ஆதிச்சநல்லூர்:கடிதங்கள் மேலும்

அன்புள்ள ஜெயமோகன் ஒக்கல் என்பது திருநெல்வேலி மாவட்டத்தில் அதிகம் புழங்கும் வழக்கமான ஒரு சொல்தான், இதற்காக நீங்கள் தஞ்சை வரை போக வேண்டாம். ஒக்கலில் பிள்ளையை வைத்துக் கொண்டு ஊரு பூராவும் தேடினாளாம்என்பது மறதியில் இருப்பவர்கள் குறித்து அடிக்கடி எங்கள் ஊரில் அடிக்கடிச் சொல்லப் படும் ஒரு பழமொழிதான். ஆதிச்சநல்லூர் தாண்டி சில கி மீட்டர்களில் எனது கிராமம் இருக்கிறது. ஆதிச்சநல்லூர் பரம்பினைத் தாண்டித்தான் போக வேண்டும். சென்ற முறை அங்கு காரை நிறுத்தி இறங்கி தொல்பொருள் துறையின் மேற்பார்வையில் ஏதேனும் தோண்டப் பட்ட இடங்கள் இருக்கும் என்று நினைத்து சாலைக்கு இரு புறமும் அலைந்தேன். ஒரு பக்கம் போய் மேட்டில் இறங்கினால் தாமிரவருணி ஆறு ஓடிக் கொண்டிருக்கிறது. மறு புறம் வெகு தூரத்திற்கு ஆள் அரவமே இல்லை. காற்று மட்டும் எப்பொழுதும் பட படவென அடித்துக் கொண்டேயிருக்கிறது. சாலையின் இரு மருங்கிலும் மணற்பாங்கான மேடுகள். தொல் பொருள் துறையில் இருந்து இந்த இடம் தொல் பொருள் துறைக்குச் சொந்தமானது இந்த இடத்தை ஆக்கிரமிப்பது குற்றம் என்று ஒரு நீலக் கலர் எனாமல் போர்டு மட்டும் வைத்திருக்கிறார்கள். மற்றபடி ஒரு சின்ன தகவல் பலகை கூட வைக்கவில்லை. அங்கு ஆடு மேய்த்துக் கொண்டிருந்த ஒருவர் அவ்வப் பொழுது வந்து தோண்டி ஆராய்ந்து விட்டு மூடி விட்டுப் போய் விடுவார்கள் என்று கூறினார். இப்படி ஒரு இடம் இருப்பதும் இங்கு தொல்ல்லியல் துறை ஆய்வு செய்வதும் அக்கம் பக்கத்து ஊர்காரர்களுக்குக் கூட அவ்வளவாகத் தெரிவதில்லை. ஆர்வமும் இல்லை என்பது வேறு விஷயம். அங்கு கண்டெடுக்கப் பட்டவைகளை அங்கே ஒரு சின்ன ம்யூசியம் அமைத்துப் பாதுகாத்திருக்க வேண்டும்.ஆதிச்ச நல்லூர் மட்டும் அல்ல மதுரையில் உள்ள கீழக் குயில் குடி சமணர் படுகை, சித்தன்னவாசல் போகும் வழியில் இருக்கும் முது மக்கள் கண்டுபிடிக்கப் பட்ட இடம், மதுரை டி வி எஸ் நகரில் உள்ள கோவலன் பொட்டலில் முது மக்கள் தாழி கண்டெடுக்கப் பட்ட இடம் என்று தமிழ் நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இடங்களிலும் இதே நிலைமைதான். அந்த இடம் தங்களுக்குச் சொந்தம் என்ற அறிவிப்பு/எச்சரிக்கைப் பலகையைத் தவிர வேறு எந்த விபரங்களையும் அவர்கள் அறியத் தருவதில் ஆர்வம் காட்டுவதில்லை. ஒரு வேளை அதைப் படிக்கும் பாமரர்கள் அதைத் தெரிந்து என்னத்த செய்யப் போகிறார்கள் என்னும் நினைப்பா