மூன்று சிறுத்தைகளும் ஒரு புலியும்

வியாழக்கிழமை மாலை நாகர்கோயிலில் இருந்து கிளம்பி இரவு எட்டுமணிக்கு திருநெல்வேலி சென்றேன். சுரேஷ் கண்ணன் அவரது நண்பர் குஞ்சரமணியிடம் சொல்லி அங்கே நயினார் ஓட்டலில் அறை ஏற்பாடு செய்திருந்தார். அவருடன் அளவளாவி அனைத்து மனக்கட்டுப்பாடுகளையும் கணநேரத்தில் இழந்து மட்டன் சுக்கா தொட்டுக்கொண்டு சிக்கன்` வறுத்ததை சாப்பிட்டுவிட்டு மாயையை வியந்தபடி அறைதிரும்பி பன்னிரண்டுமணிவரை பேசிக் கொண்டிருந்தேன். சுரேஷ் கண்ணனைப்பற்றித்தான். பொதுவான நண்பரைபப்ற்றி மனக்குறைப்பட்டுக் கொள்வதுதான் எத்தனை இனிதானது!

குஞ்சரமணி போன பிறகு தூங்க முயன்று புது இடம் மனதுக்கு பழகும்பொருட்டு கொஞ்ச நேரம் தொலைக்காட்சி பார்த்தேன். ‘நீ வருவாய் என நான் காத்திருந்தேன்..’ அழகிய பாட்டு. புரட்சிதலைவி தன் பிற்கால அரசியல் வாழ்க்கைக்கு பயிற்சி எடுக்கும் முகமாக போலீஸ் புடைசூழ சூட்கேஸூடன் வருகிறார். சூட்கேஸை எப்படி சிவாஜி விட்டெறிந்தாலும் பாய்ந்து பிடிக்கிறார். காவலுக்கு போலீஸ்காரர்கள் வேடிக்கை பார்த்து நிற்கிறார்கள்.

கொஞ்சமாக தூங்கி வந்தபோதே செல்பேசியில் செய்தி. ஈரோடு நண்பர்கள் இரவு ஏழு மணிக்கே கிளம்பி நெல்லைக்குள் நுழைந்துவிட்டிருந்தார்கள். மணி மூன்றரை. பயணமும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் என்று தோன்றும் மயக்கநிலை. வேறு வழியில்லை. ஏதாவது உடனடியாகச் செய்ய வேண்டும். அதற்குள் வாசலில் தட்டும் ஒலி. வந்தே விட்டார்கள். கிருஷ்ணன், சிவா ஆகியோருடன் புதிய நண்பர் விஜய ராகவன். [வக்கீல் அல்லாத] செந்திலும் சிவாவின் மனைவியின் அண்ணா பாபுவும் கீழே இருந்தார்கள். வழக்கமாக காட்டுக்குள் கொண்டுபோகும் அதே மாருதி ஆம்னி. பெயர் காவியா. உரிமையாளர் செந்தில். ஓட்டுவதும் பெரும்பாலும் அவரே.

முகம் கழுவிவிட்டு உடனே கிளம்பினோம். உள்ளே அமர்ந்ததுமே நேரத்தை வீணாக்காமல் கிருஷ்ணன் இலக்கிய, தத்துவ ஐயங்களை கிளப்ப ஆரம்பித்தார். மாஞ்சோலை குதிரைவட்டி போக வேண்டும். விடிகாலையில் அம்பாசமுத்திரம்போய் தேடி நண்பரைக் கண்டுபிடித்தோம். அனுமதி பெற்றுத்தருவதாகச் சொல்லியிருந்த நண்பர் முண்டந்துறைக்கு மட்டுமே அனுமதி பெற்றிருந்தார். ஆகவே நேராக முண்டந்துறை.

போய்ச்சேர்ந்தபோது அங்கே வனவிடுதி காலியாகவில்லை. ஆகவே சிறிய அறையில் பெட்டிகளை போட்டுவிட்டு பாணதீர்த்தம் அருவிக்குப் போனோம். போகும்வழியிலேயே காணிக்கார குடியிருப்பிலிருந்த மாதா ஓட்டலில் காலை உணவுக்குச் சொல்லிவிட்டு அணையைத்தாண்டிச் சென்று ஏரிக்குள் இறங்கி படகில் பயணம் செய்து அருவிக்குச் சென்றோம். அவ்வளவு தூரம் ஏறி மூன்று வயோதிகப்பெண்கள் அடங்கிய ஒரு குழு வந்து அருவியில் இறங்கி குளித்தது வியப்பூட்டுவதாக இருந்தது. அவர்கள் அடிக்கடி பயணம் போகிறவர்கள் என்று பேச்சில் தெரிந்தது என்றார் கிருஷ்ணன். அந்தமான் .லட்சத்தீவு பயணங்களைப்பற்றி கூட பேசி கொண்டார்களாம்

