வரலாற்றெழுத்தில் நான்கு மாறுதல்கள்

1

வரலாறு என்பதை வரலாற்றெழுத்தாக நம்மில் பெரும்பாலானவர்கள் பார்ப்பதில்லை என்பது ஆச்சரியமான உண்மை. தமிழக வரலாற்றைப்பற்றிச் சொல் என்று சாதாரண வரலாற்று மாணவர் ஒருவரிடம் கேட்டால் அவர் சங்ககாலம், களப்பிரர் காலம், பல்லவர்கள் மற்றும் பிற்கால சோழபாண்டியர்களின் காலம், சுல்தானிய படையெடுப்புகளின் காலம், நாயக்கர் காலம், பிரிட்டிஷ் ஆட்சிக்காலம் என ஒரு வரலாற்றைச் சொல்லக்கூடும். ஆனால் இது வரலாறு அல்ல, இருபதாம் நூற்றாண்டில் நம்மால் எழுதப்பட்டதுதான் என்று அவரிடம் சொன்னால் ஆச்சரியம் கொள்வார்.

உதாரணமாக மேலே சொன்ன வரலாற்றுக்காலகட்டங்கள் எப்படி இவ்வாறாகப் பிரிக்கப்பட்டன? அந்த அளவுகோல் என்ன? ‘நம்மவர் x அன்னியர்’ என்ற பிரிவினைதான். சங்ககால மன்னர்கள் தமிழர்கள். களப்பிரர் அன்னியர். பிற்காலப் பல்லவர்களும் சோழர்களும் பாண்டியர்களும் நம்மவர்கள். மீண்டும் இஸ்லாமிய அன்னியர்கள். அந்த அன்னியரை வென்ற இன்னொரு வகை அன்னியர்கள். அவர்களை வென்ற பிரிட்டிஷ் அன்னியர்கள்.

இவ்வகை வரலாற்றில் பிற்காலத்தைய மூன்று காலகட்டங்களில் நம்மவர் அன்னியர் பிரிவினை சார்புத்தன்மை கொண்டதாக ஆவதைக் காணலாம். சுல்தானிய அன்னியர்களுடன் ஒப்பிடுகையில் நாயக்கர்கள் நம்மவர்கள். பிரிட்டிஷாருடன் ஒப்பிடுகையில் இஸ்லாமியரும் நம்மவரே.

இந்தியா தன்னுடைய நவீனதேசியத்தைக் கட்டமைத்துக்கொண்டிருந்த பத்தொன்பதாம்நூற்றாண்டில் நம் வரலாற்றெழுத்து ஆரம்பித்தது. ஆகவே நம்மவர் அன்னியர் என்ற அளவுகோல் இயல்பான ஒன்றாக அமைந்தது. அதன்மேல் நமக்கு ஐயமே இல்லை. அந்த வரலாற்றையே நாம் உண்மையிலே நிகழ்ந்த இறந்தகாலம் என்று எண்ணிக்கொண்டிருக்கிறோம். இறந்தகாலம் பற்றி நமக்கு எதுவும் தெரியாது. நாம் வரலாறென்று பேசுவது அவ்விறந்தகாலத்தில் இருந்து நம்மிடம் இன்று மிஞ்சுபவற்றைப் பற்றி மட்டுமே.

நினைவுகளே உண்மையான நேரடி வரலாறு. ஆனால் ஒரு சமூகம் எதை நினைவில்கொள்கிறது என்பது அதன் பண்பாட்டுத்தேவையைப் பொறுத்தது. நமக்குத் தேவையற்றவற்றை நாம் மறந்துகொண்டே இருக்கிறோம். ஒரு வரலாற்று நிகழ்வு நினைவில் நிறுத்தப்படுவது அதன் உள்ளுறையாக உள்ள விழுமியங்களுக்காகவே. நேற்றைய நம் வாழ்க்கையில் இருந்து நாம் பெற்றுக்கொண்ட அறங்களை, படிப்பினைகளை, வழக்கங்களை நீட்டித்துக்கொள்ளும் பொருட்டே வரலாற்றை நினைவுகூர்கிறோம்.

