ஏன் பொதுப்பிரச்சினைகளைப் பேசுவதில்லை?

 

அன்புள்ள ஜெயமோகன,

நான் உங்கள் வாசகன். நீங்கள் எழுதும் கட்டுரைகளில் உள்ள சமநிலையான சிந்தனைகளை விரும்பி வாசிக்கக்கூடியவன். நான் எழுதும் முதல் கடிதம் இது.

நெடுநாட்களாக என் மனதில் உள்ள கேள்வி இது. இதை நான் உங்கள் இணையதளத்தில் தேடினேன். நீங்கள் சொன்ன பதிலைப் பார்த்தேன். அதாவது நீங்கள் ஏன் முக்கியமான சமூகப்பிரச்சினைகளில் கருத்துச் சொல்வதில்லை? கருத்துச்சொல்ல ஆரம்பித்தால் தொடர்ந்து அதையே விவாதிக்க வேண்டியிருக்கும் என்று சொல்கிறீர்கள். எழுத்தாளனின் வேலை அது இல்லை என்கிறீர்கள். என்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சமூகப்பிரச்சினைகளில் எழுத்தாளர்கள் உணர்ச்சிகரமாக எதிர்வினை ஆற்றத்தானே வேண்டும்? அது அவர்களின் கடமை இல்லையா?

உதாரணமாக இப்போது சென்னையிலே வங்கியில் கொள்ளையடித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் நான்கு இளைஞர்களை சுட்டுக்கொன்றுள்ளது. இந்த அநீதிக்கு எதிராக எழுத்தாளர்கள் குரல் கொடுக்க வேண்டாமா?

ஜெய்சன் சாமுவேல்

அன்புள்ள ஜெய்சன்,

நான் பொதுவாக சமூகப்பிரச்சினைகளில் கருத்துச் சொல்வதில்லை. நம்முடைய சமூகம் இன்று பல்வேறு அதிகார சக்திகள் தொடர்ந்து முரண்பட்டு மோதிக்கொண்டே இருக்கும் ஒரு அரசியல்வெளி. பிரம்மாண்டமான உள்விரிவுள்ள ஒரு ஜனநாயகம் நம்முடையது. ஆகவே எப்போதும் இங்கே கொந்தளிப்பு இருந்துகொண்டே இருக்கிறது. ஊடகப்பெருக்கம் உள்ள தேசமாகையால் ஒரு இடத்தின் பிரச்சினை தேசம் முழுக்க சென்று சேர்கிறது. பலநூறு தரப்புகள், பல்லாயிரம் கருத்துக்கள் வருகின்றன. பிரச்சினை இல்லாமல் ஒருவாரம்கூடக் கடந்துசெல்வதில்லை.

எழுத்தாளன் இப்பிரச்சினைகள் அனைத்துக்கும் எதிர்வினை ஆற்றி, அதைத்தொடர்ந்து வரும் விவாதங்களிலும் பங்கு கொண்டான் என்றால் அவனுடைய அகச்சக்தி முழுக்க அதற்கே செலவழியும். அவனால் எந்தப் புனைவையும் எழுத முடியாது. ஆகவேதான் சமூகப்பிரச்சினைகளுக்கு எதிர்வினை ஆற்றுவதில்லை என்பதை நான் கொள்கையாகக் கொண்டிருக்கிறேன். குறைந்தபட்சம் அவை சூடாக நிகழும்போதாவது முற்றாக அமைதி காக்கிறேன்.

உலகமெங்கும் பெரும்பாலும் எல்லா முக்கியமான எழுத்தாளர்களும் இந்த நிலைப்பாட்டையே கொண்டிருக்கிறார்கள் என்பதை நீங்கள் கவனிக்கலாம். அவர்களுடைய சொந்த ஆன்மீக,அரசியல்,சமூகவியல் தேடல் ஒன்று இருக்கும். அதனுடன் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு மட்டுமே அவர்கள் எதிர்வினை ஆற்றுகிறார்கள். ஏனென்றால் அது அவர்கள் செய்துவரும் கருத்துச்செயல்பாட்டின் ஒரு பகுதியாக உள்ளது.

