சாஸ்தா

அன்புள்ள ஜெ,

சம்ஸ்கிருதம் பற்றி சராசரி தமிழ் மனதில் பொதுவாக உருவாகியிருக்கும் தவறான பிம்பங்களையும், புரிதல்களையும் களையும் வகையில் அருமையாக பதிலளித்திருக்கிறீர்கள். (நாட்டார் தெய்வங்களும் சமஸ்கிருதமும்) மிக்க நன்றி.

சென்ற நூறாண்டுக்காலத்துக்குள்தான் ஐயப்பனுக்கு சம்ஸ்கிருத தோத்திரங்கள் உருவாயின.

இல்லை. ஐயப்பன் குறித்த சம்ஸ்கிருத புராணங்கள், தோத்திரங்கள்,ஐதிகங்கள் குறைந்தது 8-9 நூற்றாண்டுகளாவது பழையவை. பதினெட்டு புராணங்களில் ஒன்றான பிரம்மாண்ட புராணம் என்னும் புராணத்தில் பூதநாதோபாக்கியானம் என்னும் பகுதியில் இன்று கேரளத்திலும், தமிழகத்திலும் பிரபலமாக உள்ள ஐயப்பன் சரித்திரம் கூறப்படுகிறது. இது ஒரு தனி நூலாக இயற்றப்பட்டுப் பிறகு இந்தப் புராணத்தில் சேர்க்கப் பட்டிருக்கக் கூடும். சபரிமலை குறித்து இந்த நூல் கூறுகிறது. போரில் தோற்ற பிற்காலப் பாண்டியர்களிடமிருந்து கிளை பிரிந்ததே பந்தள ராஜவம்சம்; அந்தக் கிளையில் வந்த ராஜசேகர பாண்டியனே ஐயப்பனின் தந்தையாகச் சித்தரிக்கப் படுபவர் என்று சில வரலாற்றாசிரியர்கள் தெரிவிக்கும் கருத்தும் இந்தக் காலகட்டத்துடன் (11,12ம் நூற்றாண்டு) பொருந்தி வருகிறது.

கச்சியப்ப சிவாச்சாரியாரின் கந்த புராணத்தில் மகா சாத்தாப் படலம் என்ற பகுதி சாஸ்தா குறித்த புராணக் கதையை முழுவதுமாகச் சொல்லி விடுகிறது. கச்சியப்பரின் காலம் கி.பி 1400க்குச் சற்று முன்… எனவே அதற்கு முன்பே சம்ஸ்கிருத புராண மரபில் சாஸ்தா/ஐயப்பன் உறுதியாக இடம்பெற்று விட்டார் என்பது தெளிவு.

அங்கண் மேவி அரிகரபுத்திரன்
சங்கையில் பெரும் சாரதர் தம்மொடும்
எங்குமாகி இருந்து எவ்வுலகையும்
கங்குலும் பகல் எல்லையும் காப்பனால்

என்று கந்தபுராணத்தில் வரும் பாடல் தான் “காசி ராமேஸ்வரம் பாண்டி மலையாளம் அடக்கியாளும் ஹரிஹரசுதன்” என்று ஐயப்ப பக்தர்கள் இன்றுவரை கூறும் சரண கோஷத்திற்கு அடிப்படையாக இருக்கிறது.

பல குலதெய்வங்கள், பரிவார தேவதைகளுக்கான சம்ஸ்கிருத துதிகள் இன்றும் எழுந்த படியே உள்ளன என்று நீங்கள் குறிப்பிடுவது மிகச் சரி.. இணைப்பில் உள்ள படங்களைப் பாருங்கள் – முதலில் உள்ளது ஸ்ரீ கருப்ப ஸ்வாமி அஷ்டோத்தர சத நாமாவளி , பிற்கு வருவது வீரனார் என்ற காவல் தெய்வம் குறித்த ஸ்ரீமஹாவீர அஷ்டோத்தர சத நாமாவளி.

(ஸ்ரீ மஹா சாஸ்தா விஜயம், வெளியீடு: மகா சாஸ்தா சேவா சங்கம், கோவை).

கறுப்பர் அஷ்டோத்திரத்தில் “வராஹ ரக்த ப்ரியாய நம:” [பன்றிக்குருதியை விரும்புபவனே வணக்கம்] “ அஜிபலி ப்ரியாய நம:” [ஆட்டு பலியை விரும்புபவனே வணக்கம் ] போன்ற நாமங்களும், ஸ்ரீம் / ஸௌம் / ஹம் ஆகிய பீஜாட்சரங்களுடன் இணைந்த நாமங்களும் கலந்தே உள்ளன.

எல்லா நாட்டாரியல் கோட்பாடுகளையும் கீழே போட்டு மிதிக்கிறது கருப்பசாமியின் குதிரை (அஸ்வாரூடாய நம:). விளாசுகிறது அவருடைய சாட்டை (கடி ஹஸ்தாய நம:) !

அன்புடன்,
ஜடாயு

அன்புள்ள ஜடாயு

தகவல்களுக்கு நன்றி

சாஸ்தா மிகப்பழைய தமிழ்நிலத்து தெய்வம். அவர் பற்றிய கதைகள் மிகத் தொன்மையானவை. கேரளத்தில் பல ஆயிரம் சாஸ்தாக்கள் உள்ளனர். அவர்களில் ஒருவரே சபரிமலை சாஸ்தா. பல சாஸ்தாக்கள் சபரிமலை சாஸ்தாவைவிட மிகமிகப்பழையவை.

சபரிமலை சாஸ்தா கோயிலின் வழிபாடு தாந்த்ரீக விதிகளின் அடிப்படையில் அமைந்தது. அர்ச்சனை முறை சென்ற நூற்றாண்டில்தான் வந்தது. அப்போதுதான் சம்ஸ்கிருத சுலோகங்கள் உருவாகி வந்தன. அதையே நான் குறிப்பிட்டிருந்தேன்.

ஜெ

முந்தைய கட்டுரைகாந்தியும் லோகியாவும்
அடுத்த கட்டுரைகடைசி முகம் – [சிறுகதை]