மொழியாக்கம்:கடிதங்கள்

 

அறிவுடைய திரு ஜெயமோகன்,

 

மொழியாக்கம் பற்றிய உங்கள் கட்டுரையை படித்தேன். பெரும் பாலும் இலக்கியங்களை பற்றி மட்டுமே சார்ந்த்தது என்று நினைக்கிறேன். மார்கஸ் அரிலியச் என்ற ரோமபுரி அதிகாரியின் அரசியல் தத்துவத்தை ராஜாஜியும், சார்லஸ் டார்வினின் ‘Origin of Species’-தோழர்ஜீவாவும்,  மொழியாக்கம் செய்ததாக எங்கோ படித்தேன். இவை இன்று அச்சில் இருப்பதாய் தெரியவில்லை. இருந்தால் விற்பனை ஆகுமா என்பதும் ஐயம்.

 

நான் சென்னையில் மட்டும் திரிகிறேன், மற்ற ஊர்களில் புத்தக கடை நிலையோ வாசகர் விருப்பமோ தெரியாது. விஞ்ஞானம் என்றால் சுஜாதா, பே நா அப்புசாமி என்று இருவருடன் நான் பேசுபவர் நிருத்திக் கொள்கிறார்கள்.

 

தமிழருக்கு இலக்கியம், சினிமா, அரசியல், சமூகம் தாண்டி ஆர்வம் பெரிதும் இல்லையோ? அப்ப்டி இருப்பவர் பெரும்பான்மையாக ஆங்கிலம் தெரிந்தவர் என்பதால், தமிழில் இதற்கான சந்தை இல்லையா? உங்கள் கட்டுரையில் குறிப்பிட்ட ருஷிய மொழியாக்கங்களில் இவை ஏதேனும் உள்ளனவா?

 

ஒருவேளை தமிழகத்தில் மார்க்சியம் சோசியலிசம் தலையாடியது, ஆடம் ஸ்மித், வோல்டேர், ரிகார்டோ, ஷம்பீடர், வெப்லென், மாக்கே போன்றோரின் நூல்கள் தமிழில் கிடைக்காத்தாலோ?

ஆர்வத்தில்

 

ர. கோபு

 

 

 

 

அன்புள்ள கோபு

 

 

பொதுவாக இம்மாதிரி கேள்விகள் எழும்போது நான் இலக்கியவாதி என்பதனால் இலக்கியம் சார்ந்தே என்னுடைய கருத்துக்களைச் சொல்வேந் இலக்கியம் அல்லாத துறைகளில் என்னால் முழுமையான பதிலை சொல்லமுடியாது என்பதுதான் காரணம்.

என் அவதானிப்பில் தமிழில் அறிவியல்- தத்துவ நூல்கள் மிக மிகக் குறைவாகவே மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன. இத்துறையில் தமிழில் என்றென்றும் நினைவுகூரப்படவேண்டியவர் வெ.சாமிநாதசர்மா. அவர் கிரேக்க தத்துவம்– நவீன மேலைதத்துவம் போன்ற பல துறைகளில் இருந்து மொழியாக்கங்கள் நிறையவே செய்திருக்கிறார்.

 

அதன்பின்னர் முக்கியமான மொழியாக்க முயற்சி என்பது நாவலர் நெடுஞ்செழியன் கல்வி அமைச்சராக இருந்தபோது 1970களில் பட்ட மேற்படிப்பு வரை கலை- அறிவியல் பாடங்களை தமிழிலேயே நிகழ்த்தும் நோக்கத்துடன் செய்யப்பட்ட விரிவான மொழியாகக் முயற்சியாகும். பொருளியல், தத்துவம்,அரசியல், வரலாறு, அறிவியல் துறைகளில் பட்டமேற்படிப்புத் தரம் கொண்ட 1000 நூல்கள் வரை மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன.

 

அவற்றில் பல நூல்கள் மிகமிக முக்கியமானவை. உதாரணமாக என்னிடம்  உள்ல ஐரோப்பிய வரலாறு , அமெரிக்க வரலாறு, நெப்போலியன் போன்ற நூல்கள் சிறப்பானவை. அவை இன்று மறுபிரசுரம் செய்யபப்டலாம். அவற்றின் பதிப்புரிமை சார்ந்த சிக்கல்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள். அரசு அவற்றின் பதிப்புரிமையை பொதுமைப்படுத்த வேண்டும்

 

தமிழின் கலை- அறிவியல் செல்வங்களில் இந்நூல்கள் மிக முக்கியமானவை.தமிழ் வழியாக உலக ஞானத்தை சென்றடைவதற்கான மிகச்சிறந்த வழி இந்நூல்களே. சமீபத்தில் நாகர்கோயில் தென் திருவிதாங்கூர் இந்துக் கல்லூரிக்குச் சென்றிருந்தபோது ஓர் அறை முழுக்க இந்நூல்கள் கவனிப்பாரின்றி அடுக்கி வைக்கப்பட்டிருப்பதைக் கண்டேன்.