அல்லது, பிற எல்லாத் தரப்பும் மௌனம் காக்கும்போது இலக்கியவாதியின் குரல் எழுகிறது. அவன் பேசியே ஆகவேண்டிய இடம் அது. அப்படிப் பேசி அதற்காகக் களப்பலியான எழுத்தாளர்கள் உலகமெங்கும் உண்டு. அதற்காக இலக்கியத்தையே இழந்தவர்களும் உண்டு. இலக்கியம் மேலான விழுமியங்களுக்காக நிலைகொள்வது. அவ்விழுமியங்களுக்காக இலக்கியத்தை இழப்பதும் முறையானதே.

நேர்மாறாக, தொடர்ந்து எல்லா சமூகப் பிரச்சினைகளுக்கும் எதிர்வினையாற்றும் எழுத்தாளர்கள் உண்டு. அவர்கள் எழுத்தாளர்கள் என்பதை விடக் களப்பணியாளர்கள், அரசியலாளர்கள் என்ற அடையாளத்தை மேலதிகமாகச் சுமப்பவர்கள். அவர்கள் விதிவிலக்குகள். அவர்களின் புனைகதை ஆற்றலை அந்த அடையாளங்கள் பெரிதும் நசுக்கி அழித்திருப்பதையும் நீங்கள் காணலாம்.

நம் சமூகத்தின் பொதுவான மனப்போக்கு என்னவென்றால், அவர்கள் இலக்கியவாதி எழுதுவதை வாசிக்கமாட்டார்கள் என்பதே. அவன் தன் சிந்தனையின் கற்பனையின் நுண்ணிய பகுதிகளை வெளிப்படுத்தியிருக்கும் புனைவுகளை அவர்கள் பொருட்படுத்தி விவாதிக்க மறுப்பார்கள். ஆனால் ஏற்கனவே தாங்கள் செய்து கொண்டிருக்கும் விவாதங்களில் தங்களைப்போல அவனும் வந்து கலந்துகொண்டு தங்களைப்போல ஒரு நிலைப்பாட்டை அவனும் எடுக்கவேண்டும் என எதிர்பார்ப்பார்கள். ‘அதாவது நீ எழுத்தாளனாக இருக்காதே, எங்களைப்போல நீயும் பேசு’ என்று சொல்கிறார்கள். நீங்கள் சொல்லியிருக்கும் கருத்தின் சுருக்கமான பொருளும் அதுவே.

எழுத்தாளன் அரசியலாளனோ செயல்பாட்டாளனோ அல்ல. அவனுடைய நுண்ணுணர்வும் சரி, அவன் செயல்படும் தளமும் சரி முற்றிலும் வேறானவை. இன்னும் நுட்பமானவை, சிக்கலானவை. அந்தத் தகுதியால்தான் அவன் எழுத்தாளனாக ஆகிறான். அந்தத் தனித்தன்மையுடன் அவன் ஓர் அரசியலாளன் போல, செயல்பாட்டாளன் போல, சேவையாளன் போலச் செயல்பட முடியாது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