பாண தீர்த்தம் அருவியை ஏரியில் படகிலிருந்தே முதலில் பார்ப்பது ஒரு சிறந்த அனுபவம். உயரமில்லாத அருவி என்றாலும் நுரைத்து உற்சாகமாகக் கொட்டிக் கொண்டிருக்கிறது. திரும்பிவந்து காலையுணவு உண்டபின் காட்டுக்குள் ஒரு நடை. மதியத் தூக்கம். பின்னர் மீண்டும் ஒரு கானுலா. காட்டுக்குள் நுழையவேண்டாம் என்ற அறிவிப்புகள் பல இடங்களில் இருந்தமையால் அவை இல்லாத இடத்தை தெரிவுசெய்து யானைப்புல் இடுப்பளவு வளர்ந்திருந்த பாதையில்லா இடைவெளி வழியாக உள்ளே சென்று நடந்து காட்டுக்குள் வழிதவறும் பதற்றத்தை அனுபவித்தோம்.

ஏழரை மணிக்கு வனக்காவலர் ஒருவர் சுட்டுவிளக்குடன் வந்தார். எங்கள் வண்டியிலேயே அவரை ஏற்றிக் கொண்டு காட்டுக்குள் சாலை வழியாகச் சென்றோம். விளக்கொளியில் காட்டுமரங்களின் செறிவுக்குள் நிழல்கள் ஓடி உருவாகும் அசைவுகளும், பூச்சிகளின் ஒலிகள் உள்ளே சுழலும் காட்டின் பெருமௌனமும் மனக்கிளர்ச்சியூட்டுகின்றன. அதைவிட உற்றுக் கவனித்தபடி ஒவ்வொரு கணமும் அபூர்வமான ஒன்றை எதிர்பார்த்தபடி காத்திருப்பது.

நெடுநேரம் எதுவும் கண்ணில்படவில்லை. அப்போது உருவாகும் மனச்சோர்வும் ஆனால் கூடவே எஞ்சியிருக்கும் எதிர்பார்ப்பும் விசித்திரமான உணர்வுக்கலவை. மின்நிலையம் வரை போய்விட்டு திரும்பி வரும் வழியில் இருளில் அசைவைக் கண்டு சிவா ” நிப்பாட்டுங்க!” என்றார். ஒரு பெரிய மிளா [சாம்பர் மான்] புதருக்குள் நின்றபடி வெளிச்சத்தில் விழித்து பார்த்தது. சற்றுநேரம் கழித்து சுதாரித்து தலையைக் குலுக்கி மீன் நீரில் அமிழ்வதுபோல புதருக்குள் மறைந்தது.

”போதும்…இண்ணைக்கு வந்த வேலை முடிஞ்சாச்சு!”என்றார் கிருஷ்ணன். அனைவருக்கும் ஒரு நிறைவும் திரும்பும் உணர்வும் ஏற்பட்டது. ஆனால் சட்டென்று சிவா ”சிறுத்தை…!!” என்று கூவினார். விளக்கொளியில் சிறுத்தை பாய்ந்து புதருக்குள் மறைவதைக் கண்டேன். அக்கணத்தில் உருவாகும் சிலிர்ப்பு, மனம் உறைந்து எண்ணங்களை இழந்து நின்று பின் உயிர்பெறும் வேகம், அதுவே வனஅனுபவத்தின் உச்சம்

காட்டில் சிறுத்தையைக் காண்பதென்பது பொதுவாக மிக அபூர்வமானது. பல ஆண்டுகள் காட்டில் வாழ்ந்து சிறுத்தையையே பாராதவர்கள் இருக்கக் கூடும். பல சதுர மைல்களுக்கு ஒன்றுதான் சிறுத்தை இருக்கும். மிக மிக கவனமான மிருகம். வெளிச்சத்தையும் திறந்தவெளியையும் நாடாது. கற்பனைக்கு அப்பாற்பட்ட வேகம் கொண்டது. காட்டில் அதை ஒரு மின்னலாக மட்டுமே காண முடியும். ஒரே குழுவைச் சேர்ந்தவர்களில் பாதிப்பேர் அதை பார்க்காமல் போவது அடிக்கடி நிகழும். புதருக்குள் அது இருந்தால் நாலடி இடைவெளியில் நாம் காணாமல் போகக்கூடும். காட்டில் சிறுத்தையை பார்ப்பதென்பது லாட்டரி விழுவதைப்போல ஒரு மாபெரும் தற்செயல் மட்டுமே. புலியைப்பார்ப்பது உலக லாட்டரி.