 

அதன் பின் அத்தகைய மொழியாக்கங்கள் தமிழில் தொடர்ச்சியாக வரவில்லை. தமிழின் பயிற்றுமொழி ஆங்கிலமாக இருந்ததனால் தமிழ் வாசகர்கள் அறிவியலை தமிழில் வாசிக்க விரும்பவில்லை போலும். மேலும் கலைச்சொல்லாக்கமும் மிகவும் சவாலான வேலை

 

அதன்பின் தமிழில் தத்துவ-அறிவியல் நூல்கள் முழூக்க முழுக்க சோவியத் பிரசுரங்களால் வெளியிடப்படவை. அவற்றில் பல அபூர்வமான நூல்கள் உள்ளன. அனைவருக்குமான உடலியங்கியல், வேதியியலைப்பற்றிய கதைகள், அனைவருக்குமான பௌதீகம், நம்மில் செயல்படும் சைபர்த்தீனயம் , மனிதன் எங்கனம் பேராற்றல் மிக்கவன் ஆனான், பொழுதுபோக்குப் பௌதீகம், மனித இனங்கள் போன்ற நூல்கள் தமிழில் வெளிவந்த ஆகச்சிறந்த அறிவியல் அறிமுக நூல்கள் என்று சொல்வேன்.

 

இவை இப்போது நியூ செஞ்சுரி புத்தக நிலையத்தால் வெளியிடப்படுகின்றன. நியூ செஞ்சுரி புத்தக நிலையல் இந்திய வரலாறு, இந்தியப் பண்பாடாய்வு ஆகிய தளங்களில் முக்கியமான பல மொழியாக்க நூல்களை வெளியிட்டிருக்கிறது. அவை பல்கலை கழகங்களுக்கு வெலியே கவனிக்கப்பட்டதில்லை. எஸ்.ஆர்.என் சத்யா மொழியாக்கம் செய்த டி டி கோஸாம்பியின் பண்டைய இந்தியா முதலிய நூல்கள் குறிப்பிடத்தக்கவை.

தமிழில் தத்துவ விவாதங்களுக்கான கலைச்சொல்லாக்கம் பெரும்பாலும் சோவியத் மொழியாக்க நிபுணர்களால் உருவாக்கப்பட்டதே. அவர்கள் இயங்கியல் பொருள்முதல்வாதம் போன்ற பல தத்துவ நூல்களை மொழியாக்கம் செய்துள்ளனர். அண்ணாமலைப் பல்கலைகழகம் இந்திய தத்துவம் சார்ந்த பல நூல்களை மொழியாக்கம் செய்துள்ளது.

 

ஆனால் இப்போது நிறுவனம் சார்ந்த பெரிய முயற்சிகள் எதுவும் இல்லை. தனிப்பட்ட ஆர்வங்களினால் செய்யப்படும் முய்ற்சிகளில் கணிப்பொறி– மருத்துவம் சார்ந்த அறிவியல் நூல்கள் மட்டுமே வருடத்துக்கு ஒன்றிரண்டு வெளிவருகின்றன. தமிழ்நாட்டின் நிலம், ஆறுகள், பூச்சிகள், பறவைகள், வனவளம், கோயில்கலை, சிற்பங்கள் எவற்றைப்பற்றியும் தமிழில் நல்ல நூல்கள் எழுதப்பட்டது மிக மிகக் குறைவே. மொழியாக்கங்கள் அதை விடக் குறைவு

 

 

தமிழை செம்மொழியாக்குதல் பற்றிய பேச்சும் பலகோடி ரூபாய் செலவிடலும் நிகழ்கிறது. ஆனால் உலக அறிவை தமிழில் கொண்டுவருவதில் தேவையின் ஆயிரத்தில் ஒரு பங்கு பணி கூட நிகழ்ந்ததில்லை. இதுவே இன்றைய நிலை.

ஜெ

 

88

 

எம்.ஏ.சுசீலா.

 

அன்பு ஜெ.எம்.குருவணக்கம்.நலம்தானே?


 
குற்றமும் தண்டனையும் மொழியாக்கம் குறித்து வாசகர் திரு விஜயராகவன் உங்களிடம் எழுப்பிய கேள்வியை வலையில் படித்தேன்.தங்கள் பதில் மிகவும் விளக்கமாகவும்,தெளிவாகவும் இருந்தபோதும்,என் சார்பில் ஒரு சிறு விளக்கம் தர விரும்புகிறேன்.

 

முதலில் பதிப்பாளரால் இம்மொழிபெயர்ப்புப்பணி எனக்குஒதுக்கப்பட்டபோது,ரஷ்ய மொழி அறியாமல் இதைச்செய்வது சரியானதுதானா என்றமனத்தடை என்னுள்ளும் இருந்தது .ஆனாலும்நாவலைப்படிக்கப்படிக்க,அதைத்தமிழில் எழுதியே ஆகவேண்டும் என்றஅகத்தூண்டுதல் என்னை இயக்கிச்செயல்படவும் வைத்தது.