சரி, நீங்கள் சொன்ன விஷயத்தையே பேசுவோம். சென்னை துப்பாக்கிச்சூடு பற்றி மனித உரிமைப்போராளிகள் மற்றும் இதழாளர்கள் பேசுவதை நான் அவசியமான ஒன்றாக நினைக்கிறேன். நம் சமூகத்தில் அரசதிகாரம் எல்லைமீறிச்செல்லாமல் காக்கும் அணைகள் அவை. மக்களின் கூட்டான தார்மீகமே சமூகத்தின் தண்டிக்கும் சக்தியாக இருக்கவேண்டுமென்பதைத் தொடர்ச்சியாக நிறுவிக்கொண்டிருக்கும் செயல்பாடு அது. ஆக்கபூர்வமான சமூகத்தில் இன்று மனித உரிமை, சூழியல் பாதுகாப்பு, தொழிற்சங்க உரிமை ஆகிய மூன்றுக்காகவும் எப்போதும் ஒருங்கிணைந்த குரல் எழுந்துகொண்டிருந்தாகவேண்டும் என்பதே என்னுடைய எண்ணம். அதற்காகப் போராடும் ஒவ்வொருவரையும் நான் மதிப்புடன் வணங்குவேன்.

ஆனால் இவர்களில் ஒருவனாக என்னுடைய குரலை இணைக்கமுடியாது. ஏனென்றால் நான் இவர்களில் ஒருவனல்ல. நான் எழுத்தாளன். மேலே குறிப்பிட்ட செயல்பாட்டாளர்களுக்கு ஒற்றை நோக்கு உள்ளது. அதை ஒட்டிய செயல்திட்டம் உள்ளது. அச்செயல்திட்டத்தை ஒட்டி மட்டுமே அவர்கள் சிந்திக்கிறார்கள், பேசுகிறார்கள். எழுத்தாளன் அப்படி ஒற்றை நோக்குடன் செயல்பட்டால் அவன் எழுதுவது இலக்கியமாக இருக்காது. தட்டையான பிரச்சாரமாகவே இருக்கும்.

உலகமெங்கும் இலக்கியமென எது எண்ணப்படுகிறதோ அது இப்படிப்பட்ட ஒற்றைநோக்குடைய எழுத்து அல்ல. இலக்கியத்தின் இலக்கு என்பதே சொல்லப்படாதவற்றைச் சொல்வது. பார்க்கப்படாத கோணத்தில் பார்ப்பது. ஆகவே எப்போதும் அது பொதுப்பார்வையைத் தவிர்த்து முரண்பாடுகளையும், விசித்திரங்களையும், விபரீதங்களையும் முன்னிறுத்துகிறது.

இலக்கியமென்பது பிறவழிகளில் சொல்லப்படாதவற்றைச் சொல்வதற்கான ஒரு வழி. உண்மை என்பது அப்பட்டமாக மேலே மிதந்து கிடக்காது என்றும், அது முரண்பாடுகள் நடுவே சமரசப்புள்ளியாகத்தான் இருக்கும் என்றும் அது நினைக்கிறது. எல்லாவற்றையும் அறிந்து, தொகுத்து, அனைத்துக்கும் பொதுவாக உள்ள உண்மையையும் யதார்த்ததையும் சொல்லத்தான் அது முயலும். அப்படிச் சொன்ன படைப்புகளுக்கு மட்டுமே இலக்கிய மதிப்பு உண்டு.

அப்படி இல்லாத ஆக்கங்கள் செயல்பாட்டாளர்களுக்கு உதவும். அவர்கள் அதைக் கொண்டு செல்வார்கள். ஆனால் ஒருபோதும் இலக்கிய வாசகனை அவை நிறைவடையச்செய்யாது. அவனுக்கு உள்ளூரத் தெரியும் அந்த ஆக்கம் சொல்வது இலக்கியம் மட்டுமே சொல்லக்கூடிய சமநிலை கொண்ட உண்மை அல்ல என்று. அப்படைப்பு இலக்கியமாக நிற்கவும் செய்யாது.

நான் தொழிற்சங்க அரசியலில் செயல்பட்டவன். அங்கே நான் செய்தவை அனைத்தும் தொழிலாளர்களின் நலன்களை மட்டுமே கருத்தில் கொண்டவை. பேசியவை எல்லாமே அந்த நோக்கத்தால் ஆனவை. இலக்கியவாதியாக அவற்றை அப்படியே நான் பேசமுடியாது. இலக்கியவாதியாக நான் அவற்றின் மறுபக்கத்தையும் பார்க்கவேண்டும். தொழிலாளர்களின் மறுபக்கத்தை கவனிக்கவேண்டும். முதலாளிகளின், அரசாங்கத்தின் தரப்பையும் கவனிக்கவேண்டும். அப்போதுதான் அது இலக்கியவாதியின் குரலாக ஆகும்.

