சென்னை பற்றி…

முழுக்க முழுக்க சென்னையைப்பற்றிய தகவல்களை மட்டுமே அளிக்கக்கூடிய  ஓர் இணையதளம் நம்ம சென்னை  . ஆச்சரியமான முயற்சிதான். சென்னையை எனக்குப் பிடிக்காது. மாதத்தில் பாதிநாள் நான் சென்னையில்தான் இருக்கிறேன், ஆனால் ஓட்டல் அறை,கார் தவிர வெளியே இறங்குவதே இல்லை. சென்னையின் காற்றே என் மேல் படுவதில்லை. பட்டாலே மூச்சுத்திணறல்,இரவில் தலைவலி. என் நுரையீரலும் எதிர்ப்புசக்தியும் நிறைவாக இருப்பதற்கான ஆதாரம் அது என்கிறார் டாக்டர் நண்பர்.

[லா.ச.ரா]

ஆனால் சென்னைமேல் எனக்கு வரலாற்று ரீதியான ஈடுபாடு உண்டு. ஒரு மாநகரம் உருவாகி வளர்ந்து வருவதென்பது ஒரு காவியம் உருவாவது மாதிரித்தான். சென்னை பற்றிய கட்டுரைநூல்கள் என்றால்  எஸ்.முத்தையா எழுதிக் கிழக்கு வெளியீடாக வந்த சென்னை மறுகண்டுபிடிப்பு  நூலையும் அசோகமித்திரனின் ‘ஒருபார்வையில்சென்னை நகரம்’ என்ற சென்னை நினைவுகளையும் சொல்லலாம்.

புனைகதைகளில் அசோகமித்திரன் சென்னையின் சித்திரங்களை அளித்திருக்கிறார். ஆனால் அவரது செகந்திராபாத் சித்திரங்கள் அளவுக்கு நுட்பமானவையோ விரிவானவையோ அல்ல.

கி .ஆ.சச்சிதானந்தனின் கதைகளில் ஆங்கிலோ இந்தியர்களின் சென்னைவாழ்க்கைபற்றிய சித்திரங்கள் உள்ளன.  சமீபத்தில் எஸ்.ராமகிருஷ்ணனின் ‘யாமம்’ சென்னையின் ஒரு காலகட்டத்தின் தகவல்களை அளித்தது

மற்றபடி சென்னை பற்றிய புனைவுலகப்பதிவுகள் மிகமிகக் குறைவே. முக்கியமான காரணம் சென்னை எழுத்தாளர்கள் பலரும் சென்னையின் அக்கிரகாரங்களில் வாழ்ந்து வளர்ந்து வெளியே ஏதும் அறியாதவர்கள் என்பதுதான் என்று படுகிறது.

லா.ச.ராமாமிருதம் சென்னை மெரினாவின் இலக்கியச்சந்திப்பு பற்றி எழுதிய மெரினாவின் சங்கப்பலகை என்ற கட்டுரை என்னை மிகவும் கவர்ந்தது.

 

 

முந்தைய கட்டுரைஒரு பேட்டி
அடுத்த கட்டுரைபுனைவு வாசிப்பு குறைந்துள்ளதா?