திரையும் சமரசமும்- ஒரு கடிதம்

தங்கள் “இதழ்களும் மதிப்பீடுகளும்- ஒரு கடிதம்” பார்த்தேன்.
“நான் கடவுள்” திரைப்படத்திற்கு வசனம் அமைப்பது வணிக இதழ்களுக்கு எழுதுவதற்கு ஈடானது தானே? மேலும் சமரசங்கள் அதிகமாக கூட செய்ய வேண்டி இருக்குமே? அது நீங்கள் விரும்பி ஏற்றுக்கொண்ட ஒன்றா? உங்கள் நிலைப்பாட்டை தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

அன்புடன்
முருகேஷ்
அன்புள்ள முருகேஷ்

இன்றைய சூழலில் தமிழில் எழுதி வாழ முடியாது. தமிழில் மிக அதிகமாக எழுதி அதிகமாக விற்கப்படும் எனக்குக் கிடைக்கும் ஊதியமே மிக மிக குறைவு. அப்படியென்றால் பிறரைப்பற்றி சொல்லவேண்டியதில்லை. ஆகவே ஒரு நிறுவனத்தில் பணியாற்றுகிறேன். அதற்கு என் திறனையும், உழைப்பையும் வழங்கி ஊதியம் பெறுகிறேன்.

அதைப்போல ஒரு தொழிலாக மட்டுமே இப்போது திரைப்படத்துக்கு எழுதுவதை பார்க்கிறேன். திரைப்படத்துக்கு கதைத்தொழில் நுட்பம் அறிந்த ஒருவரின் சேவை தேவையாகிறது, ஒளிப்பதிவு போல, இசை போல. அதை அவர்களுக்கு அளிக்கிறேன். இது எனக்கு மிக எளிய வேலை. அதற்கான ஊதியம் எனக்கு உதவியாக இருக்கிறது. என் திறமைக்குரிய வேலையைத்தான் நான் செய்யமுடியும். சென்ற காலங்களில் நான் உபரி வருமானத்துக்காக வணிகமுறை மொழிப்பெயர்ப்புகளை பக்கம் பக்கமாக கையொடிய செய்திருக்கிறேன். விஷ்ணுபுரம் எழுதிய நாட்களில் அதேயளவுக்கு மொழியாக்க வேலையும் செய்வேன்.அதைப்போன்ற ஒன்றே இதுவும். ஒரு திரைப்படத்துக்கு இருவாரம் வேலைசெய்வது இருவருடம் மொழிபெயர்ப்பதைவிட அதிக ஊதியம் அளிப்பது.

எழுத்து மூலம் குறிப்பிடும்படி வருமானமே இல்லாத தமிழ் சூழலில் எழுத்தாளனுக்கு இது தவிர்க்க முடியாதது. இல்லையேல் நான் நூல்கள் வாங்க இயலாது. ஆய்வுக்காக பயணமே கூட செய்ய இயலாது. ஏன் எழுதுவதற்கான நேரத்தையே ஈட்டமுடியாது. இப்போது என் குழந்தைகள் வளர்ந்து, வந்த பொருளியல் நெருக்கடியை திரைத்துறையை வைத்து சமாளிப்பதனால்தான் நான் எழுத முடிகிறது. உலகமெங்கும் உள்ள எல்லா எழுத்தாளர்களும் இச்சிக்கல்கள் வழியாக இப்படித்தான் கடந்து வந்திருக்கிறார்கள் — புதுமைப்பித்தன் முதல் எஸ்.ராமகிருஷ்ணன் வரை தமிழில் இதுவே வழக்கம். வாய்ப்பு கிடைக்காதவர்கள் இதழியலில் இதேபோல பணியாற்றுகிறார்கள்.

திரைப்படத்தில் நமது பங்களிப்பு பல பங்களிப்புகளில் ஒன்று. அதை பயன்படுத்திக் கொள்வது இயக்குநரின் விருப்பம். திரைப்படம் இயக்குநரின் கலை. அதை உணர்ந்து பணியாற்றினால் அங்கே சமரசம் என்ற பேச்சே எழுவதில்லை.

நான் இதுவரை பணியாற்றிய எந்தப் படமும் தரமற்ற ஆக்கம் அல்ல. திரைப்படம் ஒரு கேளிக்கை வடிவம் என்ற முறையில் தரமான கேளிக்கை படங்களும் விலக்கத்தக்கவை அல்ல என்றே உணர்கிறேன்.

கௌரவத்தைப் பொறுத்தவரை ஒரு எழுத்தாளனாக இன்றுவரை நான் மிக மரியாதையாக நடத்தப்பட்டது திரைத்துறையில் மட்டுமே. பாலா, அல்லது வசந்தபாலன் என்னுடைய மிகச்சிறந்த வாசகர்கள் என்பது ஒரு பக்கம். ஆகவே சற்று அதிகப்படியான மரியாதையெ அங்குள்ளது. அதற்கும் அப்பால் பொதுவாகவே திரைத்துறையில் எழுத்தாளர்கள் மீது ஆழ்ந்த மதிப்பு இருக்கிறது என்பதைக் காண்கிறேன். குறிப்பாக உதவி இயக்குநர்களில் பெரிய வாசகர்கள் பலரைக் கண்டிருக்கிறேன். அத்தகைய மதிப்பு நம் கல்வித்துறையிலோ பிற தளங்களிலோ இல்லை என்பதே உண்மை. பொதுவாக எழுத்தாளனாக நாம் உணரும் ஒரு நுண்ணிய அவமதிப்பை நாம் திரைத்துறையில் உணர முடிவதில்லை.

என் அலுவலக வேலைகளில் மனிதர்கள் சார்ந்த சமரசங்கள் செய்ய நேர்வதுண்டு. தொழிற்சங்க வாழ்க்கை, வேறுவழியில்லை, சமரசமே முழுநேர வேலை. ஆனால் இலக்கியவாதியாக, மனிதனாக என் மதிப்பீடுகளுடன் எப்போதுமே சமரசம் செய்துகொண்டதில்லை.

ஜெ.

முந்தைய கட்டுரைதெலுங்கு மொழியில் இலக்கியம்– ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைதமிழ் சினிமா: தொழில்நோக்கு தேவை