சுருக்கமாகச் சொன்னால், ஒரு பழைய பழமொழியையே சொல்லவேண்டும். நல்ல இலக்கியம் எலியின் உயிர்வதையை மட்டும் சொல்வது அல்ல. பூனையின் பசியையும் கணக்கில் கொண்டு பேசுவது. இலக்கியம் ‘other side of the other side of the other side’ ஐப் பேசமுயலும் என்ற ஒரு கூற்று உண்டு. சமரசமற்ற கறாரான உண்மையை நோக்கியே அது செல்லவேண்டும். அது எத்தனை கசப்பானதாக இருந்தாலும் அதைச் சொல்லவேண்டும். சொல்பவனை எந்த அளவுக்கு அன்னியப்படுத்தினாலும் அதை அவன் சொல்லியாகவேண்டும்.

அதன் விளைவு ஒருவேளை சமூகத்திற்குத் தீங்கானதாக ஆனாலும்கூட உண்மையைச் சொல்வதே இலக்கியமாக இருக்கும். அதுவே இலக்கியவாதியின் கடமையும்கூட. அக்காரணத்தால்தான் உலகின் பெரும்படைப்பாளிகள் சமகாலத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டிருக்கிறார்கள். அவமதிக்கவும் தண்டிக்கவும் பட்டிருக்கிறார்கள். அரசாலும் மதத்தாலும் சமூகத்தாலும் மட்டும் அல்ல, சமூக சீர்திருத்தவாதிகளாலும் முற்போக்காளர்களாலும்கூட அவர்கள் சிறுமைப்படுத்தப்பட்டு ஒடுக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்தத் துப்பாக்கிச்சூடு விஷயத்தில் ஒரு சாதாரணக் குடிமகனாகவும், எழுத்தாளனாகவும் நான் உண்மையை அறிந்துகொள்ள முயன்றேன். நானறிந்தது இது. வங்கிக்கொள்ளை நிகழ்ந்ததும் காவல்துறை அனைத்து வங்கிகளிலும் உள்ள ரகசியக் காமிரா பதிவுகளை ஆராய்ந்தது. ஏனென்றால் கொள்ளையர் பல வங்கிகளை நோட்டமிட்டிருக்க வாய்ப்பிருந்தது. காவல்துறைக்கு அக்கொள்ளையைச் செய்தவர்கள் எவரென பெரும்பாலும் ஊகம் இருந்தது. அந்த முகங்களுக்காகத் தேடியபோது ஒரு முகம் சிக்கியது. அது காவல்துறையின் ரகசியப் பதிவுகளில் உள்ள முகம்.

அந்த முகத்தை வெளியிட்ட காவல்துறை உடனே ஒரு ரகசியத்தகவலாளியிடமிருந்து அந்நபரைப்பற்றிய தகவலைத் தெரிந்துகொண்டது. அந்தத் தகவலாளி பெரும்பாலும் ஒரு பாலியல்தொழிலாளர். அவர் யாரெனக் காவல்துறை ஒருபோதும் வெளிப்படுத்தாது. நேராகக் கொள்ளையர் தங்கியிருந்த இடத்துக்குச் சென்ற காவல்துறை அவர்களை அமைதியான முறையில் கைதுசெய்து கொண்டு சென்றது. செல்லும் வழியில் மேலிட உத்தரவு வந்தது. திருப்பிக் கொண்டுவந்து அறைக்குள் குப்புற வீழ்த்தி சுட்டுத்தள்ளியது. இந்தச் சித்திரம் உண்மையாக இருக்கலாமென நான் நினைக்கிறேன்.