அல்லது நிதி வசதி போதாமையா என்பது தெரியவில்லை. நமது பாரம்பரியங்களை யாரும் கொள்ளையடித்துக் கொண்டு போய் விடக் கூடாது என்பதற்காக ரகசியம் காக்கிறார்கள் போலும். நார்த்தா மலைக்குப் http://picasaweb.google.com/strajan123/NORTHAMALAI# போயிருக்கிறீர்களா? அதுவும் தொல் பொருள் துறையின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. இந்த ஆல்பத்திலும் தொல்பொருள் துறைக்குச் சொந்தமான இடம் என்ற ஒரு போர்ட் மட்டும் இருப்பதைக் காணலாம். அங்கு விசாரிப்பதற்கு மாடுகள் மட்டுமே இருந்தன. ஏழாம் நூற்றாண்டில் முத்தரையர்கள் கட்டிய அழகிய பல்லவ பாணிக் கோவில்களை இடிபாடுகளில் இருந்து மீட்டு மிக அருமையாக கட்டியிருக்கிறார்கள். விஜயாலயச் சோழீஸ்வரம் எனப்படும் இந்தக் கோவில்களைப் பற்றிய தகவல்களோ, அந்த இடத்திற்குச் செல்லும் வழிகாட்டல்களோ எங்கும் கிடையாது. நாமாகத் தட்டுத் தடுமாறி குன்றின் மீது ஏறிப் போக வேண்டும்.ஒரு அறிவிப்புப் பலகை வைப்பதற்கு, தகவல்களை அனைவரும் அறிந்து கொள்ளும் வண்ணம் ஏன் தகவற் பலகைகளை வைக்க பிடிவாதமாக தொ.பொ.துறையினர் மறுக்கின்றனர் என்ற ரகசியத்தை மட்டும் என்னால் கண்டறியவே முடியவில்லை. இந்த இடத்தைப் பற்றிய தகவல்கள் எனக்கு பேரா. சுவாமிநாதன் அவர்கள் மூலம் தெரிந்திருந்தாலும், இதைக் காண வரும் பொது மக்களுக்கு ஒரு விபரப் பலகை வைப்பதற்கு இவர்களுக்கு என்ன கொள்ளை என்பதுதான் தெரியவில்லை. இந்த இடத்தைக் கண்டு பிடித்து வருவதே ஒரு சாகசப் பயணம் போல் இருந்தது. எங்கும் ஒரு வழிகாட்டியோ, உதவிகளோ காணப்படவில்லை. ஏன் இந்த அலட்சியம்? தமிழகத்தின் கட்டிடக் கலையின் மாண்பு 1300 ஆண்டுகளுக்கு முன்பே இப்படிச் சிறப்பாக இருந்தது என்ற உண்மையையும், புகழையும், ஏன் இந்த உலகத்திடம் இருந்து இப்படி மறைக்கிறார்கள்? உலகத்தை விடுங்கள் தமிழ் நாட்டுக்காரர்களிடம் இருந்து கூட இப்படி மறைக்கிறார்களே ஏன்?இவற்றைப் பாதுகாக்கும் காவலர்களும் அங்கு ரெகுலராக வருவது கிடையாது. முன் கூட்டியே சொன்னால் அழைத்துப் போய் காண்பிப்பார்களாம். தொல்பொருள் துறையினருக்குக் கடுமையான நிதிப் பற்றாக்குறையும் ஆள் பற்றாக் குறையும் இருக்கும் போலத் தெரிகிறது. மேலை நாடுகளில் அவர்களது ஐம்பது ஆண்டு நூறாண்டுகள் மட்டுமேயான இடங்களுக்குக் கூட அவர்கள் கொடுக்கும் முக்கியத்துவமும் அவற்றைப் பேணும் விதமும் நம்மைப் பொறாமையடைய வைப்பவை.அன்புடன்
ச.திருமலை