ஆனால் நான் சற்று யோகக்காரன். இந்தவருடத்தில் மட்டுமே மூன்றுமுறை சிறுத்தை எங்கள் பாதையை கடந்திருக்கிறது. ஒருமுறை புலி! எங்கள் ஈரோட்டு குழு [பசுமை பாரதம்] இரண்டுமாதங்களுக்கு ஒரு வனவலம் செல்வது வழக்கம். முதல்முறையாக கேரளத்தில் திருநெல்லி செல்லும் வழியில் யானைகள் சரணாலயத்தில் சாலையோரமாகவே புலியைப் பார்த்தோம். ஒரு மதகருகே அமர்ந்திருந்தது. சிவாதான் அதைப்பார்த்து ”மதகருகே புலி !!” என்று கூவினார். காரைப் பின்னால் கொண்டுவந்து பார்த்தோம். அவசரமேதும் இல்லாமல் எழுந்து வாலை தூக்கியபடி கம்பீரமாக நடந்து புதருக்குள் சென்றது. சிவா உள்ளிட்ட மூன்று நண்பர்கள் முகத்தை பார்த்தார்கள். நான் பின்பக்கத்தையே பார்த்தேன்.வெகுநேரம் நீளமான வாலை.

அதன்பின் சென்ற டிசம்பர் 24,25,.26 தேதிகளில் பரம்பிக்குளம் வனத்தில் நானும் அருண்மொழியும் குழந்தைகளும் தங்கியிருந்தபோது சிறுத்தையைப் பார்த்தோம். பரம்பிக்குளத்தில் புள்ளிமான்கள் எந்நேரமும் சாதாரணமாக கண்ணில் படும். மாலையானால் காட்டெருதுக்கள் [Gaur] மேய்வதைக் காணலாம். காட்டெருதுக்கள் மிக கம்பீரமானவை. குறிப்பாக திமிலும் முன்தொடைகளும் சேர்ந்து கனத்து உருண்டிருப்பதன் அழகு எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காதது. 24 ஆம் தேதி மாலை ஏழரைக்கு காட்டுக்குள் சென்ற போது மான்கள் காட்டெருதுகளுடன் காட்டில் மிக அபாயகரமான மிருகமான காட்டுநாய்களை [சிவப்பாக நாட்டுநாய்களைப்போல. காது சற்று பெரிது] கண்டோம். ஒரு கேழைமானைக் கண்டோம். [சிறிய வைக்கோல்நிற மான். தன்னந்தனியாகவே வாழ்வது.]

திரும்பி வரும் வழியில் வனக்குடில்களை நெருங்கும்மோது மான் ஒன்று குறுக்கே ஓடியது. அதைத் தொடர்ந்துவந்த சிறுத்தை கார் ஒளி கண்டு பயந்து பின்னால் தாவி மறைந்தது. ஓரிரு கணங்கள். ஆனால் விளக்கை திறமையாக அதன்மேலேயே அடித்த வனக்காவலர் சசி உதவியால் நன்றாகவே காணமுடிந்தது.

அதன் பின்னர் 26 ஆம்தேதி காலையில் பறம்பிக்குளம் அணைக்கட்டுக்கான சுரங்கவழிக்குக் காரில் சென்றபோது நடுச்சாலையில் சிறுத்தை கிடந்தது. பனிசொட்டுவதை தவிர்க்க அப்படி படுக்கும் வழக்கம் அதற்கு உண்டு. அருண்மொழிதான் முதலில் பார்த்தாள். அவள் இடம்சொல்லி கத்தியிருக்க வேண்டும். பதறி குழறி ”புலி இல்ல சிறுத்தை…யம்மா! ”என்றெல்லாம் கூவ நாங்கள் ஆளுக்கொரு திசையை நோக்க வண்டியை ஓட்டிய நண்பர் செந்திலும் வனக்காவலரும் மட்டுமே அதை பார்த்தார்கள். நான் கண்டது புதரசைவை மட்டுமே.

முண்டந்துறை விடுதிக்கு திரும்பி சாப்பிட்டுவிட்டு இன்னும் பிரகாசமான விளக்குடன் மீண்டும் காட்டுக்குள் சென்றோம். ஒரு அபூர்வ விலங்கை பார்த்துவிட்டால் பிறகு எங்கும் அதைபார்க்க முடியும் என்ற நம்பிக்கை உருவாவது கானுலாவின் மடமைகளில் ஒன்று. ஆனால் மிருகங்களை பார்க்க முடியவில்லை.