நெடுங்காலம் நீடிக்கும் இரு அமைப்புகள் நடுவே கண்டிப்பாக ஒரு நடைமுறைச் சமரசம் இருக்கும். சமீபத்தில் இந்திய அரசின் உயரதிகாரியாக இருந்த பி.ஏ.கிருஷ்ணன் எழுதிய கலங்கியநதி நாவலில் அரசுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே கடுமையான போரும் கொலைகளும் நடந்துகொண்டிருக்கும்போதே அப்படி ஒரு நடைமுறைச் சமரசம் இருக்கும் சித்திரம் அபாரமாகப் பதிவாகியிருப்பதை வாசித்தேன். அக்கட்டுரையில் இவ்வரியைச் சொல்லியிருந்தேன்.

அத்தகைய சமரசம் காவல்துறைக்கும் குற்றவாளிகளுக்கும் நடுவிலும் உண்டு. காவல்துறைக்கு நிறைய எல்லைகள் உள்ளன. அதன் திறமைக்குறைவு, வசதியின்மை, ஊழல், அரசியல் கட்டாயம், இந்திய சட்டத்துறையின் சிக்கல்கள் என பல காரணங்கள். ஆகவே நடைமுறையில் காவல்துறை ஓர் எல்லைவரை குற்றங்களை அனுமதிக்கின்றது.

திருட்டு வழக்குகளைக் காவல்துறை கையாளும் விதத்தைப்பற்றி வழக்கறிஞர்களான நண்பர்கள் அளிக்கும் சித்திரம் வேடிக்கையானது. இங்கே உண்மையில் திருட்டை ஒழிக்கக் காவல்துறை முயல்வதில்லை, அது காவல்துறையின் எல்லைக்கு மீறிய விஷயம். திருட்டுவழக்குகளை ஒரு குறிப்பிட்ட அளவுக்குத் தொடர்ச்சியாக நீதிமன்றத்துக்குக் கொண்டுசெல்வது மட்டுமே அது செய்யும் பணி. பெரும்பாலான வழக்குகள் திருடர்களே ஐந்துக்கு ஒன்று என்பது போலத் தங்களை ஒப்புக்கொடுப்பவை. திருட்டு இந்த அளவு வரை நிகழலாமென திருடர்களுக்கும் காவலர்களுக்கும் ஒரு பரஸ்பரப் புரிதல் உள்ளது.

இங்கே பெரும்பாலான திருட்டுகள் பதிவாவதே கிடையாது. திருட்டுக்கொடுத்தவர் மிகவும் அழுத்தம் கொடுத்தால் திருட்டுப்பொருளையே திருடனிடமிருந்து பேசி வாங்கிக் கொடுத்துவிடுவார்கள். அதற்குள்ளேயே பல கணக்குகள். திருட்டைக் காவலர் பெரிதாக நினைப்பதில்லை, ஆனால் வழிப்பறி தங்கள் அதிகாரம் மீதான நேரடிச் சவால் என எண்ணுவார்கள். திருட்டுடன் கொலை என்றால் அதன் கணக்கு வேறு. தொடர்திருட்டு என்றால் அது மேலிடத்தொல்லையை உருவாக்கும்.

இந்த பிகார் திருடர்கள் விஷயம் இதேபோலக் காவல்துறைக்கு மிகவும் தெரிந்த, வேறுவழியில்லாமல் அது விட்டுவைக்கிற ஒரு இந்தியப்பிரச்சினை. பிகாரில் உள்ள பல கிராமங்களே ஒட்டுமொத்தமாக திருடர்கிராமங்கள். ஒருங்கிணைந்த பெரிய கொள்ளை அமைப்புகள் அங்கே உள்ளன. அங்குள்ள காவல்துறையும் நீதித்துறையும் அதற்கு உடந்தையாக உள்ளன. அந்தத் திருடர்களில் பெரும்பாலானவர்கள் பெரும் பணக்காரர்கள்.

