மாசு

நேற்று மாலைநடை சென்றிருந்தேன். பாறையடியில் மலையடிவாரத்தில் வயல்கள் அந்தியில் மயங்கி விரிந்துகிடக்கும் தனிமையில் அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்தேன். கண்ணுக்கெட்டிய தொலைவு வரை மனிதர்கள் இல்லை. மிருகங்கள் இல்லை. வானத்தில் வழுக்கிச்செல்பவை போல சென்றுகொண்டிருந்த தனிப்பறவைகள் மட்டும். அந்தி இருண்டு மரங்கள் வானப்பின்னனியில் சிவப்பாக ஆவது வரை பார்த்துக்கொண்டிருந்தேன். இயல்பாகவே தேவதேவன் எந்த வார்த்தைகளில் இந்தக் காட்சியைச் சொல்வார் என்ற எண்ணம் ஏற்பட்டது. சந்தேகமே இல்லை தூய்மை.

தூய்மை தேவதேவனுக்குப் பிடித்த சொற்களில் ஒன்று. வேறெந்த நல்ல கவிஞரையும்போல அச்சொல்லுக்க்கு அவருக்கே உரிய பொருளை அவர் உருவாக்குகிறார். அவரது இயற்பெயரான கைவல்யம் என்பதற்கு நிகரான சொல்லாக அதை அவர் கையாளுகிறார். தான் மட்டுமே இருக்கும் நிலை. அது மட்டுமே ஆன நிலை. பிறழ்வில்லாத பெரு நிலை. திரிபடையாத ஆதி நிலை. அதையே மீண்டும் மீண்டும் அவர் தூய்மை என்கிறார். ஒரு புல்நுனியின் தூய்மை,அது ஏந்திய பனித்துளியின் தூய்மை. அதை உறிஞ்சும் சூரியனின் தூய்மை. இவையெல்லாமாக ஆகிய பெருவெளியின் தூய்மை.

நிறைநிலையின் ஒரு தருணம் தன்னைக்கொண்டு தன்னைக்கலைத்து இவையாகியது என்று வேதாந்தம் சொல்கிறது. முடிவிலியின் கருவில் எப்படி உருவானது எல்லையற்ற சமனழிவுகளால் தன்னை இயக்கிக்கொண்டிருக்கும் இந்தப் பிரபஞ்சம்? அது தூய்மையானதென்றால் இது அதன் மாசு போல. மாயை பிரம்மம் மீது அதுவே படரவிட்ட களிம்பு என்பார்கள் அத்வைதிகள். இல்லை பிரம்மத்தின் அழகிய முகத்தின் ஒப்பனையழகு அது என்பார்க்ள் வைணவர்கள். மாயையை பிரம்மத்தைப்போலவே பேரழகு கொண்டது என்பார்கள். அதுவே கண்முன் தெரியும் பிரம்மம் என்பார்கள்.

ஆம், இதைத் திரிபு என்று சொல்லலாம். காலத்தை நிறைத்து பொங்கி வழிந்து கிடக்கும் அதன் சிறிய அழகிய வடிவம். அதில் விழுந்த மாசு. ஆனால் இந்த மாலையில் இந்த மோனத்தில் இதுவே எல்லையற்ற தூய்மையுடன் ஒளிர்வதாகப்படுகிறது

நினைவுக்கு வந்த தேவதேவனின் சிறிய கவிதையை மீண்டும் வீடு சென்று வாசித்தேன்


தூய்மையில்
புல்லிய
சிறு மாசும்-
அது தாளாத
துயர்க் கனலும்
பிறப்பித்தன
ஒளிரும் ஒரு
முத்தினை.

ஒரு பிரபஞ்ச தரிசனமே ஆன அழகிய சிறு கவிதை. எல்லையற்ற அத்தூய்மையில் விழுந்த சின்னஞ்சிறு மாசு. அந்த எல்லையின்மை அடைந்த பெருந்துயரால் புடம்போடப்பட்டு இது கருவாகியது. ஒளிரும் முத்தாக. தூய்மை தன்னுள் இருந்து ஒளியை அன்றி எதைப் பிறப்பிக்க முடியும்?

முதற்பிரசுரம் Sep 27, 2011

தேவதேவன் கவிதைகள் இரு பெருந்தொகுப்புகள் வாங்க

முந்தைய கட்டுரைமா. கமலவேலன்
அடுத்த கட்டுரைநீலமலர்- பதிவு