அன்புள்ள திருமலைராஜன்

உண்மை, நிதி இந்தியாவுக்கு ஒரு பெரிய விஷயம்தான். பட்டினி கிடக்கும் கொடுமைகள் கொண்ட ஒரு தேசம் தன் பழம்பெருமைக்கு அள்ளி அள்ளிச்செலவிட முடியாதுதான். ஆனால் அதைவிடமுக்கியமான சிக்கல் நிர்வாக திறனின்மை மற்றும் பொறுப்பின்மை. பெரும்பாலான தொல்பொருள் மையங்களுக்கு காவலர்கள் உண்டு– அவர்களை நீங்கள் ஒருபோதும் சம்பந்தப்பட்ட இடங்களில் பார்க்க முடியாது. அவர்களைக் கண்காணிக்கவேண்டியவர்கள் அங்கே வருவதே இல்லை. உயிராதாரமான நீர்நிலைகளை அழியவிட்ட நம் பொறுப்பின்மை இந்த தொல்பொருள் தடயங்களை மட்டும் எப்படி பாதுகாக்கும்?

நண்பர் சு.வெங்கடேசனுடன் மதுரைப்பகுதி சமணக்குகைகளுக்குச் சென்றிருந்தேன். அப்பகுதி மக்களுக்கு அங்குள்ல சிலைகள் மேல் ஒரு பக்தி இருக்கிறது — நவீன ஆய்வாளர் அதை மூடபக்தி என்பார்கள். ஆனால் அதுதான் சிலைகளை பலகாலம் காத்தது. அந்தப் பக்தி இல்லாத பகுத்தறிவுள்ள கல்லூரிமாணவர்கள் சமீபகாலமாக குவார்ட்டரும் பிரியாணியுமாக வத்துஅமர்ந்து குடித்து அந்த சிலைகளை சீரழிக்கிறார்கள் என்றார்.

இதுதான் நம்முடைய சிக்கல்

ஜெ

அன்புள்ள ஜெயமோகன்

நான் இது குறித்து நிறைய இடங்களில் குமுறியுள்ளேன். நாங்கள் சென்ற இடங்களில் சித்தன்னவாசலில் மட்டுமே சவுரி என்ற ஒரே ஒரு தொல்லியல் துறை ஊழியர் கடமையாக இருந்தார். திருப்பரங்குன்றத்தின் மலைக்குப் பின்னால் உள்ள தென்பரங்குன்றத்தில் காவல்காரர் தன் மைத்துனரையோ பையனையோ பினாமியாக அனுப்பி கதவைத் திறந்து வைக்கச் சொல்லியிருந்தார்.

சித்தன்னவாசலில் இருந்த பாண்டவர் படுகைகளில் கல்வெட்டுக்களின் நடுவே ஹார்ட் வடிவத்தை வெட்டி ஐ லவ் யூ செதுக்கியிருக்கிறார்கள் நவீன மன்மதர்கள். அதை ஃபோட்டோ எடுத்துப் போட்டிருந்தேன். மேலும் சித்தன்னவாசல் குகைகளுக்கு அருகே கும்பல் கும்பலாக ஆண்களும் பெண்களும் ஒதுங்கியிருந்தார்கள். மலை மேல் அநாவசியமாக எந்த ஆர்வலர்களும் ஏறிப் போக மாட்டார்கள். எங்களை அந்த நேரத்தில் அங்கு எதிர்பார்த்திராத ஒரு ஜோடி அவசர அவசரமாக பாதியில் எழுந்தார்கள். அங்கு தொல்பொருள் துறையினர் போர்ட் வைக்கிறார்களோ ஒரு இலவச உறை வழங்கும் மெஷின் வைக்க வேண்டியது உடனடி அவசியம்.