அவர்கள் பிற இந்திய மாநிலங்களில் சென்று திருடிவிட்டு பிகாருக்குள் சென்றுவிட்டால் அவர்களைப் பிடிக்கவே முடியாது. சட்டப்படி பிகாரின் காவல்துறைக்குத் தகவல்தெரிவித்து அங்கே சென்று அவர்களைப் பிடிக்கவேண்டும். அந்தத் தகவல் உடனே அவர்களுக்குக் காவலர்களாலேயே சொல்லப்பட்டுவிடும். அங்கே அவர்களுக்கு எல்லாவகையான அடியாள் பாதுகாப்பும் நீதித்துறைப் பாதுகாப்பும் உண்டு. பிகார் போலீஸுக்குத் தெரியாமல் பிகாரித் திருடர்களைப் பிடிக்கப்போய் தமிழக போலீஸின் உயரதிகாரிகள் உட்படப் பலர் அடித்து நொறுக்கப்பட்டிருக்கிறார்கள்.

அவர்களை இங்கேயே பிடித்தால்கூட நீதிமன்றத்தில் ஆஜராக்கியதுமே ஜாமீன் கிடைத்துவிடும். உடனே கிளம்பிச்சென்றுவிடுவார்கள். திரும்பப் பிடிக்க முடியாது. முதலில் அப்படி ஒரு மனிதனை அல்லது விலாசத்தையே தேடிப்பிடிக்கமுடியாது. இது ஒரு பிகாரிய பிரச்சினை மட்டும் அல்ல. இப்படிப்பட்ட குழுக்கள் தமிழகத்திலேயே உண்டு. திருச்சி ராம்ஜிநகரில் அப்படி ஒரு திருட்டு உலகம் இருந்தது என்றார் நண்பர். அவர்கள் வடமாநிலங்களில் திருடிவிட்டு இங்கே வருவார்கள். அவர்களை நம்மூர் போலீஸ் பாதுகாக்கும்.

ஆகவே தமிழகப் போலீஸும் கேரளப்போலீஸும் பிகாரி திருடர்களைப் பிடிப்பதே இல்லை. ஏனென்றால் ஜாமீனில் சென்றவர்களைத் திரும்பப் பிடிக்கமுடியாவிட்டால் அது பெரிய சிக்கல். ஆகவே அவர்களைப் பிடிக்கவேண்டுமென்றால் அந்தத் திருடர்களே ஒப்புக்கொண்டு சின்ன வழக்குகளில் வந்து பிடிகொடுக்கவேண்டும். இவ்வாறாக நம் காவலர் திருடர் எனத் தெரிந்தும் நிறையப் பேரை நடமாட விட்டிருக்கிறார்கள். அதாவது பிகாரி கொள்ளையர்களை தண்டிக்கவேண்டுமென்றால் சுட்டுக்கொலைசெய்யவேண்டும், வேறு எதுவுமே நடைமுறையில் சாத்தியமல்ல. இதுவே யதார்த்தம்

இந்த விதிமுறை மீறப்படுவது சில அபூர்வ வழக்குகளில். என்னிடம் பேசிய ஒரு நண்பர் சிலவருடங்களுக்கு முன்னால் ஓர் அரசியல்வாதி திருடர்களால் கொல்லப்பட்டபோது மட்டும் தமிழகக் காவல்துறை உயரதிகாரி துணிந்து பிகார் காவல்துறைக்குச் சொல்லாமல் பிகார் சென்று திருடர்கள் சிலரைப் பிடித்துக்கொண்டு வந்ததாகச் சொன்னார்.

