தறி-ஒருகடிதம்

ஜெ,

நீங்கள் முன்பொரு முறை குழித்தறி குறித்து ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தீர்கள். அப்போதே கேட்க நினைத்து விடுபட்டு விட்டது. அதில் தாங்கள் சமூகப் படிநிலையில் ஒரு உப ஜாதியைக் கீழ் இறக்கும் முகமாக உருவாக்கப் பட்டது என்று குறிப்பிட்டிருந்தீர்கள்.

நானும் என் தங்கையும், அவள் கல்லூரி ஆவணப் படத்திற்காக விசாரித்த போது கிடைத்த தகவல் அடிப்படையிலேயே இதைக் கேட்கிறேன்(படம் படு மோசமாக வந்தது வேறு கதை).

ஆனால் நான் அறிந்தவரை குழித்தறி தானே பழைய தறி. பட்டுத் தவிர மற்றவை எல்லாம் குழித்தறியில் தானே நெய்யப் பட்டிருக்கிறது. மேசைத்தறி அல்லது சப்பரத் தறி எனக்கு குறிப்பிடப்படுவது காலத்தால் மிகப்பிந்தியது என்று நினைக்கிறன். பட்டுக்கான தறி அமைப்பே வேறு, ஒடக்கோள் கையாலேயே நகர்த்தப் படுவது. சில 40 -50 வருட நெசவாளர்களிடம் பேசிய போது குழித்தறியில்வரும் தயாரிப்பு நேர்த்தி மற்றைய தறிகளில் வருவதில்லை என்று கூறினார்கள்.

உங்களுக்கே தெரிந்து இருக்கும், ஸ்ரீவில்லிபுத்தூர் கைத்தறி சார் தொழில் நகரம். நான் இங்க விசாரித்து அறிந்த வரை மேசைத் தறிகள் வந்தது ஒரு 50 – 60 வருடங்களுக்கு உள்ளாகத்தான். இங்கு நெசவு செய்யும் வெவ்வேறு சமூகத்தினர் உண்டு, எல்லோருக்கும் பொதுவாகவே இந்த நிலை இருக்கிறது!

தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் கேட்கிறேன்.

நன்றிகளுடன்,
சுவ.

அன்புள்ள சுந்தரவடிவேலன்

நான் சொன்னது அப்படி அல்ல. அ.கா.பெருமாள் அவர்கள் அவரது குமரிமாவட்ட ஆய்வுகளில் இங்கே கைக்கோளமுதலியார் என்ற சாதி இருப்பதைப்பற்றிச் சொல்லியிருந்தார். அவர்கள் பன்னிரண்டாம் நூற்றாண்டுவாக்கில் தஞ்சையில் இருந்து வந்தவர்கள். அந்தக் கைக்கோளமுதலியார்கள் தஞ்சையில் சாதிப்படியின் உச்சியில் போர்வீரர்களாக,கைக்கோளபப்டையாக இருந்தவர்கள். நாடுவிட்டு நாடுவந்து தொழில் மாற நேர்ந்தமையால் சாதி இறங்குமுகமாகி ஓர் உபசாதியாக மாறியது என சொல்லியிருந்தார். இருபதாம் நூற்றாண்டில் மேஜைத்தறி இங்கே அறிமுகமானபோது இங்குள்ள நெசவாளர்கள் வெளியே இருந்து வந்த அந்த ‘வரத்தர்’களை மேஜைத்தறி போடக்கூடாது குழித்தறியிலேயே இருந்து நெசவுசெய்ய வேண்டும் என்று வகுத்துத் தங்கள் மேலாதிக்கத்தை நிலைநாட்டிக்கொண்டார்கள் என்றார்.  அதை நான் மேற்கோள் காட்டியிருந்தேன்.

ஜெ

முந்தைய கட்டுரைகோவை
அடுத்த கட்டுரைதமிழினி