அதேபோல இன்று நாம் சென்ற காலத்தை நோக்கி ஆராய்ந்து எழுதிக்கொள்ளும் வரலாறு என்பதும் இன்று நாம் நிறுவ, முன்னெடுக்க விரும்பும் விழுமியங்களுக்காகவே. அவ்விழுமியங்களை நிரூபிக்கும் ஆதாரங்களையே வரலாற்றில் தேடுகிறோம். இன்றைய நிகழ்ச்சிகளுக்கு நேற்றில் ஒரு நீட்சியை நாடுகிறோம். முன்ஊகங்களே வரலாற்றாய்வுக்கான முகாந்திரங்களாகின்றன. அவை வலைகள். அவ்வலையில் எது சிக்கவேண்டும், எது விடப்படவேண்டுமென வலையே தீர்மானிக்கிறது.

வரலாற்றெழுத்தைப் பற்றிய தெளிவில்லாவிட்டால் வரலாற்றைத் தெளிவாகப் புரிந்துகொள்ளமுடியாது. யாரால் எப்போது எதற்காக எழுதப்பட்ட வரலாறு என்பது எப்போதும் வரலாற்றைத் தீர்மானிப்பதாகவே அமைந்துள்ளது. உதாரணமாக நவீன இந்திய வரலாற்றின் முழுமையான முதல் முன்வரை என்பது 1911ல் வெளிவந்த வின்செண்ட் ஸ்மித்தின் The Oxford History Of India என்ற நூல்தான் என்று சொல்லப்படுவதுண்டு. முழுக்கமுழுக்க ஆக்ரமிப்பாளர்களின் கோணத்தில் எழுதப்பட்ட இந்நூல் இந்தியவரலாற்றைப் படையெடுப்புகளின் கதையாகச் சொல்லியது. அந்த முன்வரைவை ஒட்டி அதற்கு நேர் எதிர்கோணத்தில் நின்றபடி இந்திய தேசிய வரலாறுகள் எழுதப்பட்டன.

வேறுகோணங்களில் நம் வரலாற்றை நாம் ஏன் எழுதக்கூடாது? உதாரணமாக இந்தியா நான்கு மதங்களின் பிறப்பிடம். இந்து,பௌத்தம்சமண,சீக்கிய மதங்கள் உருவாகி இந்தியப்பண்பாட்டை வடிவமைத்தன. இந்தியாவை வேதகாலம் முதல் நிகழ்ந்த பண்பாட்டுச்சலனங்களின் வரலாறாக எழுதலாமே. மன்னர்களையும் போர்களையும் எல்லாம் அதன்பகுதியாக விளக்கலாமே?

அப்படிப்பார்த்தால் தமிழக வரலாற்றைப் பழங்குடிவழிபாடுகளின் காலம் [சங்ககாலம்] வைதிகத்தின் காலகட்டம் [சங்கம் மருவிய காலம்] பௌத்தசமண மதங்களின் காலகட்டம் [களப்பிரர் காலம்] பக்தி இயக்க காலகட்டம்[ பிற்கால சோழ பாண்டியர் காலம்], இஸ்லாமியர் காலகட்டம் [ சுல்தானிய ஆதிக்கம்] இந்து மறு எழுச்சிக்காலகட்டம்[நாயக்கர் காலம்] நவீன ஜனநாயகக் காலட்டம் [பிரிட்டிஷ் காலம்] என்று பிரிக்கமுடியும் அல்லவா?

இன்னும் சொல்லப்போனால் பலநூறு பழங்குடிகளும் பல்லாயிரம் இனக்குழுக்களும் கலந்து வாழ்ந்த இந்தப் பெருநிலம் எப்படி எந்தெந்த வரலாற்றுச் சந்திகள் மூலம் ஒரு நவீன ஜனநாயக தேசமாக ஆகியது என்று எழுதலாமே?