இந்த ஆட்டம் நேற்றும் நடந்தது, இன்னும் நடக்கும். நடுவே இப்படி ஒரு நிகழ்ச்சி ஏன்? தொடர் திருட்டுகளால் மாநிலத்தில் அச்ச உணர்ச்சி மேலோங்குகிறது என்றும் சட்ட ஒழுங்கை சரியாக வைத்திருப்பவர் என்ற முதல்வரின் பிம்பத்திற்குக் குறைவு ஏற்படுகிறது என்றும் தெரிந்ததும்தான் இதற்குக் காரணம். இதனூடாகத் திருடர்களுக்குக் காவல்துறை ஒரு செய்தியைச் சொல்ல விரும்புகிறது – ‘இதற்கு மேல் ஆட்டம் வேண்டாம். இதுதான் எல்லை’ என. ஆகவே இந்தக் கொலை.

இதை பிகாரிகள் எதிர்பார்க்க மாட்டார்கள். அதிகபட்சம் சிலநாள் ரிமாண்டும் ஜாமீனும்தான் அவர்கள் எதிர்பார்க்கக்கூடியது. அவர்களின் அமைப்பில் கொஞ்சநாள் அச்சம் நிலவும். அதுவே காவல்துறையின் நோக்கம்.

இதுதான் நானறிந்தது. உண்மை இதற்கு நெருக்கமாக எங்கோ உள்ளது. உலகம் முழுக்க ஆயுதமேந்திய அமைப்புசார் வன்முறையானது அரசுகளால் ஆயுதம் மூலமே எதிர்கொள்ளப்பட்டு வருகிறது என்பது ஓரு யதார்த்தம். அதை சட்டநடவடிக்கைகள் மூலம் ஒன்றும் செய்ய முடியாது. அதிலும் மாநிலங்கள் தனி நாடுகளாகவே செயல்படும் இந்தியாவில் வேறு ஒன்றுமே சாத்தியமில்லை என்பது காவலர் தரப்பு.

மனித உரிமையாளர்கள் கேட்கும் கேள்விகள் எல்லாம் நியாயமானவை. இப்படி எவரை வேண்டுமானாலும் போலீஸ் சுட்டுக்கொல்லலாமே. நாளை நம்முடைய குழந்தைகளை பிகாரி போலீஸ் இப்படி விசாரணை இல்லாமல் சுட்டுக்கொன்றால் நாம் விடுவோமா? இப்படி காவலர்களே கொல்லலாம் என்றால் எதற்கு சட்டம், நீதிமன்றம் எல்லாம்? அவர்களின் எதிர்ப்பும் போலீஸின் பொய்களை அவர்கள் அம்பலப்படுத்துவதும் முக்கியமான சமூக எதிர்வினையே. அது போலீஸின் எல்லையை நிர்ணயிக்கும் சமூக விசை.

அதேசமயம் திருடர்களின் சட்ட உரிமை, சட்டபூர்வ நடவடிக்கை பற்றி அவர்கள் பேசுவதெல்லாம் இந்திய யதார்த்தத்தில் கேலிக்குரியவை. அந்த வேகத்தில் சுட்டுக்கொல்லப்பட்டவர்களை நிரபராதிகள் என்றும் போலீஸைக் குற்றவாளிகள் என்றும் காட்ட அவர்கள் முயலும்போது இன்னும் அபத்தமாக ஆகிறது அது.

ஓர் எழுத்தாளனாக நான் என்ன செய்யவேண்டும்? எது சரி எது தவறு என சொல்வதற்கு முன்னால் உண்மையில் என்ன நடக்கிறது என்பதை அல்லவா புரிந்துகொள்ளவேண்டும்? மனித உரிமைக்காகத் திருட்டை அனுமதிக்க முடியுமா? இல்லை, நடைமுறைத் தேவைக்காக சட்டத்தை ரத்துசெய்யமுடியுமா? நான் இந்த தர்மசங்கடப்புள்ளியை முதலில் முன்வைக்கவேண்டும். அதில் இருந்து மேலே செல்லமுடிந்தால் செல்லவேண்டும்.