 
எனக்கு அடிப்படையாக அமைந்த  ஆங்கில மொழியாக்கம், மிகுதியான நம்பகத்தன்மை உடையதாக மதிப்பிடப்பட்ட ஒன்றுதான் என்றபோதும், கூடுதல் தெளிவுக்காக இன்னும் சில ஆங்கில மொழியாக்கங்களையும் (4) ஒப்புநோக்கிச்சரிபார்த்த பிறகே எனக்கு ஓரளவு நிறைவு ஏற்பட்டது

 

 

.மூலத்தின் அழகுகளை,நெளிவு சுளிவுகளை அப்படியே தரமுடியவில்லையே என்ற ஏக்கம் என்னுள்ளும் இருந்தபோதும், மூல நூலாசிரியன் வெளிக்காட்ட முனைந்திருக்கும் ஆன்ம தரிசனத்தின் சிறியதொரு இணுக்கையாவது என் மொழியாக்கம்வெளிக்கொணர்ந்து விடவேண்டுமென்பதற்காக மெய்யான தேடலோடு கூடிய உழைப்பை நான் தந்திருப்பதாகவே எண்ணுகிறேன்.ஆங்கிலம் கூடத்தெரியாத வாசகர்களை அதிகமாகக்கொண்டிருக்கும் தமிழ்நாட்டுச்சூழலில் தஸ்தாயெவ்ஸ்கியைக்கொண்டு சேர்க்க என் மொழியாக்கம்  சிறிதாவது பயன்படுமானால் அதுவே என் உழைப்பின் பயனாக அமையும்.

 

 உங்களைப்போன்ற உலகப்பேரிலக்கிய வாசிப்பை உடைய மகத்தான எழுத்தாளர் ஒருவரிடமிருந்து வெளிப்படும் சிறியதொரு பாராட்டே பிற பரிசுகளைக்காட்டிலும் என்னைப்பெரிதும் மகிழ்வடையச்செய்கிறது; அடுத்து நான் மேற்கொண்டிருக்கும் பணியில் சோர்ந்து விடாமல் தொடர்ந்து செயல்பட எனக்கு உந்துதல் ளிக்கிறது.எனக்குக்கிடைத்திருக்கும் மிகப்பெரிய விருதாக அதையே நான் கொள்கிறேன்;தலை வணங்கிப்போற்றுகிறேன். நன்றியுடன்,எம்.ஏ.சுசீலா.

எம்.ஏ.சுசீலா,புது தில்லி
(தமிழ்ப்பேராசிரியர்-ஓய்வு,பாத்திமாக்கல்லூரி,மதுரை)
D II 208 KIDWAI NAGAR WEST,NEW DELHI110023

 

***

 

அன்புள்ள ஜெ

தமிழில் மொழியாக்கங்கள் என்னென்ன கிடைக்கும் என்ற தகவல் இப்போது உள்ளதா ? எங்கே கிடைக்கும்?

 

கோபால்

 

அன்புள்ள கோபால்

 

தமிழில் மொழியாக்கங்களுக்கான முழுமையான பட்டியல் ஏதும் எனக்குத்தெரிந்து இல்லை. ஆய்வாளர் ந.முருகேசபாண்டியன் தமிழில் வெளிவந்த உலக இலக்கிய மொழியாக்கம் குறித்து செய்த ஆய்வில் ஒரு முழுமையான பட்டியல் உள்ளது. என்னுடைய இணையதளத்தில் இலக்கியம் சார்ந்த சில பட்டியல்கள் உள்ளன

எம் வேதசகாயகுமாரின் மாணவி ஒருத்தி குமாரின் ஆர்வத்தாலும் ஊக்குவிப்பாலும் தமிழில் அறிவியல் கலைச்சொல்லாக்கம் பற்றி முனைவர் பட்ட ஆய்வேடு சமர்ப்பித்திருக்கிறார். அதில் அறிவியல் மொழியாக்கம் பற்றிய ஒரு பட்டியல் உள்ளது [ தமிழின் ஆரம்பகால மருத்துவ அறிவியல் நூல்கள் பெரும்பாலும் யாழ்ப்பாணத்திலேயே மொழியாக்கம்செய்யப்பட்டிருக்கின்றன]

இத்தகவல்களை முறையாக இணையத்தில் ஏற்றினால் நல்லது. ஆனால் யார் செய்யப்போகிறார்கள். தமிழ் கல்வித்துறை கேட்பாரற்று கிடக்கிறது

 

 

ஜெ
 

 

தேசிய புத்தக நிறுவனம் [ Nathional Book Trust ] வெள்யிட்டுள்ள முக்கியமான தமிழ் நாவல்கள்

 

சாகித்ய அக்காதமி வெளியிட்டுள்ள முக்கியமான மொழிபெயர்ப்பு நாவல்கள்

 

மொழியாக்கம்:கடிதங்கள்

 

குற்றமும் தண்டனையும்’:மொழிபெயர்ப்பு விருது

 

 

 

 

முந்தைய கட்டுரைபடைப்புகள்:கடிதங்கள்
அடுத்த கட்டுரைஅனல் காற்று (குறுநாவல்) : 9