அருகர்களின் பாதை – கடிதங்கள்

அருகர்களின் பாதை தொடரைப் படிக்கும்போது இந்திய சரித்திரம் பற்றி எனக்கு எவ்வளவு குறைவாகத் தெரியும் என்பது புரிந்தது. சமணர்கள், வணிகர்கள் கண்ணில் ஒரு நாவல் வந்தால்!

புகைப்படங்கள் அபாரமானவை. என்றாவது ஜெயமோகனோடு ஊர் சுற்றப் போக வேண்டும். ஐயாயிரம் படி இருக்கும் மலையாக இருந்தாலும் சரி…

ஆர்வி

உங்கள் அருகர்களின் பாதை தொடரை விடாமல் படித்துவருகிறேன். முடிந்தால் பின்னர் ஒருமுறை அதே வழியைத் தொடர்ந்து போக விருப்பம்.

பத்ரி சேஷாத்ரி

அன்புள்ள ஜெமோ ,

என்னுடன் ஒரு ஜைன மதத்தவர் வேலை செய்கிறார். பூர்விகம் பீகார்.செட்டில் ஆனது கொல்கத்தாவில். இப்போது பெங்களூரில் வேலை செய்கிறார்.

தங்களின் பயண விபரத்தை அவரிடம் விளக்கி போட்டோக்களைக் காண்பித்தேன். அவர் மிகுந்த பரவசம் அடைந்தார்!

பலிதானா கோவிலைப் பற்றி சில விபரங்கள் கூறினார். அவர் தாத்தாவும் பாட்டியும் ஒவ்வொரு வருடமும் மூன்று மாதங்கள் பலிதானாவில் தங்கி தினமும் ஒன்று அல்லது இரண்டு முறை மலை ஏறி வணங்குவார்களாம்.  இவ்வாறு 108 முறை செய்வார்களாம். எனக்கு மயக்கமே வந்து விட்டது! எனக்குத் திருப்பதி மலை ஏறித் திரும்பவும் நடந்து இறங்கி வரவேண்டும் என்று தோன்றியது. அந்த 2-3 மாதங்களில் ஒரு வேளை மட்டும் சாப்பிடுவார்களாம்.

இது போன்று பீகாரில் ஷிகார்ஜி கோவில் பற்றியும் கூறினார்!

பாலாஜி

அன்பான ஜெயமோகன்,

உங்கள் பிரயாணக் கட்டுரைகளைத் தொடர்ச்சியாக வாசித்து வந்தமையாலும் உங்களுடன் நேரடித் தொடர்பு இருப்பதனாலும் உங்களுடன் பிரயாணம் பண்ணும் ஓர் உணர்வு எனக்கு இருந்தது. நான் தக்கலைக்கு வந்தபோது என்னைத் தாங்கள் அழைத்துச் சென்று பல இடங்களை அங்கு காட்டி அறிமுகப்படுத்தியமைதான் ஞாபகத்திற்கு வந்தது. விஷ்ணுபுரம் எழக் காலாயிருந்த ஆதிகேசவப் பெருமாள் கோயில், காடு நாவலுக்கு உணர்வு தநத காட்டுப் பகுதி, ரப்பர் நாவலுக்குப் பின்புலமான ரப்பர் தோட்டம், கொற்றவைக்கு ஊற்றுக் கண்ணாயிருந்த கன்னியாகுமரி அம்மன் கோயில் மற்றும் நீர் வீழ்ச்சிக் குளியல் எல்லாமே மீண்டு்ம் மீண்டும் ஞாபத்திற்கு வந்தன.

எனக்கு சமண மதம் மீது ஓர் ஈர்ப்பு உண்டு. பண்டைய அருகதர் ஆச்சரியம் தருபவர்கள். அருகதர் வந்த பாதை என்ற தலைப்பே எம்மை எங்கோ இட்டுச் சென்று விடுகிறது. யாழ்ப்பாணத்தில் சைவச் சாப்பாடு அருகத உணவு என்றே அழைக்கப்பட்டது. ஆம் சைவம் தமது உணவுப் பழக்கத்தைச் சமணத்திடமிருந்தே பெற்றுக் கொண்டது. தங்களுடன் பிரயாணம் செய்தோர் உங்கள் விபரிப்புகளால் நிறைந்த பயன் பெற்றிருப்பர்.

அன்புடன்
சி.மெளனகுரு
மட்டக்களப்பு

முந்தைய கட்டுரைவீட்டில்
அடுத்த கட்டுரைவம்ச விருட்சம்