ஏழாம் உலகம்-கடிதம்

பிரியமுள்ள ஜெமோ,

சமீபத்திய இந்தியப் பயணத்தில் “ஏழாம் உலகம்” படிக்க வாய்ப்புக் கிடைத்தது. அப்போதும் அப்புறமும் மனதில் பட்டவற்றைக் கோர்வையாக சொல்ல முயன்றிருக்கிறேன்.

நமது தின வாழ்க்கையில் நாம் இருக்கும் உலகிலிருந்து பல்வேறு உலகங்களுக்குப் போய்வருகிறோம். விதவிதமான முகமூடிகளுடன் அதே மாதிரி விதவிதமான முகமூடிகள் அணிந்த மனிதர்களை சந்திக்கிறோம். பிற உலகங்களை எட்டிப்பார்த்துப் பின் நமது உலகத்திற்குத் திரும்பிவிடுகிறோம்.

சில வருடங்களுக்கு முன் சென்னை பொது மருத்துவமனையில் ஒரு பதினாறு நாட்கள் தங்க வேண்டியதிருந்தது. லண்டனிலிருந்து நேராக மருத்துவனை, அதே போல் பதினாறு நாட்களுக்குப் பின் மருத்துவமனையிலிருந்து நேராக விமான நிலையம். அதற்கு முன் எத்தனையோ தடவை அந்த மருத்துவமனையைத் தாண்டிப்போயிருக்கிறேன். எதிரில் இருக்கும் சென்ட்ரல் நிலையத்தில் எத்தனையோ தடவை வந்து போயிருக்கிறேன். ஆனால் அந்தப் பதினாறு நாட்கள் நான் அந்த மருத்துவனையில் கண்ட உலகமே வேறு. பிணியுடன் வறுமை, அதனுடன் மூப்பு…நான் இத்தனைக்கும் மூடிய, சவுகரியமான, கண்ணாடி சன்னலின் வழியேதான் இந்த உலகத்தைப்பார்த்தேன்.(தந்தை குளிர்சாதன, கட்டண அறையில் சேர்க்கப்பட்டிருந்தார்) இருந்தும் மருத்துவத் துறையைச்சாராத என்னை உலுக்கிவிட்டது அந்த உலகம்.

தினமும் இரவு அவசரப் பிரிவு வழியாகத்தான் உள்ளே போகவேண்டும் (முன் வாசல் ஏழு மணிக்குப்பின் அடைத்துவிடுகிறார்கள்).கண்ணில் படும் காட்சிகள், பதட்ட முகங்கள், அழுகுரல்கள், அப்பப்பா…மின் தூக்கிக்குக் காத்திருக்கும்போது பக்கத்து அழுகுரல்கள், காட்சிகள் கேட்டுப் பதைபதைக்கும் மனத்துடிப்பு இரண்டாவது வாரத்தில் குறைந்து, லேசாகப் பழகி, மின் தூக்கி வந்துவிட்டதா என அனிச்சையாகக் கண்கள் தேடுவதைப் பின் வந்த காலங்களில் எண்ணி திடுக்கிட்டிருக்கிறேன்.காலை உணவு அருந்தாமல் ரத்த மாதிரி கொடுக்க வந்து (நீரழிவுப்பிரிவு) பாதி மயக்கத்தில் இருக்கும் மூதாட்டிகளிலிருந்து, அப்போதுதான் கைகள்,மண்டை உடைந்து கொட்டிக்கொண்டிருக்க (சொட்டி இல்லை) உள்ளே செல்லும் இளைஞர்கள், மருந்து குடித்துவிட்டு ஸ்ட்ரெச்சரில் தரதரவென்று இழுத்துச் செல்லப்படும் பதின்ம வயதுப் பெண், காலை 6 மணிக்குப் பார்த்த மின் ரயிலில் அடிபட்ட, கால் மட்டும் தெரிந்த பிரேதம், எவ்வளவோ காட்சிகள்….