மாறாக, இந்த மனித உரிமையாளர்களின் மேலோட்டமான வாதங்களை ஏற்று நானும் கோஷமிட்டால் உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். ஆனால் அதற்கு எழுத்தாளனாகிய நான் எதற்கு? அதைத்தான் அவர்களே செய்கிறார்களே?

உண்மை முக்கியம் என நினைத்து நான் இதில் உள்ள உண்மையைப் பேசப்போனால் அது மனித உரிமையாளர்களால் விரும்பப்படாது. நான் ’பிற்போக்கானவன்’, ‘சமூக அமைப்பின் குரலாகப் பேசுபவன்’, ‘மனிதாபிமானமில்லாதவன்’ என்றெல்லாம் அவர்கள் சொல்வார்கள். அவர்களுக்கெல்லாம் விளக்கம் அளித்தே நான் ஓய வேண்டியிருக்கும்.

இந்தக் கட்டுரையில் நான் ஒற்றைப்படை நிலைப்பாடு எடுக்காத காரணத்துக்காகவே என்னென்ன வசைகள் வருகின்றன என்று கவனியுங்கள். இங்கே எழுத்தாளனை அவனுடைய படைப்புகளை வாசிக்காத ஒரு பெரும் கும்பல் எப்போதும் வசைபாடிக்கொண்டே இருக்கிறது.

இந்த விஷயத்தில் மட்டும் அல்ல, சமூகத்தில் பரபரப்பாகப் பேசப்படும் எல்லா விஷயத்துக்கும் இப்படி மறுபக்கமும், மறுபக்கத்தின் மறுபக்கமும் உண்டு. அவற்றை எல்லாம் கருத்தில்கொண்டு பார்த்தால் மட்டுமே இலக்கியவாதியாக நான் பேசமுடியும். எழுத்தாளன் அவற்றை அப்படி எல்லாத் தருணத்திலும் பேசிக்கொண்டிருக்கமுடியாது.

ஆக மௌனமாக இருப்பதே வழி. அதற்கும் மேல் இந்தப் பிரச்சினை என்னுடைய மனசாட்சியைத் தாக்குமென்றால் இதை என் புனைவுலகுக்குக் கொண்டுசெல்லவேண்டும். புனைவுலகில் நான் இதை எல்லாத் தரப்புகளையும் பேசச்செய்து ஒரு சமநிலைநோக்கைப் பார்த்து இதைக் கொண்டுசெல்லமுடியும்.நானறியும் உண்மையை இன்னும் கூர்மையாகவும், இன்னும் முழுமையாகவும் சொல்லமுடியும். அதுதான் என் ஊடகம்.

அப்படி இலக்கியத்தில் முழுமையான தர்க்கங்களுடன், உணர்ச்சிக் கூர்மையுடன் சொல்லப்பட்ட விஷயங்களையேகூட நம்முடைய பொத்தாம்பொது வாசகர்கள் அவர்கள் ஏற்கனவே பேசிக்கொண்டிருக்கும் ஒற்றைப்படை அரசியலை நோக்கி இழுத்துச்சென்று மடத்தனமாக விவாதிப்பதே இங்கே நிகழ்ந்துகொண்டிருக்கிறது. நம்முடைய இலக்கிய விவாதங்களை மேலோட்டமாகப் பார்த்தாலே இது தெரியும். இந்நிலையில் இலக்கியவாதி இலக்கியம் எழுதாமல் இவர்களின் டீக்கடைப்பெஞ்சு விவாதங்களில் சென்று அமர்ந்தால் வேறு வேலையே வேண்டியதில்லை.

ஆகவேதான் நான் பேசாமலிருக்கிறேன்.

ஜெ

 

மறுபிரசுரம் – முதற்பிரசுரம் Mar 12, 2012

முந்தைய கட்டுரைகரு நாகம் (கினி குடியரசு சிறுகதை)
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-1