போகும் வழியில் சாலையை ஒரு கண்ணாடிவிரியன் கடப்பதைக் கண்டோம். மிக நிதானமாக ஒரு பாதரச கோடு போல்,அது கார் ஒளியில் சுடர்ந்தபடி வழிந்து ஓடியது. சாரை, நாகப்பாம்பு போல சரசரவென வளைந்தோடுவதில்லை. புழு போன்ற அசைவு அலையலையாக உடலில் ஓட மெல்ல செல்லும். தலை உடலைப் போலவே இருக்கும். சேனைத்தண்டன் என்று எங்களூர் பெயர். கட்டுவிரியனை அணலி என்பார்கள். நரம்புகளை தாக்கும் கடும் விஷம் கொண்டது. செத்தைகளுக்குள் பதுங்கி கிடக்கும்.

முண்டந்துறை உயரம் குறைவான, குளிரில்லாத காடு ஆகையால் பாம்புகள் — குறிப்பாக கண்ணாடி விரியன் மிக அதிகம் என்றார் காவலர். அதுவே அக்காட்டின் ஆபத்தான உயிரினம். காட்டுக்குள் செல்லக்கூடாதென சொல்வது அதனாலேயே நாங்கள் காட்டுக்குள் போன நடை பற்றி அப்போதுதான் அஞ்சி குதம் கூசினோம்.

மறுநாள் அதிகாலையில் அதே பகுதிகளில் மீண்டும் ஒரு சுற்று வந்தோம். பனிசொட்டும் காட்டை மட்டுமே பார்த்தோம். மிருகங்கள் இல்லை. ஒரே ஒரு மான்கூட்டம் தவிர. யானைகள் காட்டெருதுகள் போன்றவற்றை விடிகாலையில் பார்க்க வாய்ப்பு அதிகம். முண்டந்துறையில் இப்பருவத்தில் அவை அதிகம் இருப்பதில்லை

ஒன்பது மணிக்கு கிளம்பி மணிமுத்தாறு வந்தோம். அங்கே நூறு ரூபாய்க்கு நான்கு அறைகள் கொண்ட புதிய குடில் தங்கக் கிடைத்தது. காரிலேயே மணிமுத்தாறு அருவிக்குப் போய் குளித்துவிட்டு மேலே ஏறி மாஞ்சோலை எல்லைவரை போய் காரை விட்டு இறங்கி காடுவழியாக எட்டு கிலோமீட்டர் நடந்து வந்தோம். குளிரும் பசுமையும் காற்றும் சலிப்பில்லாமல் நடக்கச்செய்தன, மௌனமாக உறைந்த உயரமான மலைமுடிகள் நடுவே நடக்கையில் ஒரு விடுதலை உணர்வு மனதை சிறகடிக்க வைக்கும்.

மூன்றரை மணிக்கு மதிய உணவு. ஓய்வுக்குப் பின்னர் மணிமுத்தாறு அணை அருகே உள்ள ஒரு குன்றில் பாறைகள் வழியாக புதர்களை பிடித்து தொற்றி ஏறி உச்சிப்பாறையை வியர்த்து வழிய அடைந்து அங்கே அமர்ந்திருந்தோம். இருட்டிய பின் இறங்கிவந்து மணிமுத்தாறு பெரியவாய்க்காலில் இருளில் நட்சத்திரங்களைப் பார்த்தபடி நீந்தி குளித்தோம். உடம்பெல்லாம் மலைப்புல் கீறிய எரிச்சல் தணிந்தது.

அதிகாலையில் மீண்டும் வாய்க்கால் சென்று அதன் கரையோரமாகவே காட்டுக்குள் நடந்து சூரிய உதயம் கண்டோம். வாய்க்காலுக்கு அப்பால் காடு ஆயிரக்கணக்கான பறவைகள் குரலெழுப்ப துயிலெழுந்தது. எட்டுமணிக்கு திரும்பினோம். காலையுணவுக்குப் பின் கிளம்பினோம். என்னை திருநெல்வேலியில் இறக்கிவிட்டு அவர்கள் ஈரோடு சென்றார்கள். நான் அருண்மொழிக்கு போன் செய்து என் சிறுத்தையோகம் பற்றிச் சொல்ல ஆரம்பித்தேன்

முந்தைய கட்டுரைடைம்ஸ் ஆ·ப் இண்டியா இலக்கிய மலரும் ஜாம்பவான்களும்
அடுத்த கட்டுரைதேவதேவன் கருத்தரங்கம்