகள்குழு தலைவரால் கண்டடையப்பட்டது. அவர் புனின்யாங் மலையை ஏறி இந்த இடத்தை கண்டடைந்தார். 1838ல் யூல்லி மற்றும் ஆண்டர்சன் என்னும் இரு பயணிகள் தங்கள் குழுவுடன் அங்கே குடியேறினார்கள். 
 
கிட்டத்தட்ட 13 வருடங்களுக்கு இந்த இடம் ஒரு சிறிய மேய்ச்சல்கிராமமாகவும் அலைந்து திரியும் மேய்ச்சல்காரர்கள் வந்து தங்கிச்செல்லும் சிற்றூராகவுமே இருந்திருக்கிறது. 1851 ஆகஸ்டில் இங்கே தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து மிகவும் பரபரப்பான ஊராக இது மாறியது. நியூபலாரட் என்னும் ஒரு நகரம் மெல்ல உருவாகிவந்தது. 1851 செப்டம்பரிலேயே ஆயிரம் அகழ்வாளர்கள் வந்து தங்கத்துக்காக தோண்ட ஆரம்பித்துவிட்டிருந்தார்கள். 1853ல் கிட்டத்தட்ட 20000 அகழ்வாளர்கள் வந்து ஆங்காங்கே தோண்டிக்கொண்டிருந்தார்கள்.

அந்த வருடம் மட்டும் பத்து டன் அளவுக்கு தங்கம் அதிகாரபூர்வமாக மெல்பர்ன் நகரத்து கருவூலத்துக்குக் கொண்டுசெல்லப்பட்ட்து. அதைவிட பலமடங்கு அதிகமான தங்கம் கள்ளச்சந்தையில் விற்கப்பட்டிருக்கலாம் என்கிறார்கள். அடுத்த நான்குவருடங்களில் 77 டன் தங்கம் மெல்பர்ன் கருவூலத்தை வந்தடைந்தது. 1858ல் வெல்கம் தங்கத்தாது என்ற பேர் சூட்டப்பட்ட கட்டி கண்டெடுக்கப்பட்டது. அது  68 கிலோ எடை கொண்டது. 180 அடி ஆழமுள்ள சுரங்கத்தின் மேல்கூரை மண்ணில் இது கிடைத்தது. அடுத்தவருடம் லண்டலில் இது உருக்கபப்ட்டது.
ஆரம்பத்தில் சிறுசிறு நண்பர்குழுக்கள்தான் தங்கம் தோண்டிக் கொண்டிருந்தன. தங்கம் தோண்டுவதில் மிக காட்டுத்தனமான முறையே கடைப்பிடிக்கப்பட்டது.  அந்த வகையான சுரங்கமாதிரிகள் இன்றும் பலாரட்டில் உள்ளன. மேலே கூரைபோடப்பட்ட ஒரு கிணறு. அதனுள் மர ஏணிகள் இறங்கிச்செல்கின்றன. ஆழத்துக்குச் சென்றபின் மண்ணின் இயல்பை அவதானித்து பக்கவாட்டில் மண்ணை துளைத்துச் செல்வார்கள். மேல்மண் சரியாமலிருக்க மண்கூரையை மரத்தூண்கள் கொடுத்து தாங்கி நிறுத்துவார்கள். வெட்டி எடுக்கும் மண்ணை வாளிகளில் அள்ள மேலே நிற்பவர்கள் சகடத்தில் கட்டப்பட்ட கயிறு வழியாக தூக்கி மேலே கொட்டுவார்கள்.

பின்னர் இயந்திரங்கள் பயன்பபாட்டுக்கு வந்தன.  நீராவி இயந்திரங்கள். பெரிய இரும்பு உருளைகளில் நீர் நிலக்கரி மூலம் சூடுபடுத்தப்படுகிறது. அந்த நீராவியின் அழுத்தம் சில துடுப்புகளை தள்ள அந்த ஆற்றல்மூலம் பற்சக்கரங்கள் ஓடி அந்த விசை ஆழத்தில் இருந்து மண்ணை மேலே தூக்கிக் கொட்ட பயன்படுத்தப்பட்டது. இப்போது இன்னும் ஆழமாக போக முடிந்தது. ஆழத்துக்கு செல்லச் செல்ல சீனக்காரம் [ஆலம்] கொண்ட படிவுகளும் பிற பளிங்குப்படிவுகளும் வர ஆரம்பித்தன.  அவற்றை கையால் வெட்டமுடியாது. ஆகவே நீராவி யந்திரத்தின் விசையை உள்ளே கொண்டுசென்று வெட்ட வேண்டியிருந்தது. அதற்குரிய பெரிய இயந்திரங்களை நிறுவனங்கள் மட்டுமே அமைக்க முடியும். ஆகவே தங்க அகழ்வு நிறுவனங்கள் உருவாயின. 1868ல் பல்லாரட்டில் 300 நிறுவனங்கள் தங்கம் தோண்டுவதில் ஈடுபட்டிருந்தன. கிட்டத்தட்ட 65000 பேர் அங்கே வாழ்ந்தார்கள்.