குடுமியான் மலை நிலை இன்னும் மோசம். எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் இருக்கிறது அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த இருண்டு கருத்த அந்த ஆயிரம் கால் மண்டபம். அர்ச்சகர்கள் விளக்கு எண்ணெய் விடக் கூட கையேந்தும் நிலை. அந்தக் கோவில் முழுவதுமே தொல்பொருள் துறை கட்டுப்பாட்டில் இருக்கிறது. நார்த்தாமலைக்குப் பின்னால் குவாரிக்காக குண்டு வைத்து அழிக்கிறார்கள். புதுக்கோட்டையில் இருக்கும் ஏராளமான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் தொடர்ந்து கிரானைட்டுக்காக குண்டு வைத்து அழிக்கப் படுகின்றன. கேட்ப்பார் இல்லை. யாருக்கும் அக்கறையில்லை.

நினைக்க நினக்க வெறுப்பும் விரக்தியும்தான் மிஞ்சுகிறது. நான் இதைப் பற்றியெல்லாம் எழுதிய பொழுது அமெரிக்காவில் இருக்கும் திமிரில் இந்தியாவைக் குறை சொல்கிறான் என்று ஒரு சிலர் என்னிடம் சண்டைக்கு வந்தார்கள். கீழக் குயில் குடி சிறிய கிராமம்தான் இருந்தாலும் அந்த சமணர் மலையின் அடிவாரத்தில் உள்ள தாமரை பூத்த குளத்தில் சோப்புப் போட்டுக் குளிக்கக் கூடாது என்று கட்டளை போட்டிருக்கிறார்கள். அவர்கள் அந்த மலையைச் செட்டி படவு என்று அழைக்கிறார்கள். இப்பொழுது சற்று பிரபலமாகியிருக்கிறது, இருந்தாலும் மெயின் ரோட்டில் இது குறித்து எவ்வித அறிவிப்புப் பலகையும் கிடையாது. நாமாகத் தேடிப் போனால்தான் உண்டு.

நீங்கள் சொல்லும் வெங்கடேசன் திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த ஒரு மார்க்ஸிஸ்ட் என்று நினைக்கிறேன். என்னுடைய மதுரை சமணர் மலைப் படங்களையும், சித்தன்ன வாசல் படங்களையும், குடுமியான் மலைப் படங்களையும் இங்கு காணலாம்

http://picasaweb.google.com/strajan123/SAMANARHILLS#
http://picasaweb.google.com/strajan123/SITHANNNA#

அன்புடன்
ச.திருமலை

அன்புள்ள திருமலை

சு.வெங்கடேசன் திருப்பரங்குன்றத்தில் வசிக்கிறார். மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்டுக் கட்சியின் முழுநேர ஊழியர். என்னுடைய மிகக்கடுமையான விமரிசகர். நல்ல நண்பர். சென்றமுறை சட்டமன்ற தேர்தலில் திருப்பரங்குன்றம் மார்க்ஸியக் கம்யூனிஸ்டுக் கட்சி வேட்பாளராக போட்டியிட்டு கொஞ்ச வேறுபாட்டில் தோல்வியடைந்தார். நான் அறிந்தவரை ஐயத்துக்கு இடமில்லாத நேர்மையான பொதுவாழ்வு கொண்டவர். அவருடன் நான் மதுரைப்பகுதி சமணக்குகைகளை சுற்றிப்பார்த்திருக்கிறேன். அந்த சமணக்குகைகளைக் கல் உடைக்கும் முதலாளிகள் அழிக்காதபடி பெரும் சட்டப்போர்களை நிகழ்த்திக் காத்தவர் அவர். அவர் எழுதிய காவல்கோட்டம் என்ற நாவல் தமிழினி வெளியீடாக வந்திருக்கிறது. 1000 பக்கமுள்ல இந்த பெரும் நாவல் மதுரையை நாயக்கர்கள் கைப்பற்றியது முதல் வெள்ளையர் காலம் வரை நீள்கிறது

ஜெ

 