திரும்ப லண்டன் வந்த பிறகு ஐந்தாறு பேர் உள்ள வரிசைக்கே பொறுமையிழப்பது, ட்ராபிக் சிக்னலிற்கெல்லாம் எரிச்சலடைவதிலிருந்து, அலுவலக டெட் லைனிற்குப் பதறி உறைவது, குழந்தைகளின் உடல் சற்றே சுட்டால்கூட சட்டென்று சிறு கவலை கொள்வது – எல்லாமே அற்பமாகப்பட்டது.முன் கோபம், பதட்டம் எல்லாமே போய்விட்டது. மனைவி, குழந்தைகள் வியக்குமளவிற்கு.

கொஞ்ச நாட்களுக்குப் பின் திரும்பப் “பழைய உலகிற்கு”ப் போய்விட்டாலும் கூட இதுவரை அறியாத உலகை அறிந்தது குறித்து சற்று இறுமாந்திருந்தேன் என்றுகூடக் கொள்ளலாம்.
அத்தனையும் தூள்தூளாக நொறுக்கிவிட்டது நீங்கள் காட்டும் இந்த “ஏழாம் உலகம்”

தின வாழ்க்கையில் மிகச்சாதாரணமாகக் கண்ணில் படும் களங்கள், மனிதர்கள்.இப்படிப்பட்ட உலகம் நம்மோடுதான் இருக்கிறது. அதைப்பற்றி சின்ன அறிதல்கூட நமக்குக் கிடையாது.
இந்த உலகத்தை எழுத்தாளர் கண்களின் வழியாகப் பார்க்கிறேன்.இந்த நாவலில் பின்னணி இசை கிடையாது; வார்த்தைப்பூச்சு கிடையாது; “இதனால் அறியப்படுவது யாதெனில்” நீதி உபதேசம் கிடையாது. அசோகமித்திரன் அவர்களின் “கச்சிதம்” என்று பலமுறை நீங்கள் குறிப்பிடும் கச்சிதம் என்னவென்று இப்போது ஒருவாறு புரிகிறது.

இந்த உலகத்திலும் நம் உலகைப்போலவே கோபம், குரோதம், எள்ளல், வருத்தம், துரோகம், பிணி…கதாபாத்திரங்கள் தரும் அதிர்ச்சிகள் எருக்கு, ராமப்பன், குய்யன், முத்தம்மா, போத்தி, ரசனிகாந்த்,  “அனைத்தும் நாமறிவோம்” என்றவர், மலையில் விபச்சாரம் செய்பவர், போத்திவேலு பண்டாரத்தின் சம்பந்தி, ofcourse போத்திவேலு…மனதில் தங்கிவிட்டவர்கள்…

எதிர்பார்த்தமாதிரியே இந்தப் புத்தகம் வாழ்க்கை, கடவுள் நம்பிக்கை பற்றிய சந்தேகம், வேதனை, சலிப்பு…பல கேள்விகளை ஏற்படுத்தியிருக்கிறது.மனம் சமநிலையை அடைந்து இந்தக் கேள்விகள் என்னை அடுத்த நிலைக்கு முன்னகர்த்திச் செல்லும் என்பதில் மிக நம்பிக்கையாக இருக்கிறேன்.இதைத்தழுவிய திரைப்படத்தை இன்னும் பார்க்கவில்லை; நல்லது என நினைத்துக்கொண்டேன்.

தங்கள் தளத்தில் உள்ள அனைத்தும் (உலோகம், இரவு), பி.தொ.நி.கு., சில சிறுகதைத்தொகுப்புகள் (ஆயிரங்கால் மண்டபம்), சங்க சித்திரங்கள், அப்புறம் இந்த நாவல்…இன்னும் போக வேண்டும் வெகுதூரம்…பெரிய, மிகப்பெரிய தட்டில் பிடித்த பண்டங்கள் இருக்க, அனைத்தையும் உடனே தீர்த்துவிட மனமில்லாமல் கொஞ்சம், கொஞ்சமாக ருசித்துக்கொண்டு இருக்கும் குழந்தையின் மனநிலையில் இருக்கிறேன்.

Essex சிவா

முந்தைய கட்டுரைவிவேக் கடிதங்கள்
அடுத்த கட்டுரைகேள்விகள்