தங்கச்சுரங்க வாழ்க்கை என்பது சாதாரணமானதல்ல. சுரங்கத்தொழிலாளர்களில் மூன்றில் ஒருபங்கினர் விபத்தில் சாகும்  அபாயம் இருந்தது. மோசமான குளிரில் முழங்காலளவு நீரில் நின்று வேலைசெய்யவேண்டியிருந்தது. திமிர்வாதமும் நுரையீரல்நோயும் அவர்களைக் கொன்றன. அவர்களின் குடும்பங்கள் கூடாரங்களில் வாழ்ந்தார்கள். ஒழுங்கான சட்டமும் நீதியும் இல்லை. கிட்டத்தட்ட ஒரு கௌபாய் வாழ்க்கை. துப்பாக்கியே பெரும்பாலும் நீதியை தீர்மானித்தது. திருட்டுகள் அன்றாட நிகவாக ஆயின. அத்துடன் சமவெளியில் தங்கம் விற்கச் செல்பவர்களைக் கொள்ளையடிக்கும் கொள்ளையர் கூட்டங்கள் ஏராளமாக முளைத்தன. இக்கூட்டங்கள் பதினெட்டாம்நூற்றாண்டு ஐரோப்பிய சாகச நாவல்களில் வரும் கொள்ளையர்களின் பெயர்களை தங்களுக்குச் சூட்டிக்கொண்டார்கள்

அத்துடன் இனவாதமும் ஓங்கியிருந்தது. தங்கம் கிடைத்த செய்தியறிந்து ஏராளமான சீனர்கள் ஆஸ்திரேலியாவுக்கு வந்தார்கள். அவர்கள் தங்கள் நாட்டில் சுரங்கத்தொழில்செய்து பழகியவர்கள் ஆதலினால் வெள்ளையரை விடவெற்றிகரமான சுரங்கத்தொழிலளர்களாக இருந்தார்கள். ஆனால் அவர்கள் தாங்கள் சேமித்த செல்வத்தைக் கொண்டு நிறுவனங்களை அமைக்கவில்லை. அவற்றை அவர்கள் சீனாவுக்கு அனுப்பிக்கொண்டிருந்தார்கள். சீன அரசாங்கம் இந்தத் தங்கத்தில் ஆர்வம் காட்டவில்லை. ஆகவே அவர்களுக்கு அரச உதவி கிடைக்கவில்லை. வெள்ளைய அரசாங்கம் பல சட்டங்கள் மூலம் சீனர்களின் வருகையை படிப்படியாக அறவே நிறுத்தியது. எழுபதுகள் வரைக்கும்கூட வேற்று இனத்தவர் ஆஸ்திரேலியாவில் நுழைவதற்குத் தடை இருந்தது.

சீனர்களுக்கு உலகைக் கைப்பற்றுதலில் இருந்த அக்கறையின்மை உலகின் வரைபடத்தையே மாற்றியமைத்தது என்பார்கள். சீனாவில் பதினேழாம் நூற்றாண்டு முதல் சக்ரவர்த்திகள் பெய்ஜிங்கின் ‘தடைசெய்யபப்ட்ட நகர’ த்துக்குள் தங்களை கட்டுப்படுத்திக் கொண்டு உலகைப்பற்றிய கவனம் இல்லாமல் ஆண்டார்கள். சீனாவின் மாபெரும் கடற்படையின் சிறுபகுதி இந்தியப்பெருங்கடலில் நின்றிருந்தால் பிரிட்டிஷார் இந்தியாவையோ கிழக்குநாடுகளையோ வென்றிருக்க முடியாது. கீழைத்தீவுகளின் கனிவளத்தை அவர்கள் மதிப்பிட்டிருந்தால் உலகமே சீனாவால் ஆளப்பட்டிருக்கும். ஆனால் வரலாற்றின் ‘இருந்தால்’ களுக்கு இடமே இல்லை.