அந்தக் கோணத்தில் பார்த்தால் பழங்குடிக் காலகட்டம், சிறுகுடிமன்னர்களின் காலகட்டம் [சங்ககாலம்], மூவேந்தர்களின் தோற்றம் நிகழ்ந்த காலகட்டம்[சங்கம் மருவியகாலம்],வணிக மயமாதலின் காலகட்டம்[களப்பிரர் காலம்], பேரரசுகளின் காலகட்டம்[பிற்கால சோழ பாண்டியர் காலம்] குடியேற்றங்களின் காலகட்டம் [ இஸ்லாமிய,நாயக்க படையெடுப்புகள்] நவீன ஐரோப்பிய மதிப்பீடுகளின் காலகட்டம் [பிரிட்டிஷ் காலகட்டம்] என தமிழக வரலாற்றைச் சொல்லலாம் இல்லையா?

பழைய புத்தகம் ஒன்றைப் புரட்டியபோது பத்துவருடம் முன்பு எழுதப்பட்ட ஒரு குறிப்பு கீழே விழுந்தது. அதில் அப்போது படித்த எதையோ எழுதிவைத்திருந்தேன். ஆர்னால்டோ மொமிக்லியானோ [Arnoldo Momigliano][ என்ற இத்தாலிய வரலாற்றெழுத்தியல் நிபுணர் சொன்னது. 1908 முதல் 1987 வரை வாழ்ந்த இத்தாலிய யூதரான மொமிக்லியானோ ஃபாசிச காலகட்டத்தில் லண்டனுக்குக் குடிபெயர்ந்தார். ஆக்ஸ்போர்டிலும் லண்டன் யூனிவர்சிட்டி காலேஜிலும் வரலாற்றுப் பேராசிரியராகப் பணியாற்றினார். பின்னர் சிக்காகோ பல்கலையில் வரலாறு கற்பித்தார். நியூயார்க் ரிவ்யூ ஆப் புக்ஸில் கட்டுரைகள் எழுதினார். பழங்கால கிரேக்க,ரோமாபுரி வரலாறு குறித்த ஆய்வுகளுக்காகப் புகழ்பெற்றவர்.

அந்தக் குறிப்பில் மொமிக்லியானோ நவீன காலகட்டத்தில் வரலாற்றெழுத்தில் நான்கு அடிப்படையான மாற்றங்கள் வந்துவிட்டன என்று சொல்வதை எழுதி வைத்திருந்தேன். அவை கீழ்க்கண்டவை

1. அரசியல் வரலாறும் மதவரலாறும் வழக்கொழிந்தன. தேசியவரலாறுகள் பழையவையாக ஆயின.சமூகப்பரிணாம- பொருளாதார பரிணாம வரலாறே இன்று முக்கியமானவதாக உள்ளது .

நெடுங்காலமாக வரலாற்றெழுத்தை உருவாக்கும் அளவுகோல்களை மதமும் தேசியமும்தான் அளித்திருக்கிறது. மதமோ தேசியமோ உருவாக்கும் ஒரு கூட்டான சுய அடையாளத்தைக்கொண்டு அந்த சுய அடையாளம் உருவானது, தாக்குதல்களுக்கு உள்ளானது, மீண்டது என்ற அடிப்படையிலேயே இதுநாள் வரை வரலாறுகள் எழுதப்பட்டுள்ளன. தமிழ் வரலாறு இன்றுள்ளது போல. இப்போது வரலாற்றெழுத்தின் வழி சமூகம் எப்படி பரிணாமம் கொண்டது எப்படி அது பொருளியல் ரீதியாக கட்டமைவு கொண்டது என்பதை விளக்குவதாகவே அமையும்.

2 வரலாற்றை சில கருத்துக்களைக் கொண்டு விளக்குவது எளிதல்லாமலாகிவிட்டிருக்கிறது.

வரலாற்றை முன்னெல்லாம் ஒரு சில மையக்கருத்துக்களைக் கொண்டு விளக்குவதுண்டு. உதாரணமாக ஒட்டுமொத்த கிரேக்க வரலாற்றையும் ஜனநாயக விழுமியங்களின் வரலாறு என்று ஆர்னால்ட் டாயன்பி சொல்கிறார். இந்திய வரலாற்றை அருவமான இறையுருவத்தில் இருந்து பன்மைத்தன்மை கொண்ட இறையுருவகம் நோக்கி செல்லும் பரிணாமம் என சொல்வதுண்டு. அந்தவகை வரலாறு வழக்கொழிந்துள்ளது. இன்றைய வரலாற்றெழுத்தில் ஒரு மையச்சரடாக ஒரு கருத்தியலை ஊடாடவிடுவதில்லை.

3.சமூகத்தின் ஒட்டுமொத்த இயங்குமுறையைக் கொண்டு தனிநிகழ்வுகளை ஆராயும் போக்கு வழக்கொழிந்துள்ளது

இது நாம் வரலாற்றைப் பயன்படுத்தும் முறையில் எப்போதுமிருப்பது. குறிப்பாக இடதுசாரி வரலாற்றெழுத்தில் இது சகஜம். உதாரணமாக காஷ்மீர் மன்னன் ஸ்ரீஹர்ஷன் என்பவன் இந்து ஆலயங்களைக் கொள்ளையிட்டான் என்ற ஒற்றை நிகழ்வைக்கொண்டு இந்து மன்னர்கள் இந்து ஆலயங்களைப் படையெடுப்புக்காலங்களில் கொள்ளையிட்டனர் என்று மீண்டும் மீண்டும் நம் இடதுசாரி ஆராய்ச்சியாளர்கள் எழுதிவருகிறார்கள். இஸ்லாமியப் படையெடுப்பாளர்கள் மதநம்பிக்கையால் இந்து ஆலயங்களை இடித்தது இந்து மன்னர்களும் செய்ததே என வாதிடுகிறார்கள்.

ஜாலியன் வாலாபாக் நிகழ்வை மட்டும் கொண்டு பிரிட்டிஷ் ஆட்சியை மதிப்பிடுவதும் இப்படிப்பட்டதே. அதே பிரிட்டிஷார்தான் நிறுவனமயமாக்கப்பட்ட நீதியை இந்தியாவில் அறிமுகம் செய்தனர் என்பதை அதன் மறுபக்கமாக எடுத்துக்கொள்ளாமல் செய்யும் ஆய்வுகளுக்கு மதிப்பில்லை

4 இன்று வரலாற்றுக்கு திசையைக் கூறிவிட முடிவதில்லை.

வரலாறு ஒரு ஒரு திசை நோக்கி, ஒரு கருத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது என்ற நம்பிக்கை பெரும்பாலான அரசியல்கோட்பாடுகளுக்கு ஆதாரமாக இருக்கிறது. மார்க்ஸியத்தின் சாராம்சமே இந்த வரலாற்றுவாதம்தான். ஆனால் வரலாறு அப்படி ஒரு திசைநோக்கிய பரிணாமப் பயணத்தில் உள்ளது என்ற கோணத்தில் செய்யப்படும் வரலாற்றாய்வுகள் வழக்கொழிந்துவிட்டன. தமிழ்ச்சமூகம் எங்கே செல்கிறது என இதுவரையிலான தமிழ் வரலாற்றைக்கொண்டு கூறிவிட முடியும் என்ற கோணத்தில் தமிழக வரலாற்றை எழுதுவது அபத்தம்.

இந்த நான்கு அடிப்படைகளும் இன்றைய தமிழ் வரலாற்றெழுத்தைத் தீர்மானிக்கும் கூறுகளாக உள்ளனவா? இந்த அடிப்படையில் தமிழ் வரலாறு மீண்டும் எழுதப்படுகின்றதா? அப்படி ஒரு வரலாறு எழுதப்பட்டால் அது எப்படிப்பட்டதாக இருக்கும்?

மறுபிரசுரம் முதற்பிரசுரம் Oct 30, 2011

முந்தைய கட்டுரைதிரிச்சூரில் இன்று
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 69