தமிழில் சிறுகதை எழுத ஆங்கில அறிவு அவசியமா?-கடிதம்

வணக்கம் ஜெயமோகன் சார்,  என்னுடைய பெயர் சு.இரமேஷ். சென்னையில் வசித்து வருகிறேன்.   ஒரு தனியார் கல்லூரியில் தமிழ் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றுகிறேன். உங்களிடம் மூன்று முறை நேரில் சந்தித்துப் பேசியிருக்கிறேன். நீங்கள் எனக்குக் கையெழுத்தும்  இட்டுக் கொடுத்திருக்கிறீர்கள். இதுவரை உங்களிடம் தொடர்பு கொண்டதில்லை. உங்கள் எழுத்தின் மீது தணியாத ஆர்வம் கொண்டவன்.

ஒருசில கட்டுரை நூல்களைத் தவிர எல்லா நூல்களையும் படித்திருக்கிறேன். உங்களிடம் நிறையப் பேசவேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. உங்களின் நேரமும் முக்கியம்.  எனக்கு நீங்கள் ஒர் உதவி செய்ய வேண்டும். 90களுக்குப் பிறகு வந்த தமிழ் நாவல்களில், வண்ணார் சமூகம் குறித்த பதிவுகள் உள்ள நாவல்களின் பட்டியல் தங்களிடம் இருந்தால் எனக்கு அனுப்பி வைக்கவும். கோவேறு கழுதைகள், வெள்ளாவி என்று இரண்டு நாவல்களை மட்டும் நான் வாசித்திருக்கிறேன். பதில் அனுப்பினால் மகிழ்வேன். நன்றி!

ரமேஷ் சுப்ரமணி

அன்புள்ள ரமேஷ் சுப்ரமணி

கோவேறு கழுதைகள்,வெள்ளாவி தவிர வேறு நாவல்கள் இந்த தளத்தில் வெளிவந்ததாகத் தெரியவில்லை. ஒருவேளை நண்பர்கள் வாசித்திருக்கக்கூடும். யாராவது சொன்னால் தகவல் அனுப்பி வைக்கிறேன்

நலமாக இருக்கிறீர்கள் அல்லவா?

ஜெ

அன்புள்ள ஜெ.மோ,

உங்களது எழுத்துக்களைத் தொடர்ந்து வாசித்தே எழுதத் தொடங்கியவன் நான். தங்களது சிங்கப்பூர் வகுப்பான சிறுகதை ஒரு சமையல் குறிப்பு எனது அடிப்படை இலக்கண நூலாகவே ஆகிவிட்டது. ஒரு பதிவில், தனது நோய் குறித்து மிகக் கவலைப்பட்டு நொந்திருந்த ஒரு இளைஞனுக்குத் தாங்கள் கொடுத்த அறிவுரையின்படியே,  சுயமாக எழுத ஆரம்பித்தபோதுதான் என்னை உணர்ந்தேன்.
அப்படி எழுதும்போது, இயல்பாக ஒரு தாழ்வுமனப்பான்மை வந்து அமர்ந்துவிட்டது. இதுகூட உங்களது பதிவுகளில் இருந்தே வந்தது. தாங்கள் மேற்கோள் காட்டும் சிறந்த இலக்கியங்களின் தமிழ் மொழிபெயர்ப்பு கிட்டத்தட்ட இல்லையென்றே சொல்லலாம்.  இந்த நிலையில், நானோ தமிழ்வழியில் கல்வி பயின்றவன்.ஆங்கில அறிவு சுமார்தான். ஆங்கிலப் புத்தகங்களைப் படித்துப் புரிந்துகொள்ளுவதற்கு வாய்ப்பே இல்லை. இந்த நிலையில், தமிழ் மட்டுமே தெரிந்த என்போன்றவர்கள் தமிழில் தரமான படைப்புகளைப் படைக்க முடியுமா. வேறுவார்த்தைகளில் கூறினால், தமிழில் எழுத, குறிப்பாக சிறுகதை எழுத ஆங்கிலத்தை அவசியம் அறிந்து இருக்கவேண்டுமா?. தயவுசெய்து எனக்கு உதவுங்கள்.
சிறீதரன்.
அன்புள்ள சிறீதரன்
நான் பெரும்பாலும் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டு வந்துள்ள நூல்களை மேற்கோள் காட்டவேண்டும் என்பதை ஒரு கொள்கையாகவே வைத்திருக்கிறேன். அபூர்வமாகவே ஆங்கில நூல்களை மேற்கோள்காட்டுகிறேன். தமிழில் எழுத ஆங்கிலம் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதில்லை. தமிழிலேயே சாதனை எழுத்துக்கள் உள்ளன. அத்துடன் ஆங்கிலத்தில் இருந்து நல்ல தரமான நூல்கள் மொழியாக்கமும் செய்யப்பட்டுள்ளன. அவற்றைப் பெரும்பாலும் நான் சுட்டி வந்துள்ளேன். தமிழில் உள்ள நல்ல நூல்களைப் படித்தாலே ஒருவர் இலக்கியம் பற்றிய தெளிவை அடைய முடியும்
ஜெ

 

முந்தைய கட்டுரைதிருமந்திரம் ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைபாரதி உரிமை