மெல்லமெல்ல பல்லாரட்டில் தங்கம் குறைந்தது. 1870களில் ஏராளமானபேர் அங்கே தங்கம் தோண்ட ஆரம்பிக்கவே லாபம் குறைந்தது. சர்வதேச நிதிநெருக்கடியும் பாதிப்புகளை உருவாக்கியது. 1918 வரை அங்கே தங்கம் எடுத்துக்கொண்டிருந்தார்கள். அது மீண்டும் கைவிடப்பட்டது.

இன்று பல்லாரட்டை ஒரு சுற்றுலாத்தலமாக ஆக்கி 1800களில் இருந்தது போலவே மீண்டும் உருவாக்கியிருக்கிறார்கள். அச்சுஅசலாக அதே தெருக்கள், கட்டிடங்கள், அதே தங்கச்சுரங்கங்கள். பிரம்மாண்டமான ஒரு சினிமா செட்டுக்குள் நுழைந்த அனுபவம் ஏற்பட்டது.  அங்கே பணியாற்றுபவர்களும் அதேபோல அக்காலத்து உடைகள்தான் அணிந்திருந்தார்கள். கடவுச்சீட்டு எடுத்துக்கொண்டு உள்ளே சென்றதுமே ஜார்ஜ் எலியட், தாக்கரே நாவல்களில் வரக்கூடிய  பிரிட்டிஷ் நடுத்தர நகரம் ஒன்றுக்குள் நுழைந்த அனுபவம் ஏற்பட்டது. ஒரு நாவலுக்குள் உடலுடன் நுழைவது போல என்று எண்ணிக்கொண்டேன்.

அந்த இடத்தை ‘தெரிந்து’ கொள்ள முயலக்கூடாது என்று எண்ணிக்கொண்டேன். அம்மாதிரி தெரிந்துகொள்ளுதல் நினைவில் நிற்பதும் இல்லை. மானசீகமாக அந்த இடத்தில் ‘வாழ்வது’ தான் சிறந்தது. எங்கு பயணம் சென்றாலும் அதுதான் சிறந்த வழி. கண்களைத் திறந்து கவனமாக ஒவ்வொரு இடமாகப் பார்த்துக்கொண்டே இருத்தல். அது ஒரு விழிப்புநிலைக் கனவுபோல. அந்நிலையில் நமக்குள் இறங்கிச்செல்பவை நம்மை எப்போதும் தொடர்ந்து வரக்கூடியவை.

பல்லாரட் தெருக்கள் புழுதியாலனவை. ஆற்றங்கரை ஊர்களில் –குறிப்பாக கங்கைகரை ஊர்களில்– தான் அம்மாதிரி சாம்பல்நிறமான புழுதியைக் காணலாம். அது வண்டல் உலர்ந்து உருவாவது. இது நெடுங்கால அகழ்வு மூலம் வெளியே வந்த அடிமண்ணின் புழுதி. ஏழெட்டு தெருக்கள்தான். மையத்தெருவில் தபால்நிலையம், ஒரு நாடக அரங்கு, மதுக்கடைகள், துணிக்கடை, கருவிகள் விற்கும் ஒரு கடை, மது உற்பத்தியாளரின் கடை போன்றவை இருந்தன. அதை ஓட்டியே அன்றைய பொதுப்போக்குவரத்துக்கான குதிரைகளை நிறுத்தியிருந்த லாயம். லாயத்தில் பல குதிரைகள் இருந்தன. அன்றையபாணி குதிரைவண்டிகளை இப்போதும் உள்ளே ஓட்டுகிறார்கள். பயணிகள் ஏறி சுற்றி வரலாம். கிருஷ்ணமூர்த்தியின் பிள்ளைகள் ஏறி சுற்றிவந்தார்கள்.