அன்புள்ள ஜெ

ஆதிச்ச நல்லூரைப்பற்றிய கடிதங்களை வாசித்தேன். ஆதிச்சநல்லூர் ஆய்வுகளைப்பற்றி சமீபகாலமாக சிற்றிதழ்களில் நிறையவே கட்டுரைகள் வந்திருக்கின்றன– கொஞ்சம்கூட இந்தவிஷயத்தைக் கண்டுகொள்ளாத சிற்றிதழ் என்றால் உயிர்மை மட்டும்தான். அவர்களுக்கு தங்கள் மத அஜெண்டாவே பக்கங்களை நிரப்பிக்கொள்கிறது. சமீபத்திய அமிர்தா இதழில் ஐராவதம் மகாதேவன் எழுதிய ‘சங்க காலத்தில் முதல் அறிவொளி இயக்கம்’ என்ற மிக முக்கியமான கட்டுரை உள்ளது. உங்கள் கட்டுரைகூட ஒன்று அதிலே உள்ளது. கீழைநாடுகளிலும் மேற்கில் செங்கடல் வரையிலும் கண்டெடுக்கப்பட்ட பானைக்கீறல் எழுத்துக்களில் தமிழ்பிராமி சொற்கள் இருப்பதை ஐராவதம் மகாதேவன் சுட்டிக்காட்டியிருக்கிறார். தமிழின் தொன்மையையும் பரவலையும் நிருப்பிக்கும் ஐயத்துக்கு அப்பாற்பட்ட ஆதாரங்கள் இவை.

சிவலிங்கம்
சென்னை

அன்புள்ள சிவலிங்கம்,

அம்ருதா இதழை நான் இன்னும் பார்க்கவில்லை. கட்டுரையை கவனிக்கிறேன். இந்தியப்பண்பாடு என்பதே தெற்கை மையமாகக் கொண்டது என்றும், ஆரியப்பண்பாடு என்று உண்மையில் இல்லை என்றும் அதுவும் தென்னகப்பண்பாட்டின் ஒரு கிளையே என்றும் என் நண்பர் மறைந்த சோதிப்பிரகாசம் அவர்கள் வாதிடுவதுண்டு — இரு நூல்களும் எழுதியிருக்கிறார். [ஆரியர் வரலாறு, திராவிடர் வரலாறு]

கொற்றவை நாவலில் ஒரு கவித்துவக் கருதுகோளாக அதையே நானும் எழுதியிருக்கிறேன். அதில் ஓர் இடம்.  கோவலனின் ஒரு மூதாதை கப்பலில்சென்று தவறிப்போய் மத்திய ஆசிய நாடுகளில் அலைகிறார். எல்லா மொழியிலும் தமிழ்ச்சொற்கள் இருப்பதைக் காண்கிறார். ஒரு சொல் தமிழ் போல ஒலித்தாலே அது தமிழ்ப்பொருள் கொண்டது என அறிகிறார். பலகாலம் கழித்து ஒரு ஞானியாக திரும்பி வருகிறார். அவருக்கு பேச்சே மறைந்து போய்விட்டிருக்கிறது

ஒருநாள் அவர் தன் அறையில் இருக்கையில் தெருவில் ஒரு முதுகணியன் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று பாடிச்செல்வதைக் கேட்டு ஆழ்ந்த பரவசத்துடன் ஓடிவந்து அவன் காலடியில் விழுந்து உயிர்துறக்கிறார். அவர் முகம் தெய்வங்களின் சிலைகளில் உள்ள இளமுறுவலுடன் இருக்கிறது

ஜெ

 

 

ஆதிச்சநல்லூர்:கடிதங்கள்

ஆதிச்சநல்லூர் சிதம்பரம்

ஒக்கலை ஏறிய உலகளந்தோன்

முந்தைய கட்டுரைதி.க.சி- கடிதங்கள்
அடுத்த கட்டுரைமார்கழியில் தேவதேவன்