அக்காலத்து போலீஸ் உடையணிந்த காவலர் பழைய பாணி துப்பாக்கிகளுடன் கடந்துசென்றார். குடைபோல விரிந்த கவுன்போட்டு தலையில் தலைக்குட்டை கட்டிய பெண்கள். உயரமான தொப்பி வைத்த ஆண்கள். கடைகளில் அக்காலத்து அறிவிப்புகள் ஒட்டப்பட்டிருந்தன. அசல் ஸ்காட்ச் விஸ்கி கப்பலில் வந்திறங்கி வந்துசேர்ந்திருப்பதை ஒரு அறிவிப்பு சொன்னது. பல்லாரட்டில் அக்கால மக்களுக்கு குடிதான் முக்கியமான பொழுதுபோக்காக இருந்திருக்கிறது. ஏராளமான மது விளம்பரங்கள். உடைகளுக்கு சிறந்த முறையில் பழுது நீக்கித்தரப்படும் என்று இன்னொரு அறிவிப்பு.  நடுவே ஒரு சிறிய காவலர் அணிவகுப்பு. சிவப்பு சீருடை அணிந்து கொம்புகளையும் முழவுகளையும் ஊதியபடி. எல்லாமே பிரிட்டனின் நகல்தான்.

பழைய மதுரை தங்கம் திரையரங்கை நினைவுறுத்தும் நாடகசாலை. ஆனால் அதைவிட நாலில் ஒருபகுதிதான் இருக்கும். பால்கனி உண்டு. உள்ளே மர இருக்கைகள். மேடையில் சிறிய நாடகம் ஒன்று நடந்தது. அக்காலத்து நாடகம். கேலிக்கூத்து வகையைச்சார்ந்தது. பிறகு நாலுபேர் கித்தாருடன் அமர்ந்து அக்கால இசையைப் பாடினார்கள். லண்டனில் இருந்து புதிய  இசைத்தட்டுகள் வந்திருப்பதகாவும் அவற்றை அங்கே வந்து அமர்ந்து கேட்கலாமென்றும் ஒர் அறிவிப்பு. லண்டன் பாடகர்களின் படங்கள். அந்த இசைக்கூடத்தின் வரவேற்பறையே லண்டனை நினைத்து ஏங்கிக்கொண்டிருந்தது.

கவுன்கள் தைத்து கொடுக்கப்படும் கடையின் வாசல்முன் அமர்ந்து கருவாட்டுச்சம்பல் சேர்த்த ரொட்டியைச் சாப்பிட்டோம். நாற்றமடிக்குமே என்று அருண்மொழி கவலைப்பட்டாள். இது பலபண்பாடுகள் கலந்த சமூகம், இங்கே பிறரது எந்த வழக்கத்தையும் தவறாக எண்ணமாட்டார்கள் என்றார் கிருஷ்னமூர்த்தி. கருவாடும், பன்றிக்கறி துருவலும் இல்லாத சீன உணவே குறைவு என்றார்.

ரெட்ஹில் தங்கச்சுரங்கம் என்ற நிறுவனத்தின் மாதிரிக்குள் இறங்கிச்செல்லும் பொருட்டு காத்து நின்றோம். அதில்தான் வெல்கம் தாது கிடைத்தது. வரிசையில் சற்று தூரத்தில் நின்ற மாநிறப்பெண்ண்ணின் முடியைப்பார்த்து மலையாளியா என்று எண்ணினேன். மலையாளிதான். அதை அருண்மொழியிடம் சொல்லி முறைக்கப்பட்டேன். ஏராளமான சீனர்கள். சீனர்கள் எதுபேசினாலும் ‘ஹா’ ‘ஹா’ ‘வா’ ‘வா’ என்று  சொற்றொடர்கள் முடிகின்றனவா என்று தோன்றியது. நாம் பேசும்போது சீனர்களுக்கு எந்த ஒலி அதிகம் கேட்கிறது தெரியவில்லை

அந்த தங்கச்சுரங்கம் மண்ணுக்குள் ஒரு பெரிய முயல்வளை. அதன் மண்ணை அள்ளுவதற்கு நீராவிக்கருவி. அங்கே தொழிலாளி வேடமிட்டு இருந்த இளைஞன் அது எப்படி வேலைசெய்கிறது என்று காட்டினான். பதினெட்டு பேராக உள்ளே அனுப்பினார்க்ள். போகும்வழியில் விளக்குகளை அணைத்து அன்று அது எப்படி இருந்திருக்கும் என்று காட்டுகிறார்கள். மின்சார சாதனங்கள் மூலம் அங்கே எழும் ஒலிகளை உருவாக்கியிருந்தார்கள். நீர் ஓடும் ஒலி. இயந்திர ஒலி. பல்வேறு பேச்சுக்குரல்கள். பல இடங்களில் நீர் ஊறிச்சொட்டுவதுபோல அமைத்திருந்தார்கள். நீர் வழியாக பாய்ந்து சென்றோம்.

உள்ளே உருவெளிக்காட்சியாக வெல்கம் தங்கத்தாது வெட்டி எடுக்கப்படும் நிகழ்வை காட்டினார்கள். அதை எடுத்த அந்த சுரங்கத்தொழிலாளி கைக்கடப்பாரையால் வெட்டுகிறார். பாறை கணீர் கணீரென ஒலிக்கிறது. சோர்ந்து அமர்கிறார். தூசு மூச்சை அடைக்க இருமுகிறார். யாருடனோ பேசுகிறார். மீண்டும் தோண்டுகிறார். சட்டென்று உற்சாகம் கொள்கிறார். ஆவேசமாக தண்ணீரை அள்ளி அந்த தோண்டிய பகுதி மீது வீசுகிறார். ஆ என்ற அலறல். இன்னொருவர் ஓடிவருகிறார். இருவரும் கட்டிப்பிடித்து கண்ணீர் மல்க கூவுகிறார்கள். துள்ளுகிறார்கள்.

வெளியே வந்தோம். கண்ணாடிக்கு அப்பால் ஒரு இரும்புக்கதவு திறந்து அந்த் தங்கத்தாதுவின் பிரதிவடிவம் கிர்ர் என்று முன்னால் வந்து நின்றது. பளபளவென்று மின்னும் தூய தங்கம். மஞ்சள்நிற தங்கம் கொஞ்சம் மண்ணுடன் கலந்து உருவில்லாத மண்கட்டி போல் இருந்தது. பிரம்மாண்டமான ஒரு வெங்காய வடை மாதிரி. தங்கம் நம்மை பிரமிக்கச் செய்கிறது. சட்டென்று மெக்கன்னாஸ் கோல்ட் திரைப்படத்தின் அந்த முகப்புப்பாடல் நினைவுக்கு வந்தது. ஜோஸ் ·பெலிசியானோ பாடிய  பாடல். ‘ ஓல்ட் டர்க்கி பஸ்ஸர்ட்..’ அதில் உள்ள ‘தங்கம்! தங்கம்!’ என்னும் உச்சக்கூக்குரல். தங்கவெறியை வேடிக்கை பார்த்தபடி வானில் உலவும் அந்த செங்கழுகு. அதன் நிழல் அலையும் அந்த பாறை வெளி.

வெளியே வந்து அந்த போலிநகரத்தில் அலைந்தோம். உற்சாகமான குழந்தைகள். அங்கே குழந்தைகளுக்கு கட்டுப்பாடுகளே இல்லை. அவர்கள் எதுவேண்டுமானாலும் செய்யலாம். தண்டனைகள் இல்லை– தண்டித்தால் போலீஸ் தேடிவரும். [டொரொண்டோவில் கேட்ட கதை. ஒரு ஈழத்தமிழ் அப்பா எட்டுவயது மகனை இரண்டு தட்டு தட்டினார். மகன் போலீசுக்கு போன்செய்ய அவர்கள் வந்து அவரை எச்சரித்துவிட்டுச் சென்றார்கள். அவர் அவனை கூப்பிட்டுக்கொண்டு இந்தியாவுக்குச் சுற்றுலா வந்தார். சென்னை மீனம்பாக்கத்தில் இறங்கியதுமே பையனை அடிபின்னிவிட்டார்] கிரீச்சிட்டு கூவியபடி உர்ச்சாகமாக ஓடின குழந்தைகள்.

வெள்ளைக் குழந்தைகளைப் பார்த்ததுமே இவைதான் உலகிலேயே அழகானவை என்று தோன்றுகின்றது.  அடுத்து ஒரு சீனக்குழந்தையைப் பார்க்கும்போது அடாடா சீனக்குழந்தைக்கு ஈடு இணை உண்டா என்ற எண்ணம். அடுத்து கறுப்புக் குழந்தையைப் பார்க்கும்போது இது அல்லவா குழந்தை என்று. வெள்ளைக்குழந்தைக்கு நீலக்கண்கள், சீனக்குழந்தைக்கு கண் இடுங்கும் சிரிப்பு, கறுப்புக் குழந்தைக்கு தடித்த பெரிய உதடுகள் அழகு என்று சுருக்க முனைந்தேன். 

மேலே ஏறிச்சென்றோம். அங்கே தொழிற்சாலைகள் இருந்தன. அக்காலத்துத் தொழிற்சாலைகள். ஒரு ஆலையில் ஆவி இயந்திரத்தை பயன்படுத்தி மரத்தடிகளை செதுக்கிக் குடைந்து சாரட் வண்டியின் சக்கரங்களைச் செய்துகொண்டிருந்தார்கள். ஓர் ஆலையில் அக்கால உடையணிந்த தொழிலாளர் ஒருவர் ஆவி இயந்திரத்தின் உதவியால் தகரத்தகடுகளை சட்டிகளாக ஆக்கிக் கொண்டிருந்தார்.

அச்சட்டிகளை விலைக்கு வாங்கலாம். அக்காலத்தில் பல்லாரட்டின் நீராதாரமாக விலங்கிய ஓடை அங்கே செல்கிறது. அதில் இறங்கி சட்டியில் மண்ணை அள்ளி தங்கம் தேடிக்கொண்டிருந்தார்கள். பெரியவர்கள் சிரித்துக்கொண்டே விளையாட சிறுவர்கள் மிகவும் தீவிரமாக தங்கம் தேடினார்கள். அங்கே சிறு தங்கத்துண்டுகளை அவ்வப்போது போட்டு கண்டெடுப்பவர்களுக்கு பரிசுகள் வழங்குவார்களாம். அந்த முகங்களில் தெரிந்த உற்சாகத்தை தங்கத்தை பறிகொடுத்த புராதன நாட்டவனாக நின்று வேடிக்கை பார்த்தேன்.

பலாரட்டில் ஒரு அருங்காட்சியகம் இருந்தது. அதில் பழைய தங்கவேட்டைக்காலத்தின் பொருட்களையும் அன்றைய வாழ்க்கையின் சாட்சியங்களான பொருட்களையும் வைத்திருந்தார்கள். பல்வேறு தங்கத்தாதுக்களின் வடிவங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. உலகமெங்கிலும் இருந்து கொண்டு வரப்பட்ட தங்க நகைகளின் பிரதிகள். தங்கத்தின் விதவிதமான முகங்கள். தங்கத்தைக் கண்டு கண்களுக்கு மஞ்சள் காமாலை வந்தது போல் இருந்தது.

பலாரட்டிலேயே இரவு தங்க விடுதிகள் உண்டு. அவர்கள் அங்கே  இரவையும் காலையையும் அந்த மனநிலையில் கழிக்கலாம். ஆனால் செலவேறிய பொழுதுபோக்கு அது. பிறருக்கு மாலை ஐந்து மணிதான் கணக்கு.  கிருஷ்னமூர்த்தி கொண்டுவந்திருந்த கொக்கோ கலந்த சாக்லேட் கேக் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதன்பின் எல்லா இடத்திலும் அந்த கேக்கை கேட்டுப்பார்த்தேன், கிடைக்கவேயில்லை.நாங்கள் ஐந்தரைக்கு பல்லாரட்டை விட்டு கிளம்பினோம்.

தங்கவேட்டை ஒரு குறியீடு. பதினேழாம் நூற்றாண்டு முதல் ஐரோப்பா கொண்ட பொருள்வெறியின், அதற்காக அவர்கள் செய்துகொண்ட சாகசங்களின், அவர்கள் அதன்மூலம் உலகையே வென்றதன் குறியீடு.  அந்த வெல்கம் தங்கத்தாதுவை கொஞ்சம் உருக்கி உருமாற்றினால் இந்தியாவின் வடிவத்தை அடையக்கூடும்

 

<br/><a href=

 

பல்லாரட் 1950

 

பலாரட் பிரபுக்களின் தெரு

 

 

நகரம்

 

 

 

போலித்தங்கவேட்டை

 

 

 

 

ஊர்வலம்

 

 

 

தகரச்சட்டி தொழிலாளி

 

குதிரைப்போக்குவரத்து

 வெல்கம் தாது

 

 

தங்கவேட்டைக்காரர்கள்

முந்தைய கட்டுரைஆஸ்திரேலியா :கடிதங்கள்
அடுத்த கட்டுரைகர்ணாமிர்த சாகரம்